போகனுக்கு ஆத்மாநாம் விருது

போகன்
போகன்

2018 ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருது கவிஞர் போகனுக்கு வழங்கப்படுகிறது. போகன் கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் தொடர்ச்சியாகப் பங்களிப்பாற்றி வருபவர்.

போகனுக்கு வாழ்த்துக்கள்.

கவிஞர் ஆத்மாநாம் விருது – 2018- அறிவிக்கை

தமது முன்னோடியான கவிதைகள் மூலமாக நவீன தமிழ்க் கவிதைக்குக் காத்திரமான பங்களிப்பை வழங்கியுள்ளவர்களைக் குறித்து யோசிக்கும்பொழுது தவறாமல் நினைவுக்கு வரும் கவி ஆளுமை கவிஞர் ஆத்மாநாம்.

தமிழ் நவீனக் கவிதையின் செழுமையான காலகட்டமான 1970களில் தனது ஈடுபாடுமிக்க கவி ஆர்வத்தைக் கவிதைகள், கவிதையியல் பற்றிய உரையாடல், கவிதைக்கென ஒரு பத்திரிகை, கவிதை மொழிபெயர்ப்பு எனப் பன்முகமான பங்களிப்பின் மூலமாக வழங்கியவர் ஆத்மாநாம்.

கவிஞர் ஆத்மாநாம் அவர்களின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையிலும் கொண்டாடும் வகையிலும்  மெய்ப்பொருள் பதிப்பகம் ‘கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’யைக் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் கவிஞர் ஆத்மாநாம் பெயரில் ரூ.25,000 பரிசுத்தொகையும் விருதும் வழங்கி வருகிறது.

2015ஆம் ஆண்டு கவிஞர் இசை அவர்களுக்கும் 2016ஆம்  ஆண்டு  ‘மீகாமம்’ தொகுப்புக்காகக் கவிஞர் க.மோகனரங்கன் அவர்களுக்கும் 2017ஆம் ஆண்டு ‘பெருங்கடல் போடுகின்றேன்’ தொகுப்புக்காகக் கவிஞர் அனார் அவர்களுக்கும் ‘கவிஞர் ஆத்மாநாம் விருது’ வழங்கப்பட்டது.

முதற்கட்டமாகக் ரவிசுப்ரமணியன், கரிகாலன், சல்மா, க. மோகனரங்கன், அனார், இசை மற்றும் கிருஷ்ண பிரபு ஆகியோர் அடங்கிய நடுவர் குழு 
 2018ஆம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருதுக்குரிய கவிதைத் தொகுப்பை தேர்ந்தெடுக்க சிறுபட்டியலை பரிந்துரைத்து இருந்தார்கள். அக்குழு 2015 முதல் டிசம்பர் 2017 வரை வெளிவந்த கவிதை நூல்களிலிருந்து  சிறுபட்டியலை தேர்ந்தெடுத்து அளித்து.   தேர்வுச் செய்யப்பட்ட சிறுபட்டியல் 2018 மே மாதம் வெளியிடப்பட்டது.

இரண்டடுக்குத் தேர்வு முறையில் விதிகளுக்கு உட்பட்டு அச்சிறு பட்டியலிலிருந்து கவிஞர் சுகுமாரன்,எழுத்தாளர் பெருமாள்முருகன், கவிஞர் யுவன் சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு விருதாளரைத் தேர்வுசெய்து சமர்ப்பித்தது.  நடுவர் குழுவின் முடிவின்படி இந்த ஆண்டுக்கான ரூ.25000/- பரிசுத் தொகை அடங்கிய கவிஞர் ஆத்மாநாம் விருது  ‘சிறியஎண்கள் உறங்கும் அறை’ தொகுப்புக்காக  கவிஞர் போகன் சங்கர் – (போகன் சங்கர்.இயற்பெயர் கோமதி சங்கர்.நெல்லையில் பிறந்தவர்.நாகர்கோவிலில் வசித்து வருகிறார்.1972ம் ஆண்டு பிறந்தார்.முதல் தொகுப்பு எரிவதும் அணைவதும் ஒன்றே 2012ஆம் ஆண்டு வந்தது.கவிஞர் ராஜ மார்த்தாண்டன் விருதையும் சுஜாதா அறக்கட்டளை விருதையும் பெற்றது.அதன்பிறகு தடித்த கண்ணாடி போட்ட பூனை,நெடுஞ்சாலையை மேயும் புள்,சிறிய எண்கள் உறங்கும் அறை என்று மூன்று கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன.போகபுத்தகம்,கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் என்று இரண்டு கதைத் தொகுப்புகளும் வந்துள்ளன.)

அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

பரிந்துரையாளர்கள், தேர்வுக்குழுவினர் ஆகியோருக்கு எங்கள் அன்பான நன்றி.

கவிஞர்  போகன் சங்கர் அவர்களுக்கு வாழ்த்துகள்.

கவிஞர் ஆத்மாநாம் விருது வழங்கும் விழா  சென்னையில் 2018, அக்டோபர்  மாதம் 20-ஆம் தேதி மிகச்சரியாக மாலை 5 மணிக்குக் கவிகோ மன்றத்தில் நடைபெறும்.

-கவிஞர் வேல் கண்ணன்,
அறங்காவலர்,
கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை,
சென்னை.

மின்னஞ்சல் முகவரி : [email protected].

****

போகன் கவிதைகள் பற்றி சுயாந்தன்

1. பூ – போகன்

போகன்

மழைத்துளிகள் நடுவே நாகம்

அலைகளில் அமைவது

முந்தைய கட்டுரைஎம்.எஸ். அலையும் நினைவுகள்-3
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 37