தமிழிலக்கிய ஆய்வாளரும் நாவலாசிரியருமான பேரா.ராஜ் கௌதமன் அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது அளிப்பதற்கு முடிவெடுத்திருக்கிறோம். விழா வழக்கம்போல டிசம்பர் இறுதிவாரம் கோவையில் நடைபெறும்
ராஜ் கௌதமன் அவர்களை 1988ல் அவர் காலச்சுவடு இதழில் எழுதிய ”தண்டியலங்காரமும் அணுபௌதிகமும்‘ என்னும் கட்டுரை வாயிலாகவே நான் அறிவேன். அன்றுமுதல் தொடர்பு எப்போதுமிருந்தது. அவ்வப்போது அவரைப்பற்றி எழுதியும் வந்திருக்கிறேன். நான் எழுதிய நவீன தமிழிலக்கிய முன்னோடிகள் வரிசை நூல்களில் ஒன்று அவருக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டது. அவருடைய கருத்துக்களுடன் எப்போதும் ஒரு மோதலும் உரையாடலும் எனக்கிருந்தது.
ராஜ் கௌதமனின் இயர்பெயர் எஸ்.புஷ்பராஜ். 1950ல் விருதுநகர் அருகே புதுப்பட்டி என்னும் ஊரில் பிறந்தார். பாளையங்கோட்டை தூயசவேரியார் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை படித்தபின் தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் அண்ணாமலைப் பல்கலையில் சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இவருடைய முனைவர் பட்ட ஆய்வு அ.மாதவையா குறித்தது. அ.மாதவையாவின் மகன் மா.கிருஷ்ணனுக்கு அணுக்கமான நண்பராகவும் இருந்தார். புதுவை மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்பேராசிரியராக இருந்தார். 2011இல் ஓய்வு பெற்றார். இப்போது நெல்லையில் வசிக்கிறார்
ராஜ் கௌதமன் தன்வரலாற்றுத் தன்மைகொண்ட மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ். அவை எள்ளலுடன் பேச்சுநடையில் சென்ற அரைநூற்றாண்டில் தமிழ்ச்சமூகவியல் மாற்றங்களை வெளிப்படுத்தும் படைப்புக்கள். அ.மாதவையா குறித்தும் ராமலிங்க வள்ளலார் குறித்தும் [கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக] ராஜ் கௌதமன் எழுதிய வரலாற்றுஆய்வு நூல்களும் முக்கியமானவை
எண்பதுகளில் தமிழில் உருவான தலித் இலக்கிய அலையுடன் ராஜ் கௌதமன் அணுக்கமான தொடர்பு கொண்டிருந்தார். தலித் அரசியல், தலித் இலக்கியம் சார்ந்து நூல்களை எழுதியிருக்கிறார். தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு, க.அயோத்திதாசர் ஆய்வுகள், அறம் அதிகாரம் ஆகியவை இந்தத் தளத்தில் அமைந்த நூல்கள். இக்காலகட்ட நூல்களில் தீவிரமான விமர்சனமும் எள்ளலும் வெளிப்பட்டன. அவருடைய பிற்கால ஆய்வுநூல்களுக்குரிய அமைதியும் ஒருங்கிணைவும் இவற்றில் இல்லை.விதிவிலக்கு க.அயோத்திதாசர் ஆய்வுகள்
ராஜ் கௌதமனுக்கு தமிழிலக்கிய மரபில் உள்ள இடம் என்பது அவர் தமிழிலக்கிய மரபை வகுத்தளித்த ஆய்வாளர்களில் முதன்மையான மூவரில் ஒருவர் என்பதே. தமிழிலக்கிய மரபு இருபதுநூற்றாண்டு வரலாற்றுத் தொன்மை கொண்டது. அதற்கு மரபான ஒரு வரலாற்றுச் சித்திரமும் வைப்புமுறையும் உள்ளது.இருபதாம் நூற்றாண்டில் இவையனைத்தும் மாறின. அதை நாம் நவீனக் காலகட்டம் என்கிறோம்.
