தமிழ் ஹிந்து –சிறுமையைக் கடத்தல்

unnamed

ஜெயகாந்தன் வைரமுத்து உரை

அன்புள்ள ஜெ

ஒரு தன்னிலை விளக்கம்..

ஜெயகாந்தன் குறித்தான வைரமுத்துவின் உரையில் ஜெயகாந்தன் மீதான விமர்சனஙகள் தவறு என்பதை உங்களை மேற்கோள் காட்டி வைரமுத்து அழகாக நிருவினார்.   இதை சென்ற கடிதத்தில் நான் குறிப்பிட்டிருந்தேன்

தமிழ் ஹிந்துவில் ஒரு பகக அளவுக்கு அவரது பேச்சின் எழுத்து வடிவம் வந்திருந்தது…   அதில் உங்கள் பெயரை லாகவமாக தவிர்த்திருந்தனர்..

இந்துவின் கட்டுரையை மட்டும் படித்தால் நான் சொன்ன தகவல் தவறு என தோனறக்கூடும் என்பதால் இந்த விளக்கம்

அன்புடன்
பிச்சைக்காரன்

***

அன்புள்ள பிச்சைக்காரன்,

அப்படியா? நான் பார்க்கவில்லை.

பொதுவாக இதழியலுக்குச் செல்லும் கற்றுக்குட்டிகளிடம் ஒரு நம்பிக்கை உண்டு, அவர்களால் எழுத்தாளர்களை உருவாக்கவும் மறைக்கவும் முடியும் என்று. அதை சில சிறு உதாரணங்கள் வழியாக நிரூபித்துக்கொள்ளவும் செய்வார்கள். குறிப்பாகச் சோட்டா எழுத்தாளர்கள் இதழியலாளர்களாக உருமாறும்போது இலக்கியச் சூழலின் சில்லறைக் காழ்ப்புகளை இதழியலுக்குக் கொண்டுசெல்கிறார்கள். வெறும் இதழியலாளர்களுக்கு இலக்கியம் மீதிருக்கும் பொதுவான நல்லெண்ணம்கூட இவர்களுக்கு இருப்பதில்லை. இவர்கள் இலக்கியத்திற்கு ஆற்றும் எதிர்மறைப் பங்களிப்பே மிகுதி

இவர்கள் அறியாதது என்னவென்றால் இவர்களால் உருவாக்கப்படாத,இவர்களால் மறைக்கவும் முடியாத எழுத்தாளர்தான் உண்மையில் முக்கியமானவர். அவ்வாறு ஆவதுதான் எந்த எழுத்தாளனுக்கும் மெய்யான சவால். இதை இவர்களுக்குப் புரியவைப்பது மிகவும் கடினம் ஆனால் நான் எழுத்தாளன் என்ற முனைப்புடன் எழுந்துவரும் எந்த இளம்எழுத்தாளனுக்கும் இது புரியும். எந்த நல்ல வாசகனுக்கும் இது பிடிகிடைக்கும்

தமிழ்ஹிந்துவின் மீதான என் விமர்சனங்களுக்குப்பின் அங்குள்ள ஒரு கும்பல் என் மேல் காழ்ப்புடன் இருப்பது தெரியும். அதில் எழுதக்கோருவதில்லை. செய்திகள் வெளியிடுவதுமில்லை. தமிழில் வெண்முரசு போன்ற ஒரு பெருமுயற்சி நிகழ்கிறது, இங்குள்ள ஊடகங்களின் கவனம் என்ன? இவர்கள் கவனிக்காவிட்டால் அதற்கு வாசகர்கள் இல்லை என்றாகிவிடுமா என்ன? தமிழிலுள்ள ஒட்டுமொத்த அச்சிதழ்களும் அகன்றாலும் எனக்கு ஒன்றுமில்லை. நான் என் ஊடகங்களை நானே உருவாக்கிக்கொண்டு எழுந்து வந்த எழுத்தாளன்.

காலத்தின் வடிவான எழுத்தின்முன்பும் அதன் முகமான எழுத்தாளனின் முன்பும் தாங்கள் எவ்வளவு சிறியவர்கள் என்று, தங்களை விட எத்தனையோ மடங்கு பெரிதான இதழியலாளர்கள் இங்கே வந்து மறைந்துள்ளனர் என்று, புதுமைப்பித்தனோ சுந்தர ராமசாமியோ என்றுமிருப்பார்கள் என்று உணர்வதற்கு ஒரு குறைந்தபட்ச அறிவுத்திறனும், நுண்ணுணர்வும் தேவை. அது அளிக்கும் அடக்கம் தேவை. இவர்கள் அதைக்கூட உணரமுடியாத அளவுக்கு மிகச்சிறியவர்கள்.

ஜெ

***

முந்தைய கட்டுரைமரத்திலிருந்து கனியின் விடுதலை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஎன்றுமுள்ள நதி