மரபின் மைந்தன் முத்தையாவைப்பற்றி என்னிடம் முதலில் சொன்னவர் நாஞ்சில் நாடன். 1993ல், என் முதல் சிறுகதைத் தொகுதியான ‘திசைகளின் நடுவே’ வெளிவந்ததை ஒட்டி நெல்லையில் நடந்த ஒரு சந்திப்பு. நானும் நாஞ்சில்நாடனும் ஒரு விடுதியில் இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு டீ குடிப்பதற்காக கிளம்பி பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்தோம். பேச்சு மரபிலக்கியம் சார்ந்து சென்றது. நானும் அவரும் பெரும்பாலும் மரபிலக்கியத்தையே பேசுவது வழக்கம்
நான் அடுத்த தலைமுறையில் மரபிலக்கியத்தின்மேல் ஆர்வம் கொண்டவர்கள், மரபுச் செய்யுள்களை எழுதுபவர்கள் மிகவும் அருகி வருகிறார்கள் என்று சொன்னேன். இன்று பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட ஆய்வுகள் பெரும்பாலும் நவீன இலக்கியம் சார்ந்தே செய்யப்படுகின்றன. மரபிலக்கியம் சார்ந்து ஆய்வுகள் மிக அரிது, இலக்கணங்கள் சார்ந்து அதனினும் அரிது. ஏனெனில் தமிழறிவு என்பது நம்பமுடியாத அளவிற்கு குறைந்து வருகிறது. குறிப்பாக பல்கலைக்கழகச் சூழலில் பிழையின்றி தமிழ் எழுதும் தமிழ் ஆய்வுமாணவர்களே மிக அரிதானவர்கள். இத்தனை பெரிய ஒரு வீழ்ச்சி தமிழ் கல்வியில் நிகழும் என்று ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் இருந்த முன்னோடிகள் எண்ணியும் பார்த்திருக்கமாட்டார்கள் என்றேன்.
அம்முன்னோடிகள் தமிழ்ப்பெருந்தேரை நிலைபெயர்த்து உருட்டிவிட்டார்கள். அதை இழுத்து வலம் செல்லவேண்டியது வருந்தலைமுறைகளுக்குரிய எளிய கடமை. தமிழ் அயலார் ஆட்சியில் மறைக்கப்பட்டு தம்மவரால் மறக்கப்பட்டிருந்த ஒரு காலத்திலிருந்து அதை மீட்டுக் கொண்டு வந்து வரலாற்றின் பீடத்தில் நிறுத்தியவர்கள் அவர்கள். மரபிலக்கியங்கள் அனைத்தும் புதிய உரைகளுடன் அச்சேறின. பேரகராதிகள் தொகுக்கப்பட்டன. கலைக்களஞ்சியங்கள் உருவாயின. மாபெரும் சொல்லடைவுகள், மிக விரிவான இலக்கிய வரலாற்றுப் பதிவுகள் நிகழ்ந்தன. இவ்வுணர்ச்சியை அரசியலாக்க் கொள்முதல் செய்யும் பரப்பியக்கங்கள் உருவாயின. மேடைமேடையாக தமிழ் தமிழ் என்று முழங்கும் பேச்சாளர்கள் பெருகினர். தமிழ் ஓர் இன அடையாளமாக மாறியது.
ஆனால் கண்கூடாக சென்ற இருபத்தைந்து ஆண்டுகளில் தமிழ்ஆர்வமும் தமிழ்க்கல்வியும் கிட்ட்த்தட்ட இல்லை என்ற அளவில் ஆகிவிட்டன. கல்லூரிப்பேராசிரியர் பணிக்கு லஞ்சப்பணம் பெறத்தொடங்கியதுமே அறிஞர்கள் அங்கு செல்லாமலாயினர். தமிழ் நூல்களைப்படிப்பவர்கள் மிக்க் குறைவு. இன்றைய தமிழ் அறிஞர்கள் என்பவர்களே கூட பெரும்பாலும் எழுபது வயதுக்கு மிகுந்தவர்கள் .தமிழ் என்பது ஒரு அரசியல் கருத்து மட்டுமே என்று குறுக்கப்பட்டுவிட்டது. அது அரசியலாக மாற்றப்பட்டுவிட்டதனாலேயே அதன்மீதான் பண்பாட்டு ஈடுபாடு தமிழில் இல்லாமல் ஆகியிருக்கலாம்.பிழைக்கும் வழிநாடும் கல்வியால் தமிழ் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். இந்தியால் தமிழ் அழியும் என்ற அச்சுறுத்தல் ஆங்கிலத்தை வெறியுடன் தழுவிக்கொள்ள வைத்ததனால் தமிழ் அனைத்து பீடங்களிலிருந்தும் இறக்கிவிடப்பட்டிருக்கலாம்.
“ஒரு நல்ல தமிழ் உரை கேட்பது மிக அரிதாகிவிட்டது. இன்றைய தமிழ் மேடைப்பேச்சாளர்கள் மிகச் சில்லறைத்தனமான நகைச்சுவைகளை விளம்புபவர்களாக மாறிவிட்டிருக்கிறார்கள். பெருந்தமிழறிஞர்கள் பேசிய மேடைகளில் கழைக்கூத்தாடிகள் போல குட்டிக்கரணமடிப்பவர்களை பேச்சாளர்களாக காணும் இழிநிலை நமக்கு வந்திருக்கிறது.ஞானியார் சுவாமிகளும், மறைமலை அடிகளும், சோமசுந்தர பாரதியும் பேசிய காலம் மறைந்தது. ம.பொ.சியும், குன்றக்குடி அடிகளாரும், புலவர் கீரனும், அ.ஸ்ரீனிவாசராகவனும், அ.ச.ஞானசம்பந்தமும் பேசிய காலம் இன்றில்லை” என்று நான் சொன்னேன்.
என் புலம்பலை கேட்டுவந்த நாஞ்சில் நாடன் “இதெல்லாம் உண்மைதான் .ஆனாலும் எப்போதும் எங்கோ சிலர் பிடிவாதமாக எஞ்சுவார்கள். எனக்குத் தெரிந்து ஒரு பையன் இருக்கிறான். முத்தையா என்று பெயர். மரபின் மைந்தன் என்று அடைமொழி சூட்டிக்கொண்டிருக்கிறான். மரபுக்கவிதைகள் எழுதுகிறான். நல்ல பேச்சாளன். ரசனைகொண்டவன்” என்றார்.
“மரபுக்கவிதை எழுதுகிறாரா, அல்லது மரபுக்கவிதையில் அவர் வெளிப்படுகிறாரா?” என்று நான் கேட்டேன். “எதுகையை முதலில் எழுதிவிட்டு விரல்விட்டு அசை எண்ணி தொடை அமைத்து தளை தட்டுகிறதா என்று இன்னொரு முறை கணக்கிட்டு செய்யுள் எழுதுவது பயிற்சியால் கைகூடும் .ஆனால் மரபிலக்கியத்தில் உளம் தோய்ந்து, அதன் பெரும் செல்வங்களில் சில ஆண்டுகள் திளைத்து, தமிழின் உள்ளார்ந்த ஓசையொழுங்கை உள்வாங்கி நாவில் எப்போதும் எப்பேச்சிலும் சந்தம் திகழும்படி ஒருவர் ஆனாலொழிய இனிய மரபுக்கவிதைகள் எழுதமுடியாது.சந்தம் தன்னியல்பாக நிகழ்வதால் கண்ணதாசன்தான் மரபுக்கவிதையின் இறுதிச் சாதனையாளர் என்று நினைக்கிறேன்” என்றேன்.
