வாசிப்பின் நிலை- கடிதம்

read

அன்புள்ள சார்,

 

தமிழில் எழுதுவது சற்று கடினமாகவேதான் உள்ளது அதுவும் அலைபேசியில் முயற்சிப்பது இன்னும் கடினம் தான். ஆனாலும் விடுவதாக இல்லை. முதல் கடிதம் ஆற்றாமையில் எழுதியது பல வருடங்களாக தினமும் என்னுடன் பேசி கொண்டு இருந்த நீங்கள் திடீரென பேச்சை முறித்து கொண்டது போல ஒரு உணர்வு. ஆனால் அது ஒரு நல்ல தொடக்கத்தை அமைத்து விட்டது இல்லையென்றால் நானெல்லாம் எழுதியிருக்கவே மாட்டேன் அலுவலகத்திற்கு வெளியே செயலின்மையின் இனிய வெறியில் திளைப்பவன் நான். நானும் உங்கள் மாவட்டம் தான் குளச்சல் அருகே ஒரு சிற்றூர் தற்போது சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் தொண்டாற்றுகிறேன். உங்கள் அனைத்து நாவல்களையும் வெள்ளை யானை தவிர படித்து விட்டேன் ஆனால் விஷ்ணுபுரம் மட்டும் என்னால் தொடங்கவேமுடியவில்லை வாங்கி வைத்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது மூன்று முறை முயன்று விட்டேன் பத்து பக்கங்களை கூட தாண்ட முடியவில்லை ஒவ்வொரு முறையும் கொற்றவை, பின் தொடரும் நிழலின் குரல் போன்ற நாவல் களை கூட எளிதில் உட்புகுந்து வாசித்து முடித்து விட்டேன் பெரும் நாவல்களான வெண் முரசு தொகுதிகள் கூட. ஆம் நீலம் நாவலிலும் 5 அத்தியாயங்களுக்கு மேல் செல்ல முடியவில்லை. உங்கள் வாசகர்கள் இவ்விரு நாவல்களையும் படித்து விட்டு அனுப்பும் கடிதங்கள் தாழ்வுணர்ச்சியை ஏற்படுத்துகின்றன நான் நல்ல வாசகனில்லை என்பதை என்னால் உணர முடிகிறது ஒருவேளை இன்னும் ஐந்து வருடங்கள் கழித்து என்னால் படிக்க முடியலாம் ஆனால் இப்போது எனக்கு தடையாகவிருப்பது என்ன ? இல்லை இது தான் என் எல்லையா? இதை வேறு எவரிடமும் கேட்கமுடியவில்லை நீங்களே ஒரே வழி. இது ஒரு நுட்பமான கேள்வியாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு இப்போது இருக்கும் ஒரே கேேள்வி இது தான்.

 

அன்புடன்,

ஆல்வின்.

 

அன்புள்ள ஆல்வின்

நான் பதில் எழுதுகிறேனோ இல்லையோ நீங்கள் எழுதலாம். முன்பு போல எல்லா கடிதங்களுக்கும் எதிர்வினையாற்ற இயல்வதில்லை. வெண்முரசு வேலை. சினிமா வேலை. பயணங்கள். ஆனால் எல்லா கடிதங்களையும் வாசிக்கிறேன். ஏதேனும் அம்சம் அதில் வாசகர்களுக்கு தெரியவேண்டியது இருந்தால் பிரசுரிக்கிறேன். கடிதம் எழுதாவிட்டால் மானசீகமான விலக்கம் என்று பொருள் இல்லை. என்னால் எழுதமுடியாதபடி வேலை என்றுதான் பொருள்

அப்படியும் ஏன் எழுதவேண்டும் என்றால் ஒரு முன்னிலை எழுதுவதற்கு ஊக்கமளிப்பது. பொறுப்பாக எழுதச்செய்வது. எழுதுவது ஒரு விடுதலை. அது நம்மை நாமே தொகுத்துக்கொள்ள உதவுவது. எழுதுபவர்களின் சிந்தனை மிக எளிதாக ஒருங்கிணைவதை காணலாம். எல்லாரும் எழுத்தாளர்களாக ஆக முடியாது. ஆனால் சிந்திப்பவற்றை சீராகச் சிந்திக்க அது உதவும்

எல்லா வாசகர்களும் எல்லாவற்றையும் வாசிக்க வேண்டும் என்பதில்லை. சிலருக்கு வாசிக்கும் மனநிலை எப்போதும் நீடிக்கிறது. சிலர் அதற்காக தனி முயற்சி எடுக்கவேண்டியிருக்கிறது சில கதைகள் சிலருக்கு இயல்பிலேயே வாசிக்கவும் உள்வாங்கவும் ஏற்றவையாக உள்ளன, ஏனென்றால் அவை சார்ந்து அவர்களுக்கு ஒரு முன்புரிதல், ஒரு தொடக்கம் இருக்கிறது. அவற்றின் பண்பாட்டுப்புலம் தெரிந்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் வாசிப்பின் வழி ஒவ்வொரு வகை. ஒவ்வொருவரின் ரசனையும் ஒவ்வொரு மாதிரி.

ஆகவே நாம் ஒருபடி கீழோ என எண்ணுவதெல்லாம் பொருளற்றவை. எப்போதும் வாசித்துக்கொண்டிருக்கிறோமா, நாம் நின்றிருக்கும் இடத்தைவிட ஒரு படி மேலாக வாசிக்கிறோமா, வாசித்தவற்றில் கற்பனையால் வாழ்கிறோமா என்பது மட்டுமே நாம் நம்மிடம் கேட்டுக்கொள்ளவேண்டியது

 

ஜெ

முந்தைய கட்டுரைவிளையாட்டு- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபெருந்தேவி,போகன்,பால்நிலைச் சீண்டலின் நகைச்சுவை