நாவல் வாசிப்பும் இந்திய ஆங்கில எழுத்தும்

indian-english-writers-600x400

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலமா?

ஊட்டி வந்திருந்த போது கவிதைகள் குறித்து நடைபெற்ற உரையாடல்கள் மற்றும் நான் எடுத்த குறிப்புகளின் துணையுடன் நினைவில் இருந்து மீட்டி எழுதி பார்த்தேன். கவிதைகள் குறித்த ஒரு தெளிவு கிடைத்தது. அதன் துணை கொண்டே தற்போது கவிதையை பலவாறு வாசிக்கிறேன். வாசிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன். அடுத்ததாக தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் நாவல் குறித்த உரையாடல் மற்றும் அதன் எதிர்வினைகள்.

மொழிபெயர்ப்பில் தங்களுக்கு ஈடுபாடு இல்லை என்பதை அறிவேன். இருப்பினும் இந்த கடிதம் என்னுள் எழுந்த ஒரு கேள்விக்காகவே. நாவல் குறித்து நீங்கள் எழுதிய புத்தகத்தை ஏற்கனவே வாசித்து ஒரு சுயவிமர்சன கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கிறேன். விஷால் இராஜாவின் உரையின் தொடக்கத்திலேயே நாவல் கோட்பாடு நூலுக்கும் உரைக்கும் இடையான வேறுபாட்டை கூறியிருப்பார். அதை நான் ஆங்கிலத்திற்க்கு மொழிபெயர்த்து பார்தேன். பல  இடங்களில் எனக்கு புதிய கேள்விகள் தோன்றியபடி இருக்கின்றது. நான் தற்போது என் நண்பர்களின் பரிந்துரைகள் படி சில இந்திய ஆங்கில நாவல்களை வாசித்தேன். எல்லாமே சராசரிகள்.

ஒரு வேளை என் வாசிப்பில் நான் எதையோ காணாமல் இருக்கிறேனோ என்ற சந்தேகம் வந்துவிட்டது. ஆதனால் ஜெயமோகன், சாரு, எஸ்.ரா எங்காவது தங்கள் உரைகளில் இந்திய ஆங்கில இலக்கியம் குறித்து கூறியிருக்கிறார்களா என்று பார்த்தேன்.  என்னால் கண்டடைய இயலவில்லை.

தமிழில் கா.ந.சு, அசோகமித்திரன், சு.ரா, தி.ஜா, ஜெயமோகன், சாரு, எஸ்.ரா, சரவணன் சந்திரன், சுனில், கார்ல் மார்க்ஸ் இப்படி ஒரு மாறுபட்ட கலவையான ஒரு வரிசையை கூறமுடியும். இந்திய ஆங்கில இலக்கியத்தில் இப்படியான ஒரு வரிசை இருப்பதாகவே எனக்கு தெரியவில்லை. ஏன் என்னால் கண்டடைய இயலவில்லை.

மொழி சார்ந்த ஒரு வாசிப்பனுபவம், தகவல் சார்ந்த ஒரு எள்ளல், பண்பாடு சார்ந்த ஒரு கேள்வி, ஏற்கனவே இருக்கும் ஒரு செயல்முறை குறித்த ஒரு பரிசீலனை எதுவுமே இந்திய ஆங்கில இலக்கியத்தில் இல்லையோ என தோன்றுகிறது. ஏன் அப்படி ?

உதாரணமாக நான் வெண்முரசு வாசிக்கும் போது அது எனக்கு தரும் ஒரு வாசிப்பனுபவம், மொழியியல் வளர்ச்சி, தகவல் குறித்த எள்ளல், இதில் எதையுமே ஆங்கிலத்தில் எழுதப்பட்ட மகாபாரத வடிவில் காணமுடியவில்லை. இதில் ஒன்று கூட இல்லை என்பதே பெரும் வருத்தம். சரி இன்னும் அவர்கள வெண்முரசு அளவிற்கு வளரவில்லை என வைத்துக் கொள்வோம்.

பின் தொடரும் நிழலை நான் திருநெல்வேலி வரும் போது மட்டும் வாசிக்கிறேன். பெங்களூரில் என் பணியை அதன் மொழி பாதிப்பதை கண்டதால் இந்த முடிவு. அதில் பசி குறித்த ஒரு பகுதியை வாசித்தப் பிறகு எனக்கு ஏற்பட்ட பாதிப்பை இப்போதும் மறக்க முடியாது. (முழுமையாக வாசித்த பிறகு தங்களுக்கு எழுதுவேன்) இடதுசாரி கருத்தை முன்வைக்கும் எந்த ஆங்கில நாவலும் இதுமாதிரியான ஒரு மொழியமைப்பை ஏன் பெற்றிருக்கவில்லை. அவர்களின் மொழி அமைப்போ சதாரண காதல் நாவல்களின் மொழியை மட்டுமே கொண்டுள்ளது.

10 இந்திய ஆங்கில நாவலை எடுத்துக் கொண்டால் அதில் 8 தற்போதய இளைஞர்களின் காதல் அனுபவங்கள். அதிலும் புதிதாக எதுவும் இல்லை. Sun shine, clouds, shadow, shades, memory, haunting, flowers, blossoms, enjoy, feet, moon, மற்றும் சில பொதுவான noun களை எடுத்துக் கொள்ளவும். எழுதப்பட்ட மொத்த நாவல்களிளுமே இதே சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். சரி பொருள் மாறுபாடு, இல்லை. சொற்களை மற்றும் கொஞ்சம் இடமாற்றி இருப்பார்கள். என்னால் இதை விளங்கிக் கொள்ளவே முடியவில்லை. புலம்பலாக இருந்தால் மன்னிக்கவும்.

நாவல் கோட்பாடு நூலில் குறிப்பிட்டது போல், இந்திய ஆங்கிலம் தன் மொழியில் பண்பாடு மற்றும் கலாச்சார சுழல் சார்ந்து ஏதேனும் ஒரு மாற்றத்தை அடைந்திருக்க வேண்டும். அவர்கள் பயன்படுத்தும் மொழியோ ஏதேனும் புதிதாக பிரசித்தி பெற்ற ஆங்கில நாவலின் நடையை பிரதி எடுத்திருக்கும். உதராணமாக நவனில் எழுதும் ஆங்கில திரில்லர் நாவலின் மொழி எனக்கு அகத கிரிஸ்டி மற்றும் சிட்னி செல்டன் மொழி நடைகளுக்கு இடையேயான ஒன்றை எடுத்துக் கொண்டது போல் தெரிகிறது. தவறானால் திருத்தவும்.

இந்திய சுழலில் நெருங்கி வரும் எழுத்தாளராக ஆமிதாவ் கோஷ் இருக்கிறார். சல்மான் ருஷ்டியை நடைக்காக வாசிக்கலாம். தருன் நிலத்தின் மறு சூழலை நிறுத்துகிறார். இவர்களை தவிர மற்ற அனைவரும் சராசரிகளே.

என் இந்திய ஆங்கில நாவல்கள் வாசிப்பில் பிழை இருந்தால், சுட்டி காட்டவும். அல்லது பிராந்திய மொழிகள் அடைந்த இடத்தைக் கூட ஏன் வாசக பரப்பு அதிகமாக கொண்ட இந்திய ஆங்கில நாவல்கள் அடைவில்லை.

நன்றி

பலராம கிருஷ்ணன்.

***

அன்புள்ள பலராமகிருஷ்ணன்

உங்கள் விமர்சனங்களை நீங்கள்தான்  உருவாக்கிக்கொள்ளவேண்டும். விமர்சனக்கருத்துக்கள் நம்மில் எளிய ஐயங்களாகவும் அபிப்பிராயங்களாகவும் தோன்றுகின்றன. பின்னர் நாம் அவற்றை நமக்குள்ளும் பிறரிடமும் விவாதிக்கிறோம். மெல்லமெல்ல கருத்துக்களாக ஆக்கிக்கொண்டு வெளிப்படுத்துகிறோம். இதுவே விமர்சனநிலைபாடு. அந்த விமர்சன்ங்கள் வழியாக நமக்கென ஒர் இலக்கியப்பார்வை உருவானபின் வாசிப்பது விமர்சன வாசிப்பு.

இப்போக்கில் கவனமாகத் தவிர்க்கவேண்டிய சில உண்டு.

நம் விமர்சனக் கருத்துக்கள் நாம் அப்படைப்பைப் புரிந்துகொள்வதற்காகவே. ‘ஆசிரியர் இவற்றைக் கருத்தில்கொள்ளவேண்டும்’ என்றபாணியில் எண்ணவும் எழுதவும் தொடங்குவதுபோல் அறிவின்மை வேறில்லை. எந்த விமர்சனமும் படைப்பின்மீதான வாசிப்புப் பயிற்சி மட்டுமே. க.நா.சு முதல் சுந்தர ராமசாமி வரை இதைத் தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்

இலக்கியப்படைப்பை வாசிக்க  நம் சொந்த வாழ்க்கை சார்ந்த அவதானிப்புகளும் அனுபவங்களும்தான் முதன்மையான அடிப்படையாக அமையவேண்டும். வாசிப்பு நம் அனுபவங்களைத் துலங்கவும் விரியவும் வைக்கவேண்டும். நாம் துளியளவு அடைந்த அனுபவம் வாசிப்பால் பலமடங்கெனப் பெருகவேண்டும். அதற்கு நாம் நம் கற்பனையை விரிக்கவேண்டும். அதற்குத்தான் இலக்கியப்படைப்பு உதவ்வேண்டும்

நம் வாழ்வனுபவங்கள் சிறியவை, குறைவானவை. அவற்றை விரிவாக்கவே இலக்கியத்தை வாசிக்கிறோம். இலக்கியவாசிப்பின் வழியாக வெவ்வேறு வாழ்க்கைகளை வாழ்கிறோம். அவ்வாழ்க்கையில் பெற்ற அனுபவங்கள் பின்னர் நம் வாசிப்பை தீர்மானிக்கவேண்டும். இலக்கியவாசிப்பே வாசிப்புத்திறனைப் பெருக்கவேண்டும். ஆனால் அது இரண்டாம் கட்டம்தான்

