ஆர்.கே.சேகர்

rkse

மலையாள சினிமாவில் பணியாற்றும்போதெல்லாம் ஆர்.கே.சேகர் பற்றிய பேச்சு எப்படியோ எழுந்துவருவதைக் கண்டிருக்கிறேன். அவரைப்பற்றிய ஒரு பெருமிதமும் நெகிழ்ச்சியும் மலையாளச்சூழலில் இருந்துகொண்டே இருக்கிறது. அவர் ஒரு மேதை என்ற எண்ணமும் அதை கேரளமே அடையாளம் கண்டது என்ற எண்ணமும் கேரளத்தில் உள்ளது. பலபாடல்கள் இன்றும் வாழ்வதே முதற் காரணம்.

அதேசமயம் பல காரணங்களால் முழுமையாக வெளிப்படாமல் போன கலைஞர் என்றும் சொல்கிறார்கள். முதல்விஷயம் நல்ல மனிதர் என்பது. கலைஞர்கள் அப்படி இருக்கமுடியாது. அவர்கள் ஒருவகையான மூர்க்கமான சுயநலவாதிகளாகவே இருக்கமுடியும். தங்கள் கலையை வெளிப்படுத்த எவரையும் சுரண்டத் துணிபவர்களாக, ஏமாற்றத்தயங்காதவர்களாக அவர்கள் பொதுவாக இருக்கிறார்கள். அவர்களின் கலை வைரஸ் போல அவர்களின் மூளையைப் பற்றிக்கொண்டு தன்பொருட்டுச் செயல்படச்செய்கிறது. வெளிப்பாடு கொள்ளும்பொருட்டு ஈவிரக்கமில்லாமல் தன்னை அழித்தும் கொள்கிறார்கள். கலை அவர்களைக் கொன்று தின்றபின் கடந்துசெல்கிறது.

rks1

ஆர்.கே.சேகர் அப்படி இருக்கவில்லை. ஆகவே அவரை சினிமாவிலுள்ள அனைவரும் விருப்பம்போலப் பயன்படுத்திக்கொண்டார்கள். மிகமிகக் குறைவான ஊதியத்திற்கு அவர் இரவுபகலாக பணியாற்றினார். கணிசமானவர்கள் ஊதியம்கொடுக்காமல் ஏமாற்றினர். பிற இசையமைப்பாளர்களுக்காக அவர் இசைநடத்துநராகவும் இசைஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியதே அதிகம். மலையாளத்தின் பெரும்பாலான புகழ்பெற்ற பாடல்கள் அவரால் பலமடங்கு மேம்படுத்தப்பட்டன. கணிசமானவை அவராலேயே போடப்பட்டவை. இரவுபகலாக இசையமைப்பாளர்களான நண்பர்களின்பொருட்டு அவர் அதில் ஈடுபட்டிருந்தார். அதனாலாலேயே அவருக்கு இசையமைக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. மிகச்சாதாரணமான படங்களில் மிக அவசரக்கோலத்தில் போடப்பட்டவை அவருடைய பாடல்கள். ஆனாலும் அவர் இன்றும் இசையமைப்பாளராக நிலைகொள்கிறார். சினிமா அவரை உண்டது. வயிற்றுநோய் வந்து இறந்தார். அவருடைய இறப்பு அவருடைய மகன் ஏ.ஆர்.ரஹ்மானை பெருமளவு பாதித்தது என்று சொல்லப்படுவதுண்டு.

இவ்விரவில் ஆர்.கே.சேகரின் பழையபாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இசையில் காலம் இருப்பது போல, நினைவுகள் செறிந்திருப்பதுபோல எங்கும் இல்லை. ஆர்கே,சேகரின்  ‘உஷஸோ சந்த்யயோ சுந்தரி?’ என்பது என் பிரியத்திற்குரிய பாடல் என்று சொன்னேன். ஒரே குரலில் ஏழுபேர் எனக்கும் என்று கூவினர். விடுதியறைக்கு வெளியே நின்றிருந்த விடுதி பரிசாரகர் உள்ளே வந்து பாடத் தொடங்கினார். என் பதின்பருவத்தில் என்னைப்பித்தாக்கி மாசக்கணக்கில் கனவிலாழ்த்திய அழியாத மெட்டு அறைக்குள் நிறைந்ததுஅறையில் ஆ.கே.சேகர் மீண்டெழுந்துவந்து அமர்ந்தார்.

***

ஆர் கே சேகர் புகைப்படங்கள்

 

 

ஆர்.கே.சேகர் ஓர் ஆவணப்படம்

 

 

மணிவண்ணன் இல்லாத்த விருந்தாவனம்

ஆர் கே சேகர் ஒரு நினைவுகூரல் – முழுமையான பாடல்பட்டியல் 
முந்தைய கட்டுரைமன்மதன் ஒரு வாசிப்பு
அடுத்த கட்டுரைஇலக்கியத்துறையில் மாற்றங்கள்- உரை