மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
மேல்நின்று தான்சுரத்தலான்
தனியாக கிளம்பிவிடுவது என்ற ஒருவகையான உளஎழுச்சி இப்போதெல்லாம் இருந்துகொண்டே இருக்கிறது. பேசப்பிடிக்கவில்லை என்பதும் எங்காவது வெறுமே இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது என்பதும்தான் காரணம். செயல்துடிப்புள்ள இளைஞர்களான நண்பர்களுக்கு என் அந்தமனநிலை சுமையாகிவிடக்கூடும் என்பதனால் தனிமை. என்னுள் உள்ள தனிமை ஒரு பனித்துளிபோலத் ததும்புவது. கொஞ்சம் அசைந்தாலும் உடைந்து விடும்.
சென்றமுறை சிரபுஞ்சி வந்தபோது வெறும்பாறையாகச் சிவந்துகிடந்தது. சிரபுஞ்சியில் மழைக்காலம் என்பது ஜூனில் தொடங்கி ஆகஸ்ட் இறுதிவரைத்தான். பிறகு ஒன்பது மாதங்களுக்கு மழை இல்லை. மலையுச்சியாதலால் கடுமையான குடிநீர்ப்பஞ்சம் இருக்கும். அன்றே மழைபார்க்க சிரபுஞ்சிக்கு வரவேண்டும் என முடிவுசெய்திருந்தேன்.
ஆகவே கிளம்பவேண்டும் என்ற எண்ணம் வந்ததுமே சிரபுஞ்சிக்கு என்று தோன்றிவிட்டது. நண்பர் ராம்குமார் மேகலாயாவில் மாவட்ட ஆட்சியர். அவரிடம் சொன்னபோது தங்குமிடம் ஏற்பாடு செய்துவிட்டார். கிளம்பிவிட்டேன். மூன்றாம் தேதி கௌகாத்தி சென்று அங்கிருந்து சிரபுஞ்சி
நான் செல்லும்போதே மழை. ஷில்லாங்கிலிருந்து சிரபுஞ்சி வரை மழைக்குள்ளேயே வண்டுபோலச் சுழன்றுகொண்டிருந்தது கார். மழை என்றால் எதிரே வரும் காரின் முகவிளக்கின் ஒளி ஒரு கலங்கிய செவ்வண்ணம் போலத் தெரியும். ஓசை கேட்காது. அடியடியாகச் செல்லவேண்டும். நல்லவேளையாக நெரிசல் இல்லை.
அங்கே ஜீவா விடுதியில் தங்கினேன். மேகாலயாவில் சென்ற மூன்றாண்டுகளாக சுற்றுலாத்தொழில் சூடுபிடித்து வருகிறது. ஜீவா விடுதி போன்றவை அரச நிதியுதவியுடன் உருவாகியுள்ளன. மிக வசதியான விடுதி. ஐந்துநட்சத்திர வசதிகள். ஒருசுவர் மாபெரும் கண்ணாடிப்பரப்பு. அதன் வழியாக மழையைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். குளியலறையிலிருந்து மழையைப்பார்க்கலாம்.
எல்லா அறைகளும் பெரிய மலைச்சரிவை நோக்கித் திறந்திருக்கும்படி அமைக்கப்பட்டிருந்தன. மிகப்பெரிய நிலக்காட்சி ஓவியம் ஒன்றை அங்கே மாட்டியிருப்பதுபோல. ஆனால் மிக அரிதாகவே மழையும் முகிலும் விலகி அந்தக் காட்சி தெரிந்தது.
எனக்குப்பிடித்த சுகபோகங்களில் ஒன்று குளியல்நீர்த்தொட்டியில் வெந்நீரில் கிடப்பது. [சுந்தர ராமசாமிக்கும் பிடித்தது அது] எனக்கு இப்போதுதான் அதில் ஆர்வம். மழை வெளியே கொட்டுகையில் வெந்நீரில் மூழ்கி அதைப்பார்த்துக்கொண்டிருப்பது மெய்யாகவே ஒரு தியானம்
அதுவும் என்ன மழை! மழைநீர் கூரையிலிருந்து சரடுகளாகக் கொட்டுவதைப் பார்த்திருப்போம். அருவிபோல வளைந்த கண்ணாடிப்பாளமாக கொட்டுவதை இங்கேதான் பார்க்கிறேன். முழுநாளும், ஒருமணிநேர இடைவெளி கூட இல்லாமல் பெய்தபடியே இருக்கிறது. பெயல்கால் மறைத்தலில் விசும்புகாணலரே என்றார் கபிலர். இது காலற்ற மழை. ஒற்றை படலம். செங்குத்தாக நின்றிருக்கும் கடல்.
மழையோசையில் அலை உண்டு. காற்று உருவாக்கும் நாதம். இங்கே மழை என்பது ஒரே அறுபடாத ஓசை மட்டுமே. வலுப்பதே இல்லை. வலுத்த உச்சியில் அப்படியே நின்றிருக்கிறது. மேல் ஷஜமத்தில் உறைந்துவிட்ட பாடகர் போல விடுதிக்குள் பெய்த மழை சரிவுகளில் பெரிய அருவிகளாகக் கொட்டி ஒழுகிச்செல்கிறது
காலை எழுந்ததும் எழுத்து. பின்னர் மழையாடை அணிந்தபடி நீண்ட நடை. ஊறி திரும்பிவந்து வெந்நீர்க் குளியல். தூக்கம். மீண்டும் எழுத்து. ஒருசொல்லும் பேசவில்லை. ஒருவரிடமும் விழிமுட்டவில்லை. என்னுள் நானே முழுமையாக ஆழ்ந்திருந்தேன். எனக்கு சுற்றும் மழையின் வெள்ளித்திரை எப்போதுமிருந்தது.
எப்போதாவது மழைத்திரை விலகுமென்றால் பச்சை பச்சைதான். வாகமண் பசும்புல் குன்றுகள் போல மொத்த ஊரும். சுவர்கள் கூரைகள் படிகள் எல்லாமே பச்சை. ஈரமில்லாத இடமே இல்லை. ஈரமெல்லாம் பச்சையாக ஆகிவிட்டிருந்தது. ஆனால் ஒன்று பார்த்தேன். மேகலாயாவின் தொல்வழக்கமான இல்லங்கள் மழைக்கு மிக ஏற்றவை. மூங்கில்கால்களின் மேல் நிற்பவை. மிகச்செங்குத்தான கூம்புக்கூரை கொண்டவை. கூரை தழைந்திறங்கி தரையளவுக்கே வந்திருக்கும். ஆகவே சாரலே அடிக்காது. தரையும் மூங்கில்தான். இல்லத்துக்குள் நுழைவதற்குள் ஒரு சின்ன திண்ணை. அதிலேயே நீர் வடிந்தபின் உள்ளே செல்வார்கள். ஆகவே ஈரமே இல்லை
[ஜீவா ரிசார்ட்]
ஆனால் இன்று மொக்கைத்தனமாக கான்கிரீட் வீடுகளைக் கட்டுகிறார்கள். மேகலாயவின் தேக்கநிலை காரணமாக அங்கே கொத்தனார்கள் இல்லை. ஆகவே வங்காளக் கொத்தனார்கள். அவர்கள் கட்டும் கல்கத்தாபாணி வீடுகள் மழையில் ஐந்தாண்டுகளில் கருமைகொண்டு சிமிண்ட் உதிர்ந்து கம்பி துருவேறி குப்பையில் இருந்து எடுத்து வைத்தவை போல நிற்கின்றன. மேகலாயா வளரத் தொடங்கிவிட்டது. தங்களுக்குரிய நவீனக் கட்டிடக்கலையை அவர்கள் உருவாக்கவேண்டும்
சிரபுஞ்சி வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. அசாமின் ஆட்சியாளர்களுக்கு கோடைத்தங்குமிடம். அவர்கல் இங்கே ஒரு ராணுவநிலையை வைத்திருந்தார்கள். அதற்கு முன் இது இங்குள்ள காஸி பழங்குடியினரின் கூடுகை இடம். இன்று மெல்லச் சுற்றுலா மையமாக மாறியிருக்கிறது. மழை இல்லாதபோது இதைச்சூழ்ந்திருக்கும் பெரிய பூங்கா, இரண்டு பெரிய குகைகள், வேர்களால் ஆன பாலம் ஆகியவற்றைப் பார்க்க வந்து கூடுகிறார்கள். மழைபார்க்க வருபவர்கள் பெரும்பாலும் வெள்ளையர்கள்தான்
நல்ல வேளையாக ஜீவா ரிசார்ட் வெளிப்பக்கம் மேகாலாயாவின் அழகிய கட்டிடம் போலவும் உள்ளே நடத்திரவிடுதிக்குரிய அமைப்புடனும் கட்டப்பட்டுள்ளது. மழையில் நனையாமல் மொத்தக் கட்டிடங்களுக்குள்ளும் சுற்றிவரும் அமைப்பு கொண்டது. நேரடியாக குற்றாலம் பெரிய அருவிக்கு அடியில் ஒரு கட்டிடத்தைக் கட்டிவைப்பதுபோன்றது இது.
