இரு நண்பர்கள் பாண்டிச்சேரிக்குச் செல்கிறார்கள் அன்று தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. பாண்டிச்சேரிக்குச் செல்வதென்றாலே குடி கேளிக்கை என்று தான் அன்று பொருள். இருவரில் ஒருவர் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்தவர் செல்வந்தர். சொந்தமாக கார் வைத்திருக்கிறார். ஜாலியாக இருப்போம் வா என்று மற்ற நண்பரை அழைத்திருந்தார். இருவருக்குமிடையே வாழ்க்கைப்பார்வையில் பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. பணத்தை எண்ணி சிக்கனமாகச் செலவழிக்கும் மனநிலை ஒருவருக்கென்றால் பணம் என்பது அன்றையன்றைய தேவைக்காக செலவழிக்கவேண்டியது என்ற எண்ணம் இன்னொருவருக்கு.
அவர்கள் பாண்டிச்சேரியில் ஒரு பாரில் அமர்ந்திருக்கிறார்கள். குடி ,தீனி, மீண்டும் குடி. அதாவது வாழ்க்கையைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.அப்போது கார் பர்க்கிங் அருகே ஒரு வண்ணக்கொடி பறப்பதை பார்க்கிறார் ஒருவர். அது ஒரு புடவை முந்தானை. யாரோ வேண்டுமென்றே கைதூக்கி அதை பறக்கவிடுகிறார்கள் என்று தெரிகிறது. அவள் ஒரு விபச்சாரியாக இருப்பாளோ என நினைக்கிறார்கள்.விபச்சாரி என்பதற்கு தனி வார்த்தையையே வைத்திருக்கிறார்கள்
அமெரிக்க நண்பருக்கு பெண் அவசரமாகத் தேவை . அமெரிக்காவில் அவர் சுதந்திரமாக வாழ்ர்தவர், திருமணமாகாதவர். இங்கே பெண் கிடைப்பத் அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்று புலம்பிக்கொண்டே இருக்கிறார்/ அவருக்கு புரிந்துவிட்டது, அது அழைப்புதான். அவள் தன் ஆடையை வேண்டுமென்றே பறக்கவிட்டு கவனத்தை ஈர்க்கிறாள். அவள் ஒரு பாலியல் தொழிலாளியேதான். அவர்கள் இருவரும் அவளைத் தேடிச் செல்கிறார்கள்.
அவள் கரிய இளம்பெண். முதல்பார்வையில் அழகி அல்ல. ஆனால் பார்க்கப்பார்க்க வசீகரமாக ஆகிறாள். அவள் அங்கே வேர்க்கடலையை உரித்துத் தின்றபடி வெயிலுக்கு ஒரு கட்டிடத்தின் விளிம்பில் காத்து நின்றிருக்கிறாள். அவளிடம் பேச்சுக்கொடுக்கிறார்கள். அவள் நடந்து செல்ல காரில் தொடர்கிறார்கள். அமெரிக்க நண்பர் நேரடியாகவே ‘வர்ரியா?” என்று கேட்டுவிடுகிறார்.
அந்தப் பெண்மணியை பார்த்தபோதே கதைசொல்லிக்கு ஒர் ஒவ்வாமை ஏற்படுகிறது. அடித்தளத்து முரட்டுப்பெண்மணி போன்ற ஒரு தோற்றம். ஆனால் அவளிடம் பழக ஆரம்பிக்கும் போது அவளுடைய கனிவும் நேர்மையும் நாசுக்கும் ஒவ்வொன்றாகத் தெரிய வருகின்றன. குறிப்பாக அவளுடைய உடல் அசைவுகள், மொழி, சிரிப்பு அனைத்துமே மிக அந்தரங்க சுத்தியும் கனிவும் கொண்டதாக இருக்கின்றன.
அவர்கள் ஒரு கள்ளுக்கடைக்குச் சென்று மீனும் பிற சாப்பாட்டுப்பொருட்களும் வாங்கிக்கொள்கிறார்கள். தண்ணீர்ப்புட்டி நிறைய கள்ளும் வாங்கிக்கொள்கிறார்கள். அமெரிக்க நண்பருக்கு அப்படி அடித்தள மக்களுடன் ‘பேதமில்லாமல்’ அவரால் பழக முடிவது பற்றி மிகவும் பெருமை. ”நைஸ் பிளேஸ், நைஸ் பீப்பிள்’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்.
