இயல்புவாதத்தின் வெற்றியும் எல்லைகளும்- கே.என்.செந்திலின் ‘சகோதரிகள்’

கே.என்.செந்தில்
கே.என்.செந்தில்

சில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் ஒரு பயணத்தில் கேரளத்தின் சிறிய உணவகம் ஒன்றின் அருகே வண்டியை நிறுத்தினோம். ஏதோ சத்தம் வந்துகொண்டிருந்த்து. நண்பர்கள் இறங்கிச்சென்று அந்தப்பழுதை ஆய்வுசெய்ய நான் நடந்து அருகே இருந்த அந்த உணவகத்தின் மரபெஞ்சில் அமர்ந்தேன். அது உச்சிப்பொழுது. உணவகம் காலையோடு சரி. அங்கே ஓர் அம்மாவுக்கும் மகளுக்கும் சிறுபூசல் நிகழ்ந்துகொண்டிருத்து. சற்றுக்கழித்து அப்பெண்ணின் கணவர் வந்தார். மேலும் சில உரையாடல்கள். அவர் வசைபாடியபடி வெளியே வந்து இருசக்கர வண்டியை எடுத்துக்கொண்டு சென்றார்.

கார் சரியாகிவிட்டது. நாங்கள் கிளம்பினோம். நான் அங்கிருந்த்து இருபது நிமிடங்கள். அந்த சிறு கால அளவில் அங்கே நிகழ்ந்த வாழ்க்கையின் ஒரு துண்டு எனக்குக் கிடைத்தது. ஒரு சிறு கதை. கதைமாந்தர் அறிமுகம் இல்லை. நிகழ்ச்சிகளுக்கு முன்பின் நீட்சி இல்லை. அதையெல்லாம் நான் கற்பனையில் வளர்த்துக்கொண்டே சென்றேன். என்ன விந்தை என்றால் சொல்லச்சொல்ல விரிந்தன. நானறிந்த அனைத்துக்கதைகளும் அந்த இடைவெளிகளை நிரப்பத் தேவையாயின. அவை கூடி பின்னி கதைப்படலம் ஒன்றை உருவாக்கி அந்தச் சிறிய நிகழ்வை தாங்கிக்கொண்டன.

இயல்புவாதச் சிறுகதைகளின் இயல்பு இது. அவை யதார்த்தவாதக் கதைகளைப்போல விரிவாகச் சொல்லப்படுவதில்லை. உறவுகள், நிகழ்வின் தர்க்க ஒழுங்குகள் , கதைமாந்தரின் உள்ள ஒழுக்குகள் ஆசிரியரால் விரிவாக்க் காட்டப்படுவதில்லை. ஆசிரியர் காட்டும் கைவிளக்கின் ஒளியில் வாழ்க்கையின் ஒரு சிறுபகுதி மட்டும் துண்டுகளாக நமக்குத்தெரிகிறது. எஞ்சியவை முழுக்க வாசகனின் கற்பனைக்கே விடப்படுகின்றன. இயல்புவாதக் கதைகளில் உள்ள வாசக இடைவெளி என்பது இதுவே.

வாழ்க்கையின் ஒரு சிலதுண்டுகள் மட்டுமே சொல்லப்படுவதனால் அந்தப்பகுதிகளில் ஆசிரியனின் ‘காட்டுமுறை’ மிகவும் தயங்குகிறது. மிதமிஞ்சிய காட்சி,நிகழ்வு நுட்பங்களுடன் மெதுவாக ‘காமிரா’ நகர்கிறது. இயல்புவாத அழகியல் கொண்ட திரைப்படங்களில் பொறுமையைப் பதற அடிக்கும் அளவுக்கு மெல்ல காட்சிகள் செல்வதைக் கண்டிருக்கலாம். இயல்பான ஒழுக்கு அல்ல அது. வேண்டுமென்றே மெல்லச் செல்கிறது காட்சியொழுக்கு. டி.வி.சந்திரனின் ஒரு மலையாளப்படத்தில் ஒரு பெண் பொட்டுவைத்துக்கொள்ளும் காட்சி கிட்டத்தட்ட இரண்டு நிமிடம் ஓடும்.

அவ்வகையில் அது யதார்த்தவாதத்திற்கு நேர் எதிரானது. யதார்த்தவாத அழகியல் யதார்த்தம்போல ஒன்றை உருவாக்கிக் காட்டுகிறது. ஆனால் அது யதார்த்தக் களத்திலிருந்து ஆசிரியரால் தெரிவுசெய்யப்பட்டு கோக்கப்பட்டு தொகுத்துச் சொல்லப்படுவது. ஆகவே விரைவாக காட்சிகள் ஓடும். இடைவெளிகள் ஆசிரியரால் திறம்படக் கோக்கப்பட்டிருக்கும். ஒட்டுமொத்தக் களம் ஒன்று புனையப்பட்டு ஆசிரியரால் விளக்கவும் பட்டிருக்கும். வணிக எழுத்துக்கள் எப்போதுமே யதார்த்தவாத அழகியல்கொண்டவைதான். ஆகவே அவற்றில் பழகியவர்களுக்கு இயல்புவாதம் பொறுமையிழப்பை அளிக்கும். சு.சமுத்திரம் எழுதுவது யதார்த்தவாதம், பூமணி எழுதுவது இயல்புவாதம்.

இயல்புவாதம் அது அளிக்கும் எல்லைக்குட்பட்ட சட்டகத்திற்குள் அழுத்தத்தை உருவாக்க விரும்புவதனால் வன்முறை, காமம், அருவருப்பு ஆகியவற்றை மிகையாகக் காட்டும். அரிதாக மிகையுணர்ச்சிகளையும் காட்டும். இந்த இயல்பினாலும் அது பொதுவான யதார்த்தவாதக் கலையிலிருந்து வேறுபடுகிறது. இந்த மிகை என்பது ஒரு தருணத்தை துளித்துளியாக விரிப்பதனால் நிகழ்வது. அதே விரைவில் இன்னொரு பெரிய தருணத்தை ஓரிரு வரிகளில் கடந்துபோவதனாலும் உருவாவது. இயல்புவாதக் கதைகளில் மிகையான உணர்வுகளும் மிகையான நிகழ்வுகளும் சுருக்கமான விவரணைகளுடன் கடந்துசெல்வதற்கு மிகச்சிறந்த உதாரணமான கதைகளை பூமணியின் புனைவுலகில் காணமுடியும்.

இயல்புவாதம் கவித்துவத்திற்கு எதிரான அழகியல்கொண்டது. ஆகவே முடிந்தவரை தட்டையான செய்திநடையை கைக்கொள்கிறது. குறியீட்டுத்தன்மையை துறக்கிறது. அது தரிசனங்களையும் தத்துவங்களையும் அளிப்பதில் நம்பிக்கையற்றது. ‘நேரடித்தன்மை’ என்னும் புனைவுப்பாவனை கொண்டது அது. ஆகவே அது பெரும்பாலும் ‘இது வெறும் வாழ்க்கை மட்டுமே,மேலதிகமாக ஒன்றுமில்லை’ என்றே தன்னை முன்வைக்கிறது. ஆனால் அது கலையாக ஆகும்போது மேலதிகமாக உள்ளவற்றால்தான் பொருள்படுகிறது.

இந்த இயல்பால் இயல்புவாத அழகியல் வணிக எழுத்தாக ஆக முடிவதில்லை. அங்கே கதைக்குள் புகுந்துகொள்ள வாசகன் அனுமதிக்கப்படுவதில்லை. உணர்ச்சிகரமாக அவன் ஈடுபட வழியில்லை. வெறுமே வெளியே பெஞ்சில் அமர்ந்து அரைகுறையாகக் கேட்டுவிட்டு எழுந்து செல்பவன் என்பதே அவனுக்கு கதாசிரியன் அளிக்கும் இடம்.

அதோடு இயல்புவாத அழகியலுக்கென்றே சில எல்லைகள் உள்ளன. அது ஒருவகையில் ‘நன்கு தெரிந்த’ ‘வழக்கமான’ கதையைத்தான் சொல்லமுடியும். திகைப்பூட்டும் புதியநிகழ்வுகளையோ புதிய கோணங்களையோ முன்வைக்கமுடியாது. புதியநிகழ்வுகள் என்றாலும்கூட அதை ‘இதெல்லாம் வழக்கம்தானே’ என்ற தோரணையிலேயே சொல்லமுடியும். இந்தக்கூறு கலைக்கு பெரும் கவற்சியை அளிக்கும் பிறிதிலாத்தன்மையை மறுக்கிறது. இக்காரணத்தால்தான் இயல்புவாதம் எப்போதும் இரண்டாம்நிலை அழகியலாக நின்றுவிடுகிறது. அதோடு இயல்புவாதக் களத்தில் உன்னதம் [sublime] நாடக உச்சம் , கவித்துவம் ஆகியவை நிகழமுடியாது. புனைவுக்கலை எப்படி என்ன ஆனாலும் புனைவுச்சம் இவற்றினூடாக அடையப்படுவதே. இக்காரணத்தால் நான் இயல்புவாதக் கதைகளை பெரும்பாலும் எழுதுவதில்லை, ஆனால் எனக்கு அயலான அழகியல் என்பதனால் எப்போதும் ஆர்வமும் கொண்டிருப்பேன்.

தமிழில் பூமணி ,ஆ.மாதவன் இருவரும் இயல்புவாத அழகியலின் இருவேறு வகைமைகளுக்கான முன்னுதாரணங்கள். தொடர்ந்து சுப்ரபாரதி மணியன், இமையம் என அவ்வழகியல் இங்கே எப்போதும் வலுவாக உள்ளது. மலையாளம் போன்ற மொழிகளில் இயல்புவாதம் இத்தனை வலுவாக இல்லை. இங்கே ஒருபக்கம் மண்ணோடு மண்ணான வாழ்க்கை நிகழ்கிறது. மறுபக்கம் அவ்வாழ்க்கை மாபெரும் புராண, தொன்ம மரபால் கடந்துசெல்லப்படுகிறது. அல்லது வணிக எழுத்தால் உணர்வுக்கொண்டாட்டமாக ஆக்கப்படுகிறது. இவ்விரு போக்குகளுக்கும் எதிரான மறுவினை என்று இயல்புவாதத்தைச் சொல்லலாம். குறிப்பாக தமிழின் தலித் எழுத்தாளர்கள் இயல்புவாதத்தைக் கைக்கொண்டது கவனிக்கத்தக்கது.

 

st1

இயல்புவாத அழகியல்கொண்ட சிறுகதை கே.என்.செந்தில் எழுதிய ’சகோதரிகள்’. கதைக்குள் சென்று எவர் எவருடன் என்ன உறவு , எந்தச்சூழலில் அவ்வுரையாடல்கள் நிகழ்கின்றன என்று புரிந்துகொள்வதற்கு கூர்ந்த வாசிப்பு தேவைப்படுகிறது. அதன் ’பொருள்’ என்ன என்பதை வாசகன் உருவாக்கவேண்டியிருக்கிறது நேரடியான வாழ்க்கையின் ஒரு சித்திரம் என்னும் புனைவுப்பாவனை. அந்தத் திகைப்பு அல்லது குழப்பம்தான்  அதன் கலைக்கூறு. திட்டமிட்டு உருவாக்கப்படுவது அது. தெளிவின்மை என்பது கலையின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. எவ்வகையில் எங்கே தெளிவின்மை திகழவேண்டும் என்பதை கலைஞன் முடிவெடுக்கிறான்.

ஒரு மிகையுணர்வுக்காட்சியை மிகச்சாதாரணமான ஒரு செய்திபோல விவரணைகளே இல்லாமல் , நாடகக்கூறே இல்லாமல் சொல்லியிருக்கும் பலபகுதிகள் இயல்புவாத அழகியலின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன.

“சில வாரங்களுக்குப்  பின்  அப்பாவை வீட்டிற்கே  கூட்டி  வந்து அவருக்குச் சாராயம் ஊற்றிக்கொடுத்து  வசந்தியைத்  தனக்குத்  தருமாறு   கெஞ்சிக்  கொண்டிருந்ததை  கடைக்குக்  கிளம்பி பாதி  தூரத்தில் பணமெடுக்க மறந்து போய் விட்டதை  நினைத்து  திரும்ப வந்து வீடேறுகையில்  திலகா கேட்டாள்.  அவர்  போதையில் எழுந்து  அவன்  முகத்தைச்  சுவற்றோடு சேர்த்து  வைத்துமிதித்தார்.  அவன் எலி  போலக் கீறிச்சீட்டு  தொண்டையில்  சத்தமேதும் வராமல்  அப்பாவின் காலைப் பிடித்து  தள்ளிவிட்டு  அவளைக்  காணாதவன்  போல வெளியே போனான்.  நரகவாழ்க்கையாக  தன் மகளுக்கு  அமைந்துவிட்டதே  என முகத்தை  மறைத்தபடி  தேம்பினார். அவள் காலைப் பிடித்து  நகரவிடாமல் அப்பா தன் தலையால்  அவள் பாதத்தில்  மோதி மன்னிக்கும்படி  கதறி அவிழ்ந்து  போயிருந்த  வேட்டியைக்  கூட சரியாக  கட்டாமல் அப்படியே சுற்றிக்  கொண்டு  சென்றார்”

முழுக்கதையும் இதே பாணியில் சொல்லப்படுகிறது. இங்கே நாம் கதையை தெரிந்துகொள்கிறோம், உடன் ஒழுகுவதில்லை, வாழ்ந்து அறிவதுமில்லை. இயல்புவாதம் நம்மிடம் வெளியே நில் என்று ஆணையிடுகிறது.

இந்தக்கதையின் அழகியல்பிழைகள் என்றால் அவ்வப்போது ஆசிரியரின் கோணமோ என்று ஐயுறச்செய்யும் சித்தரிப்புகள் வருவதையும், சில தருணங்களில் வரும் உவமைகளையும், நேரடியாகவே உள்ளம் வெளிப்படும் சில இடங்களையும்  [திலகா  தன் மனதைமீறி  உடல் செல்வதைக்  கட்டுபடுத்த முடியாமல்  திணறிக் கொண்டிருந்தாள். ஆணின் துணைக்கு ஏங்குகிறேனா  என கேட்டுக் கொண்டாள்] சுட்டிக்காட்டவேண்டும்.

சகோதரிகள் நமக்கு நன்கு தெரிந்த கதைச்சூழல். பெரும்பாலும் தெரிந்த வாழ்க்கைநிகழ்வுகள். அவை செறிவாக ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டு ஒற்றைச்சிடுக்காக, எத்தனை அவிழ்த்தாலும் தீராத முடிச்சுகளின் தொகையாக, நமக்கு அளிக்கப்படுவதில்தான் இதன் கலை உள்ளது. வெவ்வேறு பெண்களின் வாழ்க்கை வெவ்வேறு வகையில் சிதைவுற்றுள்ளது. அதற்கு ஆண்கள் காரணம் என்று சொல்லலாம். அவர்களின் தயக்கங்களும் அச்சங்களும்கூடக் காரணம்தான். ஒவ்வொரு பெண்ணின் கதையாக நீவி எடுத்து பலகதைகளாக ஆக்கிக்கொள்ளலாம். ஆனால் உருட்டி வீசப்பட்ட மயிர்சுருள் போல நீவி விரித்துவிட முடியாதபடி மொத்தமாக எடுத்துவைக்கப்படுவதனால்தான் இது கலையாகிறது. கடுந்துயர்களின் தொகுப்பாகவும் உள்ளது, வெற்று அறிக்கையாகவும் தெரிகிறது இதுவே இயல்புவாதத்தின் வெற்றி, அதே சமயம் இயல்புவாத அழகியல் கொண்டுள்ள எல்லா எல்லைகளையும் தானும் கொண்டுள்ளது இப்படைப்பு.

சகோதரிகள் முதற்பகுதி

சகோதரிகள் இரண்டாம் பகுதி

 

முந்தைய கட்டுரைரயில்மழை -கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 38