அலைபவர்களை அமர்ந்தவர்கள் அறியலாகுமா?
அன்புளள ஜெ..
ஓஷோவை முழுமையான வழிகாட்டியாக நினைப்பவர்கள் முழுமையான இருளையே அடைவார்கள் என்ற உங்கள் கருத்து எத்தனைபேருக்கு சரியான பொருளில் போய் சேர்ந்திருக்கும் என தெரியவில்லை…காந்தியை இந்திய தன்மைகளை கடுமையாக கேலி செய்தவர் அவர்.. இதைப்படித்துவிட்டு அதனடிப்படையில் காந்திக்கு எதிரான மனோபாவத்தை வளர்த்துக் கொண்டவர்கள் பலர்.. ஆனால் அந்த பேச்செல்லாம் ஒரு கவன ஈர்ப்புதான் ஒரு விளம்பர யுக்திதான் என அவரே பிற்பாடு எழுதியிருக்கிறார்அவரை முழுமையாக படித்தவர்களுக்கு அவர் ஒரு ஆன்மிக சுப்ரமண்ய சுவாமி என்பது தெரியும்.
எந்த தார்மிக பொறுப்பும் இன்றி கருத்துகளை சொல்பவர் அவர்.. கருப்பிந்தியர்கள் கையில் சிக்கி ஏழை நாடாக இருந்த அமெரிக்காவை விடுவித்து அதை பணக்கார நாடாக்கிய வெள்ளையர்கள் என வியந்தோதி எழுதியிருப்பார். அதே நாடு அதே இயற்கை வளங்கள் செவ்விந்தியர்களிடம் அதுபயன்படவில்லை.. வெள்ளையர்கள் தம் உழைப்பால் அதை வல்லரசாக்கினர் என கருப்பர்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டதை கண்டுகொள்ளாமல் எழுதியிருப்பார். என்ன கொடுமை என்றால் எபபடி வைரஸகளை பரப்பி அப்பாவி கருப்பர்களை கொன்றார்களோ அதே போன்ற சதிக்கு ஓஷோவும் ஆளானார்.. அவரால் அது வரை கேலிக்கு உள்ளாகி வந்த இந்தியாதான் அவருக்கு அடைக்கலம் அளித்தது.. தமிழ் மொழி குறித்த அவர் பார்வை அவர் பக்தர்கள் பலருக்கு தெரியாது.. ஒரு முறை சென்னை வந்திருந்தார்.. அது குறித்த அவர் அவதானிப்பு
தென்னிந்தியர்கள் என்றாலே கருப்பு என்றாலும் இங்கே இன்னும் கூடுதல் கருப்பு.. இருவர் தமிழில் ஏதோ சண்டையிடுவதுபோல பேசிக் கொண்டிருந்தனர்.. அவர்கள் கண்டிப்பாக சண்டையிடவில்லை.. சாதாரண உரையாடல்தான். ஆனால் தமிழ் என்ற மொழியின் தன்மை சண்டையிடும் தொனியை அளித்தது. நான கண்டவற்றுள் இனிமையற்ற மொழி தமிழ்தான். இனி ஒரு முறை சென்னைக்கு வர விரும்பவில்லை
இப்படி சொல்கிறார் ஓஷோ…
மேம்போக்காக பேசி செல்வது அவர் பாணி…இந்த குறைகளுக்காக அவரது ஞானத்தை வாசிப்பை அறிவை புறக்கணித்துவிட்டு அவரை செக்ஸ் சாமியார் என சுருக்குவது நியாயமல்ல அவரது ஞானத்துக்காக அவரது அயோக்கியத்தனமான செயல்களை மறைக்க நினைப்பதும் சரியல்ல… இவற்றையெல்லாம் நீங்கள் ஏற்கனவே பேசியிருக்கிறீர்கள்… அந்த கட்டுரை சார்ந்து என் வினா ஓஷோ குறித்து அல்ல
பக்தி என்பது எளிய மனதுக்கானது என்ற எண்ணம் பலரிடம் உள்ளது அல்லவா.. அதை எப்படி பார்க்கிறீர்கள்
