அன்புள்ள ஜெ,
உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளைப் பார்க்கிறீர்களா? உங்களுக்கு அதற்கு நேரம் இருக்காது என்றே நினைக்கிறேன். ஒருவேளை பார்ப்பீர்களென்றால், espn மலையாள சேனலில் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நான் இதைத் தற்செயலாகவே கண்டடைந்தேன். மலையாளம் தெரியாதது ஒன்றும் பிரச்சினை இல்லை. சற்று நேரம் கவனித்துக் கேட்டால் புரிந்து கொள்ள முடிகிறது.
சைஜு தாமோதரன் என்ற வர்ணனையாளர் இதை ஒரு மறக்க முடியாத அனுபவமாக்குகிறார். மற்ற மொழி வர்ணனையாளர்கள் அழுது வடியும்போது இவரது வர்ணனை விறுவிறுப்பாகவும் உணர்ச்சிகரமாகவும் உள்ளது; நகைச்சுவையாகவும். கால் இறுதிப்போட்டியில் கோல் அடித்த ஒரு பிரான்ஸ் வீரர் களத்திற்கு வெளியே வரும்போது பயிற்சியாளர் அவரது கன்னத்தைக் கிள்ளிப் பாராட்டுகிறார். வர்ணனையாளர் “என்ட சக்கர முத்தே…..”!
இப்போது வீட்டில் குழந்தைகள் உட்பட அனைவரும் உலகக்கோப்பை விளையாட்டை சைஜுவின் வர்ணனையில்தான் கேட்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். யூ ட்யூபில் தேடினால் அவர் வர்ணனை உலகப்புகழ் பெற்றுவிட்டதாகத் தெரிகிறது. சுட்டிகள் கீழே.
அன்புடன்
S பாலகிருஷ்ணன், சென்னை
அன்புள்ள பாலகிருஷ்ணன்,
இல்லை , எந்த விளையாட்டுப்போட்டிகளையும் பார்ப்பதில்லை. எந்த விளையாட்டும் தெரியாது. கிரிக்கெட், ஃபுட்பால் எதுவும். இன்றுவரை எந்த ஆட்டக்காரர் பெயரையும் தெரிந்துகொண்டதுமில்லை. விளையாடுவதில் ஈடுபாடு இருந்தது. நான் கபடி சிறப்பாக ஆடுபவனாக இருந்தேன். கல்லூரியில் கொஞ்சம் ஹாக்கி. ஆட்டத்தை அமர்ந்து பார்ப்பதென்பது விளையாட்டு ஆர்வம் அல்ல, சூதாட்ட ஆர்வம் மட்டுமே.
முன்பு டெல்லியில் ஒரு பெரிய விடுதியில் நேரில் சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்தேன். சென்று பேசாமல் பின்னால் நின்றுகொண்டேன். என்னுடன் இருந்த புகழ்பெற்ற திரையாளுமை என்னிடம் “ஏன் தவிர்த்தீர்கள்?” என்று கேட்டார். “இல்லை, இந்தியாவில் அவர்களுக்கு இருக்கும் இடம் மிகையானது என நினைக்கிறேன். எனக்கும் அவருக்கும் இடையே பொதுவாக ஏதுமில்லை” என்றேன்.
அரைமணிநேரத்திற்குள் பண்டிட் ஜஸ்ராஜ் வந்தார். சென்று வணங்கி என் பெயரை மட்டும் சொன்னேன். அவர் எவரையும் அறியும் நிலையில் இல்லை. “உங்களை அவர் பொருட்படுத்தவில்லை” என்றார் நண்பர். “ஆம், நான் அவரைப் பொருட்படுத்துகிறேன்” என்றேன்.
பொதுவாக விளையாட்டுகளைப் பார்ப்பதில் நீண்டபொழுதுகளைச் செலவழிப்பவர்களைப் பற்றிக்கூட எனக்கு எதிர்மறை கருத்து உண்டு. நல்லவேளையாக என் மகனோ மகளோ அந்த ஈடுபாட்டுடன் இல்லை. இருந்திருந்தால் மிகப்பெரிய உளவிலக்கத்தை அவர்களிடம் அடைந்திருப்பேன்.
ஜெ