காப்பீடு, இரண்டு முட்டாள்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
குறைக்கப்பட்ட பிரீமியம் ஐம்பத்தெட்டாயிரம் என நிர்ணயம் செய்தது கஸ்டமரை கோபப்படுத்துவதற்காகவே; அதன் மூலம் அந்நிறுவனத்துடனான உங்கள் உறவினை கச்சிதமாக கத்தரித்துவிட முடியம் – சமீப காலத்தில் அது ஒரு தொழில் தந்திரமாக பின்பற்றப்படுகிறது. முகவர் தன்னுடைய பணியை சரியாக செய்துவிட்ட திருப்தியில் இருப்பதால் நீங்கள் எவ்வளவு கோபப்பட்டாலும் ஜென் நிலையில் நிதானமாகவே இருந்திருப்பார்.
காப்பீட்டு துறை மட்டுமல்ல, வங்கிகள், தொலைபேசி நிறுவனங்கள், டாக்ஸி – ஆட்டோ நெட்ஒர்க் போன்றவை தனது பணியாளர்களுக்கு தொழில் சார்ந்த அறிவுரைகளை வழங்குகிறார்களோ இல்லையோ, தேவைப்படும்போதெல்லாம் பயனாளரை கோபப்படுத்தி கத்தரித்துவிடுவதற்குப் பயன்படும் காரணிகளை அறிவுறுத்தியேதான் பிழைப்பை நடத்துகிறார்கள்.
அன்புடன்,
ரமேஷ் குமார்
கோயம்புத்தூர்
அன்புள்ள ஜெ
காப்பீடு பற்றிய உங்கள் கடைசிக் குறிப்பைப் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. ஒரு ஏஜெண்ட் 25 லட்சத்துக்கு அறுபதாயிரம் ரூபாய் பிரிமியம் ஆனால் 10 லட்சத்துக்கு ஐம்பத்தெட்டாயிரம் என்று எப்படிச் சொல்கிறார்? ஒன்று அவர் முன்னால் சொன்னது மோசடி. அல்லது இப்போது சொல்வது மோசடி. ஸ்டார் இன்சூரன்ஸ் பற்றி நல்லவிதமாகத்தான் சொல்லப்படுகிறது. உண்மையில் பயமாக இருக்கிறது. நம்மால் நிறுவனரீதியான மோசடியை எதிர்கொள்ளவே முடியாது
பாருங்கள் ஒருலட்சத்து இருபதாயிரம் ரூபாய். எந்த விதமான பயனும் இல்லாமல் அப்படியே காற்றோடு போய்விட்டது. எவருக்காவது கொடுத்திருந்தால்கூட ஒரு மனநிம்மதி கிடைத்திருக்கும். இந்தியா இந்தவகையான மோசடியாளர்களின் சொர்க்கம் ஏனென்றல் இங்கே நீதியமைப்பு எளிதில் காசால் அடித்துவிடக்கூடியதாக இருக்கிறது
சந்திரசேகரன்