இருபதாம்நூற்றாண்டு என்பது குடியாட்சியின் காலகட்டம். அனைத்துமக்களும் கல்வி கற்று அறிவுப்புலத்திற்கு வந்தனர். அனைவரும் அரசதிகாரத்தில் பங்குகொண்டனர். குலவழக்கங்களும் மதங்களும் கொண்டிருந்த இடத்தை புதிய அரசியல்கொள்கைகள் எடுத்துக்கொண்டன. அனைத்துத் தளங்களிலும் புதிய நோக்குகள் உருவாகி வந்தன. வரலாறும் வைப்புமுறையும் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டன.
இந்த மாற்றத்திற்கு ஏற்ப உலகமெங்குமே அரசியல் ,சமூக வரலாறுகள் மாற்றியும் விரித்தும் எழுதப்பட்டன. அவற்றுக்கேற்ப இலக்கிய வரலாறும் இலக்கியக் கோட்பாடுகளும் மாற்றமும் வளர்ச்சியும் பெற்றன. இவ்வாறு புதியநோக்கில் இலக்கியத்தை ஆராய்ந்து வரையறுக்கும் இலக்கியக் கோட்பாட்டாளர்கள் உருவாகி வந்தனர். தமிழின் இந்த புதிய இலக்கியக் கோட்பாட்டுக் காலகட்டத்தை மூன்றாகப் பிரிக்கலாம். முறையே பி.டி.சீனிவாச அய்யங்கார், கைலாசபதி, ராஜ் கௌதமன் ஆகியோரை அக்காலகட்டங்களின் முதன்மை ஆய்வாளர்கள் என்று சொல்லலாம்.
முதற்காலகட்டம் நம் இலக்கியத்தின் வரலாற்றை புதிய காலக்கணிப்புடன் அடுக்கி ஒரு வரலாற்றுத் தொடர்ச்சியை உருவகிப்பதும், அதில் தொடர்ந்து வரும் கருதுகோள்களை வகுத்துரைப்பதும் ஆகும். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழிலக்கிய நூல்கள் ஏடுகளிலிருந்து அச்சில் வரத்தொடங்கின. உ.வே.சாமிநாதய்யர், சி.வை.தாமோதரம் பிள்ளை, சௌரிப்பெருமாள் அரங்கன் போன்றவர்கள் அதில் பெரும்பங்களிப்பாற்றினர். மறுபக்கம் கல்வெட்டுகள் போன்ற சான்றுகளைக்கொண்டு தமிழக வரலாற்றை எழுதும் முயற்சிகள் நடைபெற்றன. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, தி.வை.சதாசிவப் பண்டாரத்தார், ஆர்.சத்தியநாத அய்யர் முதலியோர் அதில் செயல்பட்டனர்
இவ்விரு சாராரின் பங்களிப்பில் இருந்து மேலே சென்று தமிழ்ப்பண்பாடு, இலக்கியம் குறித்த முதற்கட்டக் கொள்கைகளையும் வளர்ச்சிவரைவையும் உருவாக்கியவர்கள் பலர். மயிலை சீனி வெங்கடசாமி, ந,மு.வெங்கடசாமி நாட்டார், கா.அப்பாத்துரை, ஔவை துரைசாமிப்பிள்ளை ஜார்ஜ் எல் ஹார்ட் ,என அறிஞர்களின் ஒரு நீண்ட வரிசை உண்டு. அவர்களில் முதன்மையானவர் பி.டி.சீனிவாச அய்யங்கார். தமிழ் பண்பாட்டுமரபு, இலக்கிய மரபு ஆகியவற்றைப் பற்றி அவர் உருவாக்கிய ஒட்டுமொத்தப் பெருஞ்சித்திரமே பின்னர் பலவகையிலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
அடுத்தகட்ட நகர்வை அதில் உருவாக்கியவர்கள் மார்க்ஸிய ஆய்வாளர்கள். என்னென்ன கருத்துக்களும் உருவகங்களும் தமிழ்ப்பண்பாட்டிலும் இலக்கியத்திலும் உள்ளன என்ற முந்தையோரின் வகுத்துரைகளுக்கு மேல் சென்று ஏன் அவை உருவாயின, எவ்வாறு நிலைகொண்டன என்று ஆராயும் பார்வை அவர்களுடையது. நா.வானமாமலை, கா.சிவத்தம்பி, சி.கனகசபாபதி, ஞானி, ந.முத்துமோகன் என ஒரு நீண்ட வரிசை அறிஞர்களை இந்நோக்கை பொதுவாகக் கொண்டவர்கள் என்று சொல்லலாம். அவர்களில் முதன்மையானவர் என்று க.கைலாசபதி அவர்களைச் சொல்வேன்.
