திருஷ்டத்யும்னனின் பாடிவீடு மென்மரப்பட்டைகளாலும் தேன்மெழுகும் அரக்கும் பூசப்பட்ட தட்டிகளாலும் ஆன சிறு மாளிகை. அதன் முகப்பில் பாஞ்சாலத்தின் விற்கொடி மையத்தில் பறந்தது. பாஞ்சாலத்தின் ஐந்து தொல்குடிகளான கேசினிகள், துர்வாசர்கள், கிருவிகள், சிருஞ்சயர்கள், சோமகர்கள் ஆகியோரின் கொடிகள் தாழ்வாக பறந்தன. கேசினிகள் மருதமரத்தின் இலையையும் கிருவிகள் எட்டிமரத்தின் இலையையும் சோமகர்கள் ஆலிலையையும் துர்வாசர்கள் வேம்பிலையையும் சிருஞ்சயர்கள் மந்தார மரத்தின் இலையையும் அடையாளமாக கொண்டிருந்தனர். அந்த அடையாளங்கள் அனைத்தையும் ஸ்வேதன் பயின்றிருந்தான். விற்கொடிக்கு நிகராக எழுந்த வெண்ணிறக் கொடியில் மந்தார இலைக்கு அடியில் அனல்குழியில் எரி எழும் அடையாளம் இருந்தது. சிருஞ்சய குடியினனாகிய திருஷ்டத்யும்னனின் போர்க்கொடி அது என தெரிந்தது.
பாடிவீட்டுக்குள் அவர்களை திருஷ்டத்யும்னன் அழைத்துச் சென்றான். “இளவரசர்களுக்கு பாஞ்சாலத்தின் குடிக்கு நல்வரவு” என முறைமைச்சொல் உரைத்து அமரச்செய்தான். “உங்கள் படைகளை இப்போது என் படைகளுடன் இணைத்துக்கொள்ள ஆணையுரைக்கிறேன், இளவரசே. இப்படையில் உங்கள் பங்களிப்பென்ன என்பதை பின்னர் முடிவெடுப்போம்” என்றான். சங்கன் “நாம் ஏன் இங்கு இருக்கிறோம்? நாம் உடனே கிளம்பி இளைய பாண்டவரை சந்திக்கப்போகிறோம் என்று எண்ணினேன்” என்றான். திருஷ்டத்யும்னன் “சில முறைமைகள் உள்ளன. நீங்கள் இங்கு வந்ததை நான் ஓலைகளினூடாக அரசருக்கும் இளைய யாதவருக்கும் அறிவிக்கவேண்டும். அவர்களிடமிருந்து ஒப்புதல் ஆணையும் வரவேண்டும்” என்றான்.
“நாங்கள் சென்றுகொண்டே இருக்கிறோம். அதற்குள் ஆணை வரட்டும்” என்றான் சங்கன். ஸ்வேதன் பொறுமையிழந்து பல்லைக் கடித்து அவனிடம் “பேசாதே” என்றான். திருஷ்டத்யும்னன் “அந்திக்குப் பின் காவலரும், தூதரும் படைத்தலைவர்களும் அன்றி எவரும் படைப்பிரிவுக்குள் பயணம்செய்வதை நெறிகள் ஒப்புவதில்லை. அது காவலுக்கு உகந்தது அல்ல” என்றான். “இன்று ஓய்வெடுங்கள். நாளை புலரியில் கிளம்பலாம். புரவிகளும் புத்தாற்றலுடன் இருக்கும். அந்திக்குள் மையத்திலுள்ள அடுமனைக் களஞ்சியங்களை அடையமுடியும். இளைய பாண்டவர் அங்கிருப்பார்” என்றான். “ஆம், அதுவே வழி” என்றான் ஸ்வேதன். “அப்படியென்றால் நாங்கள் படைகளை பார்க்கிறோம். நான் பார்க்க விரும்பும் பேருருவத் தெய்வம் இப்படையேதான்…” என்றான் சங்கன். “நன்று, நானே காட்டுகிறேன்” என திருஷ்டத்யும்னன் எழுந்தான்.
பாண்டவப் படைகளின் நடுவே அவர்கள் புரவிகளில் சென்றார்கள். பாண்டவப் படைகளின் பெருந்தோற்றம் சங்கனை கிளர்ந்தெழச் செய்தது. புரவி மேலமர்ந்து துள்ளியும் திரும்பியும் கைநீட்டி கூச்சலிட்டும் உரக்க நகைத்தும் வியப்பொலி எழுப்பியும் அவன் கொந்தளித்துக்கொண்டிருந்தான். “இவற்றை பார்த்து முடிப்பதற்குள் வாழ்நாள் முடிந்துவிடும் போலிருக்கிறது, மூத்தவரே. படையென்றால் இதுதான். நான் இவ்வாறு எண்ணவேயில்லை. படையென்பது நம் விழவுகளில் மக்கள் பெருக்கெடுத்துச் செல்வது போலிருக்கும் என்று எண்ணினேன். இதுவரை இப்படை சென்றதைப்பற்றி நம்மிடம் சொன்ன அத்தனை குடிகளும் பெருவெள்ளம் எழுவது போலென்றும், காட்டெரி படர்ந்து செல்வது போலென்றும்தான் சொன்னார்கள். இது மிக நுட்பமாக வகுத்து ஒன்றுடன் ஒன்று பொருத்தப்பட்ட மாபெரும் கைவிடுபடை போலிருக்கிறது” என்றான்.