அவர்கள் ஒரு சோளக்கொல்லைக்குச் செல்கிறார்கள். அவள் சாப்பிட்டு ஒருநாள் ஆகிறது, கடுமையான பசியில் இருக்கிறாள். ஆனால் அதை காட்டிக்கொள்வதில்லை. அவர்கள் வாங்கிக்கொண்டுவந்த உணவை சாப்பிடுகிறார்கள். கள் குடிக்கிறார்கள். ”நீ முதலில் அவளிடம் உறவு வைத்துக்கொள். நான் முதலில் போனால் நீங்கள் மீண்டும் அவளிடம் போகமாட்டீர்கள். எனக்கு அந்த இன்ஹிபிஷன் எதுவுமே இல்லை” என்று அமெரிக்க நண்பர் அவரிடம் சொல்கிறார்.
அவர் அவளிடம் சென்று பேசிக்கொண்டிருக்கிறார். உறவுகொள்ள மனம் வரவில்லை மனைவியின் முகம் நினைவுக்கு வந்து தடுக்கிறது. அவள் அவ்ர்களிடம் பெயர் கேட்கும்போது இருவருமே பொய்யைத்தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவள் அவரிடம் தன் வாழ்க்கையை முழுமையாகச் சொல்லிவிடுகிறார். ஒரு கிழவனுக்கு வாழ்க்கைப்பட்டு அவனிடம் இருக்கபிடிக்காமல் ஒரு போலீஸ்காரனுடன் வந்துவிட்டாள். அவன் பணமே கொடுப்பதில்லை. ஆனால் தினமும் குடித்துவிட்டு அடிக்கிறான். ‘என்னை கூட்டிட்டு போறீங்களா? உங்க வீட்டிலே பாத்திரம் கழுவறேன். பிள்ளைகளைப் பார்த்துக்கொள்கிறேன். என்னவேலை வேணுமானாலும் செய்யறேன்’ என பரிதாபமாக கேட்கிறாள்.”என்னால் உன்னைக் கூட்டிப்போகமுடியாது. அவரிடம் கேள்” என்கிறார். அவள் “ அவரிடம் நீங்கள் சொன்னால்தான் கேட்பார். நீங்கள் சொல்லுங்கள்” என்று கேட்கிறாள்.
அவர்கள் வெளியே வந்ததும் காரில் இருந்த அமெரிக்க நண்பர் அவளிடம் உறவு கொள்கிறார். அமெரிக்க நண்பர் அவளுடன் செல்லும்போது இவர் ஆங்கிலத்தில் “நம்முடன் வரவா என்று கேட்கிறாள். வாக்குறுதி ஏதும் கொடுத்துவிடவேண்டாம்” என்கிறாள். “நானா? வாக்குறுதியா, நெவர்” என்கிறார் அமெரிக்க நண்பர்.
அன்று முழுக்க இருவரும் அவளிடம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவளுடைய நாகரிகமும் ஒரு இடத்தில் கூட பிறரை உரசாத உறுத்தாத மென்மையும் தான் கதை சொல்லியை பெருமளவுக்கு ஈர்த்துக்கொண்டே இருக்கிறது. ஒரு அன்னையைப்போலவோ காதலியைப்போலவோ அவளிடம் இருக்க முடிகிறது. அவர்கள் அன்று அருந்தி எஞ்சிய கள்ளை அவள் சிறிய மண் குழி எடுத்து அதில் ஊற்றி மூடிவிடுகிறாள். அச்செயலில் இருந்த நளினமே அவரை பரவசமடையச் செய்கிறது
கிளம்பும்போது அவள் “நானும் வரவா?” என்று கேட்கிறாள். “நீ இங்கேயே இரு நாளையோ நாளை மறுநாளோ ஏற்பாடுகள் எல்லாம் செய்தபின் வந்து உன்னை கூட்டிச் செல்கிறோம்” என்று அவளிடம் சொல்கிறார்கள். அவளுக்குப் பணம் கொடுத்தால் பிடிவாதமாக வாங்க மறுத்துவிடுகிறாள். விடைபெற்று காரில் திரும்புகிறார்கள்அவர்கள் திரும்பி வரப்போவதில்லை. அதைப்போன்ற பல வாக்குறுதிகளை அவள் கேட்டிருப்பாள் அவளும் அதை மனத்தாங்கலாக எடுத்துக்கொள்ள மாட்டாள் என்று எண்ணிக்கொள்கிறார்கள்.