“இந்தப்பையன் கண்ணதாசனுடைய பெரிய ரசிகன். அடிப்படையிலே சொற்சுவை தெரிந்தவன். கண்ணதாசனின் மொழி ஒழுக்கு இவனில் இருக்கிறது” என்று நாஞ்சில்நாடன் சொன்னார். “அபிராமி அந்தாதி எழுதிய அபிராமிபட்டர் பிறந்த திருக்கடையூர்தான் இவரது ஊர். அபிராமி ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் குடும்பத்தை சார்ந்தவர் .ஓர் உபாசனையாகவே தமிழைக்கொண்டவர்”
மேலும் சில ஆண்டுகள் கழித்தே நான் மரபின் மைந்தன் முத்தையாவை அறிமுகம் செய்து கொண்டேன். கோவை விஜயாபதிப்பகத்தின் விழா ஒன்றில் நாஞ்சில்நாடன் அவரை அறிமுகம் செய்து “நான் முன்பு சொல்லியிருக்கிறேன், அவர்தான் இவர், மரபின் மைந்தன்” என்றார். முதற்கணம் எனக்கு நினைவு வந்தது அபிராமி அந்தாதியின் சந்தம்தான். ‘கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில்..’. என வரிகள் ஓடின.
நான் என்னை அறிமுகம் செய்துகொண்டு அவரிடம் “உங்களுக்கு மரபிலக்கியத்தில் பிடித்தமான கூறு என்ன?” என்று கேட்டேன். “பல அழகுகள் இருந்தாலும் மரபுக்கவிதையில் இருக்கும் சந்தம் தான் எனக்குப்பிடித்தது” என்று அவர் சொன்னார். அவர் அவ்வாறு சொன்னது எனக்கு பெரும் கிளர்ச்சியை அளித்தது. அவர் கைகளைப்பற்றிக்கொண்டு “ஆம்,ஒருகட்டத்திற்குப் பிறகு கம்பனிலேகூட சந்தம் தான் முதன்மையான அழகு என்று தோன்றுகிறது. குமரகுருபரர் தொடங்கி அண்ணாமலை ரெட்டியார் வரையிலும் தமிழ்க்கவிதையின் இறுதிக்காலகட்டம் முழுக்கவே சந்தத்தால் ஆனது” என்று நான் சொன்னேன்.
பின்னர் முத்தையாவின் கவிதைகளை நான் படித்து பார்த்தேன். தன்னியல்பாக நிகழும் சந்தம் அவற்றை அழகுறச்செய்கிறது .இன்று மரபுக்கவிதை ஒரு திருகலான இடத்திலுள்ளது . அது மேடையில் நிகழ்ந்தாக வேண்டும். அந்த மேடைக்கு முன்னால் அமர்ந்திருப்பவர்களோ பொதுவான அரசியல், சமூகவியல் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டபவர்கள் எப்போதும் நிகழும் முறைமைச் செயல்களுக்கு உளம் பழகியவர்கள். ஆகவே மரபுக்கவிதையில் புதிய எண்ணங்களோ நுட்பங்களோ நிகழமுடியாத நிலை உள்ளது. முத்தையாவின் கவிதைகளில் அவர் முருகனையும் அபிராமியையும் நோக்கி உளம் திரும்பும்போது அழகிய மெய்யான கவித்துவ நிகழ்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது
பின்னர் ஒருமுறை முத்தையா ,கோவை ரவீந்திரன், கவிஞர் சுதேசமித்திரன் ஆகியோருடன் குற்றாலத்துக்கு சென்று மூன்றுநாட்கள் தங்கினேன். டி.கே .சிதம்பரநாத முதலியார் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஒட்டி. நாஞ்சில் நாடனும் வந்து இணைந்துகொண்டார்.தொடர்ந்து சாரல் பொழிந்துகொண்டிருந்த குற்றாலத்தில் தெருக்கள் அனைத்தும் ஒழிந்துகிடந்தன. கடைகள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தன. நாங்கள் மட்டும் அருவியில் நீராடி தலைதுவட்டாமல் மழையில் நனைந்துகொண்டு, சிற்றுண்டிக்கடைகளைத் தேடிச்சென்று உணவருந்தி, மீண்டும் தங்கிய விடுதிக்கு வந்தோம். இடைவெளியில்லாமல் பேசிக்கொண்டிருந்தோம்.
