இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது காப்பீடுகள் பற்றிப் பேச்சுவந்தது. குறிப்பாக தனிநபர் செய்துகொள்ளும் மருத்துவக் காப்பீடுகள் பற்றி. நான் சற்று பெரிய தொகைக்கே காப்பீடு செய்திருக்கிறேன். அது நண்பர்களை அதிர்ச்சியடையச் செய்தது. “என்ன நாலுபேர்ட்ட கேட்டு செய்யவேண்டாமா?” என்றார்கள். “பணத்த தூக்கி சும்மா குடுத்திருக்கீங்க. நல்லா ஏமாத்திட்டான் எவனோ”
வழக்கறிஞரான நண்பர் சொன்னார், இந்தியச் சூழலில் பெரியதொகைக்கு காப்பீடு செய்வது என்பது மாபெரும் வீணடிப்பு. தொழில்துறைக்கு வெளியே தனியார் செய்யும் காப்பீடுகளில் காப்பீட்டுப் பணத்தைக் கொடுக்கவே மாட்டார்கள். அதிகபட்சம் ஐந்துலட்சம் ரூபாய் வரை காப்பீடு செய்யலாம். ஐந்துலட்சத்துக்குமேல் செலவாயிற்றென்றால் இழுத்தடித்து பலவகையான வழக்காடல்களுக்குப்பின் மூன்றுலட்சம் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்குமேல் கிடைக்காது. நீங்கள் ஐம்பதுலட்சம் போட்டு அவ்வளவுக்கும் செலவாகியிருந்தாலும் அதே மூன்றுலட்சம்தான் கிடைக்கும்
அவருடைய நீதிமன்றத்தில் நிகழும் வழக்குகளில் கணிசமானவைகாப்பீட்டு வழக்குகள். என்று அவர் சொன்னார். பின்னர் ஊர்திரும்பி சில நண்பர்களிடம் பேசினேன்.நான் அடைந்த சித்திரம் விந்தையானது.காப்பீட்டு மோசடிகள் இங்கே மிகுதி. நிறுவனஅதிகாரிகளும் மருத்துவர்களும் சேர்ந்துகொண்டு செய்பவை. அவற்றுக்கு எதிரான நிலைபாடாக காப்பீட்டுப்பணத்தை எளிதில் கொடுத்துவிடக்கூடாது என்ற நிலையை நிறுவனங்கள் எடுத்துள்ளன. அதற்கென சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளன. அவர்களின் வேலை என்பது முடிந்தவரை காப்பீட்டுத்தொகையைக் கொடுக்காமலிருப்பதும் முடிந்தவரை குறைவாகக்கொடுப்பதுதான். அதையொட்டியே அவருடைய திறன் அளக்கப்படுகிறது. ஓர் எல்லையை காப்பீட்டு நிறுவனங்கள் வகுக்கின்றன, அதற்குமேல் பணம் கொடுக்கப்பட்டால் அந்த அதிகாரி திறனற்றவர் அல்லது அவரே மோசடிசெய்கிறார் என கருதப்படுகிறார்.ஆகவே அவர் ஒருவகை தடுப்பு அதிகாரியாகவே செயல்படுவார்.
இதனால் பாதிக்கப்படுவது உண்மையாகவே சந்தா கட்டி உண்மையான இழப்பு ஏற்பட ஈட்டுத்தொகை கோருபவர்கள்தான். நாம் பணத்தைக் கட்டும்போது நம்மை தெய்வமாக வழிபடுகிறார்கள். இனிக்க இனிக்க சந்தா வசூலிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் ஈட்டுப்பணம் தருபவருக்கும் சம்பந்தமில்லை.அவர்கள் வெறும் முகவர்கள், பணம் தரவேண்டியவர்கள் நிறுவன அதிகாரிகள்.அதிகாரிகள் எந்த அதிகாரியையும் போல நம்மை மோசடிக்காரர்களாகவே நினைப்பார்கள். அவ்வாறல்ல என்று நிரூபிப்பது நமது பணி. மிகச்சிறு ஆவணப்பிழை, அல்லது போதாமை இருந்தாலும் சிக்கிக் கொள்வோம். இன்றைய மருத்துவநிலையங்கள் பலவகையான சட்டச்சிக்கல்கள் கொண்டவை என்பதனால் தனியார்த்துறையில் மருத்துவம் செய்துகொண்டால் கண்டிப்பாக ஆவணங்களில் முரண்பாடோ போதாமையோ இருக்கும். அதைச்சொல்லி காப்பீட்டுத்தொகை மறுக்கப்படும். நீதிமன்றம் செல்லவேண்டியிருக்கும்.
