சூஃபிதர்

newpic19

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

சமீபத்தில் என்‌ சிந்தி நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. புனேகாரர். சென்னைக்கு மிக அரிதாக வருவார். வரும் போதெல்லாம் தவறாமல் மயிலாபூரிலுள்ள சூஃபிதர்(sufidar) என்னும் இடத்திற்கு போவார். சென்னையில் இருந்தாலும் இது நாள் வரை நான் அறியாமல் இருந்த இடமிது. சிந்திகாரர்களால் நடத்தப்படுவது. கோயில் என்றோ அல்லது மிகப் பெரிய பிரார்த்தனை கூடம் என்றோ சொல்லலாம். சிந்திக்கள் இந்துக்களாகவோ முஸ்ஸிம்களாகவோ இருந்த போதிலும் கூட சூஃபியிசம் அவர்கள் வாழ்வில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. நண்பரின் பாட்டனார் பாட்டனாரின் தந்தை உள்ளிட்டோர் தங்கள் சொத்து உடைமைகள் அனைத்தையும் விட்டு அகதிகளாக பிரிவினையின் போது சிந்த் மாகாணத்திலிருந்து பம்பாய் வந்து சேர்ந்தவர்கள்… எல்லா குடும்பங்களிலும் கடும் வன்முறை வெறியாட்டம் நிறைந்த பிரிவினை துயரம் குறித்து ஒரு கதை இருக்கிறது. இன்றைய சிந்திக்கள் தங்கள் தாய்மொழியை காத்துக் கொள்ள மிகவும் போராட வேண்டியிருக்கிறது. அது தொடர்பான பாடல்கள் கவிதைகள் சிந்தி மக்களிடம் மிகப் பிரபலம். சூஃபிதர் ஷாயின்ஷா(shahenshah) பாபாவின் நினைவாக அமைக்கப்பட்டது. காந்தியின் மீது மிகுந்த பற்று கொண்டவர். பிரிவினையின் கோரத்தை தாள மாட்டாமல் 1948ல் உணவை துறந்து உயிர் நீத்தார். மத வேற்றுமைகள் கடந்த கால காழ்ப்புகளை கடந்து சிந்திக்களாக ஒன்றினைவதில் அவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். அவர்களை இணைக்கும் சரடாக சூஃபியிசம் இருக்கிறது. யோசித்துப் பார்த்தால் பிரிவினையின் போது ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள் தான் மத ரீதியாக பிரிந்து தங்களுக்குள் அடித்துக் கொண்டார்கள். சிந்திக்கள் பஞ்சாபிகள் மற்றும் வங்காளிகள். தெற்காசியாவில் ரத்தம் தோய்ந்த வரலாறு இவர்களுடையது.

சூஃபி கருத்துக்களை அடிப்படையாக கொண்ட நவீன சிந்திப் பாடல்

https://youtu.be/jcjaJEFQ64g

சிந்தி மொழியின் மேன்மையை குறிக்கும் பாடல்… பிரிவினையின் போது இடம் பெயர்ந்த நம் முன்னோர்கள் தங்களுடன் எடுத்து வந்தது நம் மொழியை மட்டும் தான் என்ற வரிகள் மெய் சிலிர்க்க வைத்தது…

https://youtu.be/vceC-5IlBLM

சென்னையில் உள்ள சூஃபிதர் பற்றிய இணையதளம்

http://www.sufidar.org

சிவக்குமார்

சென்னை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 51
அடுத்த கட்டுரைராஜ்கௌதமன், திருப்பூர் சந்திப்பு, சிலுவைராஜ் சரித்திரம்…