அவனால் சொல்லெடுக்க இயலவில்லை. பலமுறை கைகளை விரித்து வியப்பைக் காட்டி பின்னர் சொல்கொண்டு “ஒன்றின் அசைவை பிறிதொன்று ஆள்கிறது. அனைத்து அசைவுகளும் சேர்ந்து ஒற்றை அசைவென்றாகின்றன. தனி ஓர் அலகை பார்த்தால் அது தன் விழைவுப்படி முழுமையாக செயல்படுவதாக தோன்றுகிறது. ஒன்றெனப் பார்த்தால் தனிஅலகுகள் அனைத்தும் இணைந்து ஓருடலாகி இயல்வது தெரிகிறது. இப்படி ஒரு படைவிரிவை துளித் துளியாக ஒருங்கு சேர்ப்பதற்கு நம்மால் இயலாது. நாம் இதுவரை படை என எதையும் அமைக்கவே இல்லை. நம்மிடம் இருப்பது வெறும் திரள்” என்றான்.
திருஷ்டத்யும்னன் “அவ்வாறல்ல, இளையோனே. உங்கள் படைப்பிரிவுகளுக்கு மட்டும் சில தனித்திறன்கள் இருக்கும். அவை உங்கள் நிலத்திலிருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் நீங்கள் கற்றுக்கொண்டவை. அத்தகைய தனித்திறன்களே ஒரு படையின் சிறப்பு. கட்டைவிரல் செய்யும் பணியை சுட்டுவிரல் செய்வதில்லை. சுட்டுவிரல் செய்யும் பணியை கட்டைவிரலும் ஆற்றுவதில்லை. பத்து விரல்களால் ஆனதே கை. ஒவ்வொரு படையும் அவ்வாறு தனியென்று இருக்கையிலேயே களவெற்றி அடையமுடியும்” என்றான்.
“இதோ இந்தப் படைப்பிரிவு பாஞ்சாலத்தின் துர்வாச குலத்தை சார்ந்தது. இவர்கள் மலைக்குடியினர். கங்கைக்கரையில் அடர்காடுகளில் மரங்களுக்குள் மறைந்திருந்து போர்செய்யும் பயிற்சி பெற்றவர்கள். இவர்களை தேர்ப்படைக்கும் யானைப்படைக்கும் ஊடாக அனுப்பலாம். ஒளியும் கலையறிந்தவர்கள் என்பதனால் எதிரி இவர்களைப் பார்ப்பது மிக அரிது. ஒவ்வொரு அம்புக்கும் வெளிப்பட்டும் மறைந்தும் குரங்குகளைப்போல் இவர்கள் போரிடுவதனால் மாருதர் என்று அழைக்கப்படுகிறார்கள்” என்று திருஷ்டத்யும்னன் தொடர்ந்தான்.
“ஆனால் இவர்களை தனித்து நாம் எதிரிமுன் விட்டால் அவர்கள் தங்கள் எண்ணிக்கையால் இவர்களை அழிப்பார்கள். இவர்களுக்குப் பின்னால் பாண்டவர் படையின் ஒட்டுமொத்தமும் ஏதோ ஒருவகையில் நின்றிருக்க வேண்டும். அவ்வாறு இங்குள்ள ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் பின்துணையாக ஒட்டுமொத்த படைப்பிரிவும் இருக்கவேண்டும். அந்நோக்குடன்தான் இப்படைப்பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று கோக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வேறுபட்ட படைப்பிரிவுகளை ஓருடலென கோப்பதெப்படி என்று ஆயிரமாண்டுகளாக தொல்நூல்களில் எழுதி கற்று மீண்டும் எழுதி பல்லாயிரம் கொள்கைகளை உருவாக்கியுள்ளனர்.”
“பெரும்போர் மிக அரிதாகவே நிகழ்கிறது. ஆயினும் ஒவ்வொரு நாளுமென இப்படைசூழ்கைகள் அறிஞர்களாலும் ஷத்ரியர்களாலும் பயிலப்படுகின்றன. போர் ஏடுகளிலேயே நிகழ்ந்து நிகழ்ந்து தன்னை மேலும் மேலும் மேம்படுத்திக்கொள்கிறது. இதற்கு முன் நிகழ்ந்த பெரும்போர் என்பது மகதத்திற்கும் பிற நாடுகளுக்கும் பிருஹத்க்ஷத்ரரின் காலத்தில் நடந்தது. அதன்பின் சென்ற நூற்றியிருபது ஆண்டுகள் பாரதவர்ஷத்தில் இத்தகைய பெரும்போர் நிகழ்ந்ததில்லை. ஆனால் உள்ளத்தால் பெரும்போர் நிகழாத ஒரு நாளும் பாரதவர்ஷத்தில் இல்லை என்று என் தந்தை சொல்வதுண்டு.”
“ஏனென்றால் போரினூடாகவே ஒவ்வொரு உறுப்பும் வளர்கின்றது. காடு என்பது ஒவ்வொரு கணமும் நிகழும் பெரும்போரின் கண்நோக்கு வடிவு. மானுடகுலமும் அவ்வாறுதான். குருதிப்போர்களை கொள்கைப்போர்களாக ஆக்கிக்கொள்வதற்கே சான்றோர் முயல்கின்றனர். எளிதில் போர்நிகழாதிருப்பதே அமைதி. அதற்குரிய வழி பெரும்போர் நிகழும்படி சூழலை அமைப்பதுதான்” என்றான் திருஷ்டத்யும்னன். “படைகள் ஏதேனும் ஒருவகையில் தங்களை கட்டமைத்துக்கொண்டவை. அதையே படைசூழ்கை என்கிறோம்.”
“அனைத்துப் படைசூழ்கைகளும் இயற்கையிலிருந்து எடுத்த பல்வேறு வடிவங்களைக்கொண்டு உருவமைக்கப்பட்டவை. இப்போது நீங்கள் பார்ப்பது கொக்குகளின் கூட்டம். அவை எப்போதும் பிறை வடிவிலேயே முன்னகர்கின்றன. ஏனெனில் தலைமைகொண்டு செல்லும் முதற்கொக்கை அனைத்துக் கொக்குகளும் பார்ப்பதற்குத் தகுந்த வடிவம் அது. அத்துடன் செல்லும் வழி இடுங்கலாகுமெனில் அப்படியே நீள்பட்டு ஒடுங்கி அப்பால் கடப்பதற்கும் அது உகந்தது” என்ற திருஷ்டத்யும்னன் “கொக்குகளின் கூட்டத்தை வானில் எப்போதேனும் கூர்ந்து நோக்கியிருக்கிறீர்களா?” என்றான்.
“ஆம், சில தருணங்களில் அவை ஒன்று சேர்ந்து ஒற்றைப்பறவையின் உடலையே அமைப்பதாக தோன்றும்” என்றான் சங்கன். அவன் தோளில் கைவைத்து சிரித்தபடி “அதைத்தான் சொல்ல வந்தேன். அனைத்துப் பறவைகளும் இணைந்து உருவாகும் ஒற்றைப்பறவை. அந்தப் பெரும்பறவையின் ஆற்றலை ஒவ்வொரு பறவையும் பெற்றுக்கொள்கிறது, அதற்குப் பெயர்தான் படைசூழ்கை” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “வருக, இப்படைசூழ்கையை நீங்கள் பார்க்கலாம்!” என்று அங்கிருந்த காவல்மாடமொன்றை நோக்கி சென்றான்.
அறுபத்துநான்கு சகடங்களுக்குமேல் பெரிய பீடம் என அமைந்திருந்த பெரிய மரவண்டியில் பன்னிரு எருதுகள் இழுக்கும்படி நுகங்கள் இருந்தன. அதன்மேல் மூங்கிலால் அந்த காவல்மாடம் அமைக்கப்பட்டிருந்தது. சங்கன் அதை பார்த்து “எட்டு எட்டாக எட்டு சகடங்கள்” என்றான். “ஆம், சகடங்களின் எண்ணிக்கை பெருகுகையில் குழிகளிலும் பள்ளங்களிலும் விழாமல் இந்த வண்டியின் பெரும்பரப்பு செல்லமுடியும்” என்றான் திருஷ்டத்யும்னன். அவர்கள் அந்த வண்டியின் மீதேறி அதன்மீது அமைக்கப்பட்டிருந்த காவல்மாடத்தில் தொங்கிய நூலேணியில் தொற்றி மேலேறிச் சென்றனர். அங்கிருந்த படைவீரர்களில் மூவர் மறுபக்கம் வழியாக இறங்கிச் சென்று அவர்களுக்குரிய இடத்தை உருவாக்கினர்.
“ஆணைகளை அளிப்பதற்கும் முழுப் படையையும் விழிநோக்கில் வைத்திருப்பதற்கும் இத்தகைய காவல்மாடங்களின் பணி மிகப் பெரிது. நாம் நமது பாசறைகளில் அமர்ந்து ஏடுகளில் படைநிலைகளை உருவாக்குகிறோம். படைசூழ்கைகள் அனைத்தும் அங்கேயே முழுமை செய்யப்பட்டுவிடும். ஆயினும் படைத்தலைவன் என்பவன் ஒவ்வொரு நாளும் காவல்மாடத்தின் மீதேறி ஊன்விழிகளால் தன் படையை பார்க்கவேண்டும் என்பார்கள். ஒவ்வொரு முறையும் தோற்பரப்பில் படைநிலைகளை எழுதும்போது அவன் விழிகளால் பார்த்தது உளத்தில் விரிய வேண்டும். விழிகளால் பார்ப்பதற்கு நிகர் பிறிதொன்றில்லை. ஒவ்வொரு முறையும் விழிகளால் பார்க்கையில் நான் மேலும் மேலும் புதிய எண்ணங்களை அடைகிறேன். ஆகவே ஒவ்வொரு நாளும் ஐந்து முறைக்குமேல் ஏறி படைகளை நான் பார்ப்பதுண்டு” என்றான் திருஷ்டத்யும்னன்.
அவர்கள் காவல்மாடத்தின்மேலேறி அந்த பலகைப்பரப்பில் நின்றனர். சுற்றிலும் பெருகியிருந்த படையை அதுவரை உடற்பெருக்கு என பார்த்துக்கொண்டிருந்த ஸ்வேதன் அவை தலைப்பரப்பென மாறி கீழிறங்குவதை உணர்ந்தான். பின்னர் அவை உடல்களை துளிகளாகக் கொண்ட நீர்வெளி என மாறின. சுழன்று சுழன்று அவன் அவற்றை பார்த்துக்கொண்டிருந்தான். தெற்கே நான்கு திசைகளிலும் விழியெட்டும் தொலைவு வரை இந்திரப்பிரஸ்தத்தின் படைகள் தங்கியிருந்தன. மிக நெருக்கமாக ஒன்றுடனொன்று ஒட்டி அமைக்கப்பட்ட தோல்கூடாரங்களிலும் பாடி வீடுகளிலும் படைத்தலைவர் தங்கியிருந்தனர். வீரர்கள் வெறும்நிலத்தில் பாய்களிட்டு ஓய்வுகொண்டனர்.
