யூஜி கிருஷ்ணமூர்த்தி : தத்துவமா மெய்யியலா?
அன்புள்ள ஜெ,
சிலநாட்கள்முன் நமது பேச்சின் போது, ஒரு நண்பர் யு ஜி கிருஷ்ணமுர்த்தி பற்றி சிலாகித்தும், ஆதரித்தும் பேசிக்கொண்டிருந்தார், முடிந்தவரை நீங்களும் பேச்சை, வேறு திசைக்கு மடை மாற்றிக்கொண்டிருந்தீர்கள், அதுவரை நான் யூ ஜி கி. யை சிறிது படித்து வைத்திருந்தேன், அதன் பின் தான் அவருடைய நீண்ட பேட்டிகளை தொடர்ந்து கேட்கிறேன், சுயம் என்கிற ஒன்றே கிடையாது, தன்னலமற்ற என்கிற கருத்து அல்லது மனிதர் உலகில் எங்குமே இல்லை, அனுபவம் என்கிற ஒன்றே கிடையாது, வருவதை கவனித்துக்கொண்டிரு, என்பது போல, பல கருத்துக்களை முன் வைக்கிறார். தொடர்ந்து கேட்கும் எவருக்கும் ஒரு ஈர்ப்பு அல்லது அறிவார்ந்த பேச்சு என்று தோன்றி விடலாம். அவ்வளவு நேர்த்தி. ஆனால் ஏகப்பட்ட இடங்களில் முன் பின் முரணாகவே பேசி செல்கிறார்.
சேவையின் மூலம் மேலேறி சென்ற எத்தனையோ கர்ம யோகிகளை போலவே, பக்தி, ஞான, யோக மார்க்கங்களில் பயணித்த எண்ணற்ற முன்னோர்கள் பற்றி நமக்கு சொல்லப்பட்டு இருக்கிறது.
ஓஷோவை கூட நீங்கள் சொல்வது போல, நாம் கட்டி எழுப்பியவற்றை, குலைத்து போடும் ஒரு ஆசிரியர் என்கிற இடத்தில் வைக்கலாம்.
இணையம் மூலம் அறிவு விவாதங்களை தேடுபவர்களுக்கு, யூ.ஜி வந்து விழுந்துகொண்டே இருக்கிறார், உங்களுடைய ஒரு கட்டுரை அவருக்கான { யூ.ஜி} இடத்தை சுட்டிக்காட்டினாலும், அன்று நாம் சந்தித்த நண்பருக்கு உங்கள் கட்டுரையின் சாரம் சென்று சேர்ந்திருக்குமோ தெரியவில்லை,
யூ…ஜி. கிருஷ்ணமூர்த்தி போன்றவர்களை கேட்கும், படிக்கும் ஒருவருக்கு என்ன நிகழவேண்டும்.
அன்புடன்
சௌந்தர் G
***
அன்புள்ள சௌந்தர்,
ஜே.கிருஷ்ணமூர்த்தி, யூஜி போன்றவர்களின் வாசகர்கள் ‘பேச’ வந்தால் நான் தவிர்த்துவிடுவேன். அவர்கள் விவாதித்துக்கொண்டே இருப்பவர்கள், தன்னுள்ளும் வெளியேயும். எல்லாவற்றுக்கும் தர்க்கமும் ,கலைச்சொற்களும் வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் விவாதிப்பது விவாதித்தறியமுடியாதவற்றை. ஆகவே அந்த விவாதத்தினால் பயனில்லை
நான் யூஜியை ‘முழுக்க’ படித்தவனல்ல. அவருக்கு நெருக்கமானவராக இருந்த முன்னாள் மத்திய மக்கள்தொடர்புத்துறை அதிகாரி மு.கி.சந்தானம் அவர்கள் எனக்கு நண்பர். அவர் யூஜியை மிகத்தீவிரமாக எனக்கு அறிமுகம் செய்தார். அவரை நான் ஓரிரு மாதங்கள் கவனித்தேன். அதன்பின் அவரைப்பற்றிய ஒரு புரிதலை அடைந்தேன். அது அவரிலிருந்து நான் பெற்ற புரிதல் அல்ல, நான் என் தேடலினூடாக அடைந்த புரிதல். ஆகவே இப்போது இதை முன்வைப்பது அவரைப்பற்றிய ‘இறுதி மதிப்பீடு’ அல்ல. என்னுடைய தேடலில் அவர் எப்படிப் பொருள்படுகிறார் என்பது மட்டுமே.