நினைவிலிருந்து மரபுச் செய்யுள்களை சொல்லும் முத்தையாவின் திறனை அன்றுதான் கண்டேன். மூன்று நாட்களும் விழித்திருந்த பொழுதெல்லாம் செய்யுள்களில் ஆழ்ந்திருந்தோம். முற்றிலும் அடுக்கு குலைந்த ஒரு கவிதை ரசனை அது.கம்பனில் ஒரு பாடல் ,கந்தபுராணத்தில் பிறிதொன்று, குற்றாலக்குறவஞ்சியில் நான்கு வரி, ஒரு சித்தர் பாடல் , தொடுக்கும் நாராக ஊடே கண்ணதாசன் என்று சென்ற அந்தச் சுழல் தமிழின் அரிய தருணங்களின் நிரை. கோலம் போல சிதறிக்கிடந்த புள்ளிகளை இணைத்து அரிய ஓவியமாக அது மாறியது. கவிதையின் கூறுபொருளை முழுமையாகவே மறந்து சொல்லழகில் மட்டுமே திளைத்த நாட்கள்
அன்று முதல் இன்று வரை என் உள்ளத்திற்கு அணுக்கமானவராக முத்தையா இருக்கிறார். அவருடைய பலவகையான செயற்பாட்டுத்தளங்களை நான் அறிவேன். ‘நமது நம்பிக்கை’ என்ற முக்கியமான தன்னம்பிக்கை இதழ் ஒன்றை தொடர்ந்து நடத்தி வருகிறார். ஆண்டுதோறும் இளைஞர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார். ‘ரசனை’ என்ற மாத இதழ் முத்தையாவின் ஆசிரியத்துவத்தில் ஒரு சில ஆண்டுகள் வெளிவந்தது .அதில் ஒரு சிறப்பிதழ் எனக்காக தயாரிக்கப்பட்டது. ஒரு எழுத்தாளனாக எனக்கான வெளியிடப்பட்ட முதல் சிறப்பிதழும் அதுவே .நான் மதிக்கும் பல முக்கியமான எழுத்தாளர்கள் அதில் என்னைப்பற்றி எழுதியிருந்தார்கள். முத்தையாவின் இயல்புக்கேற்ப ரசனைக்கானதாக அவ்விதழ் இருந்தது.
மரபிலக்கியத்துக்கும் நவீன இலக்கியத்துக்குமான ஒரு ஊடாட்டம் எப்போதும் முத்தையாவில் உண்டு. மரபிலக்கியத்தில் உளம் தோய்ந்தவர் எனினும் நானறிந்தவரை தமிழில் வெளியாகும் முக்கியமான நூல்களை உடனுக்குடன் வாசிப்பவர் என்று முத்தையாவை மட்டுமே சொல்லலாம். எனது படைப்புகள் வெளிவந்த ஓரிரு மாதங்களுக்குள்ளேயே அவற்றை வாசித்து எதிர்வினையாற்றியிருக்கிறார். கொற்றவைக்கும் முதற்கனலுக்கும் அவர் எழுதிய நீண்ட விமர்சனக்கட்டுரை முக்கியமானது.
இன்று சத்குரு ஜக்கிவாசுதேவ் அவர்களின் அமைப்புடன் நெருக்கமான ஒருவராக முத்தையா இருக்கிறார். அவர்களின் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறார். இசைப்பாடல்கள் எழுதியிருக்கிறார். திரைப்பாடல்கள் சிலவும் எழுதியிருக்கிறார். கோவையில் பல நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பு செய்யும் அமைப்பாளர் அவர். வைரமுத்துவின் வெற்றித்தமிழர் பேரவையின் செயற்பொறுப்பில் இருப்பவர்.