அருகிருந்த சிறு ஆற்றிலிருந்து யானைகள் இழுத்துச் சுழற்றிய சகடங்களால் தோற்பைகளில் அள்ளப்பட்ட நீர் மூங்கில்வழியாக மேலெழுந்து சென்று அங்கிருந்த மரத்தாலான பெருங்கலத்தில் நிறைந்தது. அதிலிருந்து மூங்கில் குழாய்களினூடாக, மரத்தாலான சிற்றோடைகளினூடாக படைநிலைகள் அனைத்திற்கும் ஒழுகிச் சென்றது. மரத்தொட்டிகளில் விழுந்து நிறைந்த நீரை வீரர்கள் அள்ளி குடிப்பதற்காக எடுத்துச் சென்றனர். விலங்குகளுக்கு படகுபோன்ற மரத்தொட்டிகளில் நீர் வைத்தனர். அடுமனைகளிலிருந்து புகை எழத்தொடங்கியது. படைநிலைகளில் இருந்து ஊக்கமும் உவகையும் கொண்ட குரல்களும் முழக்கமும் எழுந்து மேலே வந்தன.
திருஷ்டத்யும்னன் “படைகளில் வீரர்கள் எப்போதும் உவகையுடன் இருக்கிறார்கள். அவர்கள் நினைவறிந்த நாள் முதலே இத்தகைய வாழ்க்கைகாக பயிற்றுவிக்கப்பட்டவர்கள். பலநூறு முறை அதை உள்ளத்தில் எண்ணி நிகழ்த்திக்கொண்டவர்கள். அது மெய்யென நிகழ்கையில் பெரும் கிளர்ச்சி அடைகிறார்கள்” என்றபின் புன்னகைத்து “ஒவ்வொருவரும் உள்ளூர அறிந்தது இறப்பு அணுகிக்கொண்டிருக்கிறது என்பது. இறப்பு எங்கோ இருக்கிறதென்னும் எண்ணமே நாட்களை வெறுமையாக்குகிறது. எண்ணி அளிக்கப்பட்ட காலம் என்பது ஒவ்வொரு துளியும் அமுது” என்றான்.
சங்கனும் ஸ்வேதனும் மெல்ல பரபரப்பு அழிந்து ஆழ்ந்த அமைதியை அடைந்தனர். ஸ்வேதன் பொருளெனத் திரளாத உள்ளத்துடன் காட்சிகளில் தன்னை அழித்துக்கொண்ட விழிகளுடன் அங்கு நின்றான். ஒரு படையென்பது பெருங்காடென்று முன்பு அவன் எண்ணியிருந்தான். ஏடுகளில் கற்று அறிந்த படைசூழ்கைகள் அனைத்துமே அவ்வெண்ணத்தையே உருவாக்கின. குலாடர்கள் பெரும்படைகள் எதிலும் பங்குபெற்றதில்லை. ஆனால் அவன் அங்கு பார்த்த பாண்டவப் படை நன்கு திட்டமிட்ட பெருநகர் போலிருந்தது. பலகையிட்டு உருவாக்கப்பட்டிருந்த எட்டு பெருஞ்சாலைகளையும் அவற்றிலிருந்து கிளைபிரியும் துணைச்சாலைகளையும் படைநடுவே தெருக்கள்போல நிலைநிறுத்தியிருந்தனர். ஒவ்வொரு தெருவிலிருந்தும் ஒவ்வொரு படைக்குழுவிற்கும் செல்வதற்கான பாதை இருந்தது. அவ்வாறு படைப்பிரிவுக்குள் சீரான பாதை அமைக்கவில்லையென்றால் ஒருமுனையிலிருந்து மறுமுனைக்கு எவரும் விரைந்து சென்றுவிட முடியாதென்பதை அவன் அப்போதுதான் உணர்ந்தான். அவன் எண்ணத்தை உணர்ந்ததுபோல சங்கன் “இப்படைப்பிரிவுக்குள் எந்த முனையிலிருந்தும் எங்கும் புரவியில் ஒருகணம்கூட தயங்காமல் பாய்ந்து ஓடிச்செல்லமுடியும், மூத்தவரே” என்றான்.
காவல்மாடங்கள் அனைத்திலும் முரசுகளும் கொடிகளும் இருந்தன. முரசு ஒலி ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொள்ளும் தொலைவில் காவல்மாடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. முரசொலியைக் கேட்டு அவ்வாணையை கொடியசைவுகளாக மாற்றும்பொருட்டு படைவெளி முழுக்க புரவிகளால் இழுக்கப்பட்ட சிறிய ஆணைமேடைகள் இருந்தன. அங்கு வெவ்வேறு வண்ணங்களிலான கொடிகள் தெரிந்தன. தன்னருகே நின்றிருக்கும் திருஷ்டத்யும்னனின் ஒரு சொல் மறுகணமே முரசோசையாகவும் கொடியசைவுகளாகவும் மாறி அப்படை முழுக்க பரந்து அதை எண்ணிய வண்ணம் இயக்க முடியும் என்று ஸ்வேதன் எண்ணினான். மீண்டும் எதையோ எண்ண உளம் எழுந்தபோதுதான் அந்த எண்ணத்தின் உட்பொருளை உணர்ந்து அவன் மெய்ப்பு கொண்டான்.
பல்லாயிரம் பேரை தன் நாவின் சிற்றசைவின் மூலம் ஆட்டி வைக்கமுடியும்! நாவசைவுகூட வேண்டியதில்லை, விழியசைவே போதும். திருஷ்டத்யும்னனின் பேருருக்கொண்ட உடல் அப்படை. அவன் கால்கள், அவன் கைகள், அவன் விழிகள், அவனுடைய நாக்கு. அப்பெரும்படையின் ஆத்மா அவனில் புகுந்து அவ்வுடலை ஆள்கிறது. அப்படை தன் ஆழத்தில் விழைவதை மட்டுமே அவன் அங்கிருந்து தன் எண்ணமென அடைகிறான், சொல்லென வெளிப்படுத்துகிறான். அவன் பெருமூச்சுவிட்டான். படை என்பது மானுடர் ஓருடலாதல் மட்டுமல்ல, ஒருவன் பேருடல் ஆதலும்கூட. படையே மாமன்னர்களை உருவாக்குகிறது. படையென்றான பின்னரே மானுடன் தன் பேராற்றலை கண்டுகொண்டிருக்க முடியும். தெய்வங்களை நோக்கி விழிதூக்கியிருக்க முடியும். விருத்திரன், ஹிரண்யன், நரகன் என தொடரும் அனைத்து அசுரர்களும் படை என பேருடல்கொண்டமையால் தெய்வங்களை அறைகூவிய மண்வாழ் மானுடரே.
திருஷ்டத்யும்னனும் அப்படையின் காட்சியால் உளம் நெகிழ்ந்திருந்தான். அதை தழுவுவதுபோல கைகளை விரித்து மெல்ல சுழன்றபடி நோக்கினான். “படைசூழ்கை ஒரு பெருங்கலை. நெடுங்காலமாக மானுடர் அதை ஊழ்கத்திற்கென கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்துடன் தனித்திருப்பதையே வகுத்துள்ளன தெய்வங்கள். ஒவ்வொருவரும் பிறிதொருவருடன் ஒன்றென இணைந்து ஓருடலாகுகையில் மானுடரின் அவ்வெற்றி கண்டு தெய்வங்கள் மகிழ்கின்றன. இறங்கி வந்து அவனுடன் இணைந்துகொள்கின்றன. ஆணைகளினூடாகவும் பயிற்சியினூடாகவும் மட்டுமல்ல, கனவுகளூடாகவும் நம்பிக்கைகளூடாகவும்தான் பெரும்படைகள் ஒருங்கிணைகின்றன” என்றான்.
“குலதெய்வங்கள், மூதாதையர், நீத்தார், அறுகொலைகள் என ஒவ்வொரு நாளும் பாடிப் பாடி நம் அகத்தில் செலுத்திக்கொண்ட ஒன்றுதான் நம் அனைவரையும் ஒன்றெனத் திரட்டி இங்கு நிறுத்தியிருக்கிறது. தனியே மனிதர்களுக்கு அச்சமுண்டு. வஞ்சங்கள் உண்டு. படை என்பது அச்சமோ வஞ்சமோ அறியாதது. அது விழைவுகூட இல்லாதது. அதை கிளப்புவதற்கே வஞ்சங்களும் வஞ்சினங்களும் தேவையாகின்றன. கிளம்பியபின் முற்றிலும் பிறிதொன்றாக அது திரள்கிறது. அது ஒற்றைத் திரளென இவ்வுடல்கள் அனைத்தையும் இணைத்தெழும் ஒரு பெருவிசை மட்டுமே. அதன் விழைவு எந்த மானுடருக்கும் உரியதல்ல. அதற்கு இப்புவியுடன் தொடர்பே இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன்.
மெய்ப்பு கொண்ட உடலுடன் ஸ்வேதன் நோக்கி நின்றான். அந்தி சிவந்துகொண்டிருந்தது. முகில்கள் செம்மையிலிருந்து கருமைக்கு சென்றன. விழிதொடும் எல்லையில் எல்லாம் அடுமனைகளின் புகைத்தூண்கள் எழுந்து வானை தொட்டன. படைகளின் ஓசை மழுங்கலான முழக்கமாக மாறிவிட்டிருந்தது. “கிளம்புவோம்” என்று திருஷ்டத்யும்னன் அவன் தோளை தொட்டதும் அவன் பெருமூச்சுடன் “ஆம்” என்றான். மெல்லிய மூக்குறிஞ்சல் ஓசை கேட்டு திரும்பி நோக்கினான். சங்கன் விழிநீர் வடிய அழுதுகொண்டிருந்தான். ஸ்வேதன் சங்கனை தொட்டபோது அவன் உடல் நடுங்கி விதிர்த்தது. “செல்வோம்” என்றான் ஸ்வேதன்.
