அன்புள்ள ஜெ.,
சுகாவின் “அண்ணன்களின் பாடகன் ” என்ற சொல்வனப் பதிவை படித்து ஒவ்வொரு பாடலாக மீள் கேட்பு செய்து கொண்டிருந்தபோது கிடைத்த பாடல் இது. பேரின்பப் பெருவிழாக்களில் கேட்கும் ஜெபத்தோட்ட கீதங்களை நினைவுபடுத்தியது முதலில் கேட்டபொழுது (இதுபோலவே என்னை ஏமாற்றிய மற்றொரு பாடல் “ஊமை விழிகள்” படத்தில் ஒலித்த ராத்திரி நேரத்து பூஜையில்ல்..”டோலக்” சத்தம் பெருமாள் கோயில் பஜனையை நினைவு படுத்தியது.கூர்ந்து கேட்ட பிறகுதான் வேறு பஜனை என்று தெரிந்தது) படத்தின் பெயர் வாசுகி. ஊர் பேர் தெரியாத இந்த மாதிரிப் படங்களும் முத்து முத்தாகப் பாடல்களைப் போட்டுக்கொடுத்திருப்பார் இளையராஜா.
https://www.youtube.com/watch?v=Axuw8UqqVjg
மலேசியா வாசுதேவன் அவருடைய மூதாதையான சிதம்பரம் ஜெயராமனை நகல் (நக்கல்?) செய்து அவ்வளவாக “ஹிட்” ஆகாத ஒரு பாடல்.(“”ஆனந்த தேன் காற்று” – மணிப்பூர் மாமியார், “சுப ராகமே” – கன்னிராசி முதலியவை “ஹிட் “) சம்பூர்ண இராமாயணத்தில் சிதம்பரம் ஜெயராமன் குரலில் சமீபத்தில்தான் “வீணைக்கொடியுடைய வேந்தனே” கேட்டிருந்தேன். அதனால்தானோ என்னவோ எனக்கு சீதையை நினைத்து ராவணேஸ்வரன் பாடுவது போலவே தோன்றியது. நடுநடுவே “ஏஸ்சு”வினுடைய ஊழியர் காதலைச் சொல்லும் பாடல் போலும் இருந்தது. எனினும் வெத்தலையைக் குதப்பிக் கொண்டு பாடும் ராவணேஸ்வரனே ஜெயித்தான்.உச்ச ஸ்தாயியில் “தவிப்பதா” மற்றும் “இறங்கிவா”என்று கத்தும்போது மட்டும் கமலை நினைவு படுத்துகிறார். என்ன கம்பீரம்? என்ன குழைவு? தமிழ் உச்சரிப்பு அடுத்த தலைமுறை படிக்கவேண்டிய பாடம்.
மலேசியா வாசுதேவன் குரல் டி எம் எஸ் சுக்கும் எஸ் பி பி க்கும் சரியான “பாலன்ஸ்”. 60 சதவீதம் டி எம் எஸ் சின் கம்பீரம் 40 சதவீதம் எஸ் பி பின் குழைவு கலந்த கலவை. “ஓ ஒரு தென்றல் புயலாகி” என்றும் “மனிதன் மனிதன்” என்றும் வெடித்துக் கிளம்புபவர்தான் கதகதப்பான குரலில் “பருவ காலங்களின் கனவு” என்று ஜானகியோடு கிறக்கியடித்திருப்பார். “ஆசை நூறுவகை” “என்றென்றும் ஆனந்தமே” போன்ற “க்ளப் சாங்” குகளில் கலக்கி எடுத்தவர்தான் “வா வா வசந்தமே” ” பட்டு வண்ண சேலைக்காரி” என்று காதலைப் பன்னீராய்த் தெளித்திருப்பார். அவருடைய சில பாடல் பதிவுகள் கீழே.
“என்றென்றும் ஆனந்தமே” – கடல் மீன்கள் – கர்நாடக இசைக் கட்டுமானங்களில் மேற்கத்திய இசையை வழிந்தோட விட்டிருப்பார் இளையராஜா.
https://www.youtube.com/watch?v=Q3-6jVL_Duk
“மலர்களிலே ஆராதனை” – கரும்புவில் – ரசனைகள் முடியாதது என்று அவர் முடித்திருக்கும் இடம் மறக்க முடியாதது.
https://www.youtube.com/watch?v=LaEjBolpWhY
பாடலை வலையேற்றுபவர்கள் வெறும் ஒலியை மாத்திரம் வலையேற்றியிருந்தால் தேவலை. மேலே கூறியதுபோல் நம் கற்பனைக்கும் இடமிருக்கும் பாடலையும் ரசிக்கமுடியும். சுகா சிலாகித்துச் சொல்லியிருக்கும் சில பாடல்களின் விடியோவை பார்த்து அதிர்ச்சி அடைய வேண்டியிருக்கிறது.ஒரு பாடலில் நடுத்தெருவில் செந்தில் பனியனைக் கிழித்துக் கொண்டு பாடுகிறார். அதன்பிறகு பாடலைக் கேட்க மட்டும் கூட முடியவில்லை. “கண்ணைப் பிடுங்கி வெச்சுட்டுதான் பாக்கணும்” என்று என் அம்மா கூறியது போல இருந்தது. “கெடுத்தான்டா பாவி” என்று சத்தியஜித்ரேயின் “பதேர் பாஞ்சாலி”யைப் பார்த்தவர்கள் சொன்னதை நினைத்துக் கொள்கிறேன். நமக்குப் பாடல்கள் பார்க்கக் கிடைத்ததே மகேந்திரன் வந்த பிறகுதான்.அதனாலேயே வீடியோ பதிவு கொடுக்காமல் வெறும் ஆடியோ பதிவை மாத்திரம் கொடுத்திருக்கிறேன். யாரும் தேடிப்போய் பார்த்து இசை அனுபவத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
சுகா சொல்லாத சில பாடல்கள்.
https://www.youtube.com/watch?v=LvDtBy2pRN4 – மூடுபனி – நடுவே ஆண் குரல் (ஜதி மட்டும்) இளையராஜா.
https://www.youtube.com/watch?v=mvUi6htIH7g – “காலங்கள் மழைக்காலங்கள்” – இதயத்தில் ஓர் இடம்
https://www.youtube.com/watch?v=LRGFj6uDcng -“பனி விழும் பூ நிலவில்” – தைப் பொங்கல்
https://www.youtube.com/watch?v=s0L6OK-MQy0 – “பூவே நீ யார் சொல்லி யாருக்காக” – தணியாத தாகம்
மலேசியா வாசுதேவன் நல்ல நடிகரும் கூட. மணிரத்தினத்தின் “திருடா திருடா” படத்தில் சிரிப்பு போலீஸ் ஆக சிறப்பாக நடித்திருப்பார். கவர்ச்சி ஆட்டக்காரி யைப்பார்த்து ஜொள் விட்டுக்கொண்டிருப்பவர் திடீரென்று மாலை போட்டுக்கொண்டிருப்பது ஞாபகம் வர “சாமி சரணம்” என்று கையை முத்திக்கொள்வார். தியேட்டரே அதிரும் நிற்க.
எவ்வளவு பெரிய பாடகரின் குரலும் ஒரு காலகட்டத்திற்கான குரல் தானா? “வடிவேலன் மனசு வெச்சான்” என்று டி எம் எஸ் ஒரு காலத்தில் கமலுக்காகப் பாடியபோது கொஞ்சம்கூட ஒட்டவில்லை. இப்போது மலேசியா வாசுதேவன் இருந்தால் யாருக்காகப் பாட முடியும்?
சுகாவின் “அண்ணன்களின் பாடகன் ” என்ற சொல்வனப் பதிவு
அன்புள்ள,
கிருஷ்ணன்
***