காப்பீடு -கடிதங்கள்

Medical-Insurance

காப்பீட்டில் மோசடிகள்

ஜெ

எந்த விதமான நுகர்வோர் நலன் என்றாலும் அது இந்தியாவுக்கு வரும்போது அதற்கென்று ஒரு நரித்தனம் வந்து விடுகிறது. காப்பீடு என்பது இருப்பது ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை பேரை தொட்டதில்லை. மேலும் மருத்துவ காப்பீடு என்பது படித்த அறிவார்ந்த மக்களின் விசேஷ சலுகையாக இருந்தது.  மேலை நாடுகளில் மருந்துகளின் பெயரை ஜெனிரிக் பெயரை வைத்துதான் எழுதித்தரவேண்டும் என்பது  போல இங்கே நினைத்து பார்க்க கூட முடியாது. மக்கள் பிராண்டின் பெயரை சொல்லி வளர்க்கப்பட்டு விட்டார்கள். சாதாரண மக்கள் கூட மருந்து பிராண்டின் பெயர்களை சர்வசாதாரணமாக புழங்குவார்கள்.

காப்பீட்டு நிறுவனத்தின் ஆவணங்களை படித்தபின் நாம் கையொப்பம் இடுவது என்பதைவிட ஒரு சிட்டிகை மணலை எடுத்து எண்ணிவிடுதல் எளிது. மேலும் நாம்  ஒரு குட்டி வக்கீலாக நாம் ஆகிவிடவேண்டும்.

மருத்துவ மனைகள் (நிறுவனங்கள்) காப்பீட்டு நிறுவனங்கள் இடையேயான உடன்பாட்டுக்கு, அச்சமும் கவலையும் கொண்டு மருத்துவம் செய்து கொள்ள வருபவர்கள் குறிப்பாக நோயாளிகளுடன் வருபவர்கள், எது சொன்னாலும் சரி எனும் மன நிலையுடன்தான் இருப்பார்கள். எவ்வளவு படித்தவர்கள் என்றாலும் அந்த நிமிடத்தில் அனைவருமே பாமரர்கள்தான்.

மேலும் பணி புரிபவர்களின் சம்பளம் என்பது இவ்வகை காப்பீடு போன்றவற்றை உள்ளடக்கியது. இதை தவிர்க்க முடியாது. மேலும் கம்பெனி பணம் கட்டற இன்ஷூரன்ஸதானே/   கூட குறைய ஆனாலும் இன்சூரன்ஸ் கம்பெனி பார்த்துக்கொள்ளும் – எனும் விட்டேத்தி மனநிலை பெரும்பாலோருக்கு உண்டு.

தொகையை அதிகரித்தல், மெதுவாக டிஸ்சார்ஜ் செய்தல் போன்ற கௌரவ தில்லுமுல்லுகள் போக வேறொரு சிக்கலும் நடக்கிறது. (டிஸ்சார்ஜ் செய்யவேண்டும் என்று சொல்லுங்கள். கேஷா இன்ஷூரன்ஸா என்று கேட்பார்கள்)

சமீபமாக எனக்கு தெரிந்த ஒருவர் முப்பது ஆண்டுகளாக தனக்கு குடும்ப மருத்துவராக இருப்பவருடைய மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு சேர்ந்தார். அவரது மகள் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணி புரிவதால் ‘ பணம் கேட்காமல்  அனுமதி’ என்ற திட்டத்தின் சலுகையுடன் சேர்ந்தார். அதாவது சேரும்போது அடையாள அட்டையை காட்டினால் போதும்  – எந்த கேள்வியும் இல்லாமல் அட்மிஷன் செய்து கொள்ளவேண்டும்.  தேவதையின் புன்னகையோடு அட்மிட் செய்து கொள்ள சரி சொல்லியது மருத்துவமனை. “நாளைக்கு காலை வந்துடுங்க “.

ஆனால் மறுநாள் நோயாளி வீட்டிலிருந்தே இன்னும் கிளம்பவில்லை. ஆச்சரியகரமாக ஒரு தொலைபேசி அழைப்பு. “உடனடியாக முன்பணம் கட்டிவிடுங்கள்” என்றனர். பணம் இல்லாமல் சேர்த்துக்கொள்ளும் திட்டத்தில் பணம் எதற்கு என்று இவர்கள் கேட்பதற்குள் முன்பு அவர்களே இதமாக சொன்னார்கள். “கட்டிவிட்டால் உடனே சிறப்பு படுக்கை வசதி கூடிய அறையை கன்பார்ம் செய்து விடுவோம். மேலும் இதற்காக வரும் சிறப்பு மருத்துவரை இன்னும் ஒரு மணி நேரத்துக்குள் புக் செய்துவிடவேண்டும். அவர் வேறு அறுவை சிகிச்சை என்று போய்விட்டால் கால தாமதமாகும்” இந்த நிலையில்  யாராக இருந்தாலும் சரி என்றுதானே சொல்வார்கள்.

சேர்ந்தவுடன் அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் முடிந்து இன்னும் சில மணி நேரத்தில் ஆரம்பம் எனும்போது ஒரு நாற்பாதாயிரம் கட்டிவிடுங்கள் என்றனர். மறுபடி எதற்கு பணம்  என்று கேட்டால், இதற்கு பதில் சொல்வதற்காக உள்ள தனியாக ஒரு செக்ஷனுக்கு நமது அழைப்பு திருப்பி விடப்படும். அவர்கள் “பதட்டப் படாதீர்கள். கட்டிவிடுங்கள். நாங்கள் அனைத்து ரசீதுகளை தருவோம். நீங்கள் அதை ரீஇம்பர்ஸ் செய்து கொண்டுவிடலாம். ஏனென்றால் நிர்வாக ரீதியாக சிலவகை செலவுகளுக்கு பணம் கட்டித்தான் செய்யவேண்டும்”.