அன்றிரவு திருஷ்டத்யும்னன் அவர்களுக்காக ஒருக்கிய விருந்தில் பாஞ்சால இளவரசர்களான சித்ரகேதுவும் உத்தமௌஜனும் விரிகனும் பிரியதர்சனும் துவஜசேனனும் மைந்தர்களான திருஷ்டகேதுவும் க்ஷத்ரதர்மனும் க்ஷத்ரஞ்சயனும் கலந்துகொண்டனர். யவனமதுவும் நெய்யில் வறுத்த வெள்ளாட்டு ஊனும் இனிய கிழங்குகளும் அப்பங்களும் பரிமாறப்பட்டன. இரவு கனிந்து வியாழன் நிலைமாறுவதுவரை அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் பங்கெடுக்கும் முதல் அரசவிருந்து அது. தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த குடிலில் உடைகளை மாற்றி முகம் கழுவிக்கொண்டிருந்தபோது ஸ்வேதன் “படைநகர்வு தொடங்கிய பின்னர் போர் முடிவதுவரை வீரர்களுக்கு நீராட உரிமையில்லை. அரசகுடியினர் மட்டும் முகங்களையும் கைகால்களையும் கழுவிக்கொள்ளலாம். போரில் மிக அரிதான பொருள் நீர்” என்றான். சங்கனின் உள்ளத்து உணர்வை புரிந்துகொண்டு “இதேபோல் ஆற்றங்கரையில் தங்கும்போதுகூட படைகள் நீரிலிறங்கி குளிப்பது ஏற்கப்படுவதில்லை. நீரிலிறங்கும் படை முற்றிலும் செயலற்றதாக இருக்கும். அத்தருணத்தில் ஒரு எதிர்தாக்குதல் வந்தால் அதனால் எதிர்கொள்ள முடியாது. நீராடும் பொருட்டு படைகளை சிறு பிரிவுகளாக பிரித்து அனுப்புவதென்பதும் மொத்தப் படையையும் கலைத்து திரும்ப அடுக்குவது போன்றது” என்றான். “நீராடாமல் இருப்பது நன்று. அனைவரும் ஒரே மணம் கொண்டவர்களாகிறார்கள். நம் தரப்பு வீரனை நாம் முகர்ந்தே கண்டுபிடித்துவிடலாம்” என்று சங்கன் சிரித்தபடி சொன்னான்.
ஸ்வேதன் உளம் கிளர்ந்திருந்தான். மாற்றாடை அணிந்துகொண்டிருக்கையில் “நம்மை பாஞ்சால அரசரே நேரில் வந்து வரவேற்பாரென்றும் நமக்கென தனி விருந்தொன்றை ஒருக்குவாரென்றும் நான் எண்ணவே இல்லை, இளையோனே” என்றான். “ஏன்? நாம் இளவரசர்களல்லவா?” என்றான் சங்கன் அவ்வுணர்வை புரிந்துகொள்ளாமல். “விராடரையே அவர்கள் இன்னும் ஷத்ரியர்களாக முழுதேற்கவில்லை. நாமோ விராடராலேயே ஏற்கப்படாத குடியினர்” என்றான் ஸ்வேதன்.
சங்கன் “நிலம்வென்று நெறிநின்று ஆளும் அனைவரும் ஷத்ரியர்களாகும்பொருட்டு இளைய யாதவரின் சொல் எழுந்திருக்கிறதென்றும் அதை ஏற்று திரண்டதே இப்பெரும் படை என்றும் நாம் அறிந்திருக்கிறோம்” என்றான். “அது கூறப்படுவது. எப்போதும் போருக்கென கூறப்படும் கொள்கைகள் பிறருக்கானவை. போரில் இறங்குபவர் அனைவருக்கும் வேறு நோக்கங்கள் இருக்கும். எளிய வீரர்களுக்குக்கூட. ஆனால் அந்நோக்கத்தின் பொருட்டு உயிர்துறப்பது பொருளற்றது என அவர்களின் ஆழம் கூறும். ஆகவே பெரிய ஒரு கொள்கையும் கனவும் அவர்களை நோக்கி சொல்லப்படும். அது பொய்யென்றறிந்தாலும் அவர்கள் அதை நம்பி உணர்வெழுச்சியுடன் ஏற்றுக்கொள்வார்கள்” என்று ஸ்வேதன் சொன்னான்.
திருஷ்டத்யும்னனே பாடிவீட்டிலிருந்து வெளியே வந்து இருவரையும் தழுவி அழைத்து உள்ளே சென்று அமரச்செய்தான். திருஷ்டத்யும்னனின் இருபுறமும் அமர்ந்து அவர்கள் உணவுண்டார்கள். சங்கன் “நாம் இன்றிரவே கிளம்பி படைமுகப்பிற்கு செல்லக்கூடாதா?” என்றான். “எத்தனைமுறை கேட்பாய், அறிவிலி?” என்றான் ஸ்வேதன் எரிச்சலுடன். திருஷ்டத்யும்னன் பொறுமையாக “செல்லலாம். ஆனால் அதில் பொருளில்லை. எப்படியாயினும் ஒருநாள் முழுக்க பயணம் செய்து நாளை மறுநாள் பொழுது புலர்ந்த பிறகே நீங்கள் பாண்டவ இளவரசர்களை சந்திக்கமுடியும். காலையில் படைக்கணக்கு நோக்குதலையும் அணிவகுப்பை பார்வையிடுதலையும் அவர்கள் தவறவிடுவதில்லை. அவை முடிந்தபிறகு உச்சிவெயில் ஒளிகொள்ளும்போதுதான் பிறரை சந்திப்பார்கள். இப்பொழுதே சென்று அங்கு காத்திருப்பதற்கு மாறாக இங்கு நன்று துயின்று முதற்புலரியில் கிளம்பலாம்” என்றான்.
