சாத்யகி தன் மாளிகையை அடைந்தபோது தொலைவிலேயே ஊடி அமர்ந்திருக்கும் கைக்குழந்தைபோல அந்தச் சிறிய கட்டடம் ஓசையின்றி இருப்பதை கண்டான். அங்கு தன் மைந்தர்கள் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர்கள் அரண்மனையிலிருந்து திரும்பிய பின்னர் வேறு ஏதேனும் பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்களா? அதன் பின்னரே தேர்களும் புரவிகளும் முழுமையாகவே முற்றத்தில் பரவியிருப்பதை நோக்கி அவர்கள் எங்கு சென்றிருப்பார்கள் என்று வியந்துகொண்டான். அவ்வெண்ணத்தால் துயில் விலக அவன் உடலெங்கும் எரிச்சல் குடியேறியது.
தலைவணங்கி அணுகிய சூதனிடம் கடுமுகம் காட்டி கடிவாளத்தை அளித்துவிட்டு “மைந்தர் இங்கில்லையா?” என்றான். “இருக்கிறார்கள், அரசே. அனைவரும் மாளிகையில்தான் உள்ளனர்” என்றான் சூதன். “என்ன செய்கிறார்கள்?” என்று அவன் மாடியை நோக்கியபடி கேட்டான். “அங்கேதான் இருக்கிறார்கள்” என்றான் சூதன். வியப்புடன் படிகளிலேறி தாழ்வான பீடத்தில் அமர்ந்தான். ஏவலன் அவன் காலணிகளையும் கச்சைகளையும் கழற்றியபின் எழுந்து அவனை பார்க்காமல் “மைந்தர் எங்கிருக்கிறார்கள்?” என்றான்.
“பதின்மரும் தங்கள் அறைகளில்தான் இருக்கிறார்கள்…” என்று ஏவலன் மறுமொழி சொன்னான். அவன் படியேறி முதற்கூடத்தை அடைந்தபோது அங்கு சந்திரபானுவும் சாந்தனும் தனித்திருப்பதை பார்த்தான். அவர்கள் நெடுநேரமாக ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை என்பது முகங்களில் தெரிந்தது. அவனுடைய காலடி ஓசையும் நுழைவும் சற்று பிந்திதான் அவர்களின் எண்ணத்தை அடைந்தது. சந்திரபானு எழுந்து முனகலாக “வணங்குகிறேன், தந்தையே” என்ற பின்னர்தான் சாந்தன் திடுக்கிட்டு எழுந்தான். அவனும் முனகலாக வாழ்த்துரைத்த பின் சந்திரபானுவை ஓரவிழியால் பார்த்தான்.
“அசங்கன் எங்கே?” என்று சாத்யகி கேட்டான். “அவரும் இரு மூத்தவரும் அவருடைய அறையில் இருக்கிறார்கள், தந்தையே” என்று சாந்தன் சொன்னான். “அழைத்து வரவா, தந்தையே?” என்று சந்திரபானு கேட்க வேண்டாம் என்று கையமர்த்திவிட்டு சிறு இடைநாழியினூடாக நடந்து அசங்கனின் அறை முகப்பை அடைந்தான். உள்ளே பேச்சொலி எழவில்லை. “மைந்தர்கள் உள்ளிருக்கிறீர்களா?” என்றான். “ஆம், தந்தையே” என்றபடி அசங்கன் எழுந்துவந்து வாயிலை திறக்க உள்ளே இருந்த இருவரும் எழுந்து நின்றனர்.
சாத்யகி உள்ளே சென்று பீடத்தில் அமர்ந்தான். மைந்தர்கள் நின்றுகொண்டனர். அவன் அவர்களின் முகங்களை மாறிமாறி நோக்கி “என்ன ஆயிற்று? இங்கு பேச்சும் சிரிப்பும் ஒலிக்கவில்லையே?” என்றான். அசங்கன் “ஒன்றுமில்லையே…” என்றான். “இல்லை. நான் வரும்போதே இந்த மாளிகை அமைதியில் செயலற்றிருப்பதைப்போல தோன்றியது. நீங்கள் உள்ளே இல்லையோ என்று எண்ணிக்கொண்டு வந்தேன்” என்றான் சாத்யகி.
“இங்குதான் இருக்கிறோம், காலையிலிருந்தே” என்றான் அசங்கன். “வெளியே செல்லவில்லையா?” என்றான் சாத்யகி. “இல்லை” என்றான் அசங்கன். “பாஞ்சால இளவரசர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களை சென்று சந்தித்திருக்கலாமே?” அசங்கன் “செல்லவேண்டும்” என்றான். மேலும் எரிச்சலுடன் “என்ன ஆயிற்று உங்களுக்கு?” என்றான் சாத்யகி. “ஒன்றுமில்லை, தந்தையே” என்று நிலம்நோக்கியவனாக அசங்கன் சொன்னான். சாத்யகி அவனை கூர்ந்து நோக்கினான். அங்கே என்ன நிகழ்ந்தது என அவனால் உய்த்தறிய இயலவில்லை.
சாலன் “தாங்கள் கூறியபடிதான் ஓசையேதும் எழுப்பாமல் இங்கிருக்கிறோம்” என்றான். சினத்துடன் “நான் என்ன சொன்னேன் உங்களிடம்?” என்று கேட்ட சாத்யகி “நான் சொன்னது முறைமைகளைக் குறித்துதான். ஒவ்வொருவரும் தங்கள் அறைக்குள் சொல்லாடாமல் அமர்ந்திருக்கவேண்டுமென்றல்ல” என்றபின் பார்வையை திருப்பிக்கொண்டு “நீங்கள் இவ்வாறு இருப்பது எனக்கு துயர் அளிக்கிறது… நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என நினைக்கச் செய்கிறது” என்றான். “துயரெல்லாம் இல்லை, தந்தையே. பாஞ்சாலத்து அரசியை சந்தித்து வந்தபின் மூன்றுநாட்களாகவே அனைவரும் வேறு ஒரு உளநிலைக்கு சென்றுவிட்டோம். அதை எங்களால் விளங்கிக்கொள்ள முடியவில்லை” என்றான் அசங்கன். “என்ன உளநிலை?” என்று சாத்யகி கேட்டான். “அதை என்னால் சொல்ல முடியவில்லை…” என்றான் அசங்கன்.
சினி “நான் நல்ல உளநிலையில்தான் இருந்தேன். ஆனால் மூத்தவர் இப்படி முகம்பருத்து விழிதாழ்த்தி இருப்பதனால் மற்றவர்களும் அப்படி இருக்கிறார்கள். ஆகவே நான் சாளரம் வழியாக அம்புகளை விட்டு மாமரத்தில் இருந்து மாங்காய்களை வீழ்த்தினேன்” என்றான். சாத்யகி “பாஞ்சாலத்து அரசியின் விருந்தில் என்ன நிகழ்ந்தது?” என்றான். “எல்லாம் எண்ணியபடியேதான். பிழையென ஏதுமில்லை” என்றான் அசங்கன். “பிறகென்ன?” என்று சாத்யகி கேட்டான். “ஒன்றுமே இல்லை, தந்தையே” என்றான் அசங்கன். சாத்யகி “சொல்க, அங்கே என்ன நிகழ்ந்தது?” என்றான்.
அசங்கன் தயங்கி பின் குரல் தீட்டி “பாஞ்சாலத்தரசி எங்களை விருந்துண்ண அழைத்தார். அங்கு செல்லும்போது அரண்மனைப் படியேறுவது வரை எப்படி முறைமைச்சொல் உரைக்கவேண்டும், அப்போது கைகளை எப்படி வைத்திருக்கவேண்டும், எவ்வாறு அமரவேண்டும், எந்த உணவை எப்படியெல்லாம் உண்ண வேண்டும் என்று முறைமைகளைத்தான் நான் சொல்லிக்கொண்டு சென்றேன். இவர்கள் முதலில் சற்று அஞ்சினார்கள். அதன் பின்னர் நான் திரும்பத் திரும்ப சொன்னதனால் அச்சமும் தயக்கமும் இழந்து அங்கு செல்லும்போது நகையாடிக்கொண்டிருந்தார்கள்…”
சாத்யகி சினத்துடன் “அதாவது அங்கு சென்று அவர்கள் முறைமைகளை கடைபிடிக்கவில்லை. ஆகவே அரசியோ அல்லது பிறரோ எதையோ கூறினார்கள். ஆகவே உளம் சோர்ந்துவிட்டீர்கள், அவ்வளவுதானே?” என்றான். “சொல்க, கடிந்தார்களா? ஏளனம் சொன்னார்களா?” அசங்கன் இல்லை என்று தலையசைப்பதை விழிகொள்ளாமல் அவன் மேலும் கூவினான். “இவர்களிடம் நாம் இறங்கிநிற்க வேண்டியதில்லை. நாம் யாதவர்கள், புவியாளும் பேரரசர் கிருஷ்ணரின் குலத்தோர். நாளை இந்த மண்ணை ஆளப்போகிறவர்கள். அதனால்தான் நம்மிடம் குருதி உறவுகொள்ள பாஞ்சாலம் இறங்கிவருகிறது. நோக்குக, இன்னும் ஒரு தலைமுறைக்கு பின் நம்முடைய நெறிகளையும் முறைமைகளையும் அவர்கள் கடைபிடிக்கப்போகிறார்கள். வெற்றியே எது சரியென்பதை முடிவு செய்கிறது. அதன்பொருட்டு நீங்கள் வருந்தவேண்டியதில்லை. யாதவக்குடி ஒன்றும் நேற்று முளைத்ததல்ல, நமக்கும் யுகங்களின் நீள்வரலாறு உள்ளது. நம்மை எவரும் ஏளனம் செய்யவோ இறக்கி நிறுத்தவோ நாம் ஒப்பவேண்டியதில்லை.”
அவன் சினத்தைப் பார்த்து தயங்கி பின் உளச்சொல் சேர்த்து அசங்கன் “அவ்வாறல்ல, தந்தையே. நாங்கள் எவரும் அங்கு முறையெதையும் மீறவில்லை” என்றான். புருவம் சுருக்கி “பிறகென்ன?” என்றான் சாத்யகி. அசங்கன் “தந்தையே, ஒவ்வொன்றையும் மிகத் தேர்ந்த கூத்தர்கள்போல்தான் செய்தோம். ஒவ்வொரு சொல்லையும் எண்ணித்தான் உரைத்தோம். பாஞ்சாலத்து அரசிதான் எந்த முறைமையையும் கடைபிடிக்கவில்லை. அவர்கள் இளைய யாதவரைப்போலவே இருக்கிறார்கள். நாங்கள் அறைக்குள் நுழைந்ததுமே கைவிரித்தபடி வந்து எங்களை அணைத்துக்கொண்டார். இளையவனை காதைப் பிடித்து இழுத்துச்சென்று தன்னருகே அமரவைத்து அவனிடம் கொஞ்சிப் பேசத்தொடங்கினார். அவன் எங்களைப் பார்த்து விழித்துக்கொண்டிருந்தான்…” என்றான்.
சாத்யகி திகைப்புடன் மாறி மாறி நோக்க சாந்தன் “திருஷ்டத்யும்னர் என்னைப் பிடித்து அருகே நிறுத்தி நான் செம்மொழி கற்றுள்ளேனா என்று கேட்டார். ஆம் என்றேன். உனக்கு பிரஹசனங்கள் பிடிக்கும் அல்லவா என்று கேட்டார். நான் எப்படி தெரியும் என்றேன். தெரியும் என்று சொல்லி சிரித்தார். அருகே அமர்ந்திருந்த பாஞ்சாலத்து அரசி உன் கண்களில் சிரிப்பு உள்ளது என்றார். திருஷ்டத்யும்னர் ஆகவே உன் தந்தை உன்னை அஞ்சிக்கொண்டே இருப்பார் என நினைக்கிறேன் என்று சொல்லி உரக்க நகைத்தார்” என்றான். சினி “நான் சொல்கிறேன்… நான் சொல்கிறேன்” என்று முந்தி “பாஞ்சாலத்து அரசி என்னிடம் எனக்கு மிகப் பிடித்த உணவு என்ன என்று கேட்டார். நான் கன்றிறைச்சி என்றேன். உன் குடியினர் உண்ணமாட்டார்களே என்றார். இல்லை இளைய யாதவருக்குத் தெரியாமல் மந்தணமாக உண்பார்கள் என்றேன்” என்றான்.
சாத்யகி திடுக்கிட்டு “மந்தணமாக உண்கிறார்களா? எங்கே?” என்றான். “அவன் பாஞ்சாலத்து அரசியை களியாடியிருக்கிறான், தந்தையே. யாதவர் உண்பதில்லை…” என்றான் அசங்கன். சாத்யகி சினியை நோக்கி மேலும் ஏதோ கேட்க வாயெடுக்க அவன் தந்தையை மறித்து “அதன்பின் பாஞ்சாலத்து இளவரசர்கள் அங்கே வந்தார்கள். உடன் அரசியும் மகளும் வந்தனர்” என்றான். சாத்யகி முகம் மலர்ந்து “ஆம், முதலில் உங்களை அமரச்செய்துவிட்டு அவர்களை அழைக்கவேண்டும். அதுவே குடிக்கு அளிக்கப்படும் முதன்மை” என்றான். சினி “மனாதனும் நானும் ஒரே அகவை. அவன் என்னிடம் நீ தேரோட்டுவாயா என்று கேட்டான்” என்று ஊடே புகுந்தான்.
அவனை அடக்கிவிட்டு அசங்கன் “அவர்கள் நால்வர், தந்தையே. திருஷ்டகேது என்னளவே மூத்தவன். அடுத்தவன் க்ஷத்ரதர்மன். மூன்றாமவன் க்ஷத்ரஞ்சயன். மூவரும் எங்களை முறைப்படி வணங்கி முறைமைச்சொல் உரைத்தனர். நாங்களும் முறைமையுரைத்தோம். உடனே முறைமைகள் விலக நாங்கள் விளையாட்டுத்தோழர்கள்போல ஆனோம். சிரிப்பும் ஏளனமுமாக அத்தருணத்தை கொண்டாடினோம்” என்றான். சாந்தன் சிரித்தபடி “தந்தையே, அந்த இளவரசன் க்ஷத்ரஞ்சயன் இளவரசர்கள் அனைவருக்கும் மணநிகழ்வு ஒருக்கப்பட்டுள்ளதாக எண்ணிக்கொண்டிருந்தான். அவனுடைய இளவரசியை சந்திக்க வந்திருக்கிறான், எங்களைக் கண்டதும் ஏமாற்றம் அடைந்து இளவரசி எங்கே என்று கேட்டான். அதை நான் அவையினருக்கு கூவிச்சொன்னேன். அனைவரும் அவனை ஏளனம் செய்தனர். சிரித்துச் சிரித்து சலித்தோம்” என்றான்.
சாத்யகி சிரித்துக்கொண்டு அசங்கனிடம் “உன்னை அவளுக்குப் பிடித்திருக்கிறது என்று அறிந்தேன்” என்றான். அசங்கன் முகம் சிவக்க விழிகளை திருப்பிக்கொண்டு “நான் அறியேன்” என்றான். சாத்யகி மேலும் சிரித்து அவன் தோளைத்தட்டி “அவளுக்கு உன்னை பிடித்திருக்கிறது என்பது இந்தப் புவியில் முதன்மையாக உனக்குத்தான் தெரிந்திருக்கும்” என்றான். அசங்கன் “இல்லை, தந்தையே” என்றான். அவன் குரல் உடைந்திருந்தது. “என்ன நடந்தது? அதை மட்டும் சொல்” என்றான் சாத்யகி.
“இளையவருக்கும் இளவரசியை மிகவும் பிடித்திருந்தது. நான் அவர்களைக் கண்டதும் எழுந்து வணங்கி முகமன் உரைத்தேன். அவர்களும் வழக்கமான முகமனை உரைத்தனர். அதன்பின் அமர்ந்துகொண்டோம். சற்றுநேரத்தில் எல்லாம் கலைந்துவிட்டது. எந்த முறைமையும் இல்லை. அனைவரும் ஒரே நேரத்தில் உரக்க பேசிக்கொண்டார்கள். பாஞ்சாலத்து இளவரசர் ஊனுணவை எடுத்து இளையவருக்கு ஊட்டியே விட்டார். இளையோர் அந்தக் கூத்தில் கலந்துகொண்டார்கள். நானும் மூத்த இளையோரும் என்ன செய்வதென்றறியாமல் குழம்பி எப்போதும் பயின்று தேர்ந்திருந்த சொற்களை மட்டுமே சொன்னோம். சந்திரபானு தயங்கி ஏதோ முறைமைச்சொல் உரைக்க பாஞ்சாலத்து அரசி அவனை தலையில் அறைந்து என்ன கூத்திலா நடித்துக்கொண்டிருக்கிறீர்கள், முறையாகப் பேசு அறிவிலி என்றார். அவன் நான் முறையாகவே பேசுகிறேன் என்று சொன்னதும் உன் தந்தை உங்களுக்கு பயிற்றுவித்த அனைத்தையும் மறந்துவிடுங்கள். இது உங்கள் அரண்மனை, உங்கள் உறவினர் இங்குள்ளவர்கள் என்றார். நாங்கள் மூவரும் இறுதிவரை எங்கள் தயக்கத்தை விடவே இல்லை” என்றான் அசங்கன்.
சாத்யகி “முறையாக ஏதேனும் முடிவு சொல்லப்பட்டதா?” என்றான். “இல்லை, ஆனால் இன்று மாலை கொற்றவை பூசனைக்குப் பிறகு மணஅறிவிப்பு இருக்கும் என்று எனக்குத் தோன்றியது” என்றான் அசங்கன். “என்னிடம் எதையும் சொல்லவில்லை. அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து நீங்கள் உபப்பிலாவ்யத்திற்கு திரும்பி வந்ததுமே பொழுதும் முறைமையும் முடிவெடுக்கப்படும் என்ற எண்ணம் ஏற்பட்டது.” சாத்யகி “இப்போது இங்கு படைகள் சூழ்ந்துள்ளன. போரெழுகை நிகழ்கிறது. இதன் நடுவே ஒரு மணநிகழ்வை எண்ணிப்பார்க்கவே என்னால் இயலவில்லை” என்றான். அசங்கன் “ஆம், அதைத்தான் மூதன்னையும் சொன்னார்கள். நாங்கள் முதலில் அவர்களைத்தான் பார்க்கச் சென்றோம். அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தார்கள் என்று தோன்றியது. எங்களைப் பார்த்ததும் ஓடிவந்து அணைத்துக்கொண்டார்கள். தங்கள் தந்தையைப்பற்றியும் அன்னையைப்பற்றியும் கேட்டறிந்தார்கள். அன்னை இளைய யாதவரைப்பற்றி சொன்னதை சொன்னதும் வாய்விட்டு சிரித்தார்கள்” என்றான்.
சாத்யகி “நான் அவர்களை முப்பதாண்டுகளாக பார்த்துவருகிறேன். இப்போதுதான் அவர்கள் முழு மகிழ்வுடன் இருக்கிறார்கள். அவர்கள் எண்ணிய அனைத்தும் ஈடேறப்போகிறதென்று உணர்ந்திருக்கிறார்கள்” என்றான். சந்திரபானு “ஆம், தந்தையே. மூதரசி சிறுமியைப்போல சிரித்துக்கொண்டே இருந்தார்கள். எதையாவது எடுப்பதென்றாலும் வைப்பதென்றாலும் தானே துள்ளி எழுந்து சென்றார்கள். இளையவர்களை தனது இரு பக்கமும் அமர்த்தி கையால் தழுவிக்கொண்டே பேசினார்கள். பாஞ்சாலத்து இளவரசி ரிஷபவனத்துக்கு அரசியாக வருவது ஒரு தொடக்கம் என்று மூத்தவரிடம் சொன்னார்கள்” என்றான்.
சாந்தன் ஊடே புகுந்து கைநீட்டி “இனி ஷத்ரியர் அனைவரும் யாதவக்குடிகளுக்கு பெண்கொடுக்க நிரையில் நிற்பார்கள் என்று சொல்லி உரக்க நகைத்தார். அவர் மிகையாக சிரிப்பதுபோலிருந்தது. சிரிக்கையில் முகம் சிவந்து கண்கள் கசிய அழுவதுபோலவும் தோன்றியது. வெண்ணிறம்கொண்டவர்களாதலால் கழுத்துகூட சிவந்துவிட்டிருந்தது. சிரித்து மூச்சுவாங்கி மேலாடையால் முகம் துடைத்துக்கொண்டார். முதிய பெண்கள் அப்படி சிரித்து நாங்கள் பார்த்ததே இல்லை. ஆகவே அவரை நாங்கள் விந்தையாக பார்த்துக்கொண்டிருந்தோம். மூத்தவரிடம் அந்தப் பெண்ணை நீ விரும்புவாய், நான் அவளை இளமையிலிருந்து பார்த்துவருகிறேன், அறிவுக்கூர் கொண்டவள். உன்னை அவளுக்கு பிடிக்குமென்றே எண்ணுகின்றேன் என்று மூதரசி சொன்னார். நான் ஏன் என்று கேட்டேன். இவன் நாண் கொண்டவனாக இருக்கிறான். நாணும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும் என்று சொல்லி மூதரசி மீண்டும் நகைத்தார்” என்றான்.
சந்திரபானு “ஷத்ரியர்கள் தருக்கவும் பெருமை பேசவும் மட்டுமே பயின்று மிகையோசை எழுப்பும் வெண்கலக் கலங்கள்போல ஆகிவிட்டிருக்கிறார்கள் என்றார் மூதரசி. ஆகவே இன்று தகுதியுள்ள எந்த யாதவனைப் பார்த்தாலும் ஷத்ரிய அரசிகள் விழைவு கொள்வார்கள் என்றார். மூத்தவர் முகம் சிவந்து நான் எல்லா யாதவர்களிலும் ஒருவன் மட்டும் அல்ல என்றார். மூதரசி மூத்தவரை முதுகில் தட்டி சினம்கொள்கிறான். சினம்கொள்கையில் சிவப்பவர்களை பெண்களுக்கு பிடிக்கும் என்றார். மூத்தவர் எழுந்து சென்று அப்பால் அமர்ந்துகொண்டார். மூதரசி அவரை நகையாடிக்கொண்டே இருந்தார். தந்தையே, இவன் என் கையைப் பிடித்து மெல்லிய குரலில் இவர்கள் பிச்சியா என்றான். நான் பேசாமலிரு என்றேன்” என்றான். சினி “நான் அவ்வாறு கேட்கவில்லை” என்றான்.
சாத்யகி மெல்ல சிரித்துக்கொண்டே இருந்தான். சந்திரபானு “ஊணறையில் மூதரசி பாஞ்சாலத்து அரசியிடம் இத்தருணத்தில் ஒரு மணநிகழ்வு உகந்ததாகுமா என்றார். எத்தருணத்திலும் மணநிகழ்வு உகந்ததே, களியாட்டுக்கும் விருந்தூணுக்கும்தான் இது தருணமல்ல என்று பாஞ்சாலத்து அரசி சொன்னார். ஆம் மணமென்றால் களியாட்டும் இருந்தாகவேண்டுமென்பதில்லை என்று மூதரசி சொன்னார். அவ்வாறென்றால் என்ன செய்வது என்று திருஷ்டத்யும்னர் கேட்டார். எட்டு திருமகள்கள் ஆலயத்தின் முன் நின்று மாலையிட்டு கணையாழி அளித்தால் போதும். ஒரு வாளை நட்டு அதற்கு மாலையிட்டாலே போதும், அது மணம்தான். ஷத்ரியர்கள் அவ்வாறு சடங்குகளை செய்யவேண்டுமென்பதுகூட இல்லை. ஆணும் பெண்ணும் உளமுவந்து இணைந்தாலே அது ஏதேனும் ஒரு வகையில் மணமென்று கொள்வதே இங்குள்ள வழக்கம் என்றார் பாஞ்சாலத்து அரசி” என்றான்.
சாத்யகி “பார்ப்போம், இதில் நாம் சொல்வதற்கு ஏதுமில்லை. இவ்வாறு ஒரு மண உறவு நிகழவிருக்கிறது என்பதை மட்டும் முறையாக தந்தையிடமும் அன்னையிடமும் தூதனுப்பி தெரிவிக்கவேண்டும். அவர்களுக்கு மாற்று எண்ணமிருக்க வாய்ப்பில்லை. தந்தை இதன் பொருட்டே கௌரவப் படையிலிருந்து உளம் விலகிக்கொண்டாலும் வியப்பதற்கில்லை” என்றான். அசங்கன் பேசாமல் நின்றிருக்கக் கண்டு திரும்பி “நல்ல செய்திகள்தானே? பிறகேன் இங்கே களியாட்டும் மகிழ்வும் இல்லை? ஏன் ஓசையில்லாமல் இருந்தீர்கள்?” என்றான். “நாங்கள் அல்ல, மூத்தவர் திரும்பிவரும் வழியிலேயே எரிச்சலுடன் எங்களை வசை சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் இங்கு வந்தபின் அமைதியானார். நாங்களும் அமைதியாக இருந்தோம்” என்றான் சந்திரபானு.
சாந்தன் “சென்ற இரு நாட்களாகவே அப்படித்தான் இருக்கிறார்” என்றான். “ஏன்?” என்று சாத்யகி கேட்டான். “ஒன்றுமில்லை, தந்தையே” என்றான் அசங்கன். “என்ன?” என்று மீண்டும் சாத்யகி கேட்டான். “ஒன்றுமில்லை, தந்தையே. மெய்யாகவே ஒன்றுமில்லை.” சாத்யகி கூர்ந்து நோக்கினான். பின்னர் இளையோரிடம் “நீங்கள் சென்று உங்கள் வழக்கப்படி இருங்கள்… ஓசையெழலாம், அது நன்று” என்றான். அவர்கள் வெளியே சென்றதும் எழுந்து சென்று அசங்கனின் தோளில் கைவைத்து “என்ன உனக்கு? ஏன் உளம் கலங்கியிருக்கிறாய்? சொல்” என்று கனிந்த குரலில் கேட்டான்.
அசங்கனின் உடல் மெல்ல அதிர்ந்துகொண்டிருந்ததை சாத்யகி தன் கையில் உணர்ந்தான். “உன் உள்ளம் ஏன் நிலைகொள்ளவில்லை? உனக்கு அவ்விளவரசியை பிடிக்கவில்லையா? உண்மையிலேயே பிடிக்கவில்லை என்றால் எதுவானாலும் சரி, நீ அவளை மணக்கவேண்டியதில்லை. எவரிடம் அதைப்பற்றி பேசவேண்டுமென்றாலும் பேசுகிறேன். இளைய யாதவரையே மறுக்கவும் எனக்கு தயக்கமில்லை” என்று அவன் சொன்னான். “இல்லை தந்தையே, அவளை எனக்கு மிகமிகப் பிடிக்கிறது. அவளை மட்டுமே எண்ணிக்கொண்டிருக்கிறேன். அவள் என்னிடம் சில சொற்களே பேசினாள். ஆனால் என்னையே நோக்கிக்கொண்டிருந்தாள். அவ்விழிகளை நான் ஒரு கணம்கூட உளவிழிமுன் இருந்து அகற்றவில்லை” என்றான் அசங்கன்.
சாத்யகி “பிறகென்ன?” என்றான். “எனக்கு தெரியவில்லை, தந்தையே. என் உடல் பதறிக்கொண்டே இருக்கிறது. எங்கோ மலைவிளிம்பில் கால்பதற நின்றிருப்பதுபோல.” சாத்யகி “இதனால் ஏதேனும் தீங்கு எனக்கோ நம் குடிக்கோ வருமென ஐயுறுகிறாயா?” என்றான். “இல்லை தந்தையே, அவள் திருமகள் வடிவு. நலமே நிகழும், ஐயமில்லை.” சாத்யகி சிறிய எரிச்சலுடன் “பிறகென்ன?” என்றான். “ஒன்றுமில்லை” என்ற அசங்கன் தன் தோள்மேலிருந்த சாத்யகியின் கையை விலக்கிவிட்டு திரும்ப முயல சாத்யகி மேலும் அழுத்தமாக அதை ஊன்றினான். மெல்லிய விசும்பலோசையுடன் அசங்கன் அழத்தொடங்கினான். சாத்யகி அவனை தன் தோளுடன் அணைத்துக்கொண்டான். அவன் முதுகில் அசங்கனின் சூடான விழிநீர் சொட்டி வழிந்தது.
பின்னர் அவன் உந்தி விலகி முகத்தை துடைத்தான். சிவந்த முகத்துடன் தலைதாழ்த்தி புன்னகைத்தபடி “நான் வருகிறேன், தந்தையே” என்றான். சாத்யகி வெறுமனே நோக்கினான். மீண்டும் புன்னகைத்து “வருகிறேன்” என்றபடி அவன் அறையைவிட்டு வெளியேறினான்.