குருகு
கைவிடு பசுங்கழை1
கைவிடு பசுங்கழை -2
அன்புநிறை ஜெ,
தங்களின் குருகு கட்டுரை வாசித்தேன். கைவிடு பசுங்கழை’ – கவிதை ரசனையின் ஈராயிரம் வருடங்கள் எனும் தங்களின் காணொலியின் மூலம் இக்கட்டுரைக்கு வந்தடைந்தேன் மீண்டும் பல திறப்புகள். நான் குடிமையியல் தோ்வுகளுக்கான தோ்விற்கு பயிற்சி எடுத்துவருகிறேன். விருப்பப்பாடமாக தமிழ்தான் தேர்வு செய்துள்ளேன். யாரும் இல்லை தானே கள்வன் எனும் குறுந்தொகை பாடல் எங்களுக்கு பாடப்பகுதியில் உள்ளது. தாங்கள் தெரிவித்துள்ளபடி எங்கள் ஆசானும் அதை கொக்கு என்றுதான் நடத்தினார். நடத்தும்பொழுதே அவரிடம் ஏன் இந்த இடத்தில் மற்ற பறவைகளை விடுத்து கொக்கை தேர்ந்தெடுத்தனா்? என்று என் மண்டையை குடைந்த வினாவைக் கேட்டுவைத்தேன். அதைப்பாடியவருக்குதான் தெரியும்… சங்க புலவர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள் அதனால் வலிந்து இயற்கைக் காட்சிகளை தங்கள் பாடல்களில் புகுத்தியுள்ளனர் என்ற பதில்தான் கிடைத்தது.
இக்கட்டுரை படித்தவுடன் நான் செய்த முதல்பணி இதை அவர் பார்வைக்கு அனுப்பியதுதான். தங்கள் மூலம் அறிந்த செய்தியை தெளிந்துக்கொண்டேன். தங்களுக்கும் அஜிதனுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
மிக இயல்பான கட்டுரை அதுவும் கடைசி பத்தி என்னை வாய்விட்டே சிரிக்க வைத்துவிட்டது. சங்க இலக்கியங்கள் வேதங்கள் போல் வரும் தலைமுறையினருக்கு புரியாமல் போகலாம் என்ற வருத்தத்தின் தொனியும் அதில் தெரிந்தது. தாங்களே சங்க சித்திரங்கள் போன்று சங்க கால பாடல்களுக்கு புதிய உரை கொடுத்து மீட்டுருவாக்கம் செய்யலாம். வெண்முரசு போன்று மிகப்பெரிய பணி, அளப்பரிய முக்கிய பணி இது. இதற்காக மேன்மேலும் தமிழ்உலகம் தங்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கும்.
தங்களுக்கும் அஜிதனுக்கும் நன்றிகள் பல!
அன்புடன்
ரா. பாலசுந்தர்
அன்புள்ள ஜெ
சங்க இலக்கியம் குறித்து நீங்கள் எழுதிய கட்டுரைகளை நான் இந்த இணைய தளத்தில் தேடினேன். குருகு போன்ற சில கட்டுரைகளே சிக்கின. நீங்கள் எழுதிய சங்க சித்திரங்கள் என் வாசிப்புப் பழக்கத்தைத் தொடங்கிவைத்த நூல். நான் பலநாட்கள் அந்நூலை வாசித்து பித்துப்பிடித்து அலைந்திருக்கிறேன். வாழ்க்கை கவிதையாக ஆகும் புள்ளியை தவறாமல் தொட்டுவிட்ட கதைகள் அவை. அவற்றை அனுபவங்களா கதைகளா என்று தெரியாமல் தவித்தேன். அதன்பின்னர் குறுந்தொகை உரை என்னை அவ்வாறு கவர்ந்த்து. ஆனால் பின்னர் நீங்கள் அதிகமாக சங்க இலக்கியம் பற்றி ஏதும் எழுதவில்லை. நீங்கள் அக்காலகட்டம் பற்றி ஒரு நாவல் எழுதவேண்டும் என விரும்புகிறேன்
ஜான் மரியதாஸ்