ஓர் உதாரணம் சொல்கிறேன்.சர்க்கரைநோயாளிகளுக்கு மருத்துவர் அளிக்கும் அறிவுரை காலை மாலை நடை. இரவெல்லாம் சேர்த்த சர்க்கரைச்சத்தை காலையில் நடந்து எரிக்கவேண்டும். மாலையில் அவ்வாறு பகலில் சேர்த்ததை எரிக்கவேண்டும். எரித்தழிக்கப்படாத சர்க்கரை செல்களில் சேர்ந்து உடலை செயலற்றதாக்குகிறது. நோயுற்று அழியச் செய்கிறது. சிந்தனையிலும் இதுவே. கல்வி என்பது செயலாக, அனுபவமாக மாறுவதே எரிந்தழிதல் என்கிறேன். அவ்வாறு ஆகாத கல்வி நோயுறுத்துவது.
அதையே தன்னறம் என்று சொல்கிறேன். எதில் உங்கள் அகம் தன்னைக் கண்டுகொள்கிறதோ, எதில் முழுமையாக ஈடுபடமுடிகிறதோ, எதில் நம்பிக்கை நிலைகொள்கிறதோ அதில் முழுத்தீவிரத்துடன் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவது. அது ஒருபோதும் எதிர்மறைச் செயலாக இருக்காது. கசப்பையும் காழ்ப்பையும் அவநம்பிக்கையையும் அடிப்படையாகக் கொண்டிருக்காது. சலிப்பையும் துயரையும் அளிக்காது. மகிழ்ச்சியையும் வாழ்ந்தேன் எனும் நிறைவையும் அளிக்கும். அது ஒருபோதும் உலகியல் நலன் கருதியதாக, சுயநலம் சார்ந்ததாக இருக்காது. அதைக் கண்டுகொண்டு அதில் ஈடுபட்டு அதனூடகாக் கற்று உணர்ந்து அமைபவர்கள் அன்றி பிறர் ஏதேனும் உளக்கோணல் நோக்கிச் செல்வார்கள். அதுவே நோய்.
செயலினூடாகவே நாம் நமக்குரியதைக் கற்க முடியும். செயலாற்றுவதற்காக நம்மை தகுதிப்படுத்திக்கொள்ளவே வெளியே கற்கிறோம். செயலாக மாறாத கல்வி நோயுறுத்துவதே. அன்றாடவாழ்வென மாறாத ஒரு துளிக் கல்வி எஞ்சியிருந்தாலும் அது சுமைதான், நோய்தான்.செயலாக மாறாத சிந்தனை வெறுமே மூளையில் ஒரு முள் என இருந்துகொண்டிருக்கும். அதை வருடி வருடி பெரிதாக்கிக்கொண்டிருப்பதே ஒருவகை இன்பமென ஆகும். ஒருகட்டத்தில் சலித்து அப்படியே அடுத்ததுக்குக் கடந்துசெல்வோம். இன்று கணிசமான நவீன ஆன்மிகக் கருத்துக்கள் இப்படி ஆகிவிட்டிருக்கின்றன
செயலென்பது கண்மண் மறந்த அலைவாக இருக்காது. செயல் முழுமையாக செய்யப்பட்டால் ஒவ்வொரு படியிலும் நமக்குக் கற்பிக்கும். நம்முள் ஒன்று விலகிநின்று அதை நோக்கிக்கொண்டுமிருக்கும். நாம் செயலாற்றும்தோறும் அதிலிருந்து விடுபடவும் செய்வோம். தோணி அதை நாம் துடுப்பிட்டுச் செலுத்துந்தோறும் அக்கரைக்கே கொண்டுசெல்கிறது. நாம் தோணியிலிருந்து இறங்கி மேலே செல்லும் இடத்துக்கு. செயலே ஒருவகை தியானம். தியானம் செயலின் ஒருபகுதியாகக் கனியுமென்றால் அது அடுத்த நிலை. ஆக, கல்வி எதுவானாலும் அது செயலுக்கு உதவுவதாக, செயலாக மாறுவதாகவே இருக்கும்
யூஜி கிருஷ்ணமூர்த்தியை எனக்கு பரிந்துரைத்த மு.கி.சந்தானம் அவர்கள் நான் அவரை தர்மபுரியில் முதலில் சந்தித்தபோது ஜே.கிருஷ்ணமூர்த்தியின் தீவிர வாசகர். அதன் பின் நான் அறிந்த அத்தனை யூஜி வாசகர்களும் ஒருகட்டத்தில் ஜே.கிருஷ்ணமூர்த்தியில் இருந்து யூஜிக்கு வந்தவர்கள். எதிர்நஞ்சு போல முன்னாள் ஜே.கிருஷ்ணமூர்த்தியர்களுக்கு யூஜி தேவைப்படுகிறார் போலும். சொல்லப்போனால் இன்று யூஜிக்கு ஏதேனும் ’பயன்’ இருக்குமென்றால் இது மட்டுமே.
ஜே.கிருஷ்ணமூர்த்தி மரபான மனநிலைகளிலிருந்து வெளியே வரச்செய்கிறார். மரபான மனநிலைகள் இரண்டு. சடங்கு மற்றும் பக்தி ஒரு தளம். முன்னோர் சொல்லை ஏற்றுக்கொள்ளல் இன்னொருதளம். அவர் இரண்டிலிருந்தும் விடுதலைபெறவும் தன் அறிவையும் நுண்ணுணர்வையும் நம்பி தொடர்ந்து செல்லவும் வலியுறுத்துகிறார். இந்து மதத்தின் நெடுங்கால மரபு மிகப்பிரம்மாண்டமானது. ஆகவே அது தனிமனிதனை முற்றாக ஆட்படுத்தக்கூடியது. அதிலிருந்து உளவிடுதலை பெறாமல் தனிப்பட்ட ஆன்மீகப் பயணம் இயல்வதல்ல. அதற்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுகிறார்.
ஆனால் அதை ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒர் உரையாடலாகவே முன்வைக்கிறார். அதை அவருடைய வழிச்செல்பவர்கள் ஓர் உரையாடல் மட்டுமாக எதிர்கொள்கிறார்கள். அது வெறும் அறிவுத்தளச் சொல்லாடலாகவே முடிந்துவிடுகிறது. அன்றாடவாழ்வாக, செயலாக, ‘அனுஷ்டான’ மாக ஆகாத எந்த ஞானமும் பயனற்ற தகவல் மட்டுமே. உதாரணமாக ‘மலர்களைக் கவனியுங்கள்’ என்றுஜே.கிருஷ்ணமூர்த்தி சொல்கிறார் என்று கொள்வோம். ‘ஜே.கிருஷ்ணமூர்த்தி மலர்களை பார்க்கச் சொல்கிறார் என்று புரிந்துகொள்வதனாலும் அதை பிறரிடம் பேசும்போது மேற்கோள் காட்டுவதனாலும் எப்பயனும் இல்லை. சொல்லப்போனால் எதிர்விளைவுதான் – வீண் தன்முனைப்பு சேரும். அதை ஓர் அனுஷ்டானமாக ஆக்கிக்கொண்டு ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையில் இரண்டுமுறை மலர்களைப் பார்த்து பத்தாண்டுகளை ஒருவர் கழித்தால் அவருக்கு அந்த ஞானம் பயனளிக்கிறது. அவர் அதனூடாக அறிந்து கனிந்து கடந்து வேறெங்கோ சென்றிருப்பார்.
ஆனால் ஜே.கிருஷ்ணமூர்த்தி அனுஷ்டானங்களை நிராகரிக்கிறார். அவை சடங்குகள் என அவர் நினைக்கிறார். அனுஷ்டானங்கள் சடங்குகளாகும் என்பது உண்மை. சடங்குகள் உளம் அமையாத வெற்றுச்செயல்களாக மாறுவதும் உண்மை. உங்களுக்கு சந்தியாவந்தனம் தேவையற்ற சடங்கு என்று தோன்றுகிறது என்றால் நாளும் இளஞ்சூரியனை நேருக்குநேர் அரைமணிநேரம் பார்ப்பதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். பூசை செய்வது சடங்காக தோன்றுகிறதென்றால் நாளும் நூறு மலர்களைக் கையால் தொட்டுவருவதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.அது இன்னொரு வகை அனுஷ்டானம். அதுதான் நாம் செய்துகொள்ளச் சாத்தியமான வேறுபாடு.[நித்யா பிந்தைய இரண்டையும் செய்துவந்தார்]
அனுஷ்டானம் வெற்றுச்சடங்காக ஆகாமல் காப்பது அதை இயற்றுபவனின் விழிப்புநிலை. ஆனால் அனுஷ்டானமாக ஆகாமல் எதுவும் தொடர்செயல்பாடாக நீடிப்பதில்லை. தொடர்செயல்பாடு அல்லாத எதுவும் மனிதனின் ஆழத்துக்குள் சென்று சேர்வதில்லை. அவனுடைய ஆளுமையை மாற்றுவதுமில்லை. அதையே ‘சாதனா’ என்று வேறு சொல்லாலும் குறிப்பிடுகிறார்கள். உடலால் செய்யப்படுகையில் அனுஷ்டானம் என்றும் உள்ளக்குவிப்பும் இணைகையில் சாதனா என்றும் சொல்லப்படுகிறது.
ஜே.கிருஷ்ணமூர்த்தியின் வாசகர்களில் நானறிந்த எவரும் எவ்வகையிலும் அவரிடமிருந்து பெற்றவற்றை செயலாக்கிக் கொண்டவர்கள் அல்ல. எந்த அனுஷ்டானமும் கொண்டவர்களுமல்ல. ஆகவே அவர்கள் அறிந்திருந்தார்கள், உணர்ந்திருக்கவில்லை. அறிந்ததை செயல்மூலம் தன் ஆளுமையாக ஆக்கிக்கொள்ளவில்லை. மாறாக இன்னும் சிலர் சடங்குகள் தேவையில்லை என்பதை செயல்களே தேவையில்லை என்று விளங்கிக் கொண்டனர்.விளைவாக விரைவிலேயே அந்தக் கல்வியால் பயனில்லை என்று கண்டுகொண்டனர். ‘அறிந்திருக்கிறேன்’ என்னும் ஒருவகை தன்னம்பிக்கையை மட்டுமே அது அளிக்கிறது. ஒரு பாவனையாக நீடிக்கிறது. அதில் சலிப்பு கொள்பவர்கள் அதை உடைக்க யூஜியைத் தேடிச்செல்கிறார்கள்.
யூஜி எதையும் தேடவேண்டாம் என்கிறார். சிந்திக்கவேண்டாம், கருத்துக்களை உருவாக்கிக் கொள்ளவேண்டாம், உண்மை என ஒன்றில்லை என்றெல்லாம் சொல்கிறார். அது ஜே.கிருஷ்ணமூர்த்தியை உடைக்கப் பயன்படுகிறது. உடைத்தபின்? யூஜியும் எஞ்சுவதில்லை. யூஜியின் சிந்தனைகள் வெறும் மறுப்புகள் மட்டுமே. அதனால் எந்தப்பயனும் இல்லை.
சிந்தனைகள் அவை உண்மையா என்பதைக்கொண்டு மதிப்பு பெறுவதில்லை, பயனுள்ளதா இல்லையா என்பது மட்டுமே கேள்வி. இங்கே, இப்பிரபஞ்சப்பெருவெளியில் மனிதன் அறிவது எதுவும் உண்மையா பொய்யா என்று உறுதியாக நிறுவ எந்த வழியும் இல்லை. ஆகவே உண்மைக்கும் பொய்க்கும் எந்த வேறுபாடும் உச்சநிலையில் இல்லை.
யூஜியின் சிந்தனைகள் எதிர்மறைத்தன்மை கொண்டவை. அவை எவ்வகையிலும் புதியவை அல்ல. சார்வாகநெறி என்றும் தார்க்கிக மதம் என்றும் இங்கே எப்போதும் அவை இருந்தன. நுட்பமான சொல்மாறுபாடுகளுடன் மீண்டும் மீண்டும் அவை சொல்லப்பட்டன. இனியும் சொல்லப்படும். சொல்லப்போனால் யூஜி மிக சொகுசாக, சாந்தமாக அதை முன்வைக்கிறார்.
ஆன்மிகம், மீட்பு, நிபந்தனையற்ற அன்பு,பிரபஞ்ச உண்மை, முழுமை இன்னபிற கருத்துக்களை கருத்துக்களாக மட்டுமே உள்வாங்கி மூளைக்குள் போட்டு சோழிவிளையாடிக்கொண்டிருப்பவர்களுக்கு அவற்றை உடைத்து அப்பால்வீச யூஜி போன்றவர்கள் உதவுவார்கள். ஆனால் அவை அகன்ற வெறுமையில் நீடிக்க முடியாது. அவை மறுப்புகள் என்பதனாலேயே மறுக்கப்படுவனவற்றைச் சார்ந்தே நிலைகொள்பவை. எதிர்நிலைகள் மிகவிரைவிலேயே சலிப்பையும் கசப்பையும் அளிக்கும். முடிந்த விரைவில் அவற்றிலிருந்து வெளியே வருவதே நல்லது.
எது தேவையானது? எது பயனுள்ளது? கற்பவற்றை கற்கக் கற்கச் செயலென்று ஆக்கிக்கொள்பவர் தானாகவே அதை உணரமுடியும். செயல்தான் சிந்தனையின் சோதனைக் களம். நம்மை நாம் அறியும் தளமும் கூட. அனைவருக்குமுரிய உண்மை என ஒன்றில்லை. இருந்தாலும் அது ஆளுக்கொரு முகம்கொண்டே வெளிப்படும். நாம் நம் செயல்களத்தில் மீளமீளக் கண்டடையும் உண்மையே நம்முடையது. உண்பதுதேவை, அவ்வுணவு அன்றாடம் செரித்து செயல்பாடுகளாக ஆகிக்கொண்டிருக்கையிலேயே மேலும் பசி எழுகிறது. நம்மையறியாமலேயே நாம் நலமும் ஆற்றலும் அடைகிறோம்
ஜெ
***