மூன்றாவது அலை எண்பதுகளில் எழுந்தது. ஒடுக்கப்பட்டோர், விளிம்புநிலைமக்கள் நோக்கில் பண்பாட்டையும் இலக்கியத்தையும் ஆராய்வது இது. ஐரோப்பாவில் அறுபது எழுபதுகளில் உருவாகி வந்த புதுமார்க்ஸிய ஆய்வுநோக்குகள் மற்றும் பின்நவீனத்துவ சிந்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்த மானுடவியல், சமூகவியல், மொழியியல் கொள்கைகளின் விளைவாக இந்நோக்குகள் உருவாகி வந்தன. தமிழின் கல்விப்புலத்திற்குள் மானுடவியலும் நாட்டாரியலும் வந்தது இவ்வாய்வுகளுக்கு தேவையான தகவல்புலத்தை உருவாக்கி அளித்தது. அ.மார்க்ஸ், கோ.கேசவன், அ.ராமசாமி போன்றவர்களை இவ்வகைக்கு உதாரணமாகச் சொல்லலாம். ராஜ் கௌதமன் அவர்களில் முதன்மையானவர்.,
தமிழ்ப்பண்பாட்டின் வளர்ச்சியில் எப்படி ஒடுக்குமுறைக் கருத்துக்கள் இயல்பாக உருவாகி வந்தன, அவை எப்படி அறம் , ஒழுக்கம் போன்ற விழுமியங்களாக உருமாற்றம் பெற்றன, எப்படி இலக்கியமும் அழகியலும் மேல்கீழ் அதிகாரக் கட்டமைப்புக்கு உதவிசெய்யும் கருத்தியல்களாகச் செயலாற்றின என்பதை விரிவான சான்றுகளுடன் தொகுத்து முன்வைத்து கொள்கைகளாக நிறுவும்தன்மை கொண்டவை ராஜ் கௌதமனின் இந்தத் தளத்தைச் சார்ந்த நூல்கள். பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும், ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும், கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு.போன்ற நூல்களை இவ்வரிசையில் சேர்க்கலாம். ராஜ் கௌதமனின் முதன்மையான பங்களிப்புகள் இந்நூல்களே. இவ்வகையில் தமிழிய ஆய்வுகளில் மாபெரும் செவ்வியல் ஆக்கங்கள் இவை என ஐயமின்றிச் சொல்லமுடியும்
ஒர் ஆய்வாளன் பொதுச் சொல்லாடலுக்குள் வரவேண்டும் என்றால் மேடைகளில் பேசவேண்டும், ஊடகங்களில் தொடர்ச்சியாக கருத்துப்பூசல்களில் ஈடுபடவேண்டும். உலகமெங்கும் உள்ள வழக்கம்தான் இது. ராஜ் கௌதமன் மேடையில் பேசுவதில்லை. பொதுவெளிக்கு வருவதுமில்லை. எண்பதுகளின் தலித் அரசியல் எழுச்சிக்காலகட்டத்தில் மட்டுமே ஓரளவு கருத்துப்பூசல்களில் அவர் பெயர் அடிபட்டது. ஆகவே அவருடைய மிகப்பெரிய ஆய்வுகள் பொதுவாகப் பேசப்படவில்லை. கல்விப்புலத்திலும் அந்நூல்களுக்கு தொடர்ச்சியோ எதிர்வினையோ உருவாகவில்லை.
ராஜ் கௌதமனின் கருத்துநிலைகளுடன் இன்றைய இலக்கிய வாசகர் பலதளங்களிலான நீண்ட விவாதங்களில் ஈடுபடுவதற்கு இடமுள்ளது. எனக்கு அவருடைய விரிவான வரலாற்று அடுக்குமுறையும், இலக்கிய வளர்ச்சிப்போக்கில் இருந்து கருதுகோள்களின் சரடை பிரித்தெடுக்கும் ஆய்வுமுறையும் பெரும் திறப்புகளை அளித்தவை. அதேசமயம் அவர் இலக்கிய இயக்கத்தின் அழகியலை, அதன் மெய்த்தேடலை சற்றும்பொருட்படுத்தவில்லை என்று மாற்றுநோக்கும் உண்டு. ராஜ் கௌதமன் இலக்கிய இயக்கம் என்பது வெறும் கருத்துச் செயல்பாடு மட்டுமே என்றும் எல்லாக் கருத்துக்களும் சமூக, பொருளியல் அதிகாரத்துக்கான கருவிகளே என்றும் எண்ணுகிறார். அது என்னால் ஏற்கப்படுவது அல்ல. மானுடனின் அழகியல்நாட்டமும் மெய்மைநோக்கி அவன் கொண்டுள்ள விளக்கமுடியாத விடாயும் இந்தப் பார்வையால் குறுக்கப்பட்டுவிடுகின்றன. எல்லா கோட்பாட்டாளர்களையும் போல இறுதியில் ஒரு குறுக்கல் நோக்கையே விடையென ராஜ் கௌதமன் முன்வைக்கிறார் என்றே எண்ணுகிறேன்
ராஜ் கௌதமனை ஒருவகையில் சுந்தர ராமசாமி பள்ளியைச் சேர்ந்தவர் என்று சொல்லலாம். அவ்வாறுதான் எனக்கு அவர் அறிமுகம். சுந்தர ராமசாமியின் இல்லத்தில் அவருடன் அமர்ந்து அவர் ஈடுபட்ட நீண்ட உரையாடல்கள் ராஜ் கௌதமனின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவை. அவர் ஒருவகையில் சுந்தர ராமசாமியை மறுத்து விலகி விரிந்துசென்றார். நான் பிறிதொருவகையில். அவ்வகையில் என் ஒருசாலை மாணாக்கர், மூத்தவர் அவர். ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது என்பது முப்பதாண்டுகளாக அவரை விவாதித்தபடி பின்தொடரும் ஒரு மாணவனின், அவன் நண்பர்களின், வாசகர்களின் அன்புக்கொடை.
நண்பர்களுடன் விருதைப்பற்றி பேசி முடிவெடுத்தபின் அதை தொலைபேசியில் ராஜ் கௌதமனுக்குச் சொன்னேன். வழக்கம்போல வேடிக்கையாகச் சிரித்தபடி அதை ஏற்றுக்கொண்டார். இன்று [16-72018] அன்று காலை நாகர்கோயிலில் இருந்து நானும் படிகம் ஆசிரியர் ரோஸ் ஆன்றோவும் கிளம்பி ராஜ் கௌதமனைச் சந்திக்க திருநெல்வேலிக்குச் சென்றோம். வழியில் நண்பர் ஜான் பிரதாப்பும், சக்தி கிருஷ்ணனும் இணைந்துகொண்டனர். ராஜ் கௌதமனின் அழகிய பெரிய வீட்டில் அவரும் மனைவியும் மட்டுமே இருந்தனர். மலர்ச்செண்டு அளித்து முறைப்படி விருதை அறிவித்தோம்.
இரண்டுமணிநேரம் ராஜ் கௌதமனுடன் பேசிக்கொண்டிருந்தோம். அவருடைய இளமைப்பருவம், சுந்தர ராமசாமி, புனித சேவியர் கல்லூரி நினைவுகள் என தாவித்தாவிச் சென்றது உரையாடல். அவருடன் நான் நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டதில்லை. அவர் இருந்த ஊர் எனக்கு மிகத் தொலைவானதாக இருந்தது. அவருடைய இயல்பு ஒன்றைத் தீவிரமாகச் சொல்லி உடனே அதையே கிண்டலடித்து அடுத்ததற்குக் கடந்துசெல்வது. சிலுவைராஜ் சரித்திரத்தில் தெரிந்த அந்த இயல்பை பேச்சில் பார்த்துக்கொண்டே இருந்தது மகிழ்வளித்தது
ராஜ் கௌதமனின் நூல்கள் விரிவான ஆழமான வாசிப்புக்குரியவை. வாசகர்கள் போதிய காலம் எடுத்துக்கொண்டு அவற்றை வாசித்து விவாதித்து வரவேண்டும் என்பதற்காகவே விருது முன்னரே அறிவிக்கப்படுகிறது. நம் சூழலில் இதுவரை நிகழாத ஒரு கூட்டுவாசிப்பு அவர்மேல் இத்தருணத்தை முன்னிட்டு நிகழவேண்டும்