இந்தக் கதையை பெயரில்லாமல் ஒரு வாசகனிடம் அளித்தால் இதை ஜெயகாந்தன் எழுதியது என்று ஒரு போதும் சொல்ல மாட்டான்.தமிழில் பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையை பல கோணங்களில் எழுதியவர்கள் பல உண்டு. பாலியல் தொழிலாளிகள் அனைவரையுமே மோசமாக சித்தரிக்கும் எழுத்துக்களை ஆரம்ப கட்டத்தில் வடுவூர் துரைசாமி அய்யங்கார் போன்றவர்கள் எழுதினார்கள். அவை பாலியல் தொழிலாளி மீதான கவர்ச்சியும் அதே சமயம் நல்லுபதேசங்களும் கொண்டவை. நல்லுபதேசத்தால் அந்த பாலியல் தொழில் மீதான கவர்ச்சி தந்திரமாக மறைக்கப்படும்
பின்னாளில் ஜி.நாகராஜன், ராஜேந்திர சோழன் போன்றவர்கள் பாலியல் தொழிலாளர்களைப்பற்றி அழுத்தமான பல கதைகளை எழுதியிருக்கிறார்கள். அவர்களின் பரிதாபநிலை, அவர்களுடனான உறவின் நுட்பங்கள் ஆகியவை அந்தக்கதைகளில் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் தமிழில் எழுதப்பட்ட பாலியல் தொழிலாளிகளைப்பற்றிய கதைகளில் மிகச்சிறந்தது என்று இந்த கதையைத்தான் சொல்வென். இதன் தலைப்பு ’எங்கோ யாரோ யாருக்காகவோ’
ஜெயகாந்தன் தனது புனைவுலகில் பெண்களை மிக உயர்வாக சித்தரித்தவர். அவருடைய புதியவார்ப்புகள் போன்ற கதைகளில் விடுதலை நோக்கி தனித்துவத்துடன் தன்னம்பிக்கையுடன் கூண்டுகளை திறந்து கொண்டு செல்லும் பெண்களை நாம் பார்க்கிறோம். அவர்களுடைய விடுதலை வேட்கையை புரிந்துகொண்ட முந்தைய தலைமுறைப்பெண்கள் யுகசந்தி போன்ற கதைகளில் வருகிறார்கள். பெண்ணின் கற்பைக்குறித்து நமது மரபு கொண்டிருக்கும் எண்ணங்களை அக்னிப்ரவேசம் போன்ற கதைகளில் மிக எளிதாக உடைத்து செல்கிறார். பாரதி கண்ட புதுமை பெண் என்னும் உருவகத்தை ஒவ்வொரு முறையும் நோக்கிச்செல்லும் லட்சியவாத எழுத்து ஜெயகாந்தனுடையது
அவர் இந்தக்கதையை எழுதியது பொது வாசகர்களுக்கு ஒரு ஒவ்வாமையை அளிக்கிறது. பெரும்பாலானவர்கள் இந்தக் கதையை படிப்பதோ பேசுவதோ இல்லை. ஜெயகாந்தன் அவர் காலகட்டத்தில் வாசகர்களால் கொண்டாடப்பட்டாலும் இலக்கிய விமர்சகர்களால் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டவர் என்று சொல்லவேண்டும். ஆகவே அவருடைய கதைகளின் உள்அடுக்குகளைப்பற்றி மிகக்குறைவாகத்தான் பேசப்பட்டிருக்கிறது. அப்படி தேர்ந்த விமர்சகர்கள் பேசியிருந்தால் இந்தக்கதை கூட அந்த லட்சியவாத கதைகளில் வருவதுதான் என்பது அடையாளம் காணப்பட்டிருக்கும்.