அதிகபட்சம் இரண்டுலட்சம் வரை நீதிமன்றம் செல்லாமல் பெறமுடியும். அதற்குமேல் என்றாலே நீதிமன்றம் வழியாகவே பெறமுடியும். முதல்விஷயம், வழக்கு சில ஆண்டுகள் நீடிக்கும். ஏராளமான தேவையுள்ளவையும் இல்லாதவையுமான ஆவணங்கள். நீதிமன்றத்துக்கு நாம் புதியவர்கள், காப்பீட்டு நிறுவனமும் ஊழியர்களும் அங்கேயே குடியிருப்பவர்கள்போல. ஒரு நிறுவனத்திற்கு எதிரான சட்டப்போர் என்பது இந்தியச்சூழலில் வேறுவேலை அனைத்தையும் விட்டுவிட்டு நீதிமன்றத்தையே வாழ்க்கையாகக்கொள்வதுதான். நீதிமன்றம் ஆவணங்களை முழுதாகப்பரிசீலிப்பது அரிது. அங்கே தேங்கிக்கிடக்கும் வழக்குகள் அதற்கு இடமளிக்காது. நிபுணர்களை வரவழைத்து விசாரணை செய்வதும் இதைப்போல சிறுவழக்குகளுக்கு இயல்வதல்ல. ஆகவே பொதுவான ஒரு தொகையை வரையறைசெய்து அதை பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும்படிச் சொல்லி முடித்துவிடுவார்கள். அது எப்போதுமே அந்த மாறாத மூன்றுலட்சம்தான்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது, ஆத்திரத்துடன் “இது சலுகை அல்ல, நாம் கட்டிய பணம். நமக்குரிய பணம்’ என்றேன். நண்பர்கள் சிரித்து “அது மெய்தான். ஆனால் நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டுமே”. காப்பீடு எடுப்பவர்கள், பெரும்பாலும் முதியவர்கள், அவர்களுக்கு அலைய முடியாது. துணைக்கும் ஆளிருக்கமாட்டார்கள். கணிசமானவர்களுக்குச் சட்டமும் தெரியாது. ஆகவே எளிதில் சோர்ந்து கிடைத்ததுபோதும் என்று ஒதுங்கிவிடுவார்கள். காப்பீட்டுத்துறை அதிகாரிகள் என்னும் ஓநாய்களுடன் போரிடமுடியாது.
“இன்னும்கூட நடுத்தரவர்க்கத்தினரே மருத்துவக் காப்பீடு போடுகிறார்கள். எளியவிவசாயிகள் போட ஆரம்பித்தால் அது ஒருவழிப்பாதையாகவே மாறிவிடும்” என்றார் நண்பர். “பாதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கில் உண்டு. நீதிமன்றம் சென்றால் அவர்கள் நின்றிருப்பதைப் பார்ப்பதே பரிதாபமாக இருக்கும். ஆனால் அவர்களுக்கு இங்கே அமைப்போ குரலோ இல்லை.ஒருபக்கம் நோயும் மருத்துவமனை வாழ்க்கையும் பெரும்பாலும் இறப்பும். மறுபக்கம் கடன். அந்தச் செலவை அளிக்காமல் இழுத்தடிக்கும் காப்பீட்டு நிறுவனங்கள். இழுத்தடிக்க இழுத்தடிக்க கடன்களுக்கான வட்டி பெருகும். இழப்பீட்டுவழக்கை ஓர் கால எல்லைக்குள் முடிக்காவிட்டால் வட்டியே கூடுதலாகிவிடும். இழப்பீடு கோருபவர் கிடைத்ததுபோதும் என சமரசம் ஆவதற்கு முதன்மையான கிரியாஊக்கி எகிறும் வட்டிதான்”
“காப்பீடு போடுவதைவிட ஒரு தொகையை நிலமாகவோ முதலீடாகவோ மருத்துவத்திற்கு என நினைத்து சேர்த்து வைப்பது நன்று. அது நினைத்ததுபோலவே பயன்படும், அந்த வட்டியே அதை வளரச்செய்யும். செலவு நிகழாவிட்டால் நாம் வேறுசெலவுக்கு எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் இப்போது சந்தாவாகச் செலுத்தும் பணத்தை சும்மா வங்கியில் போட்டுவையுங்கள், பத்தாண்டுகளில் நீங்கள் கோரும் உயரிய தொகையாகவே அது ஆகிவிடும். ஆனால் காப்பீட்டு நிறுவனத்திடம் அதை அளித்தால் அதில் பத்துசதவீதத்தைக்கூட எந்நிலையிலும் திரும்பப்பெற முடியாது. அதைப்பெறவும் நீதிமன்றம் செல்லவேண்டும்” என்றார் முதலீட்டு ஆலோசகரான நண்பர்
நான் யோசித்துக்கொண்டிருந்தேன். “அடுத்தமுறை ஒரு காப்பீடு செய்யும்போது அந்த காப்பீட்டுநிறுவனம் உங்களூர் நீதிமன்றத்தில் எத்தனை வழக்குகளில் கட்சியாடிக்கொண்டிருக்கிறது என்று விசாரியுங்கள். தகவல்கள் பெறுவது கடினம். ஆனால் பாதிக்கும் மேற்பட்ட ஈட்டுப்பணக் கோரிக்கைகளை அது நீதிமன்றத்துக்குக் கொண்டுசெல்கிறது என்று தெரியும்” என்றார்கள்.