உடனே அந்த பெண் சரி காசோலை தருகிறேன் என்கிறார்.
மறுத்தது நிர்வாகம்.
சரி  வங்கி எண் என்ன? ஆன்லைன் டிரான்ஸ்பர் செய்கிறேன்.
அதற்கும் மறுப்பு.
சரி க்ரெடிட் கார்டு.
மறுப்பு.
டெபிட் கார்டு.
மறுப்பு.

‘சுளையாக’ பணம் மட்டுமே கட்டவேண்டும். திடீரென அவ்வளவு ஆயிரங்களுக்கு எங்கே போவது. அந்த பெண் தனது அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட காப்பீட்டு அதிகாரியிடம் புகார் செய்ய, அவர் “நீங்கள் ஒரு ரூபாய் கூட கட்டவேண்டிய அவசியமே இல்லை.  உடனே இதை காப்பீட்டு  புகார் பிரிவுக்கு சொல்லி முறையிடுங்கள் என்கிறார்”.

இவர் மருத்துவ நிர்வாகத்திடம் சென்று சில கேள்விகள் கேட்கிறார்.

ஆனால் இப்போது நோயாளி அறுவை சிகிச்சை பிரிவு அறைக்கு செல்லவேண்டிய நேரம். சிறப்பு  மருத்துவர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். அந்த நிலையில் அட்மிட் செய்த மருத்துவர் வந்து சற்று இறுக்கமான முகத்துடன் “என்ன பிரச்சனை. மேனேஜரிடம் இன்சூரன்ஸ் விதிகள் பற்றியெல்லாம் விசாரித்தீர்களாமே. எல்லாம் சட்டப்படிதான் நடக்கிறது. நல்லவிதமாக சிகிசிச்சை முடியட்டும். காப்பீடு விஷயம் எல்லாம் ஒரு சிக்கலே இல்லை” என்று கண்டிப்பும் பரிவும் கலந்த குரலில் அந்நியன் விக்ரம் போல புன்னகைத்தார். தேவதை சிரிப்பின் இதழ்க்கடையில் கோரைப்பற்கள் தெரிந்தன.

பேசாமல் கேட்டதை கொடுத்து நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினால் போதும் என்று தோன்றிவிட்டது.

ஏறக்குறைய மொத்த பணமும் in cash செலுத்தி அறுவை முடிந்து வீடு திரும்பினார். சம்மந்தப்பட்ட எல்லோருமே படித்தவர்கள்தான். என்ன பயன்?  எல்லோருக்கும் இப்படி சிக்கல் ஆகாது என்பதே இந்த திட்டங்களின் கண்ணி. புலியின் பாதம் போல மென்மையான காப்பீட்டு திட்ட விதி முறைகள் தனக்கான இரை வரும்போது நகங்களை மெல்ல வெளியே நீட்டும்.

புகை பிடிப்பது ஆபத்து என்று பாக்கெட் மீதே அச்சிட்டுவிட்டு அந்த அச்சுக்கூலிக்கும் சேர்த்து பணம் கொடுத்து சிகரெட் வாங்கும் இந்த  சமூகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

ரமேஷ் கல்யாண்

அன்புள்ள ஜெ

காப்பீடு பற்றி நீங்கள் எழுதியதை வாசித்தேன். நான் அறிந்தவரை, இணையத்தில் வாசித்தவரை, ஐந்துலட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு போடுவது தேவையானது. உதவியானது. நாலைந்து லட்சம் வரை பெரிய பிரச்சினை ஏதுமில்லாமல் அளிக்கிறார்கள். அதற்குமேல் பெருந்தொகைக்குப் போடுவதில்தான் சிக்கல்கள். காப்பீட்டு ஊழியர்கள் அதை ஒரு திருட்டு அல்லது மோசடி என எடுத்துக்கொள்கிறார்கள். நீங்கள் எழுதியது சரிதான்

நுகர்வோர் அமைப்புக்கள் அல்லது தன்னார்வ அமைப்புக்கள் மாவட்ட நீதிமன்றங்களில் எத்தனை காப்பீட்டு வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன, அவற்றில் அதிகமான வழக்குகளைப் போடும் நிறுவனம் எது என்பதை மிக எளிதாகக் கணக்கில் எடுத்து வெளியிடலாம். அது நுகர்வோருக்கு மிக உதவியானது. ஆனால் அதை நம் இதழ்கள் செய்யா. ஏனென்றால் காப்பீட்டு நிறுவன்ங்கள் அளிக்கும் விளம்பர வருமானம் அவர்களைக் கட்டுப்படுத்துகிறது

இவையனைத்தும் நம் நீதிமன்றங்களில் நீதி பெரும்பாலும் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் மிகத்தாமதித்தே கிடைக்கும் என்ற யதார்த்தத்தில் இருந்து ஆரம்பமாகின்றன

ஜெயபாலன்

அன்புள்ள ஜெமோ,

வணக்கம். மருத்துவ காப்பீட்டை பொருத்தவரை, குறிப்பிட்ட தொகைக்கு அடிப்படை காப்பீடு வைத்துகொண்டு, அதிகப்படியான தொகைக்கு Topup policy வைத்து கொள்வது சிறந்த முடிவாக இருக்கும் என்று கருதுகிறேன். நல்ல ஆலோசகரிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கவும். நன்றி.
அன்புடன்,
நடராஜன்
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 35
அடுத்த கட்டுரைமைக்பிடுங்கிகள், அலப்பரைகள்