மேகாலயா நெடுங்காலமாக தீவிரவாதத்திற்குப் பலியான நிலம். பழங்குடிகள் வெளியுலகை அஞ்சுபவர்கள். அன்னியர் பற்றிய அச்சத்தை அவர்களிடம் எளிதில் ஊட்டலாம். தங்கள் துயர்கலுக்கெல்லாம் அன்னியர்களே காரணம் என்ற நம்பிக்கையும் எளிதில் உணர்ச்சிவசப்படும் இயல்பும் அவர்களை தீவிரவாதம் நோக்கிச் செலுத்தியது
மேகாலயாவின் தீவிரவாதத்திற்கான மெய்யான காரணங்கள் நான்கு. ஒன்று சீனாவின் அண்மை. அங்கிருந்து பர்மா வழியாக வந்த நிதி. இரண்டு, மேகாலயாவின் நிலக்கரி. அந்நிலக்கரி மேல் தனியுரிமை கொள்ள நினைக்கும் உள்ளூர் கனிமக் கொள்ளையர். இவர்கள் நிலக்கரிச்சுரங்கங்கள் அமைவதை விரும்புவதில்லை. கள்ளத்தனமாக நிலக்கரி எடுப்பதை மிகப்பெரிய இயக்கமாகவே நிகழ்த்தினர். ‘எடுத்த நிலக்கரியை மட்டும்’ விற்பதற்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அனுமதி பெறுவார்கள். மேகாலயாவில் தனியார் நிலக்கரி தோண்ட முப்பதாண்டுகளாகத் தடை உள்ளது. ஒரு மாதம்கூட நிலக்கரி அங்கிருந்து வெளியே செல்லாமலும் இருந்ததில்லை. அவர்களின் நிதியும் ஆதரவும் மேகாலயாவின் தீவிரவாதத்தை நிலைநிறுத்தியது.
மூன்றாவது காரணம் இனக்குழுப்பூசல். மேகாலயா காஸி, காரோ, ஜெயின்டியா போல பல இனக்குழுக்களின் தொகை. அவர்கள் தனித்தனி பழங்குடி நிர்வாகங்களாக நிலத்தை கைவசம் வைத்திருந்தவர்கள். வெள்ளையர்தான் அவர்களுக்குமேல் ஒரு பொது அரசை உருவாக்கினர். வெள்ளையர் ஆட்சி அகன்று இந்தியாவின் ஜனநாயக ஆட்சி உருவானபோது மீண்டும் பழங்குடி அரசாட்சிக்குத் திரும்பும் முனைப்பு அவர்களிடம் உள்ளது. அது உண்மையில் ஒரு பழங்குடிக்கு இன்னொரு பழங்குடி மீதானஐயத்தாலும் வெறுப்பாலும் உருவாகும் மனநிலை. ஜனநாயக அமைப்புக்குள் தங்கள் உரிமைகளைப் பகிர்ந்துகொள்ளவும் ஒத்துப்போகவும் அவர்கள் தயாராக இல்லை.
அவர்களின் இந்த அச்சங்களை பயன்படுத்திக்கொண்டு அவர்களை கலகக்காரர்களாக ஆக்கியவை அன்னிய நிதிப்புலம் கொண்ட தன்னார்வக் குழுக்கள். அவர்களே நாலாவது காரண, அவர்கள் இந்தியா என்னும் அமைப்பு மீதான அவநம்பிக்கையை உருவாக்கினர். ஜனநாயகத்தை வெறுக்கச் செய்தனர். அந்த ஒவ்வொரு பழங்குடியும் ஒரு தனி தேசியம் என நம்பச்செய்தனர். மேகாலயா ஒரு சின்ன நிலம். ஆனால் அங்கே மூன்று தனி நாடுக் கோரிக்கைகள் உள்ளன. மூன்றுநாடுகளுமே ஒரே நிலத்தில் உள்ளன. ஒருவர் இன்னொருவரை கொன்றொழித்து முழுநிலத்திலும் தங்கள் அரசை உருவாக்க எண்ணுகிறார்கள். எப்போதெல்லாம் மைய ஆட்சி சற்றே வலுவிழக்கிறதோ அப்போதெல்லாம் பழங்குடிப்போர் ஆரம்பிக்கிறது. இதைத்தான் நம்மிடம் தன்னார்வக்குழு ஆசாமிகள் மேகாலயாவில் இந்தியாவின் ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த தேசிய போராட்டம் என சொல்லிக்கொண்டிருந்தார்கள்
இந்தப் பழங்குடி தீவிரவாத அமைப்புக்களில் எப்போதுமே ஐநூறுபேருக்குமேல் இருந்ததில்லை. ஆனால் பல குழுக்கள். நவீன ஆயுதங்கள் கொண்டவர்கள். இவர்களின் செயல்பாடுகள் மூன்று முகம் கொண்டவை. ஒன்று மேகாலயாவை துண்டிப்பது. சாலைகள் போடுவதை ஐம்பதாண்டுகள் மிக உக்கிரமாக எதிர்த்திருக்கிறார்கள். சாலைகள் மேலாலயாவை சுரண்டி அடிமைப்படுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் முயற்சிகள் என்று தன்னார்வக்குழுக்களும் பிரச்சாரம் செய்தன. லாரிகள், வணிகர்கள் வருவதைத் தடுப்பதும் சந்தைகள் உருவாகாமல் பார்த்துக்கொள்வதும் இவர்களின் வழி
இரண்டாவதாக மொத்த மக்களையும் மிரட்டி தங்களுக்குக் கப்பம் கட்டவைப்பது. எவரும் சற்றும் செல்வம் சேர்க்கக் கூடாது. கொன்று பிடுங்கிச் செல்வார்கள். ஆகவே மேகாலயாவின் வளம் மிக்க நிலம் பெரும்பாலும் இப்போதுகூட சும்மாதான் கிடக்கிறது. மூன்றாவதாக தொடர்ச்சியாக ஒருவருக்கொருவர் காழ்ப்புகளை நிலை நிறுத்துவது. அவநம்பிக்கைகளை உருவாக்கி நிலைநிறுத்துவதி என்ஜிஓ தன்னார்வக்குழுக்கள் சென்றகாலங்களில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.
விளைவாக மேகாலயாவின் பொருளியல் முழுமையாக அழிந்தது. நம்மூர் ஓட்டல்களில் தட்டுதுடைக்கும் அழகிய மேகாலயா பையன்கள் மண்ணில் சொர்க்கம்போல வளம் மிக்க நிலத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். அங்கே விவசாயம், விற்பனை எதுவுமே சாத்தியமில்லாமல் இருந்தது. பழங்குடிப்பகுதிகளில் பட்டினி. காரணம் பொறுக்கியுண்ணும் வாழ்க்கையே பல இடங்களில் நீடித்தது. நகரங்களில் சற்றேனும் படித்தவர்களுக்கு எந்த வேலையும் இல்லை
மேகாலயாவில் சென்ற ஐந்தாண்டுகளில் உருவாக்கப்பட்ட பெரியசாலைகள் அதன் முகத்தை முழுமையாகவே மாற்றியமைத்தன.இப்போதைய முதல்வரின் தனிப்பட்ட சாதனை அந்தச் சாலைகள். குறிப்பிடவேண்டிய ஒன்றுண்டு. அவை பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்டவை. அந்தத் தொழில்நுட்பம் ,மதுரை தியாகராசர் கல்லூரிப்lபேராசிரியர் ஆர். வாசுதேவன் அவர்களால் உருவாக்கப்பட்டது. அதை இங்கே அரசு பொருட்படுத்தவில்லை. ஆனால் மேகாலயாவில் போடப்பட்ட சாலைகள் அங்குள அசுரமழைக்கே தாக்குப்பிடித்து ஐந்தாண்டுகளைக் கடந்துவிட்டன புதியனவாக நீடிக்கின்றன..
