திருக்குறளில் ஆகச்சிறந்த கவிதை எது என்று நான் ஒருமுறை மறைந்த பேராசிரியர் ஜேசுதாசனிடம் கேட்டேன். ‘இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்’ என்ற குறள்தான் என்றார்.
பத்துவருடங்களுக்கு முன்பு, இளைஞனான எனக்கு அது விந்தையாக இருந்தது. அருமையான அணிகளும் சொல்லாட்சிகளும் உள்ள எத்தனையோ குறள்கள் இருக்க, உள்ளர்த்தங்களே இல்லாத நேரடியான இந்த உணர்ச்சி வெளிப்பாட்டை ஏன் தெரிவு செய்தார் பேராசிரியர் என்ற எண்ணம் ஏற்பட்டது.
ஆனால் பேராசிரியர் சொன்னார். “கவிஞனின் மிக உன்னத வெளிப்பாடு என்பது அறச்சீற்றம் அவனை மீறி வெளிப்படும் நிலைதான். இந்தக் கவிதையை கொஞ்சம் நிதானமாக சிந்தனை செய்திருந்தால் வள்ளுவரே முட்டாள்தனமாக உணர்ந்திருப்பார். உலகை உருவாக்கியவனை அவனால் உருவாக்கப்பட்டவனே அழிந்து போகும்படி சாபம் போடுவதாவது…. ஆனால் அந்த உணர்வெழுச்சி உண்மையானது. தமிழில் வெளிப்பட்ட அறச்சீற்றங்களின் உச்சமே இக்குறள்தான். ஆகவே இது மகத்தான கவிதை…”
பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’ கேளிக்கையை மட்டுமே அடிப்படை இலக்காகக் கொண்ட தமிழ்த் திரையுலகில் வெளிப்பட்டிருக்கும் ஆழமான அறச்சீற்றத்தின் பதிவு. ஆகவேதான் இந்த எளிமையான, அடக்கமான, படம் எனக்கு ஒரு காவியமாகவே தெரிகிறது. மேலான கலை என்பது ஒருபோதும் உத்தி சார்ந்த அலட்டல் அல்ல, செயற்கையான எடுப்புகளும் அல்ல. அது அடிபட்டவனின் வலி முனகல் போலவோ ஆனந்தக் கண்ணீரின் விம்மல் போலவோ இயல்பாக, தன்னிச்சையாக வெளிப்படுவது.
‘கல்லூரி’ இன்றுவரை நம் திரையுலகம் முன்வைத்துவந்த கல்லூரிகளில் இருந்து அதன் யதார்த்தம் காரணமாகவே வேறுபடுகிறது. உயர்தர உடையணிந்த விடலைகள் பளபளக்கும் இருசக்கர வண்டிகளை சாய்த்து வைத்து உலகையே நக்கல்செய்து திரியும் கல்லூரிகளையே நாம் கண்டிருக்கிறோம். காதல் அல்லாமல் வேறு விஷயமே நிகழாத இடங்கள் அவை. கல் உடைப்பவர்களின், பீடி சுற்றுபவர்களின், ஆட்டோ ஓட்டுபவர்களின் அரைப்பட்டினிப்பிள்ளைகள் படிக்கும் ஒரு கல்லூரி என்பது முப்பது வருடங்களுக்கு முன்னரே தமிழ்நாட்டில் ஒரு அன்றாட யதார்த்தமாக ஆகிவிட்டாலும் கூட இப்போதுதான் அது திரையில் முகம் காட்டுகிறது.
அந்தப் பிள்ளைகள் அவர்களின் துயரங்களால், ஓயாத போராட்டத்தால் ஒன்றாகச்சேர்வதும் அவர்கள் நடுவே உருவாகும் ஆழமான நட்பும் மிகுந்த நுட்பத்துடன் காட்சிப்பதிவாகியுள்ளது இந்த திரைப்படத்தில். அவர்கள் ஒருவரை ஒருவர் ‘கலாய்ப்பதும்’ அவர்களின் ஊடல்களும் திரைப்படம் என்ற கலையின் அனைத்து வல்லமைகளும் வெளிப்பட சித்தரிக்கப் பட்டிருந்தமையால் உண்மையான வாழ்க்கையை கண் எதிரே பார்த்த பிரமிப்பும் நிறைவும் ஏற்படுகிறது.
