யானைடாக்டர் [சிறுகதை] -1
யானைடாக்டர் [சிறுகதை] 2
யானைடாக்டர் [சிறுகதை] 3
அன்புள்ள ஜெயமோகன் சார்,
வணக்கம். தமிழ்நாடு பள்ளிக்கு கல்வித் துறை பாடத்திட்டத்தில் பல புதிய அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. உள்ளடக்க அளவில் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக பெரும்பாலான ஆசிரியர்கள், வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக தமிழ் மொழி பாடப் புத்தகங்கள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழின் நவீன கவிஞர்களின் கவிதைகள் (பிரமிள், ஞானக்கூத்தன்…) தலை சிறந்த எழுத்தாளர்களின் சிறுகதைகள் ( ஜெயமோகன் -யானை டாக்டர்) எஸ்.ரா.-ரப்பர் பந்து) என பாடநூல் வல்லுநர் குழுவினர் புத்தகத்தை செதுக்கியுள்ளனர்.
11ம் வகுப்பு சிறப்புத் தமிழில் சிறுகதைக் கலை, சிறுகதை ஒரு சமையல் குறிப்பு பாடமாக இடம்பெற்றுள்ளது. இது பல புதிய இளம் படைப்பாளர்கள் உருவாவதற்கு துணை புரியும். நவீன இலக்கிய வாசிப்பின் பக்கம் மாணவர்களை கவர்ந்து வருவதற்கான ஒரு நல்ல முயற்சி.
இந்த மாற்றங்கள் ஒருபுறம் புதிய நம்பிக்கையை தருவதாக இருந்தாலும் இதை மாணவர்களிடம் கொண்டு சென்று ஊக்கமளிக்கும் ஆசிரியர்கள் நவீன இலக்கிய சிந்தனையும், வாசிப்பும் உடையவர்களாக இருக்க வேண்டும், உருவாக்க வேண்டும் என்பதே இப்போதைய தேவை.
பழைய பந்து மாற்றப்பட்டு புதிய பந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதை சரியான திசையில் கொண்டு சென்று கோல் (Goal) போடுகிறார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
க. ரகுநாதன்
கோவை
http://104.198.73.189/~ttapp/tnscert/
வணக்கம் ஜெ,
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் புதிய பாடநூல்கள் (1,6,9,11 ம் வகுப்புகளுக்கு) வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னதை விட நன்றாக அமைந்திருக்கிறது. பதினொன்றாம் வகுப்பு தமிழ் துணைப்பாடப் பகுதியில் தங்களுடைய ‘யானை டாக்டர்’ கதை இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பாடத்திட்டம் இந்த அளவுக்கு மாறுவதற்கு இவ்வளவு காலம் ஆயின்று. இருப்பினும் இம்மாற்றம் வரவேற்புக்குரியதே.
நன்றி
விவேக்.
அன்புள்ள ஜெ
புதியபாடத்திட்டத்தில் யானை டாக்டர் கதை இடம்பெற்றுள்ளது. கதையை இப்போதே பலர் வாசித்துவிட்டனர். பள்ளியில் அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். யானைடாக்டர் கிருஷ்ணமூர்த்தி மிக எளிதாக வரலாற்றில் அழியா இடம்பெற்றுவிட்டார். இனி அவர் என்றும் வாழ்வார். இப்படி ஓர் ஆளுமையை வரலாற்றில் நிறுத்த எழுத்தாளனால் முடியும் என்பதை சமகாலத்தில் பார்ப்பது மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது
கிருஷ்ணமூர்த்தி