சாலைகள் ஊர்களை இணைக்கின்றன. அது வணிகத்தை மட்டுமல்ல உளவியல் தொடர்பையும் உருவாக்குகிறது. ஓர் எல்லைக்கிராமத்துக்குச் சென்றுசேர ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஒரு முழுநாள் ஆகும். இப்போது ஐந்துமணிநேரம். அந்தக்கிராமம் எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் கைவைடப்பட்டு கிடக்கும்.இன்று அங்கே வணிகம் செழிக்கிறது. சுற்றுலா வளர்கிறது. உலகுடன் அவர்களுக்குத் தொடர்பு உருவாகிறது. அவர்கள் ஒரே நாடென, சமூகமெனத் திரள்கிறார்கள். நாகரீகம் என்பதும் சாலை என்பதும் வேறுவேறல்ல. ஏன் சாலைகளுக்கு எதிராக மேகாலயத் தீவிரவாதிகள் ஐம்பதாண்டுகள் போராடினார்கள் என்பதை அம்மக்கள் இன்று புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
சாலைகள் வழியாகச் செல்லும்போது மேகலாயா மாறியிருப்பதைக் காணமுடிகிறது. சாலையோரம் முழுக்க நூற்றுக்கணக்கான சந்தைமுக்குகள். பல்லாயிரக்கணக்கான கடைகள். சென்ற ஐந்தாண்டுகளில் உருவானவை. பலகடைகள் இரண்டு ஆண்டுகளுக்குள் கான்கிரீட்டில் கட்டப்பட்டுள்ளன. இவைவிவசாயப்பொருட்களை பணமாக ஆக்குகின்றன. பல்லாயிரம்பேருக்கு நேரடியாக வேலை அளிக்கின்றன. விளைபொருட்களை வாங்க லாரிகள் வருகின்றன.நுகர்வின் மறுமுனை இணைக்கப்படும்போதே உற்பத்திக்குப் பொருளியல் மதிப்பு உருவாகிறது. சாலை எங்கும் லாரிகளைக் கண்டோம். மேகலாயாவின் பொருளியல் எழத் தொடங்கிவிட்டது. இன்னும் ஐந்தாண்டு இதேபோல சென்றால் அது கேரளம் போல வறுமையற்ற நிலமாக ஆகிவிடும்
மேகாலயாவின் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான முதல்பெருநடவடிக்கை நரசிம்மராவ் எடுத்தது. அரசியலறம் எதையும் பொருட்படுத்தாமல் பர்மாவின் ராணுவ ஆட்சியாளர்களை 1992- அவர் அங்கீகரித்து ஒப்பந்தம்போட்டுக்கொண்டார். அவர்கள் பதிலுக்கு தங்கள் நிலத்தில் இருந்த தீவிரவாத முகாம்களை குண்டுவீசி அழித்தனர். பலநூறுபேரை சிறையிட்டனர். ஒருங்கிணைந்த தீவிரவாதம் அதன்பின் இல்லாமலாகியது. சிதறிய குழுக்களின் வன்முறை தொடர்ந்தது. அது இப்போது கிட்டத்தட்ட அழிக்கப்பட்டுவிட்டது
மீண்டும் தொடங்குமா? “சீனா விடாது. எதையாவது ஆரம்பிப்பார்கள். ஆனால் மக்கள் வணிகத்தின் நுகர்வின் வசதிகளின் சுவையை அறிந்துவிட்டனர். வளர்ச்சி என்றால் என்ன பொருள் என்று புரிந்துகொண்டுவிட்டனர்” என்றார் விடுதியில் சந்தித்த மேகாலய நண்பர். இந்தியா முழுக்க வேலைக்கு வந்த மேகாலயாவின் இளைஞர்கள் மேகாலயாவுக்கு உலகம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்று சென்று சொன்னவர்கள். அவர்களே மாற்றத்தின் விதைகள்.