கதாபாத்திரங்களுக்கு ஏற்ப முகங்களைத் தேர்வு செய்ததில்தான் இப்படத்தின் முதல் பெருவெற்றி நிகழ்ந்திருக்கிறது. முத்து, ஆதிலெட்சுமி, கயல் போன்ற கதாபாத்திரங்கள் மிக மிக யதார்த்தமாக இருக்கின்றன. படத்தில் ஒவ்வாமை அளிக்கும் ஒரு முகம் கூட வெளிப்படவில்லை. உழைத்து வாழும் எளிய முகங்கள் தொடர்ந்து வந்தபடியே இருப்பதை பரவசத்துடன் பார்த்தபோது இந்த சாதாரணமான விஷயத்தை எண்ணி ஏங்கும்படி இருக்கிறதே தமிழ் திரையுலகு என்ற கசப்பும் ஏற்பட்டது. உதாரணமாக கயலின் அப்பாவாக வருபவரின் அந்த முகம்! உழைத்து குடும்பத்தை கரையேற்றத் துடிக்கும் பாசமுள்ள ஒரு தந்தையின் அந்த இனிய சிரிப்பு! அதேபோல சலீமாவாக வரும் அந்தப்பெண். தென்தமிழ்நாட்டு மரைக்காயர் முகங்களுக்கே உரிய கூறுகள் துலங்குகின்றன அதில்.
நடிப்பைக் கொண்டு வருவதிலும் பாலாஜி சக்திவேல் பெரு வெற்றி பெற்றிருக்கிறார். கல்லூரி முதல்வராக நடிப்பவரின் முகபாவனைகள் தவிர அனைத்து வெளிப்பாடுகளுமே மிக மிகக் கச்சிதமாக அமைந்துள்ளன. ஒரு பொம்மையாக மட்டுமே வரமுடியும் என எதிர்பார்க்க வைத்த கதாநாயகி கூட அற்புதமான மெய்ப்பாடுகளை வழங்கி மனம் நெகிழச்செய்கிறார்.
நமது கிராமப்புற கல்வி நிலையங்களில் இன்றுள்ள உண்மையான அடிப்படைச் சிக்கலே படத்தின் மையக்கருவாகியுள்ளது. கட்டுப்பெட்டித்தனமான நம் சமூகம் ஆணும் பெண்ணும் பழகுவதை அனுமதிக்காது. ஆனால் கல்வி நிறுவனங்களில் அதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால் அங்கே நட்பும் பாலியல் கவர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று கலந்து இனம்பிரிக்க முடியாதபடி சிடுக்குபட்டிருக்கின்றன. கல்லூரிகளில் நிகழும் பெண்சீண்டல்கள் அடிப்படையில் இச்சந்தர்ப்பத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாத இளைஞர்களின் வெளிப்பாடுகள். நம் திரைப்படங்கள் தொடர்ந்து பெண்ணைச் சீண்டி மட்டப்படுத்தும் கதாநாயகர்களை முன்வைத்து அவர்களுக்கு வழிகாட்டுகின்றன. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே காதல் மட்டுமே நிகழ முடியும் என்ற எண்ணத்தை மீண்டும் மீண்டும் அவை வலியுறுத்துகின்றன.
அதை மீறி இயல்பான நட்புடன் ஆணும் பெண்ணும் பழக முடியுமா என இளம் உள்ளங்கள் கனவு காண்கின்றன. அவர்களைத் தடுப்பது இரு வல்லமைகள். ஒன்று எப்போதும் ஒழுக்கக் கட்டுப்பாட்டின் குண்டாந்தடியுடன் பார்க்கும் சமூகத்தின் கண்கள். இன்னொன்று அவர்களுக்குள்ளேயே எழும் இயல்பான பாலியல் இச்சை. அவ்விரண்டாலும் கடுமையான மனக்குழப்பத்துக்கும் குற்றவுணர்வுக்கும் ஆளாகிறார்கள் அவர்கள். நம் குழந்தைகளின் வளர் இளமைப்பருவத்தில் அவர்களை சுழற்றியடிக்கும் மையச்சிக்கலாக இது விளங்குகிறது
மிக நேர்மையுடனும் கவித்துவத்துடனும் அதை கலையாக்கியிருக்கிறார் பாலாஜி சக்திவேல். அவ்விளைஞர் குழுவுக்குள் உள்ள இயல்பான நட்பும் அதில் இருவர் அவர்களை மீறி காதல் கொள்ளும்போது ஏற்படும் உக்கிரமான குற்றவுணர்வும் அதனுடன் அவர்கள் நிகழ்த்தும் போராட்டமும் உணர்ச்சிகரமான தருணங்கள் மூலம் வெளிப்படுகின்றன. படத்தில் இளைஞர்களின் போராட்டம் என்பது எந்த புறச்சக்தியுடனும் அல்ல தங்கள் அகமன அலைகளுடன் மட்டுமே என்பது இப்படத்தின் மிக நுட்பமான சிறப்பம்சம்.
கடைசியில் தருமபுரி பேருந்து எரிப்பில் உச்சம் கொண்டு முடிகிறது படம். துளித்துளியாக ஏழை மக்கள் உருவாக்கியெடுத்த கனவுகளை மூர்க்கமாக அழித்துச்செல்கிறது வன்முறை அரசியலின் ஈவிரக்கமற்ற கை. “கெடுக!” என மூண்டெழும் ஓர் அடிவயிற்று ஆவேசம் தொனிக்க படமாக்கப்பட்டுள்ள இந்தக் காட்சிகளே தமிழ்த்திரையுலகின் மறக்க முடியாத படங்களுள் ஒன்றாக இதை நிலைநிறுத்துகின்றன.
எத்தனையோ மௌன அர்த்தங்கள் கோண்டது இக்காட்சி. சிராய்ப்புகளுடனும் கண்ணீருடனும் கனவுகளுடனும் அவ்விளநெஞ்சங்கள் நாளை வெளிச்சென்று எதிர்கொள்ள தங்களை தயாரித்தபடி இருக்கும் புறவுலகம் எப்படிப்பட்டது? அவர்கள் பேணும் மலரசைவு போன்ற மெல்லிய உணர்வுகளுக்கும் தவிப்புகளுக்கும் அங்கு என்ன இடம்? அக்கனவுகளை ஈசல் சிறகுகள் போல உதிர்த்துவிட்டுத்தான் குண்டாந்தடிகளுடன் அலையும் மனிதர்களின் சூழலுக்கு அவர்கள் வந்துசேர வேண்டுமா?
‘கல்லூரி’ உண்மையில் பலநூறு ஏழை உழைப்பாளிகளின் எதிர்காலம் குறித்த கனவுகளின் கூடமாக இத்திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. தங்கையை கல் உடைக்க அனுப்பி அண்ணாவை படிக்க அனுப்பும் கல் உடைப்பவனின் கனவு. ஊதுவத்தி சுற்றி அக்காவை படிக்க அனுப்பும் தங்கைகளின் கனவு. அவர்கள் படிக்கும் அந்த வரலாறு இளங்கலை அவர்களுக்கு என்ன அளிக்கப்போகிறது? குண்டாந்தடிகளும் பெட்ரோலுமாக அலையும் அரசியல்வாதிகளிடம் அல்லவா இருக்கிறது அவர்களின் எதிர்காலம்?
செழியனின் ஒளிப்பதிவு இயல்பான ஒளியில் எடுக்கப்பட்டது என்ற எண்ணத்தை உருவாக்கும் அளவுக்கு அழகும் இயல்பான தன்மையும் உடையதாக இருக்கிறது. இயற்கையான மழை இருளை படம் பிடித்திருப்பதும் சரி, கல் குவாரி சித்தரிப்பில் ஒளிப்பதிவுக் கோணங்களும் சரி நுட்பமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் உச்ச்சகட்ட காட்சி அதற்கு தேவையான உழைப்பையும் பொருட்செலவையும் அளிக்காமல் எடுக்கப்பட்டது போலப் படுகிறது
சென்ற சில மாதங்களாக ஆழமான மன இக்கட்டில் இருந்தேன். என் நுண்ணுணர்வை அவமானப்படுத்தி எரிச்சலூட்டிய சில படங்கள், ‘பருத்தி வீரன்’ கற்றது தமிழ்’ போன்றவை, ஊடகங்களால் பெரும் படங்களாக முன்வைக்கப்பட்டமைதான் காரணம். ஹாலிவுட் படங்களை நோக்கி பிரதிசெய்த ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு உத்திகளை எந்தவிதமான கலைநுட்பமும் இல்லாமல் அசட்டுத்தனமான மிகையுடன் தோன்றிய விதமெல்லாம் கையாண்டு எடுக்கப்பட்ட இலக்கற்ற முதிரா முயற்சிகள் அவை. அவற்றின் இயக்குநர்களின் அசட்டு ஆணவமும் கலை மொண்ணைத்தனமும் மட்டுமே வெளிப்படுபவை. அவை போன்ற படங்கள் கொண்டாடப்படும் ஒரு சூழல் காலப்போக்கில் தன் கலைமனத்தையே இழக்க நேரும் என்றே நான் அஞ்சினேன்.
நல்ல படைப்பு அடிப்படையில் உண்மையான மனஎழுச்சிகளை ஒட்டி உருவாவது. எத்தனை தொழில்நுட்பச் சரிவுகள் இருந்தாலும் ஆத்மா பங்கப்படாதது. அவ்வகைப்பட்ட படம் ‘கல்லூரி’. எளிமையையே வலிமையாகக் கொண்டது. செயற்கையான மன வக்கிரங்களுக்குப் பதிலாக நம்மைச்சுற்றி வாழும் வாழ்க்கையை நம்மைப் பார்கக்ச்செய்வது. ஒரு எளிய சமூகம் தன்னைத்தானே பார்க்க, தன் வலிகளை தானே சொல்லிக்கொள்ள, முயல்வதன் விளைவு இது.
வெற்றிபெற்றாக வேண்டியவை இவ்வகைப்பட படங்களே. இவற்றின் வெற்றியே நம்மைப்பற்றிய பெருமிதத்துடன் நாம் மேலும் எதிர்பாக்கச் செய்யும். குறைகள் இருக்கின்றன, அவற்றை இப்படம் நூறுநாள் ஓடும்போது அம்மேடையிலேயே அலசவேண்டும்.