வாசிப்புக்குப்பின் நாம் மதிப்பிடுவது எதுவாக இருந்தாலும் வாசிக்கையில் நாம் நூலுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். நம் எதிர்பார்ப்பு, முன்முடிவு, நம் அறிவின் எல்லைகள், நம் அனுபவத்தின் குறுகல், நம் சூழல் நம் வாசிப்பை முடிவுசெய்ய அனுமதிக்கக் கூடாது. நல்ல வாசகன் எப்போதும் எளிய கதைகேட்பவனாகவே நூல்முன் நிற்பான்.

நாவல்களை அவ்வாறு வாசியுங்கள். மெல்லமெல்ல உங்கள் கருத்துக்கள் உருவாகும். நண்பர்களுடன் விவாதியுங்கள். அதற்காகவே இலக்கியக்கூடுகைகள்

இந்திய ஆங்கில இலக்கியம் குறித்து பலமுறை எழுதியிருக்கிறேன். இந்தியமொழிகளில் எழுதும் எந்த எழுத்துக்களுக்கும் கிடைக்காத விற்பனை, பணம் அவற்றுக்கு உள்ளது. காரணம் அவற்றின் இந்தியா அளாவிய வாசிப்புச்சூழல். உலகம் கவனிக்கக்கூடும் என்ற வாய்ப்பு. இது அளிக்கும் பிரச்சினைகள் எப்படி எழுத்தை பாதிக்கும் என எழுத்தாளர்களால் எளிதில் சொல்லமுடியும்

இவ்வாறு வாசகப்பரப்பு பெருகியிருப்பதனாலேயே அது தனக்கான கலாச்சார முகமும் தனிச்சுவையும் அற்ற மொத்தையான நுகர்வுவெளியாக உள்ளது. அதில் பொதுவாகத் திரண்டு வெளியே தெரிவது இந்திய ஆங்கில நாளிதழ்கள் வழியாக உருவாகும் ’அரசியல்சரிகள்’ தான். மேலோட்டமான முற்போக்கு மனிதாபிமானம், சமூகசீர்திருத்தக் கருத்துக்கள், பாலியல்விடுதலை சார்ந்த சிந்தனைகள், மேலைநாட்டுக் கோணத்திலான இந்திய சமூகவரலாற்று நோக்கு– அவ்வளவுதான். ஆகவே அவற்றை நோக்கியே எழுதியாகவேண்டும் என்ற நிலை உள்ளது.

அதோடு இத்தகைய விரிவான நுகர்வுச்சூழலில் பெரிய புத்தக உற்பத்தியாளர் – விளம்புநர் வலை உருவாகிறது. அங்கே ஒரு நூலின் மதிப்பு அதன் விற்பனையைச் சார்ந்தே முடிவுசெய்யப்படுகிறது .ஆகவே விற்கும்படி எழுதியாகவேண்டும். எது விற்கும் என பதிப்பாளர் ஆசிரியர்களிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அதற்கான தரவுகளும் அவர்களுக்கு வந்துகொண்டே இருக்கும். அது உண்மையிலேயே பெரிய கட்டாடம். இந்தியமொழிகளில் அச்சூழல் இல்லை. நன்றாகவே விற்றாலும்கூட அது ஒன்றும் பெரிய விற்பனையை அடைவதில்லை. ஆசிரியனுக்கு பெரும்புகழோ பணமோ கிடைப்பதில்லை. ஆகவே தன்னை வெளிப்படுத்தவும், தன் சூழலைபாதிக்கவும் இயல்பாக அவன் எழுதுகிறான்.

இந்திய ஆங்கில எழுத்தில் எளிமையான பொதுப்புத்திசார்ந்த அரசியலாலும், செயற்கையாகப் பழகிக்கொண்ட ஆங்கிலநடையாலும் உருவாக்கப்படுவனவே மிகுதி. ஆங்கில்நாளிதழ்களில் வரும் இலக்கியமதிப்புரைகளும் இந்த மேலோட்டமான அம்சங்களையே அடையாளம் கண்டு புகழ்ந்து எழுதப்படுகின்றன. ஒருவேளை அவற்றின் வாசகர்களுக்கும் அதுவே பிடிக்கும்போலும்.

ஆகவே சூழல் மேலோட்டமான எழுத்தைக் கோருகிறது. அதுவே காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை ஆங்கிலத்தில் வாசிக்கும் மேலோட்டமான மேல்த்தட்டு வாசகர்களுக்கு உகக்கிறது. அதை உருவாக்குபவர்கள் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களை நோக்கி பிறரும் அவ்வாறே எழுதுகிறார்கள்

ஜெ

முந்தைய கட்டுரைஅழிசி மின்புத்தக வெளியீட்டகம் விமர்சனப் போட்டி 2018
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 58