அசோகமித்திரன் என்னும் அளவுகோல்

asokamithran

இயல்புவாதத்தின் வெற்றியும் எல்லைகளும்- கே.என்.செந்திலின் ‘சகோதரிகள்’
அழகியல் அறிதல் தேவையா?

ஜெ,

இருநாட்களாகத் தொடர்ந்து நடந்துவரும் சிறுகதை விவாதத்தைக் கவனித்துவருகிறேன். கே.என்.செந்திலின் கதையையும் வாசித்தேன். நான் அசோகமித்ரனின் ரசிகன். அசோகமித்ரனின் கதைகளில் மிக எளிமையான அன்றாட நிகழ்ச்சிகள் மட்டுமே உள்ளன. நாம் எப்போதும் பார்க்கும் சாதாரணமான மனிதர்கள் காணக்கிடைக்கிறார்கள். மிதமான மொழியில் அவர் எழுதுகிறார். எதையும் மிகைப்படுத்துவதில்லை. உணர்ச்சிகரமாக ஆக்குவதுமில்லை. அதுவே வாழ்க்கையின் சிறந்த காட்சியை அளிக்கிறது என்றுத் தோன்றுகிறது. அவற்றை வாசிக்கும்போது உருவாகும் கலையனுபவம் இந்தமாதிரியான கதைகளை வாசிக்கையில் உருவாவதில்லை. ஒரு வாசகனாக இதை நான் சொல்வதில் என்னத் தவறு?

நான் இந்தவகையானக் கதைகளை செண்டிமெண்ட் அல்லது மெலோடிராமா என்று நினைக்கிறேன். தமிழ் சினிமாத்தனம் இவற்றில் தெரிகிறது என்றுத் தோன்றுகிறது.  ஒன்று இந்தக்கதைபோல crude ஆக எழுதுகிறார்கள். அல்லது பூமணி போல dry ஆக எழுதுகிறார்கள். இதைச் சொன்னால்  என்னுடைய ரசனையைக் குறைச் சொல்கிறார்கள். நாச்சுரலிசம் போன்ற சொற்களைச் சொல்லி இந்தக்கதைகளை நியாயப்படுத்துகிறார்கள். அல்லது விளிம்புநிலை வாழ்க்கை, அடித்தளமக்கள் வாழ்க்கை என்றெல்லாம் சொல்கிறார்கள். எதை வேண்டுமென்றாலும் எழுதலாம் அது கலையாக ஆகவேண்டும் என்று மட்டுமே சொல்கிறேன். எனக்குக் கலையாக அப்பீல் ஆகவில்லை என்றால் அது எந்த ஸ்கூல் ஆஃப் ரைட்டிங் ஆக இருந்தால் என்ன? நான் சொல்வதைப் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன்.

அனந்தநாராயணன்

***

அன்புள்ள அனந்தநாராயணன்,

நான் சொல்வதையும் புரிந்துகொள்வீர்கள் என நினைக்கிறேன். இப்போது சில ஆண்டுகளாக அசோகமித்திரன் கதைகளை உதாரணமாகக்கொண்டு ஒருவகையான மேட்டிமைவாதம் இலக்கியத்தில் மறைமுகமாக முன்வைக்கப்படுகிறது. அது நகர்சார் மேட்டிமைவாதம், உள்ளடங்கிய சாதிய மேட்டிமைவாதம். தங்களை அதிநுட்பர்களாகக் காட்டிக்கொள்ளும் முனைப்பின் ஒரு பகுதி. கூடவே நடுத்தரவர்க்க, நகர்ப்புற வாழ்க்கை அன்றி எதையும் அறியாத மொண்ணைத்தனத்தின் வெளிப்பாடு.

சென்றகாலங்களில் லா.ச.ரா, மௌனி ஆகியோரை முன்வைத்து இந்த மேட்டிமைவாதம் வெளிக்காட்டப்பட்டது. இன்று இவ்வாறு பேசுபவர்களிடம் இதே அளவுகோல்களின்படி லா.ச.ராவும் மௌனியும் இலக்கியவாதிகளே அல்லாமல் ஆகிவிடுவார்களே என்று கேட்கலாமே.லா.ச.ராவும் மௌனியும் எழுதியவை பெரும்பாலும் உங்கள் அளவுகோலின்படி மெலோடிராமா என்று சொல்லத்தக்கவைதானே? ஒரு பெண்ணுக்கு இதயநோய். ஆகவே அவள் பாடக்கூடாது என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்.  அவள் தன் காதலனுக்காகப் பாடுகிறாள். பாடியபடியே செத்துப்போகிறாள். [பிரபஞ்சகானம், மௌனி] ஒருவனுக்கு மின்னலில் பார்வை போய்விடுகிறது. கடைசியாகப் பார்த்த நிறம் பச்சை. ஆகவே எஞ்சியவாழ்நாள் முழுக்க பச்சைவண்ணத்தையே பார்த்தபடி வாழ்கிறான் [பச்சைக்கனவு, லா.ச.ரா] உங்கள் கணிப்பின்படிப் பார்த்தால் இவையெல்லாம் செண்டிமெண்ட் கதைகள், மெலோடிராமாக் கதைகள், விக்ரமன் சினிமாவாக எடுக்கவேண்டிய நிகழ்ச்சிகள்–இல்லையா? நாம் இதைக்கேட்டதுமே அசோகமித்திரனை எடுத்துக்கொண்டு வருபவர்கள் அப்படியே பின்னடி வைத்து நடனமிடுவதைக் காணலாம்.

1980 களில் தமிழில் பலவகையான புதிய எழுத்துக்கள் பரிசீலிக்கப்பட்டன. லத்தீன் அமெரிக்க எழுத்துக்களின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. விளைவாக அசோகமித்திரன் அன்றாட வாழ்க்கையின் எளியநிகழ்வுகளைச் சொல்லும் எழுத்தாளர் என்று புறக்கணிக்கப்பட்டார். அதற்கேற்ப அவரும் சிற்றிதழ்ச்சூழலில் இருந்து ஒருவாறாக விலகி வணிக இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தார். அவருடைய கலையின் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் சொல்லி நிலைநாட்டிய விமர்சகர்களில் ஒருவன் நான், அவருக்காக நான் சுப்ரபாரதி மணியனுடன் இணைந்து  1992ல் வெளியிட்ட ‘கனவு-  அசோகமித்திரன் விமர்சனமலர்’தான் ஒருவகையில் அவரை மீண்டும் இலக்கிய உலகில் நிலைநாட்டியது. பெரிய விவாதங்களை அது அன்று உருவாக்கியது. அன்று அச்சிதழ்களே குறைவு என்றவகையில் ஓர் எழுத்தாளருக்காக ஒரு மலர் என்பது மிக அரிதான ஒன்று.

அப்போது அவரைப்பற்றி எழுதும்போதும் அவருடைய கலையின் எல்லைகளையும் கூறியிருந்தேன். பின்னரும் எழுதியிருக்கிறேன். இன்றைய சூழலில் அவற்றை சற்று அழுத்திச் சொல்லவேண்டியிருக்கிறது. அசோகமித்திரனின் கதைச்சூழல் நகர்ப்புற, நடுத்தர வர்க்கப் பின்னணி கொண்டது. பெரும்பாலும் பிராமணக் கதைமாந்தர்கள். அவர்களின் அன்றாடவாழ்க்கையே அவருடைய கதைநிகழ்வுகளை உருவாக்குகிறது. அவர்கள் உயிர்வாழ்வதற்கான போராட்டம், சமூககௌரவத்தைக் காத்துக்கொள்வது, உறவுகளை பெரிய உரசலின்றி கொண்டுசெல்வது  ஆகிய மூன்று சவால்கள் மட்டுமே கொண்டவர்கள். அவருடைய கலை அந்த உலகைக் காட்டுவதற்குரிய இயல்புகளை உருவாக்கிக் கொண்டது. அது கறாரான யதார்த்தவாதம்.

ஒரு நடுத்தரவர்க்கத்தவனின் அன்றாடவாழ்க்கைச் சூழலில் நின்றுகொண்டு வரலாற்றையும், மெய்யியலையும் பார்க்கும் கதைகளையும் அசோகமித்திரன் எழுதியிருக்கிறார் என்பதனால்தான் அவ்வகைப்பட்ட பல எழுத்தாளர்களிடம் இருந்து அவர் மேலதிக முக்கியத்துவம் பெறுகிறார். அசோகமித்திரனைப்போல எழுதும் இருபது பேராவது உருவாகி வந்திருக்கின்றார்கள். அவர்கள் எவரிடமும் இந்த அம்சம் இல்லை. அவர்களெல்லாம் அன்றாடத்தின் சித்தரிப்பாளர்கள் மட்டுமே.

ஆனால் பார்வை, கதைச்சூழல் ஆகிய இரண்டினாலும் எல்லை வகுக்கப்பட்டது அசோகமித்திரனின் உலகம். அதில் பெரிய தத்துவ தரிசனங்கள் நிகழமுடியாது. ஒட்டுமொத்த வரலாற்றுச் சித்திரம் உருவாக முடியாது.  கவித்துவம் மிகக்குறைந்த அளவிலேயே நிகழ முடியும். மானுட உள்ளத்தின் அரிதான சிடுக்குகளும் கொந்தளிப்புகளும் வெளிப்பட முடியாது. உலகமெங்கும் பேரிலக்கிய ஆக்கங்கள் இவற்றால் ஆனவை. அவற்றுக்கு வெளியேதான் அசோகமித்திரனின் உலகம் நிலைகொள்ளமுடியும்.ஒரு மாற்றாக.

அசோகமித்திரன் நவீனத்துவத்தின் முகம், இன்றைய இலக்கியம் நவீனத்துவத்தைக் கடந்து புதிய அறைகூவல்களை ஏற்று புதிய வடிவங்களைக் கண்டடைந்து முன்னால் சென்றுவிட்டது. பிரக்ஞையால் கட்டுப்படுத்தப்பட்ட மொழி, தர்க்கங்களுக்கு உட்பட்ட உலகநோக்கு, புறவயச் சித்தரிப்புத்தன்மை, அவநம்பிக்கை கொண்ட அணுகுமுறை, தனிநபரை அலகாகக் கொண்டு உலகைப்பார்க்கும் தன்மை, வரலாற்றுவிலக்கம் என நவீனத்துவத்தின் அனைத்து இயல்புகளும் முழுதமைந்தவர் அவர். இன்றைய இலக்கியம் இவ்வியல்புகளுக்கு நேர் எதிரானது. இவற்றை மறுத்து முன்னகர்வது. அவர் சென்றகாலத்தின் இலக்கியச் சாதனையாளர். இன்றைய எழுத்தின் முன்மாதிரியாக எவ்வகையிலும் அவரைக் கொள்ளவியலாது.

உதாரணமாக, அசோகமித்திரன் வாழ்ந்த சூழலில்தான் தியோசஃபிக்கல் சொசைட்டி போன்ற பேரமைப்பு உருவாகி வரலாற்றைப் புரட்டியிருக்கிறது. அவருடைய சூழலில்தான் உலகின் மாபெரும் குடிசைப்பகுதிகளில் ஒன்று மெல்லமெல்ல உருவாகி வந்தது. பெரும்பஞ்சங்களில் அங்கிருந்த மக்கள் லட்சக்கணக்கில் இறந்தனர். அசோகமித்திரனால் இவையனைத்தையும் ஒன்றாகக் காட்டி வரலாற்றின் பெருந்தோற்றத்தை அளிக்கும் ஒரு நாவலை எழுதிவிடமுடியுமா? அல்லது அவ்வரலாற்றை பிறிதொன்றாக மாற்றி எழுதிவிடமுடியுமா? இவற்றினூடாகச் சென்று மானுடதரிசனம் ஒன்றை முன்வைக்க முடியுமா? முடியாது , அது தன் எழுத்தின் இயல்பல்ல என்று அவர் அறிந்திருந்தார். அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்தும் இருந்தார். ஆகவேதான் அவருடைய எழுத்துக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்தபோது அவர் அதை வரவேற்று மிகுந்த பாராட்டுடன் எழுதினார்.

ஆகவே அசோகமித்திரனை மாறா அளவுகோலாகக் கொண்டு வாசிப்பது, அல்லது முன்னுதாரணமாகக் கொண்டு வாசிப்பது கலையின் மிகச்சிறிய ஓர் எல்லைக்குள் பிடிவாதமாக நின்றுவிடுவதுதான். அச்சிறு எல்லைக்குள் உயர்கலையை உருவாக்கியது அவருடைய சாதனை. அதையே வாசித்து அதையே அளவீடாகக் கொள்வது அவரைக்கூட உணராமல் வெறுமே நடுத்தரவர்க்கத்து அன்றாடவாழ்க்கையை எழுதும் சில்லறைகளைச் சிலாகிக்கும் இட்த்துக்கு அந்த குறுகல் நம்மைக் கொண்டுசென்று சேர்க்கும்.இன்றைய எழுத்தின் சவால்கள் வேறு. அவை நவீனத்துவம் உருவாக்கிய தனிமனிதநோக்கையும் புறவய அணுகுமுறையையும் நெடுங்காலம் முன்னரே கடந்து வரலாற்றுவிரிவையும் உச்சநிலைகளையும் இலக்காகக் கொண்டுவிட்டன.

உங்களுடைய இந்த குறுகிய வாசிப்புக்கு அடிப்படையாக அமைவது ‘தெரிந்ததைத் திரும்ப வாசிப்பது’ என்னும் வழக்கம். இலக்கியவாசிப்பின் தொடக்கநிலைப் பிழைகளில் ஒன்று இது. நமக்குத்தெரிந்த வாழ்க்கை சொல்லப்பட்டிருப்பதனால் அது ‘உண்மையானது’ என்றும் ‘நம்பகமானது’ என்றும் எண்ணத்தலைப்படுவோம். இந்த உண்மையையும் நம்பகத்தன்மையையும் நமக்குத்தெரியாத வாழ்க்கையை எழுதும் படைப்புகளிலும் எதிர்பார்ப்போம். அதனடிப்படையில் நிராகரிப்போம்.

இம்மனநிலை புனைவெழுத்து என்னும் கலையின் அனைத்து வாய்ப்புகளுக்கும் எதிரானது. தெரியாத உலகங்களைக் கற்பனையில் தெரிந்துகொள்வதும், அங்கே சென்று நிகர்வாழ்க்கை ஒன்றை  வாழ்ந்து அறிவதும்தான் இலக்கியவாசிப்பின் அடிப்படை நோக்கம். ஏற்கனவே நாம் வாழ்வதையே அங்கும் பார்க்கவேண்டுமென விரும்பினால் ஏன் வாசிக்கவேண்டும்? நம் ஒன்றரையணா வாழ்க்கை வட்டத்திற்குள் நாம் ஏற்கனவே கண்டவையே உண்மை என்று நம்பினால் நமக்கு இலக்கியம் எதற்கு? இந்தவகையான மூடத்தனம் என்பது உண்மையில் இலக்கிய நிராகரிப்பு. உங்கள் வாசிப்பை  உலகத்தின் எந்த உணவுவிடுதியிலும் நான் இட்லிதான் சாப்பிடுவேன், மற்ற அனைத்தும் சுவையற்றவை என்று சொல்லும் மைலாப்பூர் மனநிலை என்றுதான் சொல்வேன். வெளியே வந்து வாசியுங்கள் , அல்லது பொதுவெளியில் பேசாமலாவது இருங்கள்.

அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சொல்லும் ஒரு கதை அசோகமித்திரனின் எழுத்தைப்போல இருக்காது. குழந்தைக்குச் சோறுபோட முடியாத வறுமையில் உச்சகட்ட வன்முறையை அடைந்து அந்தக்குழந்தையை அடித்து நொறுக்கும் அன்னையின் உலகம் முற்றிலும் வேறானது. அதைச் சொல்ல இயல்புவாத அழகியல் ஒருவருக்குத் தேவைப்படலாம். தன்னந்தனிமையில் மலையுச்சியில் அமர்ந்து வாழ்வின் ஒட்டுமொத்தத்தை எண்ணிநோக்கும் ஒருவனின் உள்ளத்தைச் சொல்ல கவித்துவக்குறியீடுகளும் கட்டற்ற மொழியும் தேவைப்படலாம். ஆயிரமாண்டுக்காலம் நீடிக்கும் ஓர் உளநிலையை ஆராயும் நாவலாசிரியன் உருவகங்களினூடாகவே எழுத முடியும்.கொந்தளிப்பான தருணங்கள் வழியாகவே  மானுட உள்ளத்தின் ஆழத்தை நோக்கிச் செல்ல முடியும். இலக்கியத்தின் வகைமைகள் முடிவில்லாதவை.

செண்டிமெண்ட், மெலோடிராமா என்னும் இரு சொற்களையும் இன்றைய இலக்கிய – கலைச்சூழலில் எவரும் பயன்படுத்துவதில்லை. இச்சொற்கள் யதார்த்தவாத அழகியல் உருவான தொடக்கக் காலத்தில் கையாளப்பட்டவை. ஒரு சமூகம் பொதுவான உணர்ச்சிகளாகக் கொண்டுள்ளவற்றை கலையில் அப்படியே பயன்படுத்துவதை மெல்லுணர்ச்சி [செண்டிமெண்ட்] எழுத்து என்பார்கள். முன்னரே வாசகர்களுக்குத் தெரிந்த மெல்லுணர்வுகளை அவர்கள் எதிர்பார்ப்பதைப்போலவே கையாண்டு அவர்களின் உணர்ச்சிகளை மிகையாக எழுப்புவதை மெலோடிராமா என்பார்கள்.

இவை  கலையில் பயன்படுத்தப்படும் விதம் பற்றியோ, மெல்லுணர்ச்சிகளுக்கும் ஒரு சமூகம் கொண்டுள்ள அறவுணர்ச்சிக்குமுள்ள தொடர்பு குறித்தோ ஏதும் தெரியாமல் மொண்ணையாக எல்லா உணர்ச்சிகரத் தருணங்களையும் இச்சொற்களால் அடையாளப்படுத்தும் ஒரு வாசிப்பை அசோகமித்திரனை முன்வைத்து உருவாக்கிக் கொள்வது துரதிருஷ்டவசமானது. ஒரு படைப்பு உணர்ச்சிகரமானது என்றால், அதை வாசிப்பவன் உணர்வெழுச்சி கொண்டால் உடனே அதை மெல்லுணர்ச்சி என்று சொல்லி தன்னை மேலே தூக்கிக் கொள்வது மிகப்பெரிய சுரணையின்மையே ஒழிய தகுதி அல்ல.

உலகப்புகழ்பெற்ற பேரிலக்கியங்கள் பெரும்பாலும் மெல்லுணர்ச்சி என்று பொதுவாகச் சொல்லப்படும் தருணங்களையே கையாள்கின்றன. இன்னும் சொல்லப்போனால் ஏற்கனவே பலநூறுமுறை சொல்லப்பட்ட மெல்லுணர்ச்சித் தருணங்களையே அவை மீண்டும் எடுத்துப் பேசுகின்றன.தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, செகாவ், டிக்கன்ஸ் , விக்தர் ஹ்யூகோ என இலக்கியமேதைகள் அனைவரைப்பற்றியும் இதைச் சொல்ல்லாம். ஆனால் இத்தருணங்களை அவர்கள் வாசக உணர்ச்சிகளைத் தொடுவதற்கு மட்டும் பயன்படுத்துவதில்லை. அவற்றினூடாக பண்பாட்டின், மானுட உள்ளத்தின் ஆழங்களுக்குச் செல்கிறார்கள்.ஆகவேதான் அவை பெருங்கலை.

உதாரணமாக ஒரு கொலையைச் செய்த குற்றவுணர்வில் தவிக்கும் ஒருவன் பெருந்துயர்களினூடாக உள்ளம் கனிந்த ஒரு விபச்சாரியைக் கண்டு அவளையே ஏசுவின் வடிவமாக உருவகித்து மண்டியிட்டு அவளிடம் பாவமன்னிப்பு கோருகிறான். மெல்லுணர்ச்சித் தருணம். மிகைநாடகத்தனம் வெளிப்படும் மிக நீண்ட உரையாடல்களுடன் , கொந்தளிப்பான சொற்களுடன் இது எழுதப்பட்டுள்ளது. ஆனால் உலக இலக்கியத்தின் உச்சங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது [தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும்]

ஏனென்றால் குற்றவுணர்வு என்பது ஓர் எளியஉளநிலை அல்ல. நூற்றுக்கணக்கான மெல்லுணர்வுக் கதைகளில் கையாளப்படும் எளிய உணர்வுநிலை அது. ஆனால் மானுடனுக்கு மட்டுமே குற்றவுணர்ச்சி உள்ளது. அது எங்கிருந்து உருவாகிறது? அறவுணர்விலிருந்து. அறவுணர்வை மானுடம் எப்படி உருவாக்கிக் கொண்டது? எப்படி அதை குறியீடுகளினூடாக நிலைநிறுத்துகிறது? அந்த ஆழங்களை நோக்கிச் செல்வதற்கான தொடக்கம் அந்தத் தருணம்.  குற்றமும் தண்டனையும் நாவலை வாசிக்கும் வாசகன் அங்கே கண்ணீர் மல்கக்கூடும், நான் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தேன். அவ்வுணர்ச்சி ‘அய்யோபாவம் அந்த அப்பாவிக்கா இத்தனை துயரம்’ என்ற எண்ணத்தால் எழுந்தால் அது மெல்லுணர்வு. மானுட அறம் என்ற ஒன்றின் பெருந்தோற்றத்தை நான் அங்கே கண்டேன். அது பேருணர்வு. பேரிலக்கியங்கள் உருவாக்குவது அதைத்தான்.

அதை செண்டிமெண்ட் என்றோ மெலோடிராமா என்றோ உண்மையில் உணர்கிறீர்கள் என்றால் , அந்த உளஎழுச்சியை உண்மையிலேயே அடையாளம் காணத்தெரியவில்லை என்றால், மேற்கொண்டு இலக்கியமே வாசிக்காதீர்கள். அது மாபெரும் நேர விரயம். அந்நேரத்தில் ஏதாவது வணிகம் செய்யலாம். அல்லது குறைந்தது வீட்டில் காய்கறிகள் நறுக்கலாம். காயப்போட்ட துணிகளை எடுத்துவந்து அடுக்கி வைக்கலாம். குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தரலாம். பயனுள்ள செயல்கள் அவை.

நூறாண்டுகளுக்கு முன்பு யதார்த்தவாத அழகியல் ஐரோப்பாவில் முன்வைக்கப்பட்டபோது மேடைநாடகக் கலை அங்கே கோலோச்சியது. அது ஓப்பரா வடிவில் இருந்து வந்தது. உச்சகட்ட நாடகத் தருணங்கள் அவற்றுக்குத் தேவையாயின. ஆகவே வழக்கமான மெல்லுணர்வுகளை செயற்கையாக அவை கையாண்டன. அவற்றை நிராகரித்து ‘உள்ளபடி வாழ்க்கையைச் சொல்வதாக’ யதார்த்தவாதம் சொல்லிக்கொண்டது. பின்னர் வணிக எழுத்து மேடைநாடகத்தின் பாணியை முன்னெடுத்தபோது அதிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ளவும் அந்தச் சொற்கள் யதார்த்தவாதத்துக்கு தேவைப்பட்டன.

ஆனால் யதார்த்தவாத மரபிலேயே செவ்வியல் ஆக்கங்கள் உருவானபோது அவை அந்த மெல்லுணர்வுத் தருணங்களையே கையாண்டன. ஏனென்றால் மெல்லுணர்வுத் தருணங்கள் மெய்யான வாழ்க்கையில் இருந்து உருவானவை. எப்போதும் இருந்துகொண்டிருப்பவை. அவற்றின்மேல் உருவாகும் உணர்ச்சிநிலைகளும் மிகமிகத் தொன்மையானவை. பேரிலக்கியங்கள் வாழ்க்கையின் அடிப்படையான கேள்விகளை அச்சந்தர்ப்பங்களில் நின்றே எழுப்பிக்கொள்ள முடியும். ஒரு கொலை செய்தவன் குற்றவுணர்ச்சி கொள்வதும் சரி, ஒரு பெரிய தியாகத்தின் முன் சிறுமையாளன் ஒருவன் உளம் மேலெழுவதும் சரி இன்னும் எண்ணற்ற முறை இலக்கியத்தில் சொல்லப்படும்.

மேலும் அடுத்தகட்ட இலக்கிய விமர்சனம் யதார்த்தம் என்று சொல்வதே புனைவுதான் என வரையறை செய்தது. எல்லா புனைவும் ஒன்றே. ஒருபுனைவு வெளியுலக புலனறிதலுக்கு ஒத்துப்போகிறது, இன்னொன்று அப்படி ஒத்துப்போவதில்லை. இலக்கியத்திற்குள் அதனால் எந்த வேறுபாடும் இல்லை. கதை நாகர்கோயிலில் நடக்கலாம், செவ்வாய்கிரகத்திலும் நடக்கலாம். அது கதைதான். அதனூடாக எது வெளிப்பாடு கொள்கிறது என்பதே அதை கலை என்று ஆக்குகிறது.

ஆகவே இதெல்லாம் மிகை, இது நம்பும்படி இல்லை, இது வழக்கமான செண்டிமெண்ட் காட்சி என்றெல்லாம் இலக்கியவாசகன் சொல்லமாட்டான். அதிலும் இந்த ‘சினிமாத்தனம்’ என்ற சொல்லைப்போல இலக்கியவாசகன் சொல்லக்கூடாத ஒரு சொல் இல்லை. என்வரையில் ஒருமுறை ஒருவன் அதைச் சொன்னால் அவனிடம் பேசுவேன். மீண்டும்  அவன் அதைச் சொன்னால் இப்பிறவியில் அவனுக்கு இலக்கியம் இல்லை என்ற முடிவுக்கு வந்துவிடுவேன். அதன்பின் அவனிடம் நேரவிரயம் செய்யமாட்டேன். எல்லா வாழ்க்கைத் தருணங்களும் ஏதேனும் சினிமாவில் வந்திருக்கும். அந்தத் தருணத்தை அக்கலைப்படைப்பு எத்தனைதூரம் திறந்துசெல்கிறது என்பதே அதன் பெறுமதி.வணிகக்கலைதான் விந்தையான தருணங்களைத் தேடிச்செல்லும். கலை எப்போதுமே ஆழங்கள் வெளிப்படும் தருணங்களையே  நாடும். அவை பழகிய தருணங்களாகவும் இருக்கலாம்.

கலையை நோக்கிச் செல்லுங்கள். அதை உங்கள் கொல்லைப்புறத்துக்கு வரவழைக்காதீர்கள். நீங்கள் வாசகர்தான் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

ஜெ

***

முந்தைய கட்டுரைபுரட்சிப்பத்தினி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎனது கல்லூரி – புகைப்படங்கள்