எம்.எஸ். அலையும் நினைவுகள்-1
எம்.எஸ். அலையும் நினைவுகள்-2
எம்.எஸ். அலையும் நினைவுகள்-3
அன்புள்ள ஜெயமோகன் சார்,
நலமாக இருக்கிறீர்களா?
இன்று காலை எம். எஸ் பற்றிய பதிவை வாசித்து விட்டு எழுதுகிறேன்.
நானும் நிறைய சினிமா பார்த்து விட்டுத்தான் தான் இலக்கியம் வாசிக்க வந்தேன். ஆங்கில சாகச நாவல்கள் படிக்கும் போது படங்களில் பார்த்த காட்சிகள் தான் தோன்றும். ஒரு வேளை அதையெல்லாம் பார்க்காமல் இருந்திருந்தால் இந்த கதையை நாம் எப்படி கற்பனை செய்வோம் என்று நினைத்து பார்த்திருக்கிறேன்.
Sylvester Stallone, Clint Eastwood படங்கள் மீது பெருங்காதல் உண்டு. பின்னர் Al Pacino, Denzel Washington.
Mackenna’s Gold திரைப்படத்தை ஒரு முறை பார்த்திருக்கிறேன். Old Turkey Buzzard பாடல் இப்போதும் நினைவில் இருக்கிறது.
நான் எப்படி சினிமா பார்க்க தொடங்கினேன் என்று “The Godfather கோவில்பட்டிக்கு வந்த கதை” என்ற தலைப்பில் இரண்டு வருடத்திற்கு முன்னால் என் வலைப்பூவில் எழுதி பகிர்ந்திருந்தேன். சுட்டியை இணைத்திருக்கிறேன். இன்று எம்.எஸ் பற்றிய பதிவை படித்தவுடன் எனக்கு எல்லாம் புதிய கோணத்தில் திறந்து கொண்டது.
மிக்க அன்புடன்
மருதுபாண்டியன்.
maruthupandianprometheus.blogspot.com/2016/07/the-godfather.html?m=1
அன்புள்ள ஜெ
எம்.எஸ் பற்றிய குறிப்பு ஆத்மார்த்தமானதாக இருந்தது. நீங்கள் சொல்வதுபோல அத்தகைய நீண்டகால நட்பும் மதிப்பும் மிகப்பெரிய கொடைதான். அவருக்காக நீங்கள் நடத்திய விழா பற்றிய குறிப்புகளை வாசித்தபோது மனம் நிறைவடைந்தது.
நானும் எம்.எஸ் தலைமுறையைச் சேர்ந்தவன்தான். எங்களுக்கெல்லாம் ஆங்கில சினிமா எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அக்கட்டுரையிலே சொல்லியிருந்தீர்கள். அன்றைக்கு ஆங்கில சினிமாதான் உலகச் சாளரம். ஒரு தனிமைச்சிறையில் அடைபட்டு ஜன்னல் வழியாகப் பார்ப்பதுபோல அதைப் பார்த்துக்கொண்டிருந்தோம். எனக்கு மெக்கென்னாஸ் கோல்ட் மிகச்சிறந்த ஒரு கனவு. எழுபது தடவை பார்த்திருக்கிறேன். ரோமன் ஹாலிடே ஏன் பிடித்தது என்றால் அதில் ரோம் காட்டுவதனால்தான்
ஆனால் பின்னர் கலைப்படங்கள் என்று சொல்லப்பட்டவற்றைப் பார்த்தபோது என்னால் ஒன்றமுடியவில்லை. சிக்கலான நாவல்களை படிப்பேன். சினிமா கிராண்டாகத்தான் இருக்கவேண்டும். மூளையைக்குடையும் சினிமாக்களை வெறுப்பேன். காரணம் இந்தப்பின்னணிதான். எம்.எஸின் கனவுகளை நீங்கள் எழுதிவிட்டீர்கள். ஹம்ப்ரே பொகார்ட் பேரை வாசித்தபோது ஏனோ எனக்கு மெய்சிலிர்த்துவிட்டது
நன்றிகள்
ஆர்.கே.