மேகாலாயாவின் நல்லூழ் என்பது பத்தாண்டுகள் அதை ஆண்ட முகுல் சர்மாவின் ஆட்சி. உண்மையான நல்லெண்ணமும் அதேசமயம் அரசியல் காய்நகர்த்தலில் திறமையும் கொண்டவர். மேலைநாட்டுக் கல்விபெற்றவர் என்பதனால் உலகம் அறிந்தவர். இது ஒரு ஆர்வத்துக்குரிய விஷயம். இந்தியாவின் முதல்வர்களில் மேலைநாடுகளில் கல்விகற்றவர்கள் உண்மையான முற்போக்கு நோக்கும் செயல்திறனும் கொண்டவர்கள். மிகச்சிறந்த உதாரணம் நவீன் பட்நாயக். ஒரிசாவில் ஒருவர் வறுமையை ஒழிக்கமுடியும் என எவரேனும் சொல்லியிருந்தால் எண்பதுகள் நான் தலையிலறைந்து சிரித்திருப்பேன். மேகாலயாவின் தொடரும் நல்லூழ் இன்றைய முதல்வரும் உண்மையிலேயே வளர்ச்சியில் ஆர்வம்கொண்டவர் என்பது.
முகுல் சங்மா
பகல் முழுக்க மழையில் அலைவதும் எழுதுவதுமாக பொழுது போயிற்று. மழை மழை மழை என மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. ஒரு மழைத்தியானம் என்று இந்தத் தங்கலைச் சொல்லலாம். நடந்துசென்று ஒரு சின்ன டீக்கடையில் டீ குடித்துவிட்டு திரும்பி வருவேன். மக்கள் மனநிலை மாறிவிட்டது. முன்பெல்லாம் இந்தியாவிலிருந்து வருபவர்கள் அன்னியர்கள். இன்று காசுடன் வரும் விருந்தாளிகள்.அந்தியில் கையில் மீன்பிடிக்கூடையுடன் அன்றைய அந்திச்சாராயத்துக்கு பொரித்தமீன் சாப்பிட பிடித்துவரும்பொருட்டுச் சென்ற ஒருவரைச் சந்தித்தேன். சிரித்தபடி வணக்கம் சொன்னார். அவருடைய விந்தையான மூங்கில்கூடையை வாங்கிப்பார்த்தேன். அரிய கலைப்படைப்பின் ஒழுங்கும் அழகும் கொண்டிருந்தது அது
ஏழுசகோதரிகள் என்னும் அருவியை வெறும் பாறையாகப் பார்த்தவன். நான் சென்றபோது எழுநூறு சகோதரிகள். மொத்தமலையும் அருவிகளாகக் கொட்டிக்கொண்டிருந்தது. உலகில் எங்கும் நிகரான ஒரு காட்சியை நான் கண்டதில்லை. அருவிகளால் ஆன ஒரு செங்குத்துக்காடு. ஒருமணிநேரம்தான். முகில்வந்து மூடிவிட்டது. எதுவுமே தெரியவில்லை. சிரபுஞ்சியின் பெரும்பகுதி வெண்முகிலால் முழுமையாகமே மூடியிருக்கும். மேக ஆலயம் இதுதான்
கண்ணிலிருந்து மறைந்தபின் கண்களுக்குள் மீண்டும் எழுநூறு அருவிகள் தோன்றுவது மெய்ப்பு கொள்ளச்செய்தது. எண்ணி எண்ணி ஏங்கியபடி அங்கேயே நின்றிருந்தேன். அன்று முழுக்க கண்களுக்குள் இருந்தது அந்த அருவித்தொகை.
நோக்காய்லிக்காய் அருவியை பார்க்க சென்றேன். அருவியின் உறுமல் மட்டும் கேட்டது. மழைகொட்டிக்கொண்டிருந்தது. முகில் திரை. குகைச்சிங்கத்தின் ஓசை போல அருவி ஒலித்தது. படிகளில் இறங்கிச் சென்றேன். மழைக்காட்டின் நடுவே பாசிபடிந்த படிகள். தன்னந்தனியாக இறங்கிச் சென்று அருவிக்கு மிக அருகே சென்றேன். பேரோசை. ஆனால் அருவியைப் பார்க்கமுடியவில்லை. கற்பனையில் நான் கண்ட அருவி மேலும் பல மடங்கு பெரியது
சிரபுஞ்சியின் உண்மையான பெயர் சொஹ்ரா. அதை வெள்ளையர் செரா என்றனர். அங்கே வந்த மையநில வடஇந்தியர் புஞ்ச் சேர்த்து செரபுஞ்ச் ஆக்கினர். இப்போது மீண்டும் செஹ்ரா ஆக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எங்கும் சொஹ்ராவுக்கு வரவேற்பு என்ற பெயர்ப்பலகைகள் தெரிந்தன.
ராம்குமார் பணியாற்றிய ஊருக்கு வந்து அங்கிருந்த ஓய்வுவிடுதியில் மூன்றுநாட்கள் இருந்தேன். ராம் குமார் மேகாலாயா மேல் பற்றும் அதன் மீட்பில் பெரும் ஆர்வமும் கொண்டவர். மேகாலயாவில் சூரியமின் விளக்குகள் அமைத்தமைக்காக விருது பெற்றவர். எப்போதும் அவருடைய முதன்மை ஆர்வம் அந்த மாநிலமாகவே இருக்கிறது. இந்தியாவின் சென்ற இருபதாண்டுக்கால வளர்ச்சியில் புதிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவர்களின் நெர்மையும் மிக முக்கியமான பங்களிப்பாற்றுகின்றன. என்றேனும் அவை வரலாற்றில் விரிவாக எழுதப்படும்
இறுதியாக அவருடன் மேகாலயாவின் எல்லையில் இருந்த சாந்திக்ரே [chandigre ] என்ற ஊரில் அமைந்த விடுதிக்குச் சென்றேன். மேகாலயாவின் மரபுசார்ந்த கட்டிடக்கலையுடன் அமைக்கப்பட்ட தங்கும் விடுதி. அரச நிதியுதவியுடன் காரோ பழங்குடிக்குழுமம் உருவாக்கி நிர்வகிப்பது. உருவாக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் ஓரிருவர் கூட அங்கே வரவில்லை. இன்று மூன்றுமாதம் முன்னரே பதிவுசெய்யாவிட்டால் இடம் கிடைக்காது
மிக அழகிய சூழல். மூங்கிலின் நூறாயிரம் வடிவங்கள். தூன் தரை சுவர் மேஜை நாற்காலி எல்லாமே மூங்கில். விடுதிநடத்தியவர் எனக்கு ஒரு இசைக்கருவியை பரிசளித்தார். அதுவும் மூங்கிலால் ஆனது. 12 ஆம் தேதி கிளம்பி சென்னை வந்து அங்கிருந்து நாகர்கோயில் வந்துசேர்ந்தேன். வீட்டுக்கு வந்து அந்த வாத்தியத்தை வாசிக்க முயன்றேன். இனிய ஓசை எழுந்தது.
பயணம்செல்பவர்கள் ஏன் இசைக்கருவிகளை வாங்கிச் செல்கிறார்கள் என தெரிந்தது. ஓர் இசைக்கருவி போல அந்த மண்ணின் ஓசையை கொண்டுவருவது பிறிதில்லை. அவர்கள் தங்கள் செவிபழகிய ஓசையைத்தான் இசையென ஆக்குகிறார்கள். அதற்கான கருவிகளை உருவாக்குகிறார்கள். இந்த மூங்கில்கருவியைத் தட்டினால் மேகாலாய்யாவின் காரோக்களின் மொழியே செவியில் விழுகிறது
[ஏழு சகோதரிகள். வெளிச்சமே இல்லாமல் மழைக்குள் என் ரெட்மி செல்பேசியில் எடுத்த காணொளி. அய்யே என்ற எதிர்வினைகளை குடும்பச்சூழலில் பெற்றாலும் எனக்குப் பிடித்திருக்கிறது]