இன்னொரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வந்தார். நான் இச்செய்தியைச் சொன்னேன். நான் காப்பீடு செய்துள்ள தொகையைச் சொன்னதும் திகைத்து “முட்டாள்தனமாக பணத்தைக் கொடுத்துவிட்டீர்கள். அப்படியே நிறுத்தி குறைவான வழக்குகள் நடத்தும் நிறுவனத்தில் குறைவான தொகைக்கு காப்பீடு செய்யுங்கள்… அதிலும் சிக்கல்கள் உள்ளன. அவர்கள் பொடி எழுத்தில் வைத்திருக்கும் நிபந்தனைகளை மருத்துவத் தேவையின்போது அமர்ந்து வாசித்து அதன்படி மருத்துவம் பார்ப்பது சாத்தியமே அல்ல. அந்த மருத்துவமனைகளில் கணிசமானவை தரமற்ற, கைவிடப்பட்ட மருத்துவமனைகளாகவும் இருக்கும். இருந்தாலும் ஓரளவு பயன். பெருந்தொகைக்குப் போடுவது தெரிந்தே மோசடிக்கு உள்ளாவதுதான்”
“இந்தியாவில் காப்பீடு என்பது ஒரு வகை வேடிக்கை. ஒருபக்கம் ஒருங்கிணைந்த மோசடிக்கும்பலால் காப்பீட்டுநிறுவனங்கள் சுரண்டப்படுகின்றன. மறுபக்கம் வாடிக்கையாளர்களை காப்பீட்டு நிறுவனங்கள் சுரண்டுகின்றன. காப்பீடு வழங்கப்படாதவர்கள் ஒருங்கிணைக்கப்படாதவர்கள். அவர்களுக்கு குரலே கிடையாது” என்றார் இன்னொரு நண்பர். “நாங்கள் காப்பீடு செய்தோம். எங்களுக்குப் பணம் தந்துவிட்டார்கள் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக குரல் எழும். அதுதான் காப்பீட்டின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்துகிறது. நூறுவழக்குகளில் இருவருக்கு பணம் செட்டில் செய்துவிடுவார்கள். அவர்கள் நன்றிப்பெருக்குடன் ஆயிரம்பேரிடம் சொல்வார்கள். தேவையானது ‘கிளெய்ம்’களில் நீதிம்ன்றம் செல்லாமல் எத்தனை கோரிக்கைகளுக்கு பணம் அளிக்கப்பட்டது, காப்பீட்டுக் கோரிக்கைகளில் சராசரியாக எத்தனை சதவீதம் அளிக்கப்பட்டது என்ற தரவுகள்தான். அவை பெரும்பாலும் கிடைப்பதே இல்லை”
நாங்கள் அமர்ந்திருந்த கூடத்தில் காப்பீட்டுத்துறை ஊழியர்களே இருவர் இருந்தனர். “என்ன சொல்றது, நான் அப்றம் சொல்றேன்” என்று ஒருவர் சிரித்தார்.
நான் காப்பீட்டைத் தொடரவேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். ஆனால் இது உண்மையாக இருந்தால் இந்த வணிகமோசடி போல அநீதி பிறிதில்லை.
பாரத ஸ்டேட் வங்கி -ஒரு நிகழ்வு