சங்கன் பெருமூச்சுடன் “ஆம், இன்னும் இரண்டு இரவுகள்!” என்றான். திருஷ்டத்யும்னன் நகைத்தபடி “பாரதவர்ஷமெங்கும் இளைய பாண்டவர் பீமனை தங்கள் உள்ளத்து ஆசிரியராக ஏற்றுக்கொண்ட பல்லாயிரம் பேர் இருக்கிறார்கள். அனைவருமே பெருமல்லர்கள், கதை வீரர்கள்” என்றான். ஸ்வேதன் “அனைவருமே அஞ்சனை மைந்தனின் அடிபணிபவர்களும்கூட” என்றான். திருஷ்டத்யும்னன் திரும்பி சங்கனிடம் “மெய்யாகவா?” என்றான். “ஆம், நான் மாருதனை தலைமேற்கொண்டவன். ஒவ்வொரு நாளும் அவரை வழிபடுபவன்” என்றான்.
ஸ்வேதன் திருஷ்டத்யும்னனிடம் “இப்போரில் எங்களுக்கான இடம் என்ன என்று மட்டுமே அறியவிரும்புகிறோம். எங்களுக்கு எது கிடைக்கும் என்ற கணிப்பை முன்வைக்க விரும்பவில்லை. ஏனெனில் எங்கள் தலைவர்களுக்காக போரிடவேண்டும் என்ற ஒரே நோக்கில் கிளம்பி வந்தோம்” என்றான். திருஷ்டத்யும்னன் “தாங்கள் அறிந்திருப்பீர்கள் குலாடரே, இங்கு படைகொண்டு வந்திருக்கும் அரசர்களில் எவரும் மெய்யாகவே இன்றுவரை போருக்குப் பின் தங்களுக்கு கிடைப்பதென்ன என்று கேட்டதில்லை. அவர்கள் கேட்கத் தயங்கியிருக்கக்கூடுமோ என்று ஐயுற்று ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக நான் உசாவியிருக்கிறேன். அதன் பொருட்டு விருந்துகளை ஒருக்கியிருக்கிறேன். நிஷாதர்களும் கிராதர்களும் அசுரர்களும் கோரிப்பெறுவதற்கென எதுவுமே அற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அளிக்க மட்டுமே வந்திருக்கிறார்கள். பாரதவர்ஷத்தில் இதுபோல வென்ற பின் கொள்வதற்கில்லாத ஒரு படை இதற்கு முன் திரண்டிருக்காது” என்றான்.
“பின்னர் எதன் பொருட்டு அவர்கள் படைகொண்டு வந்திருக்கிறார்கள்?” என்று ஸ்வேதன் கேட்டான். “பெரும்பாலானவர்கள் பெண்பழி தீர்க்கும் கடமை தங்களுக்குண்டு என்று வந்திருக்கிறார்கள். அன்னையர் அவர்களுக்கு அளித்த ஆணையை தலைமேற்கொண்டிருக்கிறார்கள். எஞ்சியோர் இளைய யாதவரின் கொள்கைமேல் பற்று கொண்டு அதற்கென நிலைகொள்ள விழைந்து வந்தவர்கள். நானும் விராடரும் மட்டுமே யுதிஷ்டிரரின் முடி நிலைக்கவேண்டுமென்றும் அவர்கள் கொடிவழி அஸ்தினபுரியை ஆளவேண்டுமென்றும் விரும்பி வந்திருக்கிறோம். ஏனெனில் எங்கள் குருதியின் வெற்றி அது” என்றான்.
சங்கன் உணவுண்பதை இயல்பாக திரும்பிப்பார்த்த திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “இவன் இளைய பாண்டவரின் மாணவனாக இருக்கத்தக்கவனே” என்றான். “ஒருவேளை உணவுண்பதில் இவன் அவர்களை கடந்துசெல்லவும்கூடும்” என்றான் ஸ்வேதன். “இவனுடன் போட்டியாக அமரத்தக்க இரு மைந்தர் அவருக்குள்ளனர். இருவருமே பேருடலர். உண்மையில் இவர்கள் தோள்தழுவிக்கொள்ளும் காட்சியைக் காண பெரிதும் விழைகிறேன்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “ஆம், சுதசோமனும் சர்வதனும்… கேள்விப்பட்டுள்ளேன்” என்றான் சங்கன். “ஒருமுறை அவர்களுடன் நான் தோள்கோக்கவேண்டும்.”
