விழா புகைப்படங்கள் கணேஷ் பெரியசாமி
விழா உரைகளின் காணொளிகள் -சுருதி டிவி
கவிஞர் கண்டராதித்தனுக்கு குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா சென்னையில் சென்ற 10-6-2018 அன்று நிகழ்ந்தது. ஜூன் பத்து குமரகுருபரன் மறைந்த நாள். எல்லார் நினைவிலும் ஏதோ ஒருவகையில் நிறைந்து வாழ்ந்தவர் அவர். விரைவிலேயே விடைபெற்றுச்செல்பவர்களின் வாழ்க்கையை முன்னரே நோக்கினால் மிகையான சலிப்பும் ஒதுங்குதலும் அல்லது மிகையான துடிப்பும் பாதிப்பூட்டும் தன்மையும் காணப்படும் என்பார்கள். எல்லா இடத்திலும் தடம்விட்டுச்செல்லும் நோக்குடன் அறைந்தும் அடித்தும் சென்ற ஆளுமை என குருபரனை நினைக்கத் தோன்றுகிறது. இன்னதென்றறியாத எதன்பொருட்டோ அவர் தளும்பிக்கொண்டே இருந்திருக்கிறார்.
ஒரு கவிஞனை நினைவுகூர்வது கவிதையைக் கொண்டாடுவதனூடாகவே. அதற்காகவே இவ்விருது அமைக்கப்பட்டது. முதன்மையாக இதன் நிறுவனர் கவிதா சொர்ணவல்லி. அவரே விருதுத்தொகையை அளிப்பவர். நிகழ்த்துசெலவே விஷ்ணுபுரம் இலக்கியவட்டம். இம்முறை முழுமையாகவே சென்னை நண்பர்களின் நிதியில். முழுப்பொறுப்பையும் தானே உவந்து எடுத்து நிகழ்த்திமுடித்தவர் சௌந்தர். அரங்க ஏற்பாடு, விடுதிகள் ஏற்பாடு, பயணங்கள் பதிவுசெய்தது, நண்பர்களை உபசரித்தது என அவர் மட்டுமே செய்து நிறைவடையச்செய்தது இவ்விழா.
வெளியூர்களிலிருந்து நிறைய நண்பர்கள் வந்தனர். ஆகவே விடுதிகள் எங்கள் செலவுக்குள் நிற்காது. சௌந்தரின் சத்யானந்த யோகமையத்தின் ஒரே கூடத்தில் தங்கலாமென ஏற்பாடு செய்தோம். நானும் அங்கேயே தங்கினேன்.டி.பி.ராஜீவன், கலாப்ரியா இருவருக்கும் மட்டுமே விடுதியறை. மறுநாள் கண்டராதித்தனுக்கும் அவர் நண்பர்களுக்கும் அறை ஏற்பாடு செய்தோம். ராஜீவன் விமானத்தில் வந்தார். அவரால் ரயிலில் அமரமுடியாது. காலில் ஆறாத புண்ணும் வீக்கமும். சர்க்கரை நோய் உண்டு அவருக்கு. ஆனால் ரயில்செலவை மட்டுமே நாங்கள் அளித்தால்போதுமென்று சொல்லிவிட்டார்.
நான் காலை எட்டரை மணிக்கு சென்னை சென்று சேர்ந்தேன். ஈரோடு, பெங்களூர்,பாண்டிச்சேரி நண்பர்கள் முன்னரே வந்துவிட்டிருந்தனர். ராஜீவன் முந்தைய நாளே வந்து தங்கியிருந்தார். மாலை அவர் யூமா வாசுகியைச் சந்திக்கவிரும்பினார். யூமா வந்து ராஜீவனைச் சந்தித்தார். காலையில் ஐஐடியிலிருந்த அவருடைய தோழர்களைச் சந்திக்கச் சென்றிருந்தார். கலாப்ரியா காலையில் வந்தார். அவருடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடுசெய்தோம். காலையில் முப்பதுபேர் கூடி கலாப்ரியாவுடன் உரையாடினர். கூட்டம் ஏறிக்கொண்டிருந்தது.
மதிய உணவுக்குப்பின்னர் மீண்டும் அமர்ந்து இலக்கிய விவாதம். மூன்றுமணிக்கு அரங்கு கிடைத்தது. விடுதி, அரங்கு, சௌந்தரின் யோகா மையம் மூன்றுமே அருகருகேதான். ஆகவே கார்செலவில்லை. ஆனால் வெயில் மண்டையை கொதிக்கச்செய்தது. ரயிலில் மழைக்குளிரில் வந்த எனக்கு அவ்வெம்மை இன்னும் அதிகமாகவே இருந்தது. மூன்றேகாலுக்கு அரங்குக்குச் சென்றேன். அங்கே இலக்கியவிவாத அரங்குக்கு நூறுபேர் வந்திருந்தனர். இலக்கியவிவாத அரங்குக்கு ஆளில்லாமல் ஆகிவிடுமோ என்ற பதற்றம் இருந்தது. அது அகன்றது
விவாதம் சிறப்பாக நிகழ்ந்தது. அதிகமேடைகளில் தோன்றியதில்லை என்றாலும் விஷால்ராஜா நல்ல குரலில் திட்டவட்டமாகப் பேசினார். நானெல்லாம் அந்த வயதில் அப்படிப் பேசத் தொடங்கியிருக்கவில்லை. இன்று தொழில்முறையாகவே நிறைய கூட்டங்களில் பேசவேண்டியதிருக்கிறது இவர்களுக்கு என நினைக்கிறேன். [விஷால்ராஜாவின் உரையின் சுருக்கம்] அதன்மீதான எதிர்வினைகளும் நன்றாகத் தயாரிக்கப்பட்டு முறையாக முன்வைக்கப்பட்டன. நாவல், நவீனநாவல், பின்நவீனத்துவ நாவல் என அனைத்தைப்பற்றியும் எல்லா கேள்விகளும் கேட்கப்பட்டன, விவாதிக்கப்பட்டன என்பதே அரிதானதுதான்
ஆறுமணிக்கு குமரகுருபரன் விருதுவிழா. ராஜகோபாலன் தொகுத்துரைக்க சிறில் அலெக்ஸ் வரவேற்புரை வழங்கினார். டி.பி.ராஜீவனின் உரை ஆங்கிலத்தில் அமைந்திருந்தது. கவிதையின் தனி அரசியலை, கவிதையின் பண்பாட்டு தனித்தன்மையை வலியுறுத்திப் பேசினார். மலபார்பகுதிக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பை, தமிழ் அழகியலின் ஒருபகுதியாகவே மலையாள அழகியலைப் பார்க்கவேண்டும் என்று கூறினார்.
பலருக்கு அவர் ஒரு விருந்தினராக இங்கே வந்திருப்பதனால் சொல்லப்பட்ட முகமனுரை அது என்று தோன்றியிருக்கலாம். ஆனால் ராஜீவன் அங்கும் அதையே சொல்பவர். ஏனென்றால் அக்கருத்துக்களை வலியுறுத்திவந்த எம்.கோவிந்தன் என்ற சிந்தனையாளரின் மூன்றாம்தலைமுறை எழுத்தாளர் அவர். அவருடைய இரண்டாவது நாவலான கோட்டூர் ஜீவிதமும் எம்.கோவிந்தனின் வாழ்க்கையை ஒட்டியது. ஞான் என்றபேரில் சினிமாவாக எடுக்கப்பட்டுள்ளது. நானும் மலையாளத்தில் கோவிந்தன் ஸ்கூலைச் சேர்ந்தவனாகவே அறியப்படுகிறேன்.
கலாப்ரியாவுக்கு கண்டராதித்தன் தம்பியைப்போல. எண்ணற்ற ‘சபை’கள் நினைவுக்கு வந்திருக்கலாம். தமிழ்க்கவிதை மரபில் கண்டராதித்தனின் இடமென்ன என்று வகுத்துப் பேசினார். அஜயன்பாலா கண்டராதித்தனின் தோழர். அவருடைய தனிப்பட்ட ஆளுமையையும், அவர் கவிதைகளில் எதிர்கொள்ளும் வெவ்வேறு கருப்பொருட்களையும் குறித்துப் பேசினார். காளிப்பிரசாத் கண்டராதித்தன் கவிதையை தன் வாழ்க்கையினூடாகச் சென்றடைந்ததைப் பற்றிப் பேசினார்
பிசிறுகள் பிழைகள் இல்லாமல் விழா சிறப்புற நிகழ்ந்து முடிந்தது. பிரியத்திற்குரிய நண்பர்கள் பலரைக் காணமுடிந்தது. சென்னையில் விழா ஒன்று எடுத்தால்தான் இவர்களை பார்க்கமுடிகிறது, அதற்காகவேனும் விழா தேவைதான் என நினைத்துக்கொண்டேன். பின்னிரவு வரை சௌந்தரின் யோக மையத்தில் பேசிக்கொண்டிருந்தோம். பின்னிரவுக்குமேல் டாக்டர் வேணு வெட்ராயனின் கவிதைகளைப்பற்றிய உரையாடல் புதிதாக ஆரம்பித்தது. விடியும்போது வெளியே வெயில் பொழிந்துகொண்டிருந்தது.