அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு
தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2018 வாங்கினேன். தோப்பில் முஹம்மது மீரானின் கதை இருந்தது. ”சொர்க்க நீரூற்று” எங்கோ படித்த நினைவு வேறு. ஒருவேளை மீள்பிரசுரம் செய்தார்களோ என்னமோ தெரியவில்லை. அது மட்டுமே கிடைத்த ஒரே திருப்தி. ஒரு ஒப்பீட்டுக்காக கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நாளிதழ், வார, மாத இதழ்கள் வெளியிட்டிருந்த தீபாவளி, பொங்கல் மலரை ஒரு பார்வை பார்த்தேன். பெரியதொரு வேறுபாட்டை உணர்கிறேன். இதை வேறெவரும் கவனித்தார்களா என்பது தெரியவில்லை. தினமணியின் ரம்ஜான் மலருக்கு இலக்கிய அளவீடுகளில் எந்த இடமென்று பிறகு விவாதிப்போம். ஆனால் சிறுபான்மை மக்களை மென்மேலும் தனிமைப்பட காரணமான பலரின் கட்டுரையை “தினமணி” வெளியிடுவதில் கைக்கொள்ளும் திறனறி என்பதென்ன?
இந்த மலர் ஐம்பது ரூபாய்? வாசககருக்கு தினமணி அளிக்கும் நுகர்வுப் பயன் என்ன? வைகோ, பெ.மணியரசன், ஈரோடு தமிழன்பன் என பலரும் தம் பங்குக்கு குறை வைக்காமல் சொதப்பி உள்ளனர். பொதுப் பத்திரிகைகள் ஒன்றுகூட இராம.கோபாலன் அல்லது அவரைப் போன்ற வலதுசாரிகள் எவரின் படைப்புகளை தீபாவளி, பொங்கலில் வெளியிட்டதில்லை. கலப்பு மணம் புரிந்த தம்பதிகளுக்கு பாஸ்போர்ட் வழங்குவது குறித்த விவகாரத்தில் சுஷ்மா சுவராஜ் எதிர்கொண்ட “திருப்திபடுத்தும்” தன்மை கொண்டதைப் போன்ற வகைமையில் பா.ஜ.கட்சியின் ஊடக ஒருங்கிணைப்பாளர் நாராயணன் திருப்பதி என்பவர் ‘ “மதம்” பிடிக்காத மதங்கள்’ என்றொரு கட்டுரை எழுதியுள்ளார்.
“இலக்கியத் துறையில் மாற்றங்கள்” என சென்னை பாரதிய வித்யா பவனில் தாங்கள் பேச வந்த சந்தர்ப்பத்தில் கேட்க நினைத்தேன். ஒட்டுமொத்தமாக சிறுபான்மை எழுத்துக்கள் என கடந்த அரை நூற்றாண்டுகாலம் முஸ்லிம் பத்திரிகைகளில் எழுதப்பட்டதை தொகுத்து பார்க்கும்பொழுது ஏற்படும் நிராசை தினமணி போன்ற பொது பத்திரிகைகள் தோற்கும்பொழுது ஏற்படும் வலி கடுமையானது. எனக்கு மலையாளம் வாசிக்கத் தெரியாது. மலையாள பத்திரிகைகள் வெளியிட்டுவரும் ரம்ஜான் மலரை பிறர் படிக்க கேட்டு வருபவன், வளைகுடா அரபு நாடுகளில் பல்லாண்டுகள் கழித்தவன் என்கிற அனுகூலத்தில் 90-களில் முகிழ்த்த நட்புறவை கேரள மக்களுடன் இருபதாண்டுகளாக பராமரிப்பவன். அது தரும் பரவசத்தின் ஒரு துளி எஞ்சியிருக்கும் வாழ்நாளில் என் தாய் தமிழ் மொழியில் கிடைத்துவிடாதா என்கிற ஏக்கமே மலையாளம் – தமிழ் இரண்டிலும் இயங்கும் தங்களிடம் கேட்க வைத்தது?
கொள்ளு நதீம்
***
அன்புள்ள கொள்ளுநதீம்,
சிறுபான்மையினருக்கான சிறப்பிதழ் என்ற புரிதல் தவறானது என நினைக்கிறேன். அதுவே ஒருவகை தனிமைப்படுத்தல். தீபாவளி, பொங்கல் விழாக்காலச் சிறப்பிதழ்களைப் போல ரம்ஸான், கிறிஸ்துமஸ் சிறப்பிதழ்களை வெளியிடலாம். அது ஓர் இயல்பான நிகழ்வாகவே முன்பு இருந்தது. நான் பல்வேறு ரம்ஸான் இதழ்களில் எழுதியிருக்கிறேன். இரண்டு கதைகள் மட்டுமே இஸ்லாமியப் பின்னணி கொண்டவை அவற்றில். மற்றவை பொதுவான கதைகள்தான். கேரளத்தில் இப்போதும் இப்படித்தான் நிகழ்கிறது.
