‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 16

tigபால்ஹிகநகரியின் தெருக்கள் மிகக் குறுகியவையாக இருந்தன. ஒரு தேர் ஒரு திசைக்கு செல்லத்தக்கவை. அந்நகரை பூரிசிரவஸ் புதுப்பித்து அமைக்கும்போது கிழக்குக்கோட்டையிலிருந்து அரண்மனை வரைக்கும் நேராகச் செல்லும் நான்கு தேர்ப்பாதைகள் கொண்ட பெருஞ்சாலை ஒன்றை அமைத்தான். அஸ்தினபுரியில்கூட அத்தனை பெரிய அரசப்பாதை இல்லை என்று அவன் அறிந்திருந்தான். அவன் தந்தை “என்ன எண்ணுகிறாய் நீ? இங்கே என்ன சாலையிலேயே அங்காடிகளும் ஆட்டக்களங்களும் அமையவிருக்கின்றனவா?” என்றார். அவன் மறுமொழி சொல்லவில்லை. அவன் உள்ளத்தில் இருப்பது  இந்திரப்பிரஸ்தம் என்று அறிந்திருக்கவில்லை.

அந்தப் பெரும்பாதை முதலில் அவர்களுக்கு திகைப்பூட்டும் ஒன்றாக இருந்தது. அதன் ஒரு ஓரமாகவே மக்கள் சென்று வந்துகொண்டிருக்க பெரும்பகுதி ஒழிந்து கிடந்தது. “வெறும் ஆணவத்தின் வெளிப்பாடேதானா? நகர்நிலத்தின் பெரும்பகுதி இச்சாலையால் வீணாகிவிட்ட்து என்கிறார்களே?” என்று சலன் அவனிடம் சொன்னான். பூரிசிரவஸ்  “பாதை இருக்குமெனில் மானுடம் அதில் செல்லும். அனைத்து இடங்களையும் அது நிரப்பும்” என்றான். மிகச் சில ஆண்டுகளிலேயே அந்த நான்கு தேர்ப்பாதையிலேயே வண்டிகள் ஒன்றையொன்று முட்டிக்கொண்டு, கூச்சலிட்டுக்கொண்டு, தேங்கி, தயங்கி முன்னகர்வது காணக்கிடைத்தது.

நகர்நடுவே இருந்த தொன்மையான அரண்மனையை இடித்து ஏழு அடுக்குகள் கொண்ட மாளிகையாக அவன் மாற்றிக்கட்டியிருந்தான். அஸ்தினபுரியிலோ இந்திரப்பிரஸ்தத்திலோ இருந்த மாளிகைகளை அந்த மலைநிலத்தில் எழுப்ப முடியாதென்று அவன் அழைத்து வந்த கலிங்கச் சிற்பி சக்தர் சொன்னார். “இங்குள்ள நிலம் ஒவ்வொரு நாளுமென சரிந்துகொண்டிருக்கிறது. நான் இந்நகரைச் சுற்றிவந்து இங்குள்ள தொன்மையான பாறைகளை பார்த்தேன். அவை அனைத்துமே ஆண்டுக்கொருமுறை சற்றே பெயர்ந்திருப்பதை அவற்றின் பின்னாலிருக்கும் மண்தடத்திலிருந்து கண்டுகொண்டேன். நோக்குக, அப்பெரும்பாறை அதற்கு மேலிருக்கும் மலை முடியிலிருந்து பெயர்ந்தது. அது விழுந்து காலப்போக்கில் நகர்ந்து வந்த இடத்தை இங்கிருந்தே நோக்க முடியும். இது மலையிலிருந்து மேலாடை என மெல்ல நழுவும் மண்.  சற்று விரைவு குறைந்த நீர்ப்பரப்பென்றே இதை கொள்ளவேண்டும். இங்கு மாளிகை கட்ட இங்குள்ள சிற்பிகளாலேயே இயலும். நெடுங்காலப் பட்டறிவால் அவர்கள் தொகுத்த நுட்பங்களையே நாம் பயன்படுத்த வேண்டும்.”

“ஆனால் இங்கு மாளிகைகள் இல்லையே” என்று பூரிசிரவஸ் சொன்னான்.  “தொல்மலைக்குடிகள்கூட மாளிகை கட்டுகிறார்கள். மாளிகை கட்டுவதென்பது மானுடனின் அகவிசைகளில் ஒன்று. ஒரு நிலத்தின் மாளிகைபோல் பிறிதொன்றிருக்காது, அவ்வளவுதான். வெறும் மூங்கிலாலேயே ஏழடுக்கு மாளிகை கட்டப்பட்டிருப்பதை நான் கண்டிருக்கிறேன். இளவரசே, உண்மையில் மானுடன் வசிப்பதற்காக மாளிகைகளை கட்டுவதில்லை. அதற்கு குடில்களே போதும்.  தன் உள்ளத்திலெழுந்த பிறிதேதோ ஒன்றின் நிகர்வடிவென மாளிகைகளை அமைக்கிறான் மானுடன்.”

“இப்புடவியை பெரும் மாளிகையாக மானுடன் எண்ணிக்கொள்கிறான் என்று சிற்ப நூல்கள் சொல்கின்றன” என சக்தர் சொன்னார். “ஒன்றின்மேல் ஒன்றென அடுக்கப்பட்டது. ஒன்றிலாது பிறிதென நிலைகொள்ளாதது. மாளிகைகளைக்கொண்டே ஒரு குடியின் உலகநோக்கென்ன, அறம் என்ன, மெய்மை என்ன என்று சொல்லிவிட முடியும். இங்கு உங்கள் குலச்சிற்பிகள் இங்குள்ள பொருட்களைக் கொண்டு கட்டிய மாளிகைகளை எனக்கு காட்டுங்கள். அவர்களின் உதவியுடன் அந்த மாளிகையின் அளவுகளை மட்டும் சில மடங்குகளாக பெருக்கிக்கொள்கிறேன்.”

பால்ஹிக தொல்குடியைச்சேர்ந்த பன்னிரண்டு முதுசிற்பிகளை பூரிசிரவஸ் தலைநகருக்கு வரவழைத்தான். சக்தர் அவர்களுடன் அமர்ந்து சொல்லாடி அவர்கள் மண்ணில் வரைந்து காட்டிய வரைபடங்களை ஆராய்ந்து தெளிந்து அவனிடம் சொன்னார். “அரசே, இவர்கள் கட்டிக்கொண்டிருப்பது நாங்கள் ஊரில் அமைப்பதுபோன்ற கட்டடங்களை அல்ல. அவை நிலைகொள்வதனால் அவற்றை நிறுவுவதை ஸ்தாபாத்யம் என்று சொல்கிறோம். இவை பூழிமண்ணில் மிதக்கும் தெப்பங்கள் போன்றவை. இவற்றை கௌலதாரணம் என்கிறார்கள்.”

“அடித்தளத்தை ஆழ ஊன்றுவது எங்கள் வழக்கம். அவை வேர்போல தாங்கி நிற்க மரமென எழுவது எங்கள் மாளிகைகள். இவர்கள் கட்டும் கட்டடங்களுக்கு வேர்களே இல்லை. தெப்பத்தின் மூழ்கியிருக்கும் பகுதி போலவே அடித்தளத்தை கட்டுகிறார்கள். ஒன்றுடன் ஒன்று தொடுக்கப்பட்ட பெருமரச்சட்டங்கள் முடிந்தவரை மிகுதியான நிலத்தில் பரவியிருக்கும்படி அமைக்கிறார்கள். அவற்றுடன் இணைக்கப்பட்ட மரச்சட்டங்களை எழுப்பி உச்சியில் இணைத்து கூரை வேய்கிறார்கள். அம்மரச்சட்டங்களுக்கு இடையில்தான் கற்களை சேற்றால் இணைத்து அடுக்கி சுவர்களை அமைக்கிறார்கள்.”

“மண்ணின் அலைகளில் மிதந்து கிடக்கும் இக்கட்டடங்கள் சாய்ந்தும்  சரிந்தும் நிற்குமே ஒழிய நிலையழிந்தால் உடைந்து விழுவதில்லை. ஒருவேளை அருகிருக்கும் பெருமலைகளிலிருந்து மண் சரிந்திறங்கி செல்லுமென்றால் இக்கட்டடங்கள் அப்பெருக்கில் மிதந்து இங்கிருந்து ஒரு நாழிகை தொலைவுகூட சென்று எந்தச் சிதைவுமின்றி நிலைகொள்ளக்கூடும். இங்கு வந்தது இத்தகைய கட்டடங்களைப் பற்றி அறிவதற்கான நல்வாய்ப்பாக அமைந்தது” என்றார் சக்தர்.

பால்ஹிகத்துச் சிற்பிகளும் சக்தரின் தலைமையில் கலிங்கச் சிற்பிகளும் சேர்ந்து ஓராண்டில் அப்பெருமாளிகையை கட்டி முடித்தனர். பால்ஹிக மண்ணில் ஏழடுக்கு மாளிகை ஒன்று எழுமென்று முன்னரே குலப்பூசகி அருளெழுந்து குறி சொல்லியிருக்கிறாள் என்றனர் குடிப்பாடகர். ஒவ்வொரு நாளும் பால்ஹிகச் சிற்றூர்கள் அனைத்திலிருந்தும் மக்கள் வந்து கூடி அம்மாளிகை எழுவதை நோக்கி நின்றனர். அது கட்டிமுடிக்கப்படுவதற்கு முன்பாக தொல்கதைகளிலொன்றாக மாறியது. தெய்வங்களின் வெறியாட்டெழுகையில் அம்மாளிகைக்கு மீண்டும் மீண்டும் வாழ்த்து சொல்லப்பட்டது.

பால்ஹிகக் குடிகள் அனைவரும் பங்கெடுக்கும்  விழாவாக முதல் அகலேற்றுச் சடங்கு நிகழ்ந்தது. உண்டாட்டும் செண்டு விளையாட்டும் களியாட்டும் முடிந்து அரங்கில் அமர்ந்திருக்கும்போது மதுக்களியில் சரிந்த விழிகளுடன் மீசையை கோதியவராக சோமதத்தர் சொன்னார். “அனைவரும் நம்மை வாழ்த்துகிறார்கள். ஆனால் இங்கு ஒவ்வொருவரும் இதைப் போன்று ஒரு மாளிகை நகரில் அமையவேண்டுமென்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள், மைந்தா.” ஏப்பம் விட்டு “நம் முன் நிற்கையில் அவர்களின் விழிகளில் அந்த அனலை காண்கிறேன். மூடர்கள்” என்றார்.

அவர்  அருகே அமர்ந்திருந்த சலன் “ஆம், இன்னும் பத்தாண்டுகளுக்குள் பால்ஹிக நிலத்தில் இதே போன்று பல மாளிகைகள் எழும், ஐயமே வேண்டியதில்லை” என்றான். “அது நமக்கு பெருமைதான், தந்தையே. இந்த மலைநிலங்கள் அம்மாளிகைகளால் தங்களுக்கென ஓர் இலக்கை உருவாக்கிக்கொள்கின்றன. அக்கனவை நோக்கி அவர்கள் செல்கையிலேயே நெடுங்காலத்து நீள்துயிலில் இருந்து விழித்தெழ முடியும். என்றோ ஒருநாள் நம் குடிகள் கைகோத்து நமக்கென்று ஒரு பேரரசு அமையுமென்றால் அதற்கென்று ஊன்றப்பட்ட முதல் எண்ணத்துளியாக இம்மாளிகை அமைந்ததென்று எண்ணுவோம். அது நமக்கு பெருமையே.” சோமதத்தர் நிறைவின்மையுடன் மீசையை சுருட்டியபடி முனகினார்.

மாளிகை முகப்பை அடைந்து புரவியிலிருந்து இறங்கியதும் பூரிசிரவஸை நோக்கி ஓடிவந்த ஏவலர்கள் முகம்மலர்ந்து வாழ்த்துரைத்தனர். மூத்த காவலர்தலைவரான குரகர்  “தாங்கள் இங்கு திரும்பும் செய்தி முன்னரே இங்கு வந்து சேர்ந்துவிட்டது, இளவரசே. ஆனால் இவ்வண்ணம் தனியாக வருவீர்கள் என எண்ணவில்லை” என்றார். பூரிசிரவஸ் அவர்களின் தோள்களைத் தட்டி “எப்படி இருந்தது இம்முறை பனிப்பொழிவு?” என்றான். “கடினம். ஒருவழியாக வெண்ணிற அரக்கி விலகிச் சென்றாள். இம்முறை நகருக்கு வெளியே குளிர் தாளாது நிலம் வெடித்துவிட்டது என்று சொன்னால் நம்பமாட்டீர்கள்” என்று அவர் சொன்னார்.

பூரிசிரவஸ் எச்சரிக்கைகொண்டு “கோட்டையிலெங்கேனும் விரிசல் உண்டா?” என்று  கேட்டான்.  குரகர் சிரித்தபடி “கோட்டையே விரிசல்களால் ஆனது அல்லவா? மேற்கொண்டு விரிசல்கள் விழ வாய்ப்பில்லை” என்றார்.  பூரிசிரவஸ் நகைத்து “ஆம், அதன் கட்டமைப்பே அப்படித்தான்” என்றான்.  “பனி பொழியப் பொழிய அதன் இண்டு இடுக்குக்குள் நிறைந்து கொள்கிறது. பனி விரிந்து சுவர்களை வெடிக்க வைக்கும் என்றார்கள். ஆனால் இடுக்கின் ஆழத்தில் வெப்பமிருப்பதால் உருகி அடியில் நீரோடையாக மாறி சென்று கொண்டே இருந்தது” என்றான் ஒரு காவலன்.

குரகர் “உண்மையில் இக்கோட்டைதான் நகரை பனிப்புயலிலிருந்து காத்தது. கோட்டைக்கு வெளியே மூன்று பக்கமும்  கோட்டையளவுக்கு உயரமான பனிப்படிவு இருந்தது. கோட்டைக்குள் மெல்லிய வெண்துகள் பொழிவு மட்டுமே” என்றார். “தந்தை என்ன சொல்கிறார்?” என்றபடி பூரிசிரவஸ் அமர்ந்தான். அவன் காலணிகளை கழற்றிய ஏவலன் “ஒவ்வொரு நாளும் வணிகம் பெருகுகிறது. ஆகவே ஒவ்வொரு நாளும் வணிகப்பூசலும் பெருகுகிறது. விழித்தெழுந்தது முதல் இரவுறங்குவது வரை அரசருக்கு ஓய்வில்லை” என்றான். பூரிசிரவஸ் “மூத்தவர் இருக்கிறாரே” என்றான். “ஆம், அவரில்லையேல் இந்த நகர் நங்கூரமிழந்த கலம்” என்றார் குரகர்.

பூரிசிரவஸ் தன் அறைக்குச் சென்று நீராடி உடைமாற்றி நேராக  தந்தையின் அறைக்குத்தான் சென்றான். தன் தனியறையில் மஞ்சத்தில் அமர்ந்து அருகிருந்த அமைச்சர் கர்த்தமரிடம் உரையாடிக்கொண்டிருந்த சோமதத்தர் அவன் உள்ளே நுழைந்ததும் எழுந்து கைகளை விரித்தார். அவன் அருகணைந்ததும் அள்ளி மார்போடணைத்து முதுகைத்தட்டி கர்த்தமரிடம் “ஒவ்வொரு நாளும் இவன் வருகையை எண்ணி விழிக்கிறேன். நன்கறிவேன் இவன் எங்கிருக்கிறான் என்று. இருந்தாலும் ஒருநாள் வந்துநிற்பான் என்ற கற்பனையே அந்நாளை இனிதாக்குகிறது” என்றார். கர்த்தமர் சிரித்து “அருகிலில்லாத மைந்தனைப்போல அரியவன் எவனுமில்லை என்றொரு சொல் உண்டு” என்றார்.

சோமதத்தர் சிரித்தபின் முகம் மாறி  “போர் அறிவிக்கப்பட்டுவிட்டது அல்லவா?” என்றார். “ஆம், தந்தையே. போர்தான். படைமுகம் திரண்டுகொண்டிருக்கிறது. இன்னும் சில நாட்களில் அரசப்பேரவை கூடி முறையான போர் அறிவிப்பை வெளியிடும் என்று எண்ணுகிறேன்” என்றான். “நமது படைகளென பெரிதாக எதையும் நாம் அனுப்ப முடியாது. இங்கு எண்ணிக்கையே மிகக் குறைவு. நாம் அனுப்புவது உன்னைத்தான்” என்றார் சோமதத்தர். “நமது படைகள் மலையிறங்கும் பயிற்சி பெற்றவை. எனவே முன்னின்று விரைந்து தாக்க அவற்றால் இயலும். நான் நடத்தும் படையே பெரும்பாலும் முதல்நாள் போரில் முதல் தாக்குதல் நடத்த வாய்ப்பு” என்று  பூரிசிரவஸ் சொன்னான்.

காவலன் உள்ளே வந்து சலன் வருவதை அறிவித்தான். உள்ளே அனுப்புமாறு சோமதத்தர் கைகாட்டினார். சலன் பூரியுடன் உள்ளே வந்து தந்தையை நோக்கி தலைவணங்கிவிட்டு பூரிசிரவஸை அணைத்துக்கொண்டான். அவன் தோளில் தட்டியபடி “மேலும் பெருத்துவிட்டாய். இங்கிருப்பதைவிட அஸ்தினபுரியில் நல்லுணவு என்று எண்ணுகின்றேன்” என்றான். பூரிசிரவஸ் “அங்கு புரவியேற்றமும் மலையேற்றமும் மிகக் குறைவு. பெரும்பாலும் அவைகளில் அமர்ந்து சொல்லாடுகிறேன்” என்றான். “ஆம், உன் பெயரை சூதர்கள் பாடுகிறார்கள். பாரதவர்ஷத்தின் அரசுசூழ் திறலோரில் ஒருவனாக மாறிவிட்டிருக்கிறாய். உன்னால் பால்ஹிகக் குடிகள் நலம் பெற்றால் நன்று” என்றான் சலன்.

பூரிசிரவஸ் “இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அஸ்தினபுரியில் அரசப்பேரவை கூடும். அதற்குள் நான் மூதாதையர் அனைவரிடமும் வாழ்த்துக்களைப் பெற்று திரும்பவேண்டும். தந்தை வாழ்த்தையும் தங்கள் வாழ்த்தையும் பெறுவதற்காக வந்தேன்” என்றபின் சற்று தயங்கி “அதற்கு முன் நம் குடியின் மூத்தவராகிய முதல் பால்ஹிகரை கண்டு அடிபணிந்து வாழ்த்துரை பெறவேண்டும்” என்றான். சலன் “மலையுச்சிக்குச் செல்கிறாயா?” என்றான்.  “ஆம்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

சலன்  “அவர் இப்போது அங்குதான் இருக்கிறாரா என்றுகூட தெரிவதில்லை. உண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அவரைப்பற்றி ஏதேனும் செய்திகள் வந்துகொண்டிருந்தன. அவருக்கு அங்கு ஏழு மைந்தர்கள் என்றும் எழுவரும் அவரைப்போலவே பேருடலர்கள் என்றும் சொன்னார்கள். பின்னர் நாம் ஆர்வமிழந்துவிட்டோமா, நமக்கு செய்தி சொல்பவர்களின் தொடர்பு அறுந்துவிட்டதா என்று தெரியவில்லை. இப்போது உயிருடன் இருக்கிறாரா என்றே கூறமுடியாது” என்றான்.

சோமதத்தர் “உயிருடன் இருந்தால் நூற்று எழுபது அகவை கடந்திருக்கும்” என்றார். “அத்தனை காலம் மானுடர் உயிரோடு வாழ இயலுமா?” என்று பூரி கேட்க சோமதத்தர் கைவீசி நகைத்து “மலைகளுக்குமேல் காலமில்லை என்பார்கள்” என்றார். சலன் “அவர் உயிர்துறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் மலைகளில் அவர் ஒரு குடித்தெய்வத்திற்கு நிகராக மதிக்கப்பட்டவர். உயிர் துறந்திருந்தால் அச்செய்தியை நமக்கு அவர்கள் அறிவித்திருப்பார்கள். ஆனால் மலைகளில் அவரை எப்படி சென்று கண்டுபிடிப்பது?” என்றான். “யானை ஒளிந்துகொள்ள முடியாது, மூத்தவரே” என்றான் பூரிசிரவஸ். சலன் நகைத்து “முடியும், யானைகள் நடுவே” என்றான்.

சோமதத்தர் “சிந்தாவதியைக் கடந்து எவரிடம் கேட்டாலும் அவரைப்பற்றி சொல்லிவிடுவார்கள்” என்றார். “நான் நாளை காலையே கிளம்புகிறேன், தந்தையே” என்று சொல்லி பூரிசிரவஸ் எழுந்தான். “இன்று மாலை அவையில் அஸ்தினபுரியின் அவைநிகழ்வுகளை விளக்கமாக கூறுகிறேன். அனைத்தும் நமக்கு நலம் பயப்பவையாகவே சென்றுகொண்டிருக்கின்றன. பிழையென எதுவும் நிகழ வாய்ப்பில்லை. இப்போர் எத்தரப்பில் வென்றாலும் நமக்கு நன்றே” என்றான்.

“ஆம், அஸ்தினபுரியின் உறவுபோல் பிறிதொன்று நமக்கு இத்தனை நலம் பயத்திருக்காது. இந்நகரால் ஆளப்படும் அனைத்து ஊர்களுடனும் இன்று சாலைத்தொடர்பு கொண்டுள்ளோம். குருதி நரம்புகளென ஐநூறு வழிகளால் இங்கு இது புறவுலகுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் இங்கு பொன் வந்துகொண்டிருக்கிறது. இனி இதை பின்னால் கொண்டுசெல்ல எவராலும் இயலாது” என்று சலன் சொன்னான். சோமதத்தர் “விரைந்து மீள்க! அங்கு நெடுநாட்கள் இருக்கவேண்டாம்” என்றார். பூரிசிரவஸ் அவர் முகத்தை நோக்கிவிட்டு தலைவணங்கினான்.

வெளியே வருகையில் அவனுடன் வந்த சலன் தோளைத்தட்டி “நீ அவளை பார்க்கச் செல்கிறாயா?” என்று கேட்டான். “ஆம்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “பார்த்தாகவேண்டும். என் கடன் அது.” சலன் “உனக்கு அங்கு மைந்தன் ஒருவன் இருக்கிறான், அறிவாயா?” என்றான். பூரிசிரவஸ் “ஆம்” என்றான்.  “அவன் பெரும்பால்ஹிகன் என்றார்கள். நீ அங்கு அவளை சந்திக்கப் போகவில்லை. உண்மையில் அவனைத்தான் சந்திக்கப் போகிறாய். முதல்முறையாக மைந்தனை பேருருவில் சந்திப்பதென்பது ஓர் அரிய நிகழ்வுதான்” என்று சொன்ன சலன்  “போருக்கு முன் இக்கடன்கள் அனைத்தையும் முடிப்பது நன்று. குறையெஞ்சியிருக்க வாளெடுத்துச் செல்லலாகாது என்பார்கள்” என்றான்.

tigஅன்று மாலை பூரிசிரவஸ் தன் நான்கு அரசியரையும் சந்தித்தான். அவர்கள் ஒன்றாகவே மலர்த்தோட்டத்திற்கு வந்திருந்தனர். கொடிமண்டபத்தில் அமர்ந்திருந்த அவனைக் கண்டு முறைமைச்சொல்லுரைத்து சூழ அமர்ந்துகொண்டனர். பூரிசிரவஸ் ஒவ்வொருவரிடமும் இனிய களிச்சொல்லுரைத்து நகையாடினான். அவர்கள் முகம் அவன் சொல்கேட்டு எழுந்த சிரிப்புக்கு அப்பால் துயர் கொண்டிருந்தது. மூத்தவள் பாமை சற்று நேரங்கழித்து நேரடியாக அவனிடம் கேட்டாள். “நமது மைந்தர் இப்போருக்கு எழவேண்டியிருக்குமா?” பூரிசிரவஸ் சில கணங்களுக்குப் பின்  “அனைவருமல்ல” என்றான். அவர்களின் முகங்கள் மாறுபட்டன.

இரண்டாமவள் “எழுவரில் எவரெல்லாம் போருக்கு செல்லவேண்டியிருக்கும்?” என்றாள். பூரிசிரவஸ் “இளையோர் இங்கிருக்கட்டும்” என்றான்.  “யார் யார்?” என்று பாமை கேட்டாள். “அதை உடனடியாக ஏன் முடிவு செய்யவேண்டும்?” என்ற பூரிசிரவஸ் “இளையவர்கள் நால்வரும் இன்னும் குண்டலம் அணியவில்லை. அவர்கள் இங்கிருக்கட்டும்” என்றான். பாமை சீற்றத்துடன் முகம் சிவக்க “எவருடைய போர் இது? எதன் பொருட்டு நம் மைந்தர் உயிர்துறக்க வேண்டும்?” என்றாள்.

பூரிசிரவஸ் சினம்கொண்டான். “உயிர்துறப்பார்கள் என்று உனக்கு எவர் சொன்னது?” என்றான்.  “அது யானைப்போர். நாம் காலடிக்கீழ் தவளைகள். அங்கு எத்தனை பெரிய  படை கூடியிருக்கிறது என்று நான் அறிவேன். ஒவ்வொருவரும் நூறு அம்புகள் வைத்திருந்தால் அங்கு அம்புகள் மழைத்துளியினும் மிகையாக கொட்டும். அதன் நடுவே இங்கே மூங்கிலம்பு வைத்து விளையாடும் என் மைந்தர் சென்றால் மீளமாட்டார்கள்.” பற்களைக் கடித்தபடி “ஆம், ஒருவேளை நானும் மீளமாட்டேன்” என்று பூரிசிரவஸ் சொன்னான்.

அவள் அதை பொருட்படுத்தாமல்  “என் மைந்தர்கள் போருக்கு வரமாட்டார்கள். அவர்கள் மலைமக்கள். எவரென்றறியாத கீழ்நில மக்களுக்காக அவர்கள் உயிர்துறக்க மாட்டார்கள்” என்றாள். “அம்முடிவை நீ எடுக்கலாகாது” என்றான் பூரிசிரவஸ். “ஆம், நான்தான் எடுப்பேன். இங்கு மலைக்குடிகளில் அன்னையருக்கு முடிவெடுக்க உரிமையுண்டு. இது ஆணவம் கொண்ட ஷத்ரியர்களின் அஸ்தினபுரியல்ல” என்றாள். இளையவள் சுகதை “ஆம், எனது ஒப்புதல் பெறாமல் எனது மைந்தனும் வரப்போவதில்லை” என்றாள். மூன்றாமவளாகிய சத்யை “எனது மைந்தனையும் நான் அனுப்பப்போவதில்லை” என்றாள்.

பூரிசிரவஸ் கசப்புடன் சிரித்து “நீங்கள் அணிந்திருக்கும் இந்த அருமணி மாலைகள், பீதர்நாட்டுப் பட்டாடைகள், கலிங்கப் பருத்தியாடைகள், பொற்கங்கணங்கள், முத்துக் கணையாழிகள் எல்லாம் உங்கள் பால்ஹிக முதற்குடியன்னையர்கள் அணிந்திருந்தார்களா என்ன? ஆற்றுப்பெருக்கில் வந்த கற்களை உரசி துளையிட்டு அணிகலன் செய்து சூடிக்கொண்டவர்கள் அவர்கள். நீங்கள் உண்ணும் உணவும் செல்லும் தேர்களும் வாழும் மாளிகையும் எல்லாம் எப்படி வந்தன? அவை மலைமேல் நின்று ஈட்டப்பட்டவை அல்ல. தாழ்நிலத்திலிருந்து வணிகத்தால் கொண்டுவரப்பட்டவை. அவ்வணிகத்தை உருவாக்கி அளித்தது அஸ்தினபுரி. அதற்கு விலையாக நாம் கொடுக்கவேண்டியது இப்படைப்பங்கேற்பு” என்றான்.

“அதை நாங்கள் அறியவேண்டியதில்லை. எங்கள் மைந்தர் போருக்கு செல்லமாட்டார்கள் என்பதற்கப்பால் உங்களிடம் நாங்கள் சொல்வதற்கு ஏதுமில்லை” என்று சினத்தால் சிவந்த முகத்துடன் சொன்ன பாமை எழுந்து மேலாடையை அள்ளி தன் தோளிலிட்டாள். பூரிசிரவஸ்  “நான் இங்கிருந்து என் மைந்தனையும் என் மூத்தவர்களின் மைந்தர்களையும் அஸ்தினபுரியின் படைப்பணிக்கு அழைத்துச் செல்வதாக முடிவெடுத்திருக்கிறேன். அம்முடிவை பால்ஹிகப் பேரவையில் சொல்கிறேன். அங்கு எழுந்து உங்கள் முடிவை சொல்லுங்கள். முடியாது என்றால் இங்கு ஆண்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை. நீங்கள் மறுத்தீர்கள் என்பது அவைச்சொல்லென நிலைகொள்ளட்டும்” என்றான்.

“ஆம், சொல்கிறோம். எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நாங்கள் இங்கு வணிகம் பெருகவேண்டுமென்றும் ஏழடுக்கு மாளிகையில் வாழவேண்டுமென்றும் கோரவில்லை. எளிய மலைக்குடிகள் என நிலைபெற்ற வாழ்க்கையிலிருந்தோம். இங்கு எங்களுக்கு எஞ்சியதென்ன? அரசியரென்னும் பெயர், இந்த பளபளக்கும் அணியாடைகள். அதற்கப்பால் ஒருநாளும் நாங்கள் இங்கு நிறைந்து வாழ்ந்ததில்லை” என்றாள் பாமை. இகழ்ச்சியுடன் “நிறைந்து வாழ்வதென்றால் என்ன? குளிர்நீரோடும் ஆற்றில் மீன்பிடிப்பது, இரவுபகலென ஆற்றில் நீரள்ளிக்கொண்டுவிட்டு காய்கறிகள் வளர்ப்பது, கன்று மேய்ப்பது, சாணி அள்ளி உலர்த்தி குளிர்காலத்திற்கு எரிதக்கை சேர்ப்பது அல்லவா?” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அதுதான். அவ்வாறுதான் நாங்கள் வளர்ந்தோம். அதில் நிறைவுற்றிருந்தோம்” என்றாள் சுகதை.

பூரிசிரவஸ் எழுந்துகொண்டு கைகளை வீசினான். “ஒவ்வொரு எழுச்சிக்கும் இழப்பென்று ஒன்று உண்டு. நீங்கள் அறிந்திருப்பீர்கள், நான் இங்கு பால்ஹிகக் குடியில் மணம்கொள்ள விரும்பியதில்லை. நான் விரும்பியது அரசமகளிரை. எனக்கு அவர்கள் அமையவில்லை. மணம்கொள்ளவேண்டுமென்று நான் எண்ணியபோது இங்குள்ள அனைத்துக் குடிகளும் எனக்கு மகள்கொடை நிகழ்த்த முட்டி மோதினர். எவரையும் பகைக்கலாகாதென்றே முதன்மைக்குடி அனைத்திலிருந்தும் பெண் கொண்டேன். அன்று உங்களை அரசியெனச் சொல்லி இங்கு நாங்கள் சிறைவைக்கப்போவதாக உங்கள் தந்தையர் எண்ணவில்லை. நீங்களும் மறுப்புரைக்கவில்லை” என்றான்.

பாமை “இதை நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை” என்று கூவினாள்.  “இல்லை, எதிர்பார்த்திருந்தீர்கள். ஒவ்வொருநாளும் எண்ணியிருந்தீர்கள். ஏனெனில் அஸ்தினபுரியில் பூசல் தொடங்கி பதினைந்தாண்டுகள் கடந்துவிட்டன. நீங்கள் மணமுடித்து இங்கு வரும்போதே  அங்கு எந்நிலையிலும் போர்வெடிக்கும் என்ற நிலையே இருந்தது. ஆனால் நீங்கள் இந்த ஆடையணிகளை, அரண்மனையை, செல்லுமிடமெல்லாம் அரசி எனும் மதிப்பை, ஏவலரின் வணக்கத்தை, காவலரின் சூழ்கையை, அவையனைத்திற்கும் மேலாக பிற தொல்குடிப்பெண்கள் மீதெழும் தலையை விழைந்தீர்கள். அதில் திளைத்தீர்கள். இன்று அதற்கு விலைகொடுக்க வேண்டுமென்று வருகையில் தயங்குகிறீர்கள். நன்று, இது மலைக்குடியின் சிறுமையென்று எடுத்துக்கொள்கிறேன். ஷத்ரியப் பெண்டிர் எவரும் இதை செய்யமாட்டார்கள். ஏனெனில் பெறுவதனைத்தும் களத்தில் கொடுப்பதற்கே என்று சொல்லிச் சொல்லி அவர்கள் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள்” என்றான் பூரிசிரவஸ்.

தன் மேலாடையை அணிந்துகொண்டு, இயல்படைந்த குரலில் அவர்களை மாறிமாறி நோக்கியபடி “நான் நாளை காலை மலைக்குக் கிளம்புகிறேன்” என்றான். சுகதை வெறுப்புடன் பற்களைக் கடித்து “அங்கு அவளைப் பார்ப்பதற்கு விழைகிறீர்கள் போலும்” என்றாள்.  “ஆம், இத்தனை ஆண்டுகளில் ஒருமுறை கூட அவளைப் பார்க்கச் செல்லவில்லை. பார்த்து விடைகொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை எந்தச் சிறுமையும் இன்றி உளம் விரிந்து என்னை ஏற்கவும், எனக்கு விழிகனிந்து வாழ்த்துரைக்கவும் அவளால் மட்டுமே இயலும்” என்றான்.

“அப்படியே அவள் மைந்தனையும் போருக்கு அழைத்துச் செல்லுங்கள். வெண்களிறு போலிருக்கிறான் என்றார்கள்” என்றாள் பாமை. ”ஆம், அவனை அழைத்துச் செல்கிறேன். என் அருகே மைந்தனாக அவன் நிற்பது எனக்குப் பெருமைதான். ஆனால் அவன் என்னிடமிருந்து எதையும் பெற்றுக்கொண்டதில்லை” என்றபின் பூரிசிரவஸ் கொடிமண்டபத்திலிருந்து திரும்பி நடந்தான்.

முந்தைய கட்டுரைசென்னையில் பேசுகிறேன்
அடுத்த கட்டுரைசெய்தி -கடிதங்கள் 3