ஆனால் இவையனைத்திற்கும் மேலாக அவருடைய அடையாளம், பங்களிப்பு என்பது ஒரு மரபிலக்கியத்தை தொடர்ந்து மேடைகளில் முன்வைக்கும் பேச்சாளராகவும் மரபுக்கவிஞராகவும் அவர் இருப்பதுதான். அனேகமாக ஒவ்வொருநாளும் ஏதேனும் மேடையில் கம்பராமாயணம் குறித்தோ ,கந்தபுராணம் குறித்தோ ,சேக்கிழாரைக்குறித்தோ அவர் பேசிக்கொண்டிருக்கிறார். இன்று அவ்வாறு ஒலிக்கும் குரல்களில் இளமையானதும், இலக்கியமறிந்த்தும் அவருடையதே.
இன்று மரபிலக்கியத்தைப் பேசுபவர்களின் மிகப்பெரிய சிக்கல் அவர்கள் அதை மரபார்ந்த கருத்துக்களாக முன்வைக்கிறார்கள் என்பது. “அன்றே சொன்னார் வள்ளுவர்” என்பதுபோன்ற வரிகளை தொடர்ந்து செவிக்கொள்கிறோம். இதனால் மரபிலக்கியம்பேசுபவர்கள் இயல்பாக பழைமைவாதிகளாக ஆகிவிடுகிறார்கள். “இந்தக்காலத்திலே எல்லாம் இந்த அழகிலே இருக்கு…” என்ற அங்கலாய்ப்புகள் அவ்வப்போது வராமல் ஒரு மரபிலக்கிய உரையே நிகழமுடியாதென்னும் நிலை. அதைக்கேட்கவருபவர்களும் வயதானவர்கள் என்பதும் ஒரு காரணம்
இதற்கு மறுபக்கமாக மரபிலக்கியத்தை நவீன அரசியல், சமூகவியல் கருத்துக்களைக் கொண்டு அணுகும் ஒருவட்டம் உள்ளது. அவர்களில் கல்வியாளர்களே மிகுதி. ஏற்போ மறுப்போ அவர்களுக்கும் மரபிலக்கியம் என்பது அதிலுள்ள செய்திகளும் கருத்துக்களும் தான்.
இவ்வாறு முன்வைக்கப்படுவதாலேயே மரபிலக்கியத்தின் அழகு எங்கும் சொல்லப்படாமலாகிறது. மொழியிலிருந்து நாம் பெறுபவை முதன்மையாகச் சொற்களே. சொற்சுவை வழியாகவே ஒரு பண்பாடு தன் அடுத்த தலைமுறை நோக்கி நீட்சி கொள்கிறது. சுவை என்பதும் பண்பாடென்பதும் வேறுவேறல்ல. நாச்சுவை என்றால் உணவும் சொல்லும்தான். அதை முன்வைக்கையிலேயே இன்றைய இலக்கியவாசகன் மரபிலக்கியம் நோக்கி வருகிறான். அவன் கனவுகளைச் சொற்களே திறக்கின்றன. மரபின் சொல்லழகை முன்வைக்கும் பேச்சாளர்கள் இன்று அரிது. முத்தையா அவர்களில் ஒருவர்.
நமக்கிருக்கும் மாபெரும் மரபை மீண்டும் மீண்டும் நினைவு படுத்துபவராக, அதிலிருந்து ஓரிரு துளிகளை எடுத்து இந்த தலைமுறைக்கு சுவை காட்டக்கூடியவராக திகழ்கிறார். ஒருகாலத்தில் இங்கு மேடைகள் தோறும் உயர் தமிழ் திகழ்ந்திருந்தது .மரபின் வெள்ளம் பெருகி ஓடிய நதிவழி இன்று வெறும் மண்தடம். அதிலோடும் ஒளிரும் நீர்ச்சரடு என முத்தையாவின் உரைகளைக் கேட்கையில் தோன்றுவதுண்டு.
மரபின் மைந்தன் முத்தையாவுக்கு 50 ஆண்டு நிறைவை ஒட்டி வெளியிடப்பட்ட மலருக்காக எழுதியது
இளங்கோவடிகள்தா ஐயப்பன்: கொற்றவையில் ஜெயமோகன்:மரபின் மைந்தன் முத்தையா