ஆத்திகர்கள் என்னும் பிழைப்புவாதிகள்
சிற்பப்படுகொலைகள்
மணல் வீச்சு
நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள்
அன்புள்ள ஜெ,
தங்களுடைய சிற்பப் படுகொலைகள் (jeyamohan.in/327) என்ற கட்டுரையை சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த ஞாபகம் உண்டு. அதில் சிற்பங்கள் பற்றியும், அதன் நுணுக்கங்கள் பற்றியும் அறியாதவர்கள் அதனைப் புனருத்தாரணம் செய்கிறோம் என்ற பெயரால் ஏற்படுத்தும் அழிவுகளை விளக்கியிருந்தீர்கள். வாசிக்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. இன்றும் அந்த அழிப்புகள் தொடர்ந்து நிகழ்ந்துதான் வருகின்றது. நமது மன்னர்கள் விட்டுச் சென்ற முதுசொம் என்றால் அவை கோயில்களும் சிற்பங்களும்தான். இவற்றின் தாற்பர்யங்களை இன்றுள்ளவர்களுக்கு விளக்க முற்படுவது என்பது சாதாரணமான காரியமல்ல. அவற்றைச் சரியான முறையில் ஒழுங்குபடுத்திக் காப்பாற்றாமல் கும்பாபிஷேகங்களும், காவடிகளும் மேற்கொண்டு என்ன பலன் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
அண்மையில் பொன்வண்ணன் அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் சில சிற்பப் படங்களைப் பிரசுரித்திருந்தார். அவை கங்கை கொண்ட சோழபுரத்தின் சிற்பங்கள். எனக்கு உடனடியாக அதன் மறு பக்கமாகவுள்ள சிற்பப் படுகொலைகள்தான் ஞாபகம் வந்தது. சோழப் பேரரசின் ஆயிரமாண்டு கடந்த ஆச்சரியங்களும் இந்து மரபின் தொன்மங்களும் இன்னும் சிதைந்துவிடாமல் எமது பார்வைக்கு இருக்கின்றது என்பதை நினைக்கும் போது சற்று ஆசுவாசமளிக்கிறது.
அவரது புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.
சுயாந்தன்.
சுயாந்தன் இணையதளம்
அன்புள்ள சுயாந்தன்
கங்கைகொண்ட சோழபுரம் ஆலயம் வரலாற்றில் இருக்கும். ஏனென்றால் அது மத்தியத் தொல்பொருள்துறை கட்டுப்பாட்டில், யுனெஸ்கோ ஆதரவில் உள்ளது. 1982ல் நான் கங்கைகொண்ட சோழபுரத்தையும், தாராசுரத்தையும் பார்த்தேன். பாதிக்குமேல் இடிபாடுகளாகக் குவிந்து கிடந்தன. சென்ற 35 ஆண்டுகளாக கல் கல்லாக எடுத்துக் கட்டி எழுப்பப்பட்ட ஆலயங்கள் இவை. அவ்வாறு இந்தியாவில் மத்தியத் தொல்லியல்துறையும் யுனெஸ்கோவும் மீட்டெடுத்த பல ஆலயங்கள் உள்ளன. கஜூராகோ, சாஞ்சி போன்றவை மிகச்சிறந்த உதாரணங்கள். சமீபத்தில் படேஸ்வர் ஆலயத்தொகையை தொல்லியலாளர் கே.கே.முகம்மது அவர்கள் மீட்டெடுத்ததைப் பற்றி நான் எழுதியிருந்தேன். கர்நாடகத்தில் ஹொய்ச்சாள ஆலயங்கள் பல மத்தியத் தொல்லியல்துறையால் மீட்டுக் கட்டப்படுகின்றன. குஜராத்தின் ராணி கி வாவ் போன்றவை வலுப்படுத்தப்படுகின்றன
மத்தியத் தொல்லியல்துறை பெரும்பாலும் நிபுணர்களின் ஆலோசனைப்படிச் செயல்படுகிறது. இரண்டு நெறிகளை மாறாமல் கடைப்பிடிக்கிறார்கள். . ஒன்று, ஏற்கனவே இருந்த சிற்ப அமைப்பை எவ்வகையிலும் மாற்றுவதோ சேர்ப்பதோ இல்லை. இடிந்தவற்றை எடுத்து அடுக்குகிறார்கள். விடுபட்டவற்றைச் செய்து சேர்க்கிறார்கள். இரண்டு, ஓர் ஆலயம் எந்தக்கல்லில் கட்டப்பட்டதோ அதே கல்லையே பழுதுபார்க்கவும் பயன்படுத்துகிறார்கள்.
இவ்விரண்டையும் கடைப்பிடித்தாலேபோதும் நம் ஆலயங்கள் வாழும். ஆனால் தமிழக அறநிலையத்துறை ஆலயங்களில் எந்த கட்டுப்பாடும் கிடையாது. பெரும்பாலும் சுயநலவெறிகொண்ட அறிவிலிகளான பக்தர்களால் ஆலயங்கள் சூறையாடப்படுகின்றன. மணல்வீச்சு, கான்கிரீட் கட்டிடங்களை சேர்த்துக் கட்டுவது, சிற்பக்கூடங்களை பொருட்களைப் போட்டுவைக்குமிடமாக்குவது, கலைமண்டபங்களை கடைகளாக்குவது, மின்பொருட்களை பொருத்தவும் சாரங்களும் தூண்களும் அமைக்கவும் சிற்பங்களை உடைத்து துளைத்துச் சீரழிப்பது என இங்கு நிகழும் சூறையாடல்கள் வரலாற்றில் எப்போதும் நிகழாதவை.
நான் கண்ட சிற்பங்களில் பல இன்று சீரழிந்துவிட்டன. அடுத்த தலைமுறைக்கு கால்பங்கு சிற்பங்கள் சிதைந்தே சென்றுசேரும் என்பதே இன்றுள்ள நிலை. இன்றுகட்டப்பட்ட சிமிண்ட் கட்டுமானங்கள் சிதைகையில் கணிசமான கோயில்கள் இடியவும்கூடும். [இதற்கிணையானது அனைத்து தொல்நெறிகளையும் கைவிட்டு இஷ்டத்துக்குச் செய்யும் பூசைகள். கருவறைகளுக்குள் நின்று கூச்சலிடுவது, செல்பேசியில் பேசுவது, பணம் பறிப்பது, காசுகொடுத்தால் எதைச்செய்யவும் அனுமதிப்பது. ஆனால் அது வேறு விஷயம்]
நம் பக்தர்களிடமிருந்து ஆலயங்களைக் காப்பாற்ற இன்று எந்த வழியும் தென்படவில்லை. ஒவ்வொருமுறை ஆலயங்களுக்குச் செல்லும்போது இவ்வாறு சுரணையற்ற மூர்க்கமான அழிவைக் கண்டு கொந்தளித்து திட்டி மனம்சோர்ந்து திரும்புவதே வழக்கமாக உள்ளது.
ஜெ
***