இஸ்லாமியரைத் தனிமைப்படுத்துபவர்கள் மூன்று சக்திகள். இஸ்லாமியரை அரசியலெதிரிகளாகக் கட்டமைக்கும் இந்துத்துவ அரசியல் சக்திகள், இஸ்லாமியரை தனித்தேசிய இனமாக , உலகளாவிய மதக்குழுவின் பகுதியாக, இங்குள்ள பிறருக்கு மாறானவர்களாக, ஆண்டபரம்பரையினராக, உலகின் உடைமையாளர்களாக முன்வைக்கும் இஸ்லாமிய நவமதவெறியர்கள். இவர்களுக்கு இணையாகவே இஸ்லாமியரை தங்கள் அரசியல் ஆயுதங்களாக ஆக்கும்பொருட்டு அவர்களின் அவநம்பிக்கையைப் பெருக்கிக்கொண்டிருக்கும் இடதுசாரிகளில் ஒருசாரார். தனிமைப்படுதலினூடாக இஸ்லாமியர் இழப்பது மிக அதிகம். அதை அவர்களில் பெரும்பாலானவர்கள் உணர்வதில்லை
ஆனால் இந்தச்சூழலுக்கு எதிரான ‘கருத்துப்பூசல்’களில் நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். சூழலில் ஒலித்துக்கொண்டிருக்கும் பல்லாயிரம் அரசியல் கருத்துக்களில் ஒன்றாகவே அக்குரலும் ஆகும். கலாச்சார நடவடிக்கைகள், கலை நீண்டகால அளவில் மௌனமான ஆழமான நல்விளைவை உருவாக்குமென நினைக்கிறேன். எந்த சொற்பொழிவாளரைவிடவும் தோப்பில் முகமதுமீரான் அவர்கள் இஸ்லாமியச் சமூகத்தை பிறருக்கு அறிமுகம் செய்திருக்கிறார். இஸ்லாமியருடன் மானசீகமான இணக்கத்தை உருவாக்கியிருக்கிறார். இஸ்லாம் , இஸ்லாமியர் சார்ந்து மதவாதிகளும் அரசியல்வாதிகளும் உருவாக்கும் ஒற்றைப்படை அடையாளங்களை கடந்து கலாச்சாரநுட்பங்கள், ஆசைகள், அச்சங்கள், சிறுமைகள், பெருமைகள் அனைத்தையும் ஆத்மார்த்தமாகப் பேசுவதனூடாக அவருடைய கலை அதைச் சாதித்திருக்கிறது. அவருடையது ஒருவகையான ‘அரசியலற்ற’ எழுத்து. ஆனால் அதுதான் கலையின் அரசியல்
ஈகைப்பெருநாள் மலர்கள் போடும்போது அத்தகைய எழுத்துக்களை கொண்டு சென்று சேர்க்கவேண்டும். இஸ்லாமிய அரசியல்வாதிகள், இஸ்லாமியரை நோக்கிப் பசப்பும் முற்போக்கு அரசியல்வாதிகள், அவர்கள் மேல் வெறுப்புமிழ்பவர்கல் எவருக்கும் அதில் இடமிருக்கலாகாது. இன்று தோப்பில் முகமது மீரான், கீரனூர் ஜாகீர் ராஜா போல இலக்கியத்தின் நுட்பங்களில் நம்பிக்கை கொண்ட எழுத்தாளர்கள், அதை நம்பி எழுதுபவர்கள் அருகி வருகிறார்கள். மாறாக, இன்றுள்ள இருமுனைப்பட்ட அரசியலை எழுதுபவர்கள் முன்னிலைப்படுகிறார்கள். நீண்டகால அளவில் இஸ்லாம் இஸ்லாமியர் என்றாலே ஒருவகை அரசியல்தரப்பு என்ற எண்ணத்தையே இது உருவாக்கும். கலை எப்போதுமே ஒற்றைப்படையாக்கலை கடந்துசெல்லவேண்டியது. நுட்பங்களால் பேசவேண்டியது. அத்தகைய எழுத்துக்களை முன்வைப்பதே இன்றைய தேவை. அதை இதழாளர் செய்யாவிட்டால் வாசகர்கள் செய்யலாம். இணையவெளிதான் திறந்துள்ளதே
ஜெ
***