‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 7

tigசாத்யகி கிளம்பி மாளிகையிலிருந்து வெளியேவந்து புரவியில் ஏறும்பொருட்டு காலைத்தூக்கி சேணத்தில் வைத்தபோது ஓர் எண்ணம் எழுந்தது. புரவி உபப்பிலாவ்யத்தின் கோட்டையைக் கடந்ததும் நேராகச் செல்லும் மையப் பாதையில் இருந்து விலகி பக்கவாட்டில் சென்ற சாலையில் பெருநடையாக விரைந்தான். அது படைநகர்வுக்கென உருவாக்கப்பட்ட சாலை. மலைப்பாறைகளைப் போட்டு யானைகள் தூக்கி இடித்த பெருங்கற்களால் இறுக்கி உருவாக்கப்பட்டது. அதன் இருமருங்கும் குறுங்காடு முழுக்க படைகளின் பாடிவீடுகள் செறிந்திருந்தன. குரலோசைகளின் முழக்கமும், வண்டிகளும் படைக்கலங்களும் பிறவும் எழுப்பிய ஓசைத்திரளும், எங்கும் அசைந்த எரிபந்தங்களும், அவ்வொளியில் எரியெனத் தெரிந்த பாடிவீட்டுச் சுவர்களின் பரப்புமாக அது ஒரு பெருநகரின் மைய வீதி என்றே தோன்றியது.

பாஞ்சாலப் படைகளின் முகப்பில் அவர்களின் விற்கொடி பறந்தது. சாத்யகி முகப்பிலிருந்த படைவீட்டின் காவலனிடம் அவன் திருஷ்டத்யும்னனை சந்திக்க விழைவதை அறிவித்தான். வீரன் உள்ளே சென்றதுமே பாடிவீட்டுக்குள் இருந்து துருபதரின் இளையவரான சத்யஜித்தும் மைந்தன் சித்ரகேதுவும் வெளியே வந்தார்கள். சத்யஜித் உவகையுடன் சிரித்தபடி வணங்கி அருகணைந்து “வருக, யாதவரே… எங்கள் படையில்லத்திற்கு நீங்கள் வந்தது நல்நிகழ்வு” என்றார். சித்ரகேது “எண்ணியிருக்கவில்லை. ஒருமுறை உங்களை அழைத்து படையமைப்பை காட்டவேண்டும் என இளையவன் சொல்லிக்கொண்டிருந்தான்” என்றான்.  பந்தங்களின் செவ்வொளியில் அவர்களின் பற்களும் வெண்விழிகளும் மின்னின.

சாத்யகி குழப்பமான முகத்துடன் “ஆம், நான் வர எண்ணினேன்… இப்போது இந்திரப்பிரஸ்தத்திற்கு கிளம்பிக்கொண்டிருக்கிறேன். அதற்கு முன் பாஞ்சாலரை சந்தித்துவிட்டுச் செல்லலாம் என்று எண்ணினேன்” என்றான். “பாடிவீட்டில்தான் இருக்கிறான். இளையவன் உடன் வந்து தங்களுக்கு காட்டுவான்” என்றார் சத்யஜித். “இல்லை, ஏவலர் எவரேனும் வந்தால் போதும்” என்றான் சாத்யகி. “தங்களை ஏவலருடன் அனுப்புவதா? இளையோனே, செல்க!” என்று சத்யஜித் சொன்னார். சாத்யகி தவிப்புடன் அவர்களின் முகங்களை பார்த்தான். சித்ரகேது “வருக, யாதவரே!” என புரவிநோக்கி சென்றான்.

செல்லும் வழியில் சாத்யகி ஒரு சொல்லும் உரைக்கவில்லை. மணப்பேச்சு இளையவருக்கும் இளவரசருக்கும் தெரிந்திருக்கவில்லை என்று அவன் எண்ணினான். அவர்களிடம் விழிமாறுபாடுகள் இல்லை. தெரிந்தால் அவர்கள் எப்படி எதிர்வினைபுரிவார்கள்? இருமருங்கும் விரிந்திருந்த பாஞ்சாலப் படைகளை நோக்கிக்கொண்டே சென்றான். அவற்றிலிருந்த முற்றொழுங்கு அவனை அச்சுறுத்தியது. விழிதொடும் தொலைவுவரை எரிந்த பந்தங்கள் பெருநகர் ஒன்று பற்றிக்கொண்டுவிட்டதென காட்டின. ஆனால் வகுத்துக் கோடிட்டு நிறுத்தப்பட்ட தழல் அது. பாண்டவர்களின் படைகளில் எங்கும் அத்தகைய ஒழுங்கு இருக்கவில்லை. கிராதர்களும் நிஷாதர்களும் வெறும் ஆள்கூட்டம். அரக்கரும் அசுரரும் ஒழுங்கமைந்த படைகள் என்றாலும் அவற்றில் ஒரு ததும்பல் இருந்துகொண்டிருக்கும். தொல்குடி ஷத்ரியர் போருக்கென வாழ்ந்தவர் என சாத்யகி எண்ணிக்கொண்டான்.

திருஷ்டத்யும்னனின் பாடிவீடு ஓர் அரண்மனையளவுக்கே பெரிதாக இருந்தது. விற்கொடி துவண்ட பெரிய மூங்கில் கொடிமரத்திற்குக் கீழே நான்கு தேர்களும் ஏழு புரவிகளும் பந்த வெளிச்சத்தில் மெல்ல அதிர்ந்தபடி நின்றிருந்தன. காவலர்தலைவன் அவர்களைக் கண்டதும் சிறிய குழாய்க்கருவியை ஊதி அறிவிப்பை எழுப்பிவிட்டு வரவேற்கும்பொருட்டு முன்னால் வந்தான். சித்ரகேது காவலர்தலைவனிடம் சாத்யகியின் வரவை அறிவித்தான். அவன் உள்ளே சென்றதும் “நான் விடைகொள்கிறேன், யாதவரே. பிறிதொருநாள் நான் அழைத்துச்சென்று எங்கள் படையணிகளை காட்டுகிறேன்” என்றான். “இளையவனானாலும் அவன் படைத்தலைவன், நான் அவனுக்குக் கீழே படைகொண்டுசெல்பவன்” என்றபின் புரவியைத் திருப்பினான்.

ஓசையுடன் கதவு திறந்து திருஷ்டத்யும்னன் கைகளை விரித்தபடி வெளியே வந்தான். “வருக, யாதவரே! ஒவ்வொருநாளும் இங்கே உங்கள் வருகை நிகழவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்… வருக!” என்று தோள்தொட்டு அணைத்துக்கொண்டான். சாத்யகி அவனைத் தழுவி “இங்கிருக்கிறீர்கள் என்று அறிவேன்… நான் ரிஷபவனத்திலிருந்து இன்றுதான் வந்தேன்” என்றான். “வருக…” என்று திருஷ்டத்யும்னன் அவனை உள்ளே அழைத்துச்சென்றான். சாத்யகி “நான் இவ்வழி இப்படியே இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்வதாக இருக்கிறேன். அதற்கு முன் உங்களிடம் பேசிவிட்டுப்போகவேண்டும் என்று தோன்றியது” என்றான். “ஆம், சொன்னார்கள். புலரிக்கு முன்னரே கிளம்பிவிட்டீர்கள்” என்றான் திருஷ்டத்யும்னன். “புலரிக்காக காத்திருக்க முடியாது. நீங்கள் இரவுறங்குவதில்லை என்று அறிவேன்” என்றான் சாத்யகி.

பாடிவீட்டின் மென்மையான பலகைச் சுவருக்கு அப்பால் பேச்சொலி கேட்டது. ஏவலன் வந்து “மூத்தவர்” என்றான். “வரச்சொல்க!” என்றான் திருஷ்டத்யும்னன். “மூத்தவர்கள் துணைப்படைத்தலைவர்களாக பணிபுரிகிறார்கள் என்று அறிந்தேன்” என்றான் சாத்யகி. திருஷ்டத்யும்னன் “ஆம், போரில் திறன் மட்டுமே அளவீடு” என்றான். கதவு திறந்து உத்தமௌஜன் உள்ளே வந்து வணங்கினான். அவனை சாத்யகி பார்த்திருக்கவில்லை என்றாலும் திருஷ்டத்யும்னனின் முகத்தை அடையாளம் கண்டான். “என் மூத்தவர் உத்தமௌஜன். இவரும் இவருக்கு இளையவராகிய விரிகரும்தான் இங்கே என் நேருதவிக்கு இருக்கிறார்கள். யுதாமன்யுவும் சுரதனும் தந்தையுடன் உள்ளனர்” என்றான் திருஷ்டத்யும்னன்.

“பாஞ்சாலத்தில் எவர் இருக்கிறார்கள்?” என்று சாத்யகி கேட்டான்.  “சத்ருஞ்சயனும் ஜனமேஜயனும் அங்கிருப்பார்கள். அவர்கள் நகர்நீங்காது காக்கவேண்டுமென்பது ஆணை” என்றான் திருஷ்டத்யும்னன். உத்தமௌஜன் “சுமித்ரனும் பாஞ்சால்யனும் அசுரர்படைப்பிரிவுகளுக்கு தலைமைகொள்கிறார்கள்  ஷத்ரியத் தலைமை இன்றி அவர்களால் அணிவகுக்க முடிவதில்லை” என்றான். “பிரியதர்சனும் துவஜசேனனும் என் படைகளுடன் உள்ளனர், என் இளையோன் குமாரதேவனும் உடனுள்ளான். எங்கள் மைந்தர்களும் போருக்கெழுந்துள்ளனர்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி “நன்று, போரினூடாகவே ஷத்ரியர் புகழ்பெற இயலும்” என்றான். உத்தமௌஜன் திருஷ்டத்யும்னனிடம் “படைப்பிரிவுகளுக்கான ஆணைகள் அனுப்பப்பட்டுவிட்டன. இன்று அந்தியில் படைக்காட்சிக்கு நீ செல்ல இயலுமா?” என்றான். “இல்லை, நான் இன்று அரசியை சந்திக்கச் செல்கிறேன்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “நன்று, அதைக் கேட்கவே வந்தேன்” என்றான் உத்தமௌஜன். “மைந்தரை வரச்சொல்க, மூத்தவரே!” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “ஆம்” என்று சொல்லி சாத்யகியை வணங்கி வெளியே சென்றான் உத்தமௌஜன்.

“பாஞ்சாலரே, நான் உங்களை சந்திக்க வந்தது எதன் பொருட்டென்று அறிந்திருப்பீர்கள்” என்றான் சாத்யகி. “ஆம், சற்றுமுன்னர் பாஞ்சாலத்தரசியின் தூது வந்தது. அது செய்தியறிவிப்பு அல்ல, ஆணை. அதை எந்தையும் மீறமுடியாது” என்றான் திருஷ்டத்யும்னன். “நான் அதைபற்றிப் பேசவே வந்தேன்” என்ற சாத்யகி மூச்சுத்திணறினான். “அவ்வெண்ணத்தை நான் சரியாக சொல்லமுடியுமா என்று தெரியவில்லை” என்றபின் குழம்பி தொடர்பே இல்லாமல் “என் மைந்தரை இன்று பாஞ்சாலத்து அரசி இரவு விருந்துக்கு அழைத்திருக்கிறார்கள்” என்றான்.

திருஷ்டத்யும்னன் “ஆம், என் மைந்தரும் கிளம்பிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். நானும் செல்லவேண்டும். இங்கே சற்று பணி உள்ளது. அதை முடித்துவிட்டு விருந்து முடிவதற்குள் சென்றுவிடுவேன்” என்றான். சாத்யகி தொடர்ச்சியை உருவாக்கிக்கொண்டான். “பாஞ்சாலரே, உங்கள் குடியுடன் மணவுறவென்பது யாதவர்களுக்கு இறைக்கொடைபோல. உங்கள் மகள் என் இல்லத்தவளாவதை நான் திருவெழுகை என்றே கருதுகிறேன். ஆனால்…” என்றபின் “நாம் எவ்வகை நண்பர்கள் என நாம் அறிவோம். நம் நட்பின் பொருட்டு நீங்கள் இதை ஒப்பவேண்டியதில்லை. உங்கள் குடிமேன்மைக்காக நீங்கள் இதை மறுப்பதை நான் புரிந்துகொள்வேன். அம்முடிவை நீங்கள் எடுத்தால் உங்கள் அணுக்கநண்பனாக நான் அதை முற்றாக ஆதரிப்பேன்…” என்றான்.

திருஷ்டத்யும்னன் சீற்றத்துடன் கைவீசி “என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? என்றும் முதிராதவராகவே இருக்க எண்ணமா?” என்றான். சாத்யகி “இல்லை” என்றான். “இதைப்பற்றி பேசவேண்டியதில்லை. நீங்கள் இனி பாரதவர்ஷத்தை ஆளப்போகும் இளைய யாதவரின் குலம். அவ்வெண்ணமாவது உங்களுக்கு வேண்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். சாத்யகி உளம் விம்ம “ஆம்” என்றான். “என் நண்பருக்கு மகள்கொடை அளிக்கும் நற்பேறென்றே கருதுகிறேன். அதையே அரசியிடமும் தெரிவித்தேன்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.  “தங்கள் தந்தை…” என்று சாத்யகி தொடங்க “அவருக்கும் அதே எண்ணம்தான். மூத்தோர் எவருக்கும் மாற்று எண்ணம் இல்லை” என்றான் திருஷ்டத்யும்னன்.

சாத்யகி பெருமூச்சுவிட்டான். அவன் நெஞ்சு விம்மிக்கொண்டிருந்தது. அங்கிருந்து அப்படியே எழுந்து சென்றுவிடவேண்டும் என்று தோன்றியது. திருஷ்டத்யும்னன் “நான் உங்களை சந்திக்க விரும்பியது வேறொன்றின்பொருட்டு” என்றான். “நான் விரைந்த பயணமாக காம்பில்யம் வரை சென்றுமீள எண்ணுகிறேன்.” சாத்யகி நோக்க “அவளை சந்திப்பதற்காக” என்றான். சாத்யகி புன்னகைத்தான். “அவளிடம் விடைபெறவேண்டும். பெண் என உண்மையில் அவளிடம் மட்டுமே நான் கடன்கொண்டிருக்கிறேன்” என்றான் திருஷ்டத்யும்னன்.

சாத்யகி சிரித்தபடி “ஒவ்வொரு ஆணும் ஏதோ ஒரு பெண்ணுக்கு மட்டும் திருப்பமுடியாதபடி கடன்பட்டிருப்பான் என்பார்கள்” என்றான். “ஆம், நான் சுஃப்ரைக்கு” என்ற திருஷ்டத்யும்னன்  “நீங்கள்?” என்றான். “எனக்கு எவரிடமும் கடன் இல்லை. அடிமைகளுக்கு கடன்கொள்ளும் உரிமை இல்லை” என்றான் சாத்யகி. “சென்று அவளிடம் சொல்லவேண்டும், மறுபிறப்பென ஒன்று உண்டு என. அவ்வளவுதான்” என்றான் திருஷ்டத்யும்னன்.

கதவு திறந்து இளையவர்கள் நால்வர் உள்ளே வந்தனர். சாத்யகி எழுந்து அவர்களில் இளையவன் தோளைத்தொட்டு தன்னருகே இழுத்துக்கொண்டு “இவன் கடைமைந்தன் அல்லவா? இவன் பெயர் மனாதன்தானே?” என்றான். “ஆம், இங்கு வந்து சிலநாட்களே ஆகின்றன. இங்கே நிறைய விளையாட்டு உள்ளது என்னும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்” என்றான். மனாதன் குனிந்து சாத்யகியை கால்தொட்டு வணங்கினான். “நலம் சூழ்க! வெற்றியும் புகழும் திரள்க!” என சாத்யகி வாழ்த்தினான். “மூத்தவன் திருஷ்டகேது. அடுத்தவன் க்ஷத்ரதர்மன். மூன்றாமவன் க்ஷத்ரஞ்சயன்” என்று திருஷ்டத்யும்னன் அறிமுகம் செய்தான். அவர்கள் கால்தொட்டு வணங்க சாத்யகி அவர்களை வாழ்த்தினான்.

“இன்று உங்கள் மைந்தர்களை சந்திக்கவிருக்கிறோம், தந்தையே” என்றான் திருஷ்டகேது. “ஆம், அவர்கள் யாதவர்கள். அரசமுறைமை அறியாதவர்கள். நட்பின்பொருட்டு நீங்கள் எல்லை கடக்கவேண்டும்” என்றான் சாத்யகி.  “இந்தப் பதற்றத்திலேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “நான் கிளம்புகிறேன். நலம் சூழ்க!” என சாத்யகி எழுந்துகொண்டான்.

tigஇந்திரப்பிரஸ்தத்தை நெருங்கும்வரை அது அஸ்தினபுரியின் ஆட்சியின் கீழ் உள்ளதென்பதையோ, போர் அணுகிக்கொண்டிருக்கும்போது பாண்டவர் தரப்பின் படைத்தலைவனாகிய அவன் அந்நகருக்குள் நுழைவது இயலாதென்பதையோ சாத்யகி எண்ணியிருக்கவில்லை. விரல் தொட்டதும் கிளம்பும் அம்பென ஆணை பெற்றதுமே செயலாற்றத் தொடங்குவதே அவன் இயல்பு. உபப்பிலாவ்யத்திலிருந்து கிளம்பி புரவிகள் மட்டுமே செல்லத்தக்க ஊடுவழிகளினூடாக மலைகளில் ஏறியிறங்கி, ஓடைகளைக் கடந்து, இரு இடங்களில் தோணிகளில் புரவியை ஏற்றி மறுபக்கம் சென்று மூன்றாம்நாள் முன்னிரவில் இந்திரப்பிரஸ்தத்தின் புறஎல்லையை அடைந்தான். இந்திரப்பிரஸ்தம் அணுகுகிறது என்று அறிந்த பின்னரே அதற்குள் நுழைவதெப்படி என்ற எண்ணங்கள் உருவாயின.

புரவியை இழுத்து விரைவழியச் செய்து நிறுத்தி அதன்மேல் அமர்ந்தபடி எண்ணத்திலாழ்ந்தான். பின்னர் அருகிலிருந்த சிறு சுனையில் புரவியை நீரருந்தவிட்டு மரத்தடியில் கால்நீட்டி அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான். இந்திரப்பிரஸ்தத்தை சுற்றி கௌரவர்களின் பெரும்படை நிற்குமென்பதில் ஐயமில்லை. யுதிஷ்டிரர் எடுக்கத்தக்க படைநகர்வுகளில் ஒன்று விரைந்த தாக்குதலினூடாக  இந்திரப்பிரஸ்தத்தை கைப்பற்றிக்கொள்வது. அங்கு மீண்டும் முடிசூடிக்கொண்டு தன்னை அரசனென அறிவித்து குருக்ஷேத்திரத்திற்கு படைகொண்டு சென்றால் அஸ்தினபுரியின் வைதிகர்களும் அவரை ஏற்றுக்கொண்டாகவேண்டும். அது பாண்டