அயல் இலக்கியங்களும் தமிழும்

puthu-tolstoy

ஜெ

நீங்கள் நடத்திய தஸ்தயேவ்ஸ்கி நூல் மொழியாக்க அரங்கிற்கு வந்திருந்தேன். வெளியே நின்றுபேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் தமிழ்ச்சூழலில் தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி இருவரும் பெரிய அளவில் பேசப்பட்டதற்குக் காரணம் ருஷ்ய தூதரகம் அவற்றை ‘பிரமோட்’ செய்தமையாலும் அவை தமிழில் ருஷ்ய அரசால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டமையாலும்தான் என்று சொன்னார். ஐரோப்பிய அமெரிக்க இலக்கியங்களில் மிகப்பெரிய செல்வங்கள் உள்ளன என்றும் அவற்றையெல்லாம் ஆங்கிலம் தெரியாததனால் தமிழ் எழுத்தாளர்கள் வாசிக்கவில்லை என்றும் சொன்னார்.

அரைமணிநேரம் அவரிடம்பேசிக்கொண்டிருந்தபோதே அவர் ஒரு பெயர் உதிர்ப்பாளர் என்று தெரிந்தது. இலக்கியம் பற்றிய ஒரு கருத்தைக்கூட அவரால் சொல்லமுடியவில்லை. ஆனாலும் அவர் சொன்ன இந்தச் செய்தியை என்னால் மறுக்க முடியவில்லை. இதைப்பற்றிய உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்

மகேஷ்

Dostoevsky_1872

அன்புள்ள மகேஷ்

தமிழில் என்றல்ல உலகம் முழுக்கவே இலக்கியத்தில் இத்தகையவர்களின் எண்ணிக்கை பெரிது. என்ன சிக்கல் என்றால் சுயமான ரசனை , சொந்தமாக கருத்துக்களை உருவாக்கும் திராணி கிடையாது. அவை இருந்தால் அதிலிருந்தே ஆளுமையும் தன்னம்பிக்கையும் உருவாகி வரும். எந்த விவாதத்திலும் இடமிருக்கும். அவை இல்லாத சூழலில் நூல்களின் பெயர்கள், இதைப்போல வலம் இடம் திரியாத ஒற்றைவரிகள் வழியாக இருப்புணர்த்த முயல்வார்கள்.

தமிழில் வாசிப்புப் பழக்கம் கொண்டவர்கள் அவர் சொன்ன அக்கருத்தை நேரடியாகவே தூசு போல தட்டிவிடுவார்கள் ருஷ்ய இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தவர்கள் டி.எஸ்.சொக்கலிங்கம், க.சந்தானம், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற மொழியாக்க முன்னோடிகள். அவர்களுக்கும் ருஷ்யாவுக்கும் சம்பந்தம் கிடையாது. ருஷ்யா தல்ஸ்தோய், தஸ்தயேவ்ஸ்கி, செகாவ் ஆகியோரின் பெரும்படைப்புக்களை மொழியாக்கம் செய்து இங்கே கொண்டுவரவில்லை. அவர்களின் படைப்புகளாக ஆளுக்கொரு சிறுகதைத் தொகுதி மட்டுமே அவர்களால் கொண்டுவரப்பட்டது.

தஸ்தயேவ்ஸ்கியின் பெருநாவல்கள் எல்லாமே தமிழில் சென்ற பத்தாண்டுகளகவே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. போரும் அமைதியும், கஸாக்குகள் எனும் இரு தவிர தல்ஸ்தோயின் நாவல்கள் ஆங்கிலம் வழியாகவே இங்கே பேசப்பட்டன. அந்த அளவுக்கு இல்லை என்றாலும் மிகயீல் ஷோலக்கோவ், ஷோல்செனிட்ஸின், பாஸ்டர்நாக் நாவல்கள் இங்கே ஆங்கிலம் வழியாகவே வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.

தாமஸ் மன்
தாமஸ் மன்

ஒர் அறிவுச்சூழல் எந்த அயல் இலக்கியத்தைக் கவனிக்கிறது, ஏன் கவனிக்கிறது என்பதெல்லாம் மிகவிரிவான பண்பாட்டாய்வுப் புலத்தில் வைத்து அணுகப்படவேண்டியவை. இதேபோன்ற அசட்டு வம்புகளாக அல்ல. தமிழ் நவீன அறிவுப்புலம் பாரதியின் காலம் முதல் நான்கு தலைமுறைக்காலப் அறிஞர்களாலும் படைப்பிலக்கியவாதிகளாலும் உருவாக்கப்பட்டது. எதிரும்புதிருமான நோக்குகள் நடுவே நடக்கும் விவாதங்கள் வழியாக ஒரு முரணியக்கமாகவே இவ்வாறு அறிவுச்சூழல்கள் உருவாகி வருகின்றன. ஒருவகை நெசவு இது.

ஒரு சூழலின் கருத்துத் தரப்புகள் எவ்வாறு உருவாகின்றன என்று வரையறுத்துச் சொல்லமுடியாது. சென்றகாலகட்டத்தை நோக்கி அவற்றிலிருந்து நாம் இவ்வாறு உருவாகிவந்திருக்கலாம் என ஊகிக்கலாம். ஒவ்வொருமுறையும் புதிதாக ஏதாவது எழுந்து வரும்.அது நிறைவடையாத ஓர் ஆய்வு. ஆனால் அது நம் அறிவுச்சூழலைப் புரிந்துகொள்ள உதவிகரமானது

இவ்வாறு உருவாகும் கருத்துத் தரப்புகளுக்கு இரு முனைகள் உண்டு. ஒன்று இங்கே இருக்கும் ஏற்புமுனை, இன்னொன்று வந்துசேரும் புதியமுனை. அவை இரண்டு சந்திக்கவேண்டும். மரபும் புதுமையும், நிலைத்திருப்பதும் மீறி எழுவதும், தேவையும் இயல்வதும் என அந்த முரணியக்கம் மிகச்சிக்கலானது

இது அர்த்தமற்ற வம்பு என்றாலும் இத்தருணத்தில் இதை தமிழ் அறிவியக்கம் எப்படி எதை வெளியே இருந்து எதிர்கொண்டது என்பதைப்பற்றிய ஒரு தோராயமான வரைபடத்தை உருவாக்கிப்பார்க்கலாம் என நினைக்கிறேன்.இத்தகைய விவாதங்களின் பெறுமதிப்பு என்பது இதுமட்டுமே

hes
ஹெர்மன் ஹெஸ்r

தமிழில் மொழியாக்கங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருந்திருக்கின்றன. பாரதியின் மொழியாக்கங்கள்தான் தொடக்கம். பாரதிக்கு பிரிட்டிஷ் இலக்கியம் , பாண்டிச்சேரியில் இருந்தமையால் பிரெஞ்சு இலக்கியம் அறிமுகமாகியிருந்தன. பாரதி ஷெல்லியின் மேல் பெருங்காதல்கொண்டிருந்தார். அவருடைய சமகாலத்தவரான வ.வெ.சு.அய்யர் போன்றவர்கள் பிரிட்டிஷ் இலக்கியம்வழியாக உருவாகி வந்தவர்கள். அவர்கள் பிரிட்டிஷ் கவிதைகள், இலக்கியக் கொள்கைகளை இங்கே பேசினர். ஆனால் குறைவாகவே மொழியாக்கம் நிகழ்ந்தது. காரணம் அன்றையக் கல்விச்சூழலில் பரவலாக பாடமாகவே பிரிட்டிஷ் இலக்கியம் பயிலப்பட்டது

ஐம்பதுகளுக்குள் தமிழில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் அனைத்துக்குமே ஒன்றுக்கும் மேற்பட்ட மொழியாக்கங்கள் வந்துவிட்டிருந்தன. பெர்னாட் ஷா, இப்சன் நாடகங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டன. அதேசமயம் பிரிட்டிஷ் இலக்கியம் மீது ஒவ்வாமையும் இருந்தது, அது தேசிய உணர்ச்சியால் உருவானது. ஆகவே ரோமென் ரோலந்து, விக்டர் யூகோ போன்ற பிரெஞ்சு இலட்சியவாத எழுத்துக்கள் இங்கே ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டன. அவற்றுக்கு சுருக்கமான மொழியாக்கங்களும் முழுமையான மொழியாக்கங்களும் வெளியாயின. உலகம் முழுக்கவே ஜனநாயகம் தொடங்கிய காலகட்டத்தில் இலட்சியவாதம் பிரெஞ்சு இலக்கியம் வழியாகவே சென்றுசேர்ந்தது.

ஐம்பதுகளில் ஜனநாயகம் குறித்த கருத்துக்களை அறிந்துகொள்ள தமிழகம் ஆர்வம் காட்டியிருக்கிறது. பிளேட்டோ, சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில்  போன்றவர்களின் தொல்நூல்களும் ரஸல், இங்கர்சால் , எமர்சன்,.தோரோ போன்றவர்களின் நூல்களும் தமிழுக்கு வந்தன. வராத நூல்கள்கூட பெரிய அளவில் பேசப்பட்டன[. 1930களிலேயே ஹிட்லரின் மெயின் காப்ப் தமிழில் ப.ராமசாமியால் மொழியாக்கம் செய்யப்பட்டுவிட்டது]

பெ.நா.அப்புசாமி, கா.அப்பாத்துரை போன்றவர்களால் முக்கியமான அரசியல்நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.. பெ.நா.அப்புசாமி போன்றவர்களுக்கு மொழியாக்கத்தில் தெளிவான திட்டமும் இலக்கும் இருந்தன. தமிழில் ஐம்பதுகளிலேயே ஜப்பானிய நாவலான சென்ஜி கதை போன்றவை வெளியாகியிருக்கின்றன. இங்கிருந்த தேடல் மட்டுமே அதற்கான காரணம்.

ஐம்பதுகளில்தான் ருஷ்ய இலக்கியம்மீது ஆர்வம் இங்கே  உருவாகியது. அதற்கான காரணங்கள் மிக வெளிப்படையானவை. ஒன்று, காந்தி தல்ஸ்தோயை தன் முன்னுதாரணமாகக் கொண்டது. இரண்டு, இடதுசாரிகளின் எழுச்சி. அவர்கள் ருஷ்யாவை ஒரு கனவுநிலமாகவே முன்வைத்தனர். ஆகவே ருஷ்யாவைப் புரிந்துகொள்வதற்கான ஆர்வம் வாசகர்கள் நடுவே இருந்தது. அது அன்றைய உலகம் முழுக்கவே இருந்த உணர்வுதான். ருஷ்ய இலக்கியம் உலகம் முழுக்கச் செல்வதற்கும் அதுவே காரணம்.

ஆனால் ருஷ்யப்பேரிலக்கியங்கள் தீவிர இலக்கியத்தின் சிறிய வட்டத்திற்குள் மட்டுமே பேசப்பட்டன. கார்க்கி, சிங்கிஸ் ஐத்மாத்தவ் போன்றவர்களே இங்கு பிரபலமாக இருந்தனர். இலக்கியத்திற்குள் ருஷ்யப்படைப்புகளுக்கு அந்த முக்கியத்துவம் உருவானதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, ருஷ்யாவின் மதம்சார்ந்த வாழ்க்கைக்கும் இந்தியச்சூழலுக்கும் ஒற்றுமைகள் இருந்தன. இரண்டு, அப்பேரிலக்கியங்கள் பேசிய ஆன்மிக விடுதலை என்பது இந்தியர்களுக்குரிய தேடலாகவும் இருந்தது.

heminfg
ஹெமிங்வே

அக்காலகட்டத்திலேயே பால்ஸாக், மாப்பஸான் போன்றவர்கள் தொடர்ந்து இங்கே பேசப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் பேசிய பாலியல்விடுதலை, தனிமனித விடுதலை இங்கே பெரிதாகச் செல்வாக்கு செலுத்தவில்லை. இது ஏன் என்று பார்க்க இலக்கியமும் பண்பாடும் வரலாறும் முயங்கும் ஒரு பெரும் கருத்துவெளியை ஆராயவேண்டியிருக்கிறது. இலக்கிய வரலாற்றாசிரியனின் பெரும்பணி அது.

ஐம்பதுகளின் இறுதிவரைக்கும்கூட இலட்சியவாதமே இலக்கியத்தின் சாரம் என்ற நிலையே இங்கே நிலவியது. ஏனென்றால் நாம் பெரும் இலட்சியவாதக்கனவுகளுடன் விடுதலை நோக்கி வந்த ஒரு தேசம். அது காந்தியக் கருத்துக்கள், இடதுசாரிக் கருத்துக்கள் விளைந்த காலகட்டம். புதுமைப்பித்தன் காலகட்டத்தில்தான் இலட்சியவாதத்திற்கு எதிரான படைப்புகள், நவீனத்துவ ஆக்கங்கள் இலக்கியவாசகர்களில் சிறிய வட்டதிற்குள் கவனம் பெற்றன. புதுமைப்பித்தன் அலக்ஸாண்டர் குப்ரினின் யாமா என்ற நாவலை பலிபீடம் என்றபெயரில் மொழியாக்கம் செய்தார்.[முடிக்கவில்லை] ரா.ஸ்ரீ.தேசிகன் தாமஸ்மன் எழுதிய ’மாற்றிவைக்கப்பட்ட தலை’களை மொழியாக்கம் செய்ததும் திரிலோக சீதாராம் ஹெர்மன் ஹெஸியின் சித்தார்த்தனை மொழியாக்கம் செய்ததும் செய்ததும் நவீனத்துவ அலையை உருவாக்கும்பொருட்டே.

ஆனால் நவீனத்துவம் ஒரு கருத்தியல் நிலையென எழுந்தது அறுபதுகளில். க.நா.சு அதன் முதன்மை அறிவியக்கக்காரர். அவர் ஐரோப்பிய நவீனத்துவ ஆக்கங்களை இங்கே அறிமுகம்செய்தார். செல்மா லாகர் லெவ், பார் லாகர் க்விஸ்ட், நட் ஹாம்ஸன் போன்றவர்களின் ஆக்கங்களை மொழியாக்கம் செய்தார். தொடர்ச்சியாக ஐரோப்பிய இலக்கியமேதைகளை அறிமுகம் செய்துகொண்டே இருந்தார். காஃப்கா, காம்யூ, ஹெர்மன் ஹெஸ், லூகி பிராண்டல்லோ, நிகாஸ் கசண்ட்ஸகிஸ் என பலர் அவர் வழியாகவே இங்கே பேசப்பட்டார்கள். தமிழில் லத்தீனமேரிக்க எழுத்துக்களை முதன்முதலாக அறிமுகம்செய்தவரும் க.நா.சுதான். அவை உருவாகிவரும் காலகட்டத்திலேயே

அப்போதும் இங்கே இலட்சியவாதம் சார்ந்த எழுத்து இடதுசாரி எழுத்தின் வடிவில் தீவிரமாகவே நிலைகொண்டது. அங்கே ருஷ்ய இலக்கியத்தின் செல்வாக்கு நீடித்தது. இன்றும் அந்தச் செல்வாக்கு அப்படியேதான் உள்ளது. தமிழில் மார்க்சியர்களின் இலக்கியச்சுவையில் லத்தீனமெரிக்க நாவல்களே மெல்லிய மாற்றத்தைக் கொண்டுவந்தன. இங்கே இடதுசாரிகளால் முக்கியமாக முன்வைக்கப்பட்டவர் கார்க்கி, ஆனால் இங்குள்ள தீவிர இலக்கியச் சூழலில் மிகக்குறைவாகவே அவர் பேசப்பட்டுள்ளார். அவருடைய புகழ்பெற்ற அன்னை [தமிழாக்கம் ரகுநாதன்] இங்கே பேசப்பட்டதே இல்லை, ஒப்புநோக்க இன்னும்கூட மொழியாக்கம் செய்யப்படாத அர்தமானவ்கள்தான் பேசப்படுகிறது.

கார்க்கி
கார்க்கி

அறுபது எழுபதுகளில் தமிழிலக்கியம் காஃப்கா, காம்யூ, சார்த்ர் ஆகியவர்களின் செல்வாக்கு கொண்டிருந்தது. இலக்கியவிமர்சனத்தில் ஃப்ராய்டியம் மார்க்சியத்திற்கு நிகரான செல்வாக்கு பெற்றது. அன்றைய சிற்றிதழ்களில் இருத்தலியல் சார்ந்த விவாதங்கள், அம்மரபின் எழுத்தாளர்கள் குறித்த சொல்லாடல்கள் நிறைந்திருந்தன. அவற்றில் வே.ஸ்ரீராம் மொழியாக்கம் செய்த காம்யூவின் அன்னியன் பெரிய அளவில் செல்வாக்கைச் செலுத்திய ஒரு நூல்.

அதன்பின் அயல் இலக்கியச் செல்வாக்கு லத்தீனமேரிக்க எழுத்துக்களின் வடிவில் இங்கே வந்தது. எண்பதுகள் முழுக்கவே இலக்கியத்தளத்தில் கப்ரியேல் கர்ஸியா மார்க்விஸ், போர்ஹெஸ், கார்லோஸ் புயன்டஸ் ஆகியோர் இங்கே பேசப்பட்டனர்.  ஆர்.சிவக்குமார், பிரம்மராஜன் போன்றவர்களின் மொழியாக்கத்தில் லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் பலதொகுதிகளாக வெளிவந்தன. மார்க்யூஸுக்கும் போர்ஹெக்கும் மலர்கள் வெளியிடப்பட்டன.

விமர்சனத்துறையில்ஒருபக்கம் லூயி அல்தூஸர், வால்டர் பெஞ்சமின்   போன்ற ஐரோப்பிய மார்க்ஸியர்களின் செல்வாக்கும் மறுபக்கம் மிகயீல் பக்தின், ரோலான் பார்த், ழாக் தெரிதா போன்ற பின்நவீனத்துவர்களின் செல்வாக்கும் மிகுந்திருந்தது. இவ்விருசாராரிடையே விவாதங்கள் நிகழ்ந்தன

தொண்ணூறுகளுக்குப் பின்னர் லத்தீன் அமெரிக்க எழுத்துக்களின் செல்வாக்கு, மாயயதார்த்தம் மீதான கவற்சி குறைந்தது. பின்நவீனத்துவ எழுத்துமுறையிலேயே வரலாற்றுரீதியான எழுத்துக்கள் மீதான ஆர்வம் எழுந்தது. மிலன்குந்தேரா, , உம்பர்ட்டோ இகோ, இடாலோ கால்வினோ போன்றவர்கள் பேசப்பட்டார்கள். சா.தேவதாஸ் மொழியாக்கத்தில் கால்வினோவின் புலப்படா நகரங்கள் வெளிவந்தது. சுகுமாரன் மொழியாக்கத்தில் நூறாண்டுக்காலத் தனிமை வெளிவந்தது

அசோகமித்திரன் தமிழில் தொடர்ந்து அமெரிக்க எழுத்துக்களை பற்றிய பேச்சை நிலைநிறுத்தியவர். வில்லியம் சரோயன், ஹெமிங்வே, ஃபாக்னர் ஆகிய மூவரும் அவருடைய ஆதர்சங்கள். அவர்களைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறார். ஆனால் அவ்வப்போது பேசப்பட்டும்கூட அமெரிக்க எழுத்தாளர்கள் எவரும் இங்கே பெரிய அளவில் செல்வாக்கைச் செலுத்தவில்லை. இங்கே ஆர்வத்துடன் படிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட அமெரிக்க எழுத்தாளர் எவருமில்லை என்றே சொல்லவேண்டும். எனக்கு தனிப்பட்ட முறையில் ஐசக் பாஷவிஸ் சிங்கர் முக்கியமானவர். பலகதைகளை தமிழாக்கம் செய்யவைத்து வெளியிட்டேன். ஆனால் அவையும் இங்கே பெரிய அளவில் பேசப்படவில்லை.

camus
காம்யூ

அறுபதுகளில் பேர்ல் பதிப்பகம் என்றபேரில் ஓர் அமெரிக்க கூட்டுநிறுவனம் அமெரிக்காவின் ராக்ஃபெல்லர் அறக்கொடை உதவியுடன் உருவாக்கப்பட்டது. அமெரிக்க இலக்கியங்களை அது மொழியாக்கம் செய்து வெளியிட்டது. ஹெமிங்வே, ஃபாக்னர், ஜாக்லண்டன், சாமுவேல் பெக்கட், கிரகாம் கிரீன்,டென்னஸி வில்லியம்ஸ் போன்றவர்களின் படைப்புக்கள் தமிழில் வெளிவந்தன. உண்மையில் ருஷ்யா தன் நூல்களுடன் இந்தியச் சூழலுக்கு வருவதற்கே முத்துபதிப்பகம்தான் முன்னோடி. அந்நூல்கள் ’மேதாவி’ ‘ஜெகசிற்பியன்’ போன்று சரளமாக மொழிகொண்டவர்களால்தான் மொழியாக்கமும் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அவை ஓர் அறிவியக்கத்தின் பகுதியாக இங்கே வரவில்லை. அவை பேசிய சிக்கல்களுக்கும் இந்தியச் சூழலுக்கும் தொடர்பும் இருக்கவில்லை. அவை இங்கே பெரிதாகப் பொருட்படுத்தப்படவில்லை.

ஆனால் அமெரிக்க எழுத்தாளர்களின் செல்வாக்கு வணிக இலக்கியத்தில் இருந்தது. உதாரணமாக சுஜாதா ஹெமிங்வே, ஜான் அப்டைக் இருவருடைய செல்வாக்கின் விளைவான நடை கொண்டவர். அவருடைய நடை இங்கே இன்றும் நீடிக்கும் ஒரு செல்வாக்கு என்று சொல்லலாம்

இன்று தொடர்ச்சியாக ஐரோப்பிய, துருக்கிய, ஆப்ரிக்க நாவல்கள் வெளிவருகின்றன. ஆனால் அவை பிரசுரகர்தரின் ஆர்வத்தால் வெளியாகின்றன. அவை ஓர் அறிவியக்கத்தின் விளைவாக கொண்டுவரப்படவில்லை. ஆகவே மொழியாக்கங்கள் மிகுதியாக வெளியாகும் சூழலில் அவற்றைப்பற்றிய பேச்சு குறைவாக உள்ளது.

kafka

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருசில ‘பிரபல’ நூல்கள் ஒருவகையான பொதுச்செல்வாக்கை இங்குள்ள அறிவுத்தளத்தில் உருவாக்குவதுண்டு. பெரும்பாலும் அவ்வாறு உருவான செல்வாக்கு தணியத்தொடங்கியபின்னர், அந்நூல் நிறையப் பேசப்பட்டுவிட்டு புகழ்பெற்றமையால் அது மொழியாக்கம் செய்யப்படும். எண்பதுகளில் நான் தமிழில் இலக்கியம் வாசிக்கவந்த காலகட்டத்தில் ராபர்ட் பிர்சிக்கின் Zen and Motorcycle Maintenance அவ்வாறு ஓர் அலையை உருவாக்கியிருந்தது. அதற்கு முன் எழுபதுகளில்  சார்த்ரின் Being and Nothingness – அது அன்று பிரபல நூல்தான். அதற்கு முன்பு அறுபதுகளில் ரஸ்ஸலின் The Conquest of Happiness என்ற சிறுநூல்.

தொண்ணூறுகளில் ஃப்ரிஜோ காப்ராவின்  The Tao of Physics பேசப்பட்டது.,  அதன்பின்னர் ஜரேட்  டயமண்டின் Guns Germs and Steel. அதன்பின்னர் விலயன்னூர் ராமச்சந்திரனின் Phantoms in the Brainஅதன்பின் இப்போது யுவால் நோவாவின் Sapiens: A Brief History of Humankind. இவை குறுகிய தீவிரமான செல்வாக்கைச் செலுத்திவிட்டு பின்வாங்கிவிடுகின்றன. ஏன் இவை வருகின்றன, ஏன் பேசப்படுகின்றன என்பதை அறிய ஒட்டுமொத்த அறிவுச்சூழலை மதிப்பிட்டு அறியவேண்டும். கொஞ்சம் கற்பனையுள்ள ஒரு விமர்சகன் இந்நூல்களின் வழியாகவே தமிழ்ச்சிந்தனை எப்படி பரிணாமம் கொண்டது என்பதை ஊகிக்க முடியும்.

எந்தமொழியும் உலக இலக்கியத்தை முழுமையாக தான் வாங்கிக்கொள்ளாது.ஒரு படைப்பு முக்கியமானது என்பதனால் அதை இன்னொரு பண்பாடு வாங்கிக்கொள்ளவேண்டும் என்பதில்லை. ஏனென்றால் வாசிப்பு, மொழியாக்கம் என்பது ஒர் உரையாடல்.ஒர் அயல்படைப்பு நம் மொழியில் உள்வாங்கப்படுவதற்கு அப்படைப்பு பேசும் தத்துவம், அதன் அழகியல் ஆகியவை இங்குள்ள தத்துவம், சமூகப்பிரச்சினைகள் அழகியல் ஆகியவற்றுடன் கொள்ளும் தொடர்புதான் முக்கியமான காரணம். இங்குள்ள தத்துவம் , சமூகப்பிரச்சினைகள் அழகியல் ஆகியவற்றைச் சீண்டுவதும்  காரணமாக இருக்கலாம். பெரும்பாலான பொழுதுகளில் ஏற்கனவே நிகழ்ந்துகொண்டிருக்கும் தத்துவ, அழகியல் உரையாடல்களின் ஒரு பகுதியாக வந்தணையும் படைப்புக்களே பேசப்படுகின்றன. உதாரணமாக, இந்திரா காந்தியின் காலகட்டத்தின் நம்பிக்கைவீழ்ச்சி, வேலையின்மை, தீவிர இடதுசாரி இயக்கங்கள் ஒடுக்கப்பட்டமை ஆகியவையே இங்கே இருத்தலியல் அந்த அளவுக்குப்  பெரிதாகப் பாதித்தமைக்கான காரணம்

உண்மையில் இங்கே பேசப்படுவதற்கும் நூல்கள் மொழியாக்கம் செய்யப்படுவதற்கும் இடையே ஓர் ஒத்திசைவு இல்லை. ஓர் இலக்கிய அலை எழுந்து பலநூல்கள் பேசப்படுகின்றன, ஒன்றோ இரண்டோதான் மொழியாக்கம் செய்யப்படுகின்றன. உதாரணமாக பத்தாண்டுக்காலம் தமிழில் இருத்தலியல்பேசப்பட்டது. வெ.ஸ்ரீராம் மொழியாக்கம் செய்த காம்யூவின் ‘அந்நியன்’ எஸ்.வி.ராஜதுரை மொழியாக்கம் செய்த ’அன்னியமாதல்’ மட்டுமே குறிப்பிடும்படியான நூல்கள்.

Marquez
மார்க்யூஸ்

என்ன காரணமென்றால் இச்சூழலில் இலக்கியம் வாசிப்பவர்கள், எழுதுபவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே அந்நூல்களை வாசித்துவிடுவார்கள். தமிழில் வாசிக்க விரும்புபவர்கள் எண்ணிக்கையில் நூறு இருநூறுபேர்தான். அவர்களுக்காக அந்நூல்களை தமிழாக்கம் செய்ய முடியாது. பதிப்பகங்கள் முதலீடுசெய்வதில்லை, மொழியாக்கத்திற்கு ஊதியமும் கிடைக்காது

இருந்தும் ஏன் மொழியாக்கம் செய்யப்படுகிறது? அந்த இலக்கிய அலையின் தனிமொழியை தமிழாக்கம் செய்வதற்காகவே. இங்கே இருத்தலியல் மிகுதியாகப் பேசப்பட்டது. காம்யூவின் அந்நியன் நாவல் அனேகமாக அனைவர் கையிலும் இருந்தது – அதன் சைக்ளோஸ்டைல் பதிப்பை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் வே.ஸ்ரீராம் மொழியாக்கம் செய்தபோதுதான் நவீனத்துவத்திற்குரிய வர்ணனை அற்ற, இறுக்கமான, அறிக்கைபோன்ற தனிநடை தமிழில் நிகழ்ந்தது. பலருக்கும் அது கிளர்ச்சியூட்டும் வாசிப்பாக அமைந்தது. நானறிந்து ஆங்கிலம் வழியாக சமகால உலக இலக்கியத்தில் விரிந்த வாசிப்புகொண்டவரான தேவதச்சன் ஸ்ரீராமின் மொழியாக்கத்தை இருமுறை வாசித்ததாக என்னிடம் சொன்னார். அந்த நடை ஒரு பெரிய முன்னுதாரணமாக அமைந்தது.

இதே பங்களிப்பைத்தான் ஹெர்மன் ஹெஸின் சித்தார்த்தா இங்கே செய்தது. ஆனால் இங்கே அதிகமாகப் பேசப்பட்டது ஹெஸின் ஸ்டெப்பன் வுல்ஃப்தான். அது மொழியாக்கம் செய்யப்படவே இல்லை. அதாவது மொழியாக்கம் என்பது அந்த அயல் அறிவியக்கத்தின் புனைவுமொழியின் தமிழ்வடிவை அடைவதற்காக மட்டுமே.இங்கே மொழியாக்கங்கள் இதன்பொருட்டே செய்யப்படுகின்றன. மூலநூல்களை வாசிப்பதற்காக அல்ல.அவை எப்போதும் ஆங்கிலத்திலேயே வாசிக்கப்படுகின்றன.

வருங்காலத்திலும் இங்கே ஆங்கிலம் வழியாக வாசிப்பவர்களே இலக்கிய இயக்கத்தின் மையப்போக்கில் இருப்பார்கள். ஆனாலும் மொழியாக்கம் தேவைப்படும். மொழியாக்கங்கள் தமிழின் புனைவுமொழியை அயல்செல்வாக்குடன் இணைத்துப் புதுப்பிக்கும்பணியையே முதன்மையாகச் செய்கின்றன

ஜெ

முந்தைய கட்டுரை“ஞானமும் சன்னதமும்’  – லக்ஷ்மி மணிவண்ணன்
அடுத்த கட்டுரைநாளை சென்னையில் இரு நிகழ்ச்சிகள்…