அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது பெற்ற கண்டராதித்தன் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகிறீர்கள். விருதுகள் நிறையவே வழங்கப்படுகின்றன. இவ்வாறு அக்கவிஞரை அனைத்துவகையிலும் கவனப்படுத்தி முன்னிறுத்தும் கட்டுரைகளை வெளியிடுவதுதான் மேலும் முக்கியமானது என நினைக்கிறேன். ஏனென்றால் இங்கே கவிஞர்களின் எழுத்துக்களை மிகக்குறைவானவர்களே வாசிக்கிறார்கள். பெரும்பாலும் கவிதை எழுதுபவர்கள் மட்டுமே கவிஞர்களை வாசிக்கிறார்கள் என நினைக்கிறேன். இருநூறுபேர் கவிதைவாசகர்கள் இருந்தால் ஆச்சரியம். ஆகவே ஒரு கவிஞனைப்பற்றிய குறிப்பு பிரசுரமாவதே அரிதாக உள்ளது. இந்நிலையில் ஒரு கவிஞரைப்பற்றி தொடர்ச்சியாக வெளிவரும் கட்டுரைகள் முக்கியமான ஒரு பணி என நினைக்கிறேன். கவிஞர் கண்டராதித்தன் அவர்களுடைய கவிதைகளை பலகோணங்களில் புரிந்துகொள்ள அவை உதவியாக இருந்தன
கட்டுரைகள் எல்லாமே முக்கியமானவையாகவே இருந்தன. கவிதை என்ற அனுபவத்தைச் சொல்லவேண்டுமே ஒழிய கவிதையை விளக்கவோ கவிதையின் கருவை விவாதிக்கவோ கூடாது என்ற தெளிவு கட்டுரையாளர்கள் அனைவருக்குமே இருந்தது. அக்கட்டுரைகள் கண்டராதித்தனின் கவிதைகளின் மேல் உள்ள வசீகரத்தைக் குறைப்பவையாக இல்லை என்பது மிகமிக முக்கியமானது என நினைக்கிறேன். கடலூர்சீனு, பிரபு மயிலாடுதுறை இருவருமே கவிதைகளின் வரலாற்றுப்பின்புலம், அழகியல்பின்புலம் ஆகியவற்றைச் சொல்லி கவிதைகளின் மீது புதியதிறப்பை உருவாக்கினார்கள். வெண்பா கீதாயன் கவிதைகளின் தொல்மரபின் தொடர்ச்சியைச் சொல்லி அவ்வாறு ஒரு திறப்பை உருவாக்கினார். இவ்வாறு கவிதைகளுக்கு ஒரு பின்புலப்புரிதலை அளிப்பதே கட்டுரையாளர்கள் செய்யவேண்டியது. இங்கே பெரும்பாலானவர்கள் கவிதைகளைப்பற்றி தங்கள் மனஓட்டங்களை சிக்கலானமொழியில் எழுதி அதை விமர்சனம் என்கிறார்கள். அல்லது கவிதையின் கருப்பொருள் உள்ளடக்கம் என்ன என்று எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள்.கவிதையைப்பற்றி எழுதும்போது எதை எழுதக்கூடாதென்று தெரிவது மிகமுக்கியமான விஷயம்
ஆனால் இக்கட்டுரைகளில் மிகச்சிறப்பானது ஏ.வி.மணிகண்டன் எழுதிய கட்டுரை. தமிழில் கவிதைபற்றி எழுதப்பட்ட கட்டுரைகளிலேயே மிகச்சிறந்த சிலகட்டுரைகளில் ஒன்று என்று சொல்லத்தோன்றியது. கவிதைபற்றி எழுதும்போது கோட்பாட்டு மொழிக்குள் செல்லாமல் கவிதைக்குரிய படிமங்கள் கொண்ட மொழியில் எழுதுவது மிகமுக்கியமான விஷயம். அதோடு சமகாலக் கவிதைகளைப்பற்றி ஆழமான சில மதிப்பீடுகளை முன்வைத்து அதன் பின்னணியில் கண்டராதித்தனின் எல்லா தொகுதிகளையும் கருத்தில்கொண்டு ஒட்டுமொத்தமான பங்களிப்பை ஆராயவும் கண்டராதித்தனின் கவிப்பயணத்தின் வளர்ச்சியை மதிப்பிடவும் அவரால் முடிந்திருக்கிறது. பலமுறை வாசிக்கவேண்டிய முக்கியமான கட்டுரை. நன்றி
கண்டராதித்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஆர்.செந்தில்குமார்
கண்டராதித்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவருடைய கவிதைகளை ஆங்காங்கே வாசித்திருக்கிறேன். திருச்சாழல் தவிர வேறு தொகுதிகள் வாசிக்கக்கிடைக்கவில்லை. இவ்விருது அவருடைய கவிதைகளைக் கவனப்படுத்தும் எனநினைக்கிறேன். கவிதத்தொகுதிகள் பெரும்பாலும் விற்பதில்லை. ஆகவே மிகச்சீக்கிரமே அவை கிடைக்காமலாகிவிடுகின்றன. கவிதைத்தொகுதிகளை இணையத்தில் முழுமையாகவே வலையேற்றி எப்போதும் கிடைக்கும்படிச் செய்வது நல்லது என்பது என் எண்ணம். எப்படியும் கவிதைகளுக்கு பெரிய ராயல்டி எல்லாம் கிடைக்கப்போவதில்லை. கவிதைகளை quote செய்வதற்கு இணையத்தில் அவை இருப்பது மிகவும் உதவியானது
திரு ஏ.வி.மணிகண்டனின் கட்டுரை எனக்கு மிகவும் முக்கியமான கட்டுரையாகப் பட்டது. கவிதையைப்பற்றிய முக்கியமான கேள்விகள் சிலவற்றை எழுப்புகிறார். அதில் அவர் micro narration பாணியிலான கவிதைகளின் எல்லைகளைப் பற்றிச் சொல்வது மிகவும் முக்கியமான கருத்து என்று படுகிறது. அத்தகைய கவிதைகள் உடனடியாக புரிகின்றன. உடனே ரசிக்கச்செய்கின்றன. ஒரு வாழ்க்கைத்தருணம்போலவே ஆகிவிடுகின்றன. ஆனால் கவிதைக்கு அதுபோதுமா? கவிதை நம்மை உலுக்கவும் நெடுங்காலம் கூடவே வரவும் வேண்டும் அல்லவா? அது நடக்கிறதா? இல்லை என்றே சொல்வேன். மிகச்சில குறுநிகழ்ச்சி கவிதைகள்தான் நம் நினைவிலேயே தங்குகின்றன.
அதோடு ஓர் ஆச்சரியமென்னவென்றால் அவ்வாறு நம் நினைவில் தங்கும் கவிதைகளை எல்லாம் நாம் கவிதைகளாக நினைவுகூர்வதில்லை. நிகழ்ச்சிகளாகவே நினைவுகூர்கிறோம்.“முகுந்து நாகராஜன் கவிதையிலே ஒரு காட்சி வருது…”என்று சொல்கிறோம். சொல்லும்போதே அந்நிகழ்ச்சியைக் கொஞ்சம் மாற்றிவிடுகிறோம். நம்முடைய வெர்ஷனைத்தான் சொல்கிறோம். அப்படியென்றால் அந்த கவிதை கவிதையாகத்தான் நம்முள் செயல்படுகிறதா?
மௌனி பகடி என்பது கலையில் ஒரு இரண்டாம்நிலை வெளிப்பாடுதான் என்று ஒரு பேட்டியில் சொல்கிறார். பழையபேட்டி. புதுமைப்பித்தனின் பகடிக்கதைகளை மௌனி நிராகரிக்கிறார். புதுக்கவிதையில் பகடி நுட்பமாக வெளிப்படுகிறது. ஆனால் பகடி எல்லா நிலையிலும் conscious ஆனது. பகடி தர்க்கத்தைத் தலைகீழாக்குகிறது. ஆனாலும் அது தர்க்கம்தான். கவிதைக்கு ஒரு mystic element எப்போதும் தேவைப்படுகிறது. பகடி அந்த அம்சத்தையும் தர்க்கப்பூர்வமாக அணுகுகிறது. ஆகவே அதற்கு குறுகிய எல்லைகள்தான் உள்ளன.
நான் இன்றைய கவிதைகளை வாசிக்கும்போது இந்த அம்சத்தைப் பார்க்கிறேன். எனக்கு பிரமிள்தான் ஆதர்சம்.நான் அவரை இரண்டுமுறை சந்தித்திருக்கிறேன். ஆகவே கண்டராதித்தனின் திருச்சாழல், ஏகாம்பரம் போன்ற கவிதைகளையே என்னால் முக்கியமான கவிதைகளாக கருதமுடிகிறது. ஆகவே ஏ.வி.மணிகண்டனின் கட்டுரையில் உள்ள அந்த கருத்து மிகமுக்கியமானது. அவர் அதைத்தொடர்ந்து அந்த மிஸ்டிக் அம்சத்தை மரபின் symbols ஸுடன் தொடர்புபடுத்தி மேலும் சென்றிருப்பதும் முக்கியமான ஒரு சிந்தனை. தமிழில் கவிதைபற்றி சமீபத்தில் வாசித்த நல்ல கட்டுரை
வி.நாகராஜன்
தும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்
வான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்
ஏகமென்றிருப்பது
அந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை
சாழற்மலர்ச்செண்டு
பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு