காடும் மழையும்

IMG_20180623_160142

காடு அமேசானில் வாங்க

காடு வாங்க

அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு,

காடு  நாவல்  வாசிப்பு முடிந்து  இரண்டு. வாரம் கழித்து  எழுதுகிறேன்.  காட்டை கடந்த  முதல் சில நாட்கள் கதாப்பாத்திரங்களின்  பிரிவில்  வாடினேன்.  அந்த பிரிவின் தாக்கம் என் முகபாவனைகளில்  தெரிந்து  நண்பர்கள் விசாரிக்கும்  அளவிற்கு  இருந்தது.

நாளடைவில்  தாக்கம் குறைந்தாலும்  முழுமையாக  அகலவில்லை.  வாசிப்பு  அனுபவத்தை  வெளிப்படுத்தஎண்ணுகையில்,  தான்  கொண்ட  முதல் காதலை  வெளிப்படுத்தத்   தயங்கும்  மன  உளைச்சல்  உருவாகிறது.  குறிப்பாக நீலி  இறுதிக்காட்சியில்  அழுகையுடன்  கதவைத் தட்டும்  (வரிகளில்) தருணத்தின்  அதிர்வு  என்னுள்  எழுந்தது.

நாவலை  வாசிக்கும் பொழுது  ஆரம்ப அத்தியாயங்களில்  காம  வாடை  அடித்தாலும், நகர நகர அது  அவர்களின் வாழ்வியல்  முறையின்  பதிவாக மாறும்  பொழுது, காமம்  தளர்ந்து அன்புச் சூழல்  உருவாவதை  உணர முடிந்தது.  அந்தஅன்பின் சூழலில்  அகப்பட்டு  வெளிவர  முடியாமல்  வாடிய தருணத்தில்,  நீலி அம்மை  கிரிதரனுக்கு  காட்டிய  ஒத்தக்கல் நினைவிற்கு  வந்தது.

கிரிதரன்  அழுது ஆறுதல் அடைந்த பாறைக்கு  சென்று  மாறுதல் அடைய   திட்டமிட்டேன் அந்த சூழலில்  நண்பர்களுடன் செங்கோட்டை சென்று  விசாரித்து  தேன்மலை அருகில்  உள்ள  ஒத்தக்கல்  என்னும் ஊரை  அனுகியபோது  பாண்டவர் பாறை   என்னும்  பெரிய  ஒத்தப்பாறை  இருப்பதாக அறிந்து  மலையேறி  ஒத்தப்பாறை  மீது  இளைப்பாறினேன்.  நீலியும்  கிரியும்  அந்த பாறையில்  தான்  அமர்ந்தார்களா   என்று என்னால்  உறுதியாகச்  சொல்ல  முடியாது.   ஆனால்   பாண்டவர்  பாறையை  அடைந்தபோது  ஒரு  மன  அமைதி  நிலவியது.   அந்த அமைதியை   இலக்கியத்தின்  வெற்றியாக  நான்  பார்க்கிறேன்.

அன்புடன்,

ஞா. குண. பாரி

அன்புள்ள ஜெ

காடு வாசித்துவிட்டு மழைக்காலத்தில் நீலியின் காட்டைப்பார்க்கவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். எல்லாம் சரியாகிவந்தபோது கூடவே வருவதாகச் சொன்ன நண்பர்கள் அனைவரும் நின்றுவிட்டார்கள். மழைபெய்கிறதே என்பதுதான் காரணம். பெரும்பாலானவர்கள் இந்த ஆண்டு குமரியில் பயங்கரமான மழை என்று சொன்னார்கள். பைக்கில் நான் மட்டும் கிளம்பி நாகர்கோயில் வந்தேன். அங்கிருந்து தடிக்காரன்கோணம் வழியாக நெடுமங்காடு வரைச் சென்றேன்.

காடு நாவலில் வருவதுபோல மலைச்சரிவு முழுக்க ரப்பர்த்தோட்டங்கள். மழையில் அவை இருண்டு காடுபோலத்தான் தெரிந்தன. ஆள்நடமாட்டமே இல்லை. நெடுமங்காடு சென்று அங்கே ஒரு ஓட்டலில் தங்கினேன். திரும்ப வரும் வழியில் காடு எங்கே இருக்கும் என்று கேட்டேன். காளிகேசம் போகவேண்டும் என்றார்கள். ஆகவே காளிகேசம் போனேன். அங்கிருந்து காளிமலை. அங்கே மேலே ஒரு காளிகோயில் இருக்கிறது. அங்கே செல்ல வனத்துறை அனுமதி வேண்டும்.

பக்கவாட்டில் திரும்பி காட்டுக்குள் சென்றேன். இன்றைக்கும் காடு நாவலில் வருவதைப்போல இருண்டு மழைகொட்டிக்கொண்டே இருக்கும் காடு கொஞ்சம் எஞ்சியிருக்கிறது. நான் என்னை கிரிதரனாக நினைத்துக்கொண்டே சென்றேன். இருபக்கமும் ஓடைகள் நிறைந்து வழிந்தன. எங்கும் ஆளே இல்லை. பலாப்பழங்கள் பழுத்து கீழே விழுந்துகிடந்தன.

வரும் வழியில் நடுச்சாலையில் யானையைப்பார்த்தேன். கொம்பன். சாலையில் மழையில் நின்றுகொண்டிருந்தது. கூடாரத்தின்மேல் மழைபெய்வதுபோல முதுகில் மழைத்துளிகள் தெறித்தன. பலாப்பழம் தின்றுகொண்டிருந்த்து. வண்டியை நிறுத்திவிட்டு காத்திருந்தேன். ஒருவர் எதிர்ப்பக்கமிருந்து பைக்கில் வந்தார். அவரைக்கண்டதும் அது மலைமேல் போய்விட்டது. நானும் வந்துவிட்டேன்

நம்பவே முடியவில்லை. கனவு மாதிரி இருக்கிறது. வறனுறல் அறியாச்சோலை என்ற வரியைச் சொல்லிக்கொண்டே இருந்தேன். காடு நாவல் அளித்த போதையிலிருந்து வெளியே வராமலிருக்க ஒரே வழி அந்தக்காட்டுக்கே அடிக்கடிச் என்றுகொண்டிருப்பதுதான்

ஸ்ரீதர்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 58
அடுத்த கட்டுரைபெண்களின் ஜன்னல்