இதில் வரும் அந்த பாலியல் தொழிலாளியின் சித்தரிப்பு மிக நுட்பமானது வாழ்நாள் முழுக்க ஏராளமான ஆண்களுடன் வணிக ரீதியான பாலுறவுக்கு ஆளானவள் அவளுடைய அனுபவங்களில் பெரும்பகுதி கசப்பும் துவர்ப்பும் நிறைந்ததாகத்தான் இருக்கும். சுரண்டப்பட்டு ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டு மிருகத்தனமாக வன்புணரப்பட்டு அவமதிக்கப்பட்ட ஒரு வாழ்க்கை. அந்த அனுபவம் வழியாக எல்லையற்ற கசப்பை நோக்கி செல்வதுதான் பெரும்பாலும் உண்மையான வாழ்க்கையில் காணக்கிடைக்கிறது. பாலியல் தொழிலாளர்களைச் சித்தரித்த பெரும்பாலான எழுத்தாளர்கள் அதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்
ஆனால் ஒரு யோகி போல அவ்வனுபவங்கள் வழியாகக் கனிந்து முழுமையடைந்திருக்கிறாள் இந்த பெண். அவளுடைய மென்மை மனிதர்கள் அனைவரையுமே அவள் விரும்புவதிலிருந்து உருவாவது.மனிதர்களின் அனைத்து தவறுகளையும் மன்னிப்பதிலிருந்து ஒவ்வொருவருடைய அந்தரங்கத்தையும் புரிந்துகொண்டு அதற்கிதமாக தன்னை உருமாற்றிக்கொள்வதிலிருந்து அந்த அழகிய பழக்க வழக்கங்கள் பிறக்கின்றன. ஓர் அன்னை போல அவள் நிறைவு கொண்டிருக்கிறாள்.
அவளிடம் வரும் அந்த இருவரும் இரண்டு உலகத்தைச் சார்ந்தவர்கள். ஒருவரிடம் குற்ற உணர்வு ஏதுமில்லை. பெண் உடல் என்பது பணம் கொடுத்து வாங்கி நுகரப்படவேண்டிய என்ற எண்ணம் கொண்டவர். அதை மறைக்க ஏழை எளியவர்களுடன் ஒன்றாகக் கலப்பவர், ஆணவம் இல்லாதவர் என்ற பாவனையை மேற்கொண்டிருக்கிறார். இன்னொருவர் கடுமையான குற்ற உணர்வுடன் அதே சமயம் அழுத்தப்பட்ட பேரார்வத்துடன் இருக்கிறார். இருவருமே அவளை ஏமாற்றித்தான் செல்கிறார்கள்.
மீண்டும் அவர்கள் அவளைப்பார்க்க நேர்ந்தால் என்ன ஆகும்? அவர்கள் குன்றி குறுகுவார்கள், அவள் அக்கணமே அவர்களை மன்னித்து மீண்டும் அதே பெருந்தன்மையுடனும் அன்புடனும் கனிவுடனும் அவர்களை ஏற்றுக்கொள்வாள்.அத்தகைய ஒரு பாலியல் தொழிலாளியைச் சித்தரிப்பதினூடாக ஜெயகாந்தன் அங்கு ஒரு லட்சிய பெண்மையைத்தான் உருவாக்குகிறார். இந்தச் சித்தரிப்பு செயற்கையானதாகவோ வலிந்து உருவாக்கப்படுவதாகவோ இல்லாமல் இருப்பதுதான் இந்தக் கதையில் அழகை உருவாக்குகிறது. மிக இயல்பாக அந்தப்பெண்ணின் குணச்சித்திரம் உருவாகி வருகிறது. அது முழுக்க நம்பகத்தன்மையுடனும் இருக்கிறது. உண்மையில் பாலியல்தொழிலாளர்களில் அத்தகைய ஆளுமைகனிந்த சிலர் உண்டு. கி.ராஜநாராயணன் அத்தகைய ஒருபெண்ணைப்பற்றி எழுதியிருக்கிறார்
பல்லாயிரத்தில் ஒருவர் என்று சொல்லப்படும் கதாபாத்திரங்களை நம்பகத்தன்மையுடன் சித்தரிப்பது மிகக்கடினம். நாடகத்தன்மையோ செயற்கைத் தன்மையோ வந்து சேரும். அவ்வியல்பில்லாமல் அக்கதாபாத்திரங்களைச் சொல்ல ஜெயகாந்தனால் முடிந்திருக்கிறது என்பது மிகப்பெரிய ஒரு இலக்கிய சாதனை என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழிலக்கியத்தில் எப்போதுமே பரத்தையர் இருந்து வந்திருக்கிறார்கள். சங்க இலக்கியத்தில் கற்புடைபெண்டிர்- பரத்தையர் என்ற இருமை உருவாகிறது. அது கண்ணகி மாதவி என்னும் இருமையாக மாறி சிலப்பதிகாரத்தை கட்டமைக்கிறது. தொடர்ந்து நம் புனைவுப்பரப்பு முழுக்க கண்ணகியா மாதவியா என்ற கேள்விதான் உள்ளது. அந்த இருமையை மிக எளிதாக கடந்து சென்று அவர்கள் அன்னையர்,காதலியர், மனிதர் என்ற சித்திரத்தை நோக்கிச் செல்கிறார் ஜெயகாந்தன்
ஜெயகாந்தனின் புனைவுலகின் சிறந்த அம்சம் என்பதே அவருடைய மனித மைய நோக்குதான். மனிதனின் அனைத்து கீழ்மைகளையும் சிறுமைகளையும் அவரால் எழுத முடியும். ஆனால் அவற்றுக்கு அப்பால் இருக்கும் மேன்மை ஒன்றினால்தான் மனித குலம் இங்கு இவ்வாறு தங்கி வாழ்கிறது என்பது அவருடைய மார்க்சியம் அவருக்குக் கற்றுக்கொடுத்தது. இத்ற்கு மாறான பாலியல் தொழிலாளிகளை அவர் நூற்றுக்கணக்கில் எழுதியிருக்க முடியும். ஆனால் ஏன் எழுதவேண்டும் என்றுதான் அவர் கேட்பார்.அவர்களில் இப்படி ஒரு பெண்ணை தன் புனைவுக்கு மையமாக அவர் கொண்டு வந்து நிறுத்துவதென்பது அவருடைய மார்க்சியத்தேர்வு.
ஜெயகாந்தன் உருவாக்கிய இந்தப்பெண் நவீன தமிழிலக்கியம் ஈராயிரம் வருடம் பரத்தையருக்கு அளித்து வந்த முகத்தை விலக்குகிறது. குடும்பத்தினூடாக கனிந்து மெய்மையை அடைந்து ஞானியர் போலான பல பெண்களை இலக்கியம் கண்டிருக்கிறது. பரத்தமையினூடாகவும் அந்த மெய்மையை சென்றடைய முடியும் என்பதை இந்தக் கதை சுட்டுகிறது. இந்தக் கதையைப்பற்றி ஒருமுறை ஜெயகாந்தன் பேசியபோது அந்தக் கதையின் நாயகி தனக்குத் தெரிந்தவர், தன் மதிப்புக்குரியவர் என்று சுருக்கமாக சொல்லி நிறுத்திக்கொண்டார். அப்போது அவருக்கு நான் ஒரு நிகழ்வை நினைவூட்டினேன்.
தமிழின் முதல் நாவலாசிரியராகிய பி.ஆர்.ராஜமய்யர் இளம் வயதிலேயே ஆன்மீகமான தேடுதல் கொண்டவராக இருந்தார். கூடவே கடுமையான காசநோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். மனக்கொந்தளிப்புகளும் அலைக்கழிப்புகளும் நிறைந்த ஒரு இளமைக்கால வாழ்க்கை. பல்வேறு ஞானாசிரியர்களை அவர் அணுகி ஞானம் வேண்டி நிற்கிறார். சுவாமி விவேகாந்தனரையே அவருக்குத் தெரியும். விவேகானந்தரின் வேதாந்தக் கொள்கைகளைப் பரப்பும் பொருட்டு பிரபுத்தபாரதா என்ற இதழை நடத்தியவர் அவர். யோகப்பயிற்சிகள் அவரை மேலும் நிலையழியச் செய்கின்றன
தன் தேடலில் ஒரு கட்டத்தில் மிக முதிர்ந்த ஒரு தாசியை அவர் சந்திக்கிறார். தாசித் தொழிலினூடாகவே கனிந்து மெய்ஞானத்தை அடைந்தவள் என்று அவள் சொல்லப்படுகிறாள். அந்த மூதாட்டி தன் இருகைகளையும் அவர் தலையில் வைத்து வாழ்த்தியபோது அவருடைய தலையில் இருந்த அலைக்கழிப்புகளின் வெம்மை முழுக்க தணிந்து நிலா எழுந்தது போல அவர் உள்ளம் குளிர்ந்தது என்று அவர் குறிப்பிடுகிறார். அதன் பின்னரே அவர் தெளிவடைந்தார். மேலும் சில ஆண்டுகளில் காசநோயால் உயிர் துறந்தார்.
ஜெயகாந்தன் நான் சொன்னதைக்கேட்டபின் புன்னகையினூடாக “எதனூடாகவும் கனியலாம். பூவிட்டு காயாகும் அனைத்துமே கனிந்து முழுமைகொள்ளும் நோக்கம் கொண்டிருக்கின்றன. வாய்க்கவேண்டும்” என்று சொன்னார்.
***