இமையத்தில் ஒருவன்

q

இமையத் தனிமை – 3

இமையத் தனிமை – 2

இமையத் தனிமை -1

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

தனிமைப் பயணங்கள் தரும் ஆழ்ந்த புத்துணர்வும் அமைதியும் ஒரு ஆசிரம அமைப்பில் இருக்கும் போது மட்டுமே பெற முடியும்… இமய மலையில் கங்கை நதிக்கு மிக அருகில் நதியின் ஆர்ப்பரிக்கும் ஒலியுடன் அதனை பார்த்தவாறு இருக்கிறேன்… மிக எளிய மனம் கொண்ட மலைக்கிராம மக்கள்.. பெரும்பாலான நேரங்களில் மின்சாரம் கிடையாது ஆனால் அது இந்த குளுமையான கோடைக் காலத்தில் பெரும் சிரமமாக தெரியவில்லை காரணம் சூரிய உதயம் காலை 4.45 மணிக்கே நிகழ்ந்து விடுவது தான் சூரியன் மறைவது இரவு 7.30 மணிக்கு… ஆசிரமத்தில் நிரந்தரமாக தங்கியிருக்கும் ஒரு பண்டிட்ஜியின் குடும்பம் தவிர நான் மட்டுமே கெஸ்ட்.. ஆசிரமத்தின் நிர்வாகி மற்றும் அந்த குடும்பத்தினருடன் பேசுவது தவிர பெரும்பாலான நேரங்கள் வாசித்தல் கங்கையையும் இமயத்தையும் வேடிக்கைப் பார்த்தல் மற்றும் சிறிது நேரம் தியானம் என கழிகிறது… ஃபேஸ்புக் வாட்சப் போன்றவற்றை அவ்வப்போது பார்ப்பதோடு சரி.. [பழைய பழக்கம் மாற்றுவது சிரமம்].  தொலைக்காட்சி அறவே கிடையாது…. இன்டர்நெட் வசதியும் மிக குறைவுதான்…

உங்கள் ஊட்டி பயணத்தை வாசிக்கும் போது அந்த மனநிலையுடன் தொடர்பு கொள்ள முடிந்தது… மலைப்பாதையில் மாலை நடைப்பயிற்சி… இங்கிருந்தே  சின்மயானந்தரின் ஆசிரமம் உட்பட வேறு சில ஆசிரமங்களுக்கும் சென்று அங்குள்ள சுவாமிஜிக்களுடனும் மாதாஜிக்களுடனும் உரையாடினேன்.. ஒரு மாதாஜி மெளன விரதத்தில் இருந்தார்… சிறிது நேரம் அவருடன் பேசாமல் அமர்ந்திருந்து விடை பெற்றேன்… பெரும்பாலும் எல்லா ஆசிரம கதவுகளும் எல்லோருக்கும் எப்போதும் திறந்தே இருக்கின்றன… சில ஆசிரமங்களில் அத்வைத வேதாந்தம் கற்பிக்கிறார்கள்… பண்டிட்ஜியின் குடும்பத்தினரிடம் இருந்து மிக எளிய வட இந்திய உணவு இரு வேளையும்… நான் நாஷ்டா சாப்பிடுவதில்லை என்பதை பண்டிட்டின் மனைவி பல முறை கேட்டு உறுதி படுத்திக் கொண்டார்… அவர்களுக்கு சிரமம் வைக்கக் கூடாது என்பதே காலை உணவை துறந்ததற்கான காரணம். மேலும் உடல் உழைப்பில்லாமல் பெரும்பாலும் அமர்ந்திருக்கும் பொழுதுகளே அதிகம் என்பதால் அது தேவையில்லை என்றும் கருதினேன்… மிக உள்ளடங்கிய மலைக்கிராமம் என்பதால் பொதுப் போக்குவரத்து என்பது மிகவும் குறைவு… ஆனால் இங்கிருக்கும் மக்கள் அதற்கு பழகி இருக்கிறார்கள்…  அரசு போக்குவரத்து என்பது அறவே கிடையாது. தமிழ் நாட்டின் மினி பஸ்கள் பெரும் வரப்பிரசாதமாக  தெரிகிறது.

