ஜெயமோகன் சிறுகதைகள் வாங்க
ஜெயமோகன் சிறுகதைகள் மின்னூல் வாங்க
அன்புடன் ஆசிரியருக்கு
இக்கதையை வாசிக்கத் தொடங்கிய சற்று நேரத்துக்குள்ளாகவே அங்கு நிகழவிருப்பதை மனம் ஊகித்து விடுகிறது .தாய்மை என்ற உணர்வு போற்றப்படுகிறது. வழிபடவும் படுகிறது. ஆனால் அவ்வுணர்வின் ஆதார இச்சை என்ன? தன்னில் எழுந்த உயிரை எந்த எல்லைக்கும் சென்று வாழவைக்க விழையும் துடிப்பு அது. அத்துடிப்பின் வளர்ச்சியாக மொத்த சமூக உருவாக்கத்தையும் பார்க்கிறவர்கள் உண்டு. எஸ்.ராமகிருஷ்ணனின் காந்தியோடு பேசுவேன் சிறுகதை சற்று செயற்கையாக இருந்தாலும் காந்தியின் தாய்மை உணர்வைத்தான் பேசுகிறது. அதை மனம் ஆமோதிக்கவும் செய்கிறது. திருமதி டென் இங்கு முரண்படுகிறாள்.
தாய்மை தன் குழந்தையை உன்னதம் என எண்ணுகிறது. உன்னதம் என்ற ஒன்று மனதில் தோன்றிய உடனேயே சாதாரணம் என்ற உருவகம் மனதில் வரவே செய்யும். கற்பனாவாத நோக்கில் பெருங்காதல் கொண்டவர்கள் அவ்வுணர்வுன்னதத்தால் தங்கள் குடும்பத்தை சமூகத்தை என அனைத்தையும் சர்வசாதாரணமாக கடந்து செல்கிறார்கள். நீலத்தின் ராதை ஒரு மகத்தான உதாரணம். ஆனால் இங்கு திருமதி டென் பொருட்படுத்த தேவையற்றவையாக எதை எண்ணுகிறாள். ஒரு ஏழு வயது குழந்தையின் உயிரை. அங்கிருந்து தொடங்கும் அதிகார உணர்வு அன்புணர்வென பாவித்துக் கொண்டு சுந்தரம் அய்யரின் வழியே மதர் சுப்பீரியரிடம் போய் நிற்கிறது. அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை தங்களுக்கு அடிமை ஊழியம் புரிந்த ஒரு நாட்டின் உயிரை குறைந்தபட்சம் உயிரென்று கூட டென்னால் எண்ண முடியவில்லை. இறுதி வரி தான் மனதை உலுக்கிவிட்டது. உலகில் உருவாக்கப்பட்டதிலேயே விளக்கிவிட முடியாத மாபெரும் புனைவு. நிறம். அதைத்தான் எண்ணிக் கொள்கிறாள் டென். ஒரு மன நடுக்கத்தை உணர்ந்தேன். அவளால் எப்படி ஒரு கருப்பு குழந்தை இறப்பதை எண்ணி குற்றவுணர்வு கொள்ள முடியும்? அதற்கான நியாயங்களே அவள் குருதியில் இல்லை. இன்னும் நூற்றாண்டுகள் தாண்ட வேண்டும் பல்லாயிரம் குரல்கள் பேச வேண்டும் பல கோடி மனங்கள் கேட்க வேண்டும் காரி டேவிஸ் போன்றவர்கள் எண்ணியதெல்லாம் ஈடேற.
அன்புடன்
***
சுரேஷ் பிரதீப்
அன்புள்ள ஜெ
உங்கள் சிறுகதைத் தொகுதியில் ஒன்றுமில்லை என்ற சிறுகதையை வாசித்தேன். சாதாரணமாகச் சொல்லப்பட்ட கதை. விவரணைகள் கிடையாது. ஒரு குறிப்பு போலச் செல்கிறது. எதிர்பாராத முடிவுகூட இல்லை. முடிவு முதல்வரியிலேயே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விதியை கண்முன் காட்டிவிட்டது. ஒரு நடுக்கமாக அந்தக்கதை ஞாபகத்தில் நிற்கிறது
எதனால் அந்தக்கதையை ஞாபகம் வைத்திருக்கிறேன் என்று யோசித்தேன். அந்தக்கதையின் முடிவு சிறுகதை முடிவுதானா? கதை எதிர்பாராமல் முடிந்தால்தான் அது சிறுகதை என்று சொல்ல முடியுமா? கதை முடிவிலிருந்து ஆரம்பித்தால் அது சிறுகதை. இந்தச்சிறுகதை முடிவிலிருந்து ஆரம்பம் மீண்டும் ஓட ஆரம்பிக்கிறது. அதிலுள்ள ஒவ்வொரு அபத்தமும் கண்ணுக்குப்பட ஆரம்பிக்கிறது. விதியின் அபத்தம். வாழ்க்கையின் அபத்தம்.
சில ஆங்கிலக்கதைகள், குறிப்பாக வில்லியம் சரோயனின் கதைகள், இந்தவகையானவை .அவை நமக்கு அளிப்பது ஒருவகையான எளிய கதையை. இன்னும்கூட சிக்கலாக கதை இருந்திருக்கலாமோ என நினைக்க வைப்பவை. ஆனால் கதை நாம் மறக்காமலிருப்பதிலிருந்தே நமக்கு அது ஆழமாகத் தைத்திருப்பது தெரியும். அந்தவகையான கதை இது
ராஜசேகர்
***
ஜெயமோகனின் சிறுகதைகள் – ஓர் பார்வை – கிரிதரன் ராஜகோபாலன்