தசையை தீச்சுடினும் சிவ சக்தியை பாடும் வரம் கேட்டல்… தீயில் போடும் நிலையிலும் மாசில் வீணையையும் தென்றலையும் தரும் ஈசனின் இணையடி நிழலை காணுதல்… அல்லாவே உயர்ந்தவன் அவனுக்கு மேல் யாரும் இல்லை என்பதை என்னை கொன்றாலும் சொல்வேன் என சொல்லி உயிரை இழத்தல் வெட்டப்பட்ட தலையும் அல்லாவே உயர்ந்தவன் என சொல்லுதல் என எல்லா மதங்களிலும் பக்தியை காண்கிறோம்… பக்தி என்பது பாமரர்களுக்கு உரியது என்ற பார்வையை எபபடி புரிந்து கொள்வது… குறிப்பாக ஓஷோ பக்தர்கள் அரசியல் தலைவர்களின் பக்தர்கள் இப்படி சொல்வதை எபபடி எடுத்துக் கொள்வது…
அன்புடன்
பிச்சைக்காரன்
***
அன்புள்ள பிச்சைக்காரன்
ஓஷோவின் எழுத்துக்களில் பொதுவாக வட இந்தியர்களுக்கு இருக்கும் ஏராளமான பொதுவான காழ்ப்புகளை நாம் காணமுடியும் – தமிழர் குறித்து சொல்லப்பட்டதுபோல. அதேபோல அக்காலத்தில் – ஹிப்பி எதிர்ப்பியக்கத்தின் யுகத்தில், அமிதாப் பச்சன் கோபக்கார இளைஞராக மரபை மீறிகொண்டிருந்த சூழலில் – இளைஞர்கள் சாதாரணமாகப்பேசும் மரபு எதிர்ப்புப் பேச்சுக்களும் உண்டு. அவருடைய பங்களிப்பு நான் மீண்டும் சொல்வதுபோல பாவனையான தூய்மைகளை, சிந்தனையின் உறைநிலைகளை உடைத்தார் என்பதே. அது மட்டுமே
பக்தியைப் பொறுத்தவரை அதை அறிவார்ந்து வகுத்துக்கொள்ள முடியாதென்பதே அதை விவாதத்திற்கு அப்பால் கொண்டுசெல்கிறது. அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு பெரும் சிக்கல் ஒன்றுண்டு. அவை ஆணவத்தையே முதலில் உருவாக்குகின்றன. நண்பர் ஒருவர் அடிக்கடிச் சொல்வதுண்டு ““எழுத்தாளர்களின் ஆணவத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டுவந்த தலைமுறைநான். முகநூல் வந்தபின்னரே ஒன்றுமே தெரியாதவர்கள், எவரென்றே அறியப்படாதவர்களுக்கு எழுத்தாளர்களை விட இரண்டுமடங்கு ஆணவம் உண்டு என்று தெரிந்தது” என்று. அது அவருக்கு மிகப்பெரிய திறப்பு.
அறிதல் ஆணவத்தை உருவாக்குகிறது அறிதல் சிறிதாகும்தோறும் ஆணவம் பெரிதாக உள்ளது. ஏனென்றால் அவ்வறிதலை மறுக்கும் எதையும் அறிந்திருப்பதில்லை. மூர்க்கமான நம்பிக்கையும் ஆணவமும் இணைகையில் ஒருகட்டத்தில் தன்னைச்சார்ந்த ஒர் உறுதியான பார்வைக்கோணம் உருவாகிறது. பெரும்பாலும் தன் மதம் சாதி இனம் சார்ந்தது. வெறும் பற்றுகளில் இருந்து எழுவது. அந்த உறுதியான நிலைபாடு உருவானபின்பு எந்தப் புதிய அறிதலும் சாத்தியமாவதில்லை. வந்துசேரும் புதிய அறிதல்கள் அனைத்துடனும் ஆணவம் மோதிக்கொண்டே இருக்கும். அனைத்தையும் ஆணவத்தாலேயே மறுப்பார்கள். வென்றுவிட்டதாகக் கொக்கரிப்பார்கள் அந்த இடைவிடாத விவாதத்தை அறிவுச்செயல்பாடாகத் தவறாக எண்ணிக்கொள்வார்கள். மிகமிக அரிதாகச் சொந்தவாழ்க்கையில் மிகப்பெரிய அடிவிழுந்தாலொழிய அந்த ஆணவச்சிறையில் இருந்து விடுதலை இல்லை.
அறிவுஉருவாக்கும் இருள் இது. இதை இன்றைய அரசியல் விவாதங்கள் அனைத்திலும் காணலாம். இதே இருள் மதச்சார்புநிலைகளிலும் உண்டு. சென்றகாலங்களில் மதம்சார்ந்து இங்கே நிகழ்ந்த அறிவுவிவாதங்கள் மிகப்பெரும்பாலும் ஆணவங்களின் மோதல்களே. அன்றைய பேரறிஞர்களின் விவாதங்களை இன்றுநோக்கினால்கூட துணுக்குறுதலே உருவாவகிறது. உதாரணம் தேவையென்றால் வைணவ உரையாளர்கள் தங்களுக்குள் உரையாடிக்கொண்டதை, வள்ளலார் ராமலிங்கருக்கும் சைவர்களுக்குமான பூசலை படித்துப்பார்க்கலாம்.அறிவின் அடுத்த கட்டம் அது உலகியல் வெறியாக மாறும் என்பதே. ஏனென்றால் ஆணவம் உலகை நோக்கி விரிவது. நான் என எண்ணும்போது எனக்கு என்றும் தோன்றிவிடுகிறது.
அறிவின் இந்த ஆபத்தைக் கடப்பதற்கான வழியாகவே பக்தி முன்வைக்கப்பட்டது. பக்தி என்பது பெரும்பாலும் ஆணவம் அழித்தலைப்பற்றி பேசுவது. முழுமையான சரணாகதி. உளமுருகும் அடைக்கலம். தொடர்ச்சியாக கலைகள், இலக்கியம், வழிபாடுகள், நோன்புகள் வழியாக உள்ளத்தை பணியவைத்துக்கொண்டே இருத்தல். அதனூடாக ஆணவத்தைக் கடத்தல். ஆணவத்தைக் கடப்பது அறிவினாலும் இயலும். அறிவு விரிந்து அறிதலின் முடிவிலா சாத்தியங்களை உணர்ந்தவர் ஆணவத்தைக் கடந்தவரே. ஆனால் அது அனைவருக்கும் இயல்வது அல்ல. அத்தனைதூரல் அறிதல் மிக அரிதாகவே நிகழ்கிறது. ஆகவே எளியோருக்கு ஆணவம்கடந்து சென்று ஆழத்தை அறியும்வழியாக எப்போதும் பக்தியே முன்வைக்கப்படுகிறது.
அதோடு அறிவு பெரும்பாலும் அழகுக்கு எதிரானது. அழகையும் அறிவையும் இணைக்கும் மெய்வழிகள் மிகச்சிலவே. அது அனைவருக்கும் புரிவதுமல்ல. அறிவு சேவைக்கும் எதிரானதாகவே நிலைகொள்கிறது, அறிவுடன் இணைந்துள்ள தன்முனைப்பு சேவைக்கு பெருந்தடை. ஆகவே அழகுணர்வும் கருணையும் கொண்டவர்களுக்கான வழியல்ல அறிவு என்றும் மரபு சொல்கிறது. பக்தி அழகுணர்வை எல்லையில்லாது விரிக்கிறது. கருணையை பெருக்கிக்கொண்டே இருக்கிறது.
அறிவினூடாகக் கனியமுடியும். அப்படிக் கனிந்த ஒருவரின் நேரடி மாணவன் நான். ஆனால் அதற்கான தொலைவு மிக அதிகம். வழியிலேயே வெம்பி கசந்துவிடவே வாய்ப்பு மிகுதி. பெரும்பாலான அறிஞர்கள், எந்தக் கொள்கையைச் சார்ந்தவர்கள் ஆனாலும், ஒருகட்டத்தில் எதிர்மறை உளநிலை கொண்டவர்களாக, கசப்பு மட்டுமே நிறைந்தவர்களாக , தன்முனைப்பின் உச்சியில் வெறுமையில் அமர்ந்தவர்களாக மாறுவதைக் காணலாம். நான் என் இலக்கிய ஆசிரியர்களாகக் கொண்டவர்களில் சிலர் சென்றமைந்த அந்த இருளை அருகிருந்து கண்டிருக்கிறேன்.
அனைத்திலும் ஊடுபுகுந்து ஐயத்தையும், ஏளனத்தையும், தன்முனைப்பையும் உருவாக்கும் அறிவை அகற்றி ஆட்பட முடிந்தால் பக்தியே சரியான வழி. எளிமையானது, எனவே எளியோருக்குரியது. விடுதலை அளிப்பது. வெறுமையில் நிறுத்தாதது. நம் சூழலின் அறிஞர் சென்றடையாத கனிவை எளியோர் சென்றடைவது இவ்வழியால்தான். ஆனால் அறிவை கடந்து பக்தியை அடைவது எளிதல்ல. மிகமிகக் கடினமானது.உடலின் ஒரு பகுதியை குருதிவழிய அறுத்தெறிவது போல. ஆனால் குறைவாக அறிந்தவர்களுக்குத்தான் அது மிகக்கடினம். ஏராளமாக பலகோணங்களில் அறிந்தவர்கள் சட்டென்று விடுபடமுடியும்.
ஆனால் பக்திக்கும் எதிர்க்கூறுகள் உண்டு. தன்னலம் சார்ந்த பக்தி, அச்சத்திலிருந்து எழும் பக்தி எதிர்மறையானது. அது மிகவிரைவில் வெறும் பற்றாகச் சிறுக்கும். காலப்போக்கில் குறுகிய உள்ளம் கொண்டவர்களாக நம்மை ஆக்கும். உலகியலில் கட்டிப்போடும். விழைவுகளும் அதிலிருந்து எழும் ஓயாத சஞ்சலங்களும் கொண்டவர்களாக மாற்றும். ஏராளமான பக்தர்கள் தன்னலவாதிகள். உலகியல்வெறியர்கள். தெய்வத்திடம் பேரம்பேசுபவர்கள். சாதி, மதம், இனம் என்னும் மிகமிகக்குறுகிய வட்டங்களுக்குள் அகப்பட்டுக்கொண்டவர்கள். அறிவு அளிக்கும் விடுதலையையே அறியாது இருளில் உழல்பவர்கள். பக்தி முற்றிலும் தன்னலமற்றதாக, ஆணவம் அழிப்பதையே நோக்கமாகக் கொண்டதாக, அழகுணர்வும் கருணையும் பெருகுவதாக இருந்தாலொழிய பயனில்லை
பிறப்புச்சூழலின் பழக்கத்தால் பக்தியில் ஈடுபடுபவர்கள் வெற்றுச்சடங்காளர்களாக ஆகிறார்கள். அவர்களுக்கு எல்லாமே பழக்கம் மட்டுமே. பக்திச்சடங்குகள் குறியீடுகள். அவை நம் ஆழுள்ளத்திற்கு இறங்கவேண்டும். திரும்பத்திரும்பச் செய்தல்,. அச்சூழலில் வாழ்தல் ஆகியவற்றினூடாக நாம் அவற்றை நம்முள் செலுத்தவேண்டும். பழக்கமாக அவை ஆனால் அக்கணமே அவற்றை ஆழுள்ளம் கவனிக்காமலாகிவிடும். பழகிப்போன எதுவும் நமக்கு அகநடுக்கை அளிப்பதில்லை. அவற்றை மீண்டும் புதிதாக உள்ளம் கண்டடைவது அரிதாகவே நிகழ்கிறது. இங்குள்ள பெரும்பாலான பக்தி வெறும் குடிப்பழக்கம் மட்டுமே
ஆகவேதன் பக்தியையும் அறிவையும் சமன்செய்யும் ஒரு நோக்கை வளர்த்தெடுத்தனர். அறிவால் பக்தியை அகலப்படுத்தலாம். பக்தி கொண்டு சிக்கவைக்கும் சிறைகளை உடைத்து உலகை விரிவாக்கிக் கொள்ளலாம். பக்தியால் அறிவு அளிக்கும் ஆணவத்தைக் கடக்கலாம். அறிவின் வழியில் பக்தி அழகையும் கருணையையும் உணர்வுநிலைகளையும் சேர்க்க்கும். பக்தியின் வழியில் அறிவு நிலைபேறையும் நுண்ணறிவையும் கணந்தோறும் புதுப்பித்துக்கொள்ளும் உயிர்த்துடிப்பையும் இணைக்கும்.பக்திவழியில் அறிவும் அறிவின் பாதையில் பக்தியும் எதிர்நிலையில் நின்று குறைகளைச் சுட்டிக்காட்டக்கூடும்.நிரப்பக்கூடும்
ஜெ
***