அன்றிரவு குடிலில் ஈச்சம்பாயில் சங்கன் புரண்டு படுத்துக்கொண்டே இருந்தான். அவன் அசைவினால் துயில்கலைந்த ஸ்வேதன் எரிச்சலுடன் “என்ன செய்கிறாய், அறிவிலி?” என்று கேட்டான். “என்னால் துயில இயலவில்லை, மூத்தவரே” என்றான் சங்கன். “எனில் வெளியே சென்று நின்றுகொள். இதற்குள் ஓசையெழுப்பிக்கொண்டிருக்காதே” என்று ஸ்வேதன் சொன்னான். “ஆம்” என்று சொல்லி சங்கன் எழுந்து வெளியே சென்றான். சிறுவாயிலினூடாக அவன் கைகளைக் கட்டியபடி வானை நோக்கி நிற்பதை ஸ்வேதன் கண்டான். சற்று நேரத்தில் துயிலில் ஆழ்ந்து நெடும்பொழுதுக்குப் பின் விழித்துக்கொண்டபோது அருகே அவன் இல்லை என்பதை உணர்ந்தான். அதன் பின்னரே அவன் வெளியே சென்றதை நினைவுகூர்ந்து எழுந்து வெளியே வந்தான். பாண்டவர்களின் படைகள் பல்லாயிரக்கணக்கான பந்த ஒளிப்புள்ளிகளாக பரவிக்கிடந்தன. பந்தங்கள் நேர்கோடுகளாக ஒன்றையொன்று வெட்டி பின்னியிருந்தன. கைகளைக் கட்டியபடி அங்கிருந்த மரத்தின் அருகே அந்தப் பரப்பை பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் சங்கன்.
ஸ்வேதன் அருகே சென்று நின்ற பிறகே அவனை உணர்ந்து திரும்பிப் பார்த்தான். “துயிலவில்லையா?” என்று அவன் கேட்டான். “இல்லை, நான் அவரை மீளமீள உள்ளத்தால் சந்தித்துக்கொண்டிருக்கிறேன். அப்போது நான் என்ன சொல்ல வேண்டும்? எப்படி நடந்துகொள்ள வேண்டும்? எத்தனை எண்ணியும் என் உள்ளம் கலைந்துகொண்டே இருக்கிறது. நாம் மலைமக்கள். நமது முறைமைகள் முற்றிலும் வேறு. இன்றுவரை பேரவை எதற்கும் நான் சென்றதில்லை. நான் நேரில் கண்ட முதல் அரசகுடியினர் திருஷ்டத்யும்னரே. முதற்கணத்திலேயே அவர் நம்மை அணைத்து தோள்தழுவி அனைத்து முறைமைகளையும் கைவிட்டுவிட்டார். ஆகவே என் இயல்புப்படி நான் இருந்தேன்” என்றான் சங்கன்.
“மூத்தவரே, இப்போது எண்ணுகையில் நாணுகிறேன். அவர் முன் அரக்கனைப்போல இரண்டு கைகளாலும் உணவை அள்ளியெடுத்து ஓசையெழ மென்று உண்டேன். ஏப்பங்கள் விட்டேன். மேலும் மேலும் என தொடையில் அறைந்து உணவை கோரினேன். ஓர் இளவரசன் நடந்துகொள்ளவேண்டிய முறைகளல்ல அவை” என்றான் சங்கன். “இவ்வண்ணம் நான் இளைய பாண்டவர் முன் இருந்தால் என்ன நிகழும்? நான் வேறொரு வண்ணம் நடக்கவும் அறியேன்.” ஸ்வேதன் புன்னகைத்து “நீ காட்டு மானுடனாக இருப்பதையே உன் தலைவர் விரும்புவார். நீ அறிந்திருப்பாய், அனைத்துச் சூதர் பாடல்களிலும் எந்த அவையிலும் தலைக்குமேல் கூரையிருப்பதை ஒப்பாத களிறு என அவர் தனித்து அமர்ந்திருந்தார் என்றே சொல்லப்பட்டுள்ளது” என்றான். “ஆம், இங்கிருக்கும் அனைத்தையும் மீறி எவ்வகையிலோ என்னால் அவரை அணுக முடியுமென்று தோன்றுகிறது. மூத்தவரே, இப்போது நான் எண்ணுவதைப்போலவே எண்ணியபடி எங்கோ அவரும் இதேபோல கைகளை மார்பில் கட்டியபடி இப்படைப்பிரிவுகளை பார்த்து நின்றிருக்கிறார் என்று எண்ணுகிறேன்” என்றான் சங்கன்.
“நீ என்ன எண்ணிக்கொண்டிருந்தாய்?” என்று ஸ்வேதன் கேட்டான். “இன்று திருஷ்டத்யும்னர் சொன்னாரல்லவா, அனைத்து மானுடரும் இணைந்து உருவாகும் ஒற்றைப்பெருமானுடனே படை என்று. ஒவ்வொருவரும் தங்களை அதற்கு முழுமையாக ஒப்புக்கொடுத்து இதை உருவாக்கியிருக்கிறார்கள். மாளிகைகளில் செங்கல் அமைவதுபோல ஒவ்வொருவரும் பதிந்துள்ளார்கள். எந்த மாளிகையிலும் முழுதுமிணையாத உருளைக்கல் அவர். அறியா மலையுச்சியிலிருந்து பெருநதியொன்றால் உருட்டிக் கொண்டுவரப்பட்டவர். என்னாலும் இந்தப் படையில் முற்றாக இணைய முடியாது. முதல் வியப்புக்குப் பின் இது என்ன என்ற துணுக்குறலே எனக்கு ஏற்பட்டது. இப்படைக்குள் நுழைகையில் இது என்னை கிளரச் செய்தது. அந்தி இருளத்தொடங்கி என்னைச் சூழ்ந்து இது ஒளியும் ஒலியுமாக மாறியபோது முற்றிலும் தனித்தவனானேன். இதன் வெற்றி தோல்விகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை” என்று சங்கன் சொன்னான். ஸ்வேதன் புன்னகைத்து அவன் தோளை மெல்ல தொட்டு மீண்டும் தன் மஞ்சத்திற்கே திரும்பினான்.