w

ஆசிரம நிர்வாகியிடம் சென்னைக்கு போயிருக்கிறீர்களா என கேட்டேன். 2006ல் ஜனவரியில் ஒரு முறை போனதாகவும் கடும் வெப்பமாக இருந்ததாகவும் கூறினார்… உங்களிடம் ஒருவர் இதே போன்ற பதிலை முன்பு உங்கள் இமயப்பயணத்தின் போது கூறியதை நினைத்துக் கொண்டேன்… டெல்லி நண்பர் ஒருவர் கிண்டலாக சொல்வார் சென்னையில் மூன்று climate தான் இருக்கிறது. Hot hotter hottest… உண்மைதானே.. நமக்கு hot தான் winter… கங்கை நதியின் மீது பறந்தாடும் பல வண்ணங்களில் விதவிதமான பறவைகளைக் காண முடிந்தது… சில பறவைகளின் மூக்கு நீளமானது இளம் பச்சை நிற கொண்டையுடன் சில பறவைகள் நீளமான வால் கொண்ட சாம்பல் நிற பறவைகள் என அது ஒரு visual treat. எப்போதும் வேலை நிமித்தமான பயண பரபரப்பு சில நேரங்களில் பதட்டத்தையும் கொண்டு வருகிறது… இது ஓய்வான பயணம் என்றாலும் இங்கேயும் விடை பெறும் நேர பதட்டம் தொற்றிக் கொண்டது.. அந்த ஆசிரமத்தில் உள்ள சிறிய அழகான குகை கோயிலுக்கு போகாமலே காரில் ஏறி விடை பெற்றேன்.. பண்டிட்ஜி தட்டுடன் நின்றிருந்தார்.. தட்டில் ஏதேனும் பணம் போட்டு சாமி கும்பிட்டு இருக்கலாம் என்பது வெளியே வந்த உடன் தான் உறைத்தது… மகத்தான மனிதர்கள்…

பொதுவாக வட இந்தியாவைப் பார்க்கும் போது முன்னேற்றத்தை நோக்கித் தான் போய் கொண்டு இருக்கிறது.. பத்தாண்டுகளுக்கு முன்பும் இப்போதும் நல்ல வளர்ச்சி தெரிகிறது. வறுமை கணிசமாக குறைந்து காணப்படுகிறது. குழந்தைகள் எதிர்கால இந்தியாவிற்கான மகத்தான நம்பிக்கையை அளிக்கிறார்கள்… பெரியவர்கள் கிடைத்த வேலைகளை செய்கிறார்கள்… மைய  இந்தியாவின் சலிப்பூட்டக்கூடிய சோம்பேறித்தனத்தை இங்கு காண முடியவில்லை… கீழிறங்கி ஹரித்வார் வந்து சேர்ந்தேன்… நான் தங்கிய ஹோட்டல் மையமாக பரபரப்பான கடை வீதியில் இருந்தது…  இமயத் தனிமைக்குப் பின் இங்கே தங்கியது தற்செயலானது தான். தங்கும் விடுதியின் உள்ளே வெளிப்புற சத்தங்களின் சுவடே இல்லாத அமைதி… வெளியே வந்தால் பல்லாயிரம் வெங்கலப் பானைகளை ஒரு சேர உருட்டியது போன்ற சப்தம். அங்கே இறங்கி நடந்து கடைகளைப் பார்வையிடுவதே ஒரு வகை ஆனந்தமாயிருந்தது… அனைத்துப் பொருட்களும் உள்ளூர் தயாரிப்புகள் தான் பண்ணாட்டு கடைகளோ உணவகங்களோ எங்கும் காணப்படவில்லை ஒன்று கூட…

e

மாலை ஹர் கி பௌடியில் கங்கா ஆரத்தி… அதற்கே உரிய எளிமையுடன் மாலையும் இரவும் சந்திக்கும் வேளையில் நிகழ்ந்தது.. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இது போன்றதொரு நிகழ்வு தென்னிந்தியாவில் இருக்கிறதா என தெரியவில்லை… மறுநாள் டெல்லி விமானத்தில் ஜன்னலோரம் அமர்ந்திருந்த போது ஒரு பெரிய பறவை அதன் இறக்கையில் வந்து அமர்ந்தது.. தன்னுடையதை விட பெரிய இறக்கை கொண்ட பறவையா இது என்பதைப் போல் அங்குமிங்கும் பார்த்தது.. அந்த காட்சி மிக அழகாக இருந்தது… செல்ஃபோன் எடுத்து அதை படம் பிடிக்க முயல்வதற்க்குள் நீல வானத்தில் எழுந்து பறந்து மறைந்தது…. அது போல எந்தத்  தடமும் சுவடும் இன்றி நீல வானில் பறந்து மறையும் பறவை முக்தியின் குறியீடாக நம் மரபில் கருதப்படுவது நினைவில் எழுந்து ஒரு புன்னகை மலர்ந்தது…

சிவக்குமார்

சென்னை

***

இமையம் என்னும் சொல்

பயணம் கடிதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 36
அடுத்த கட்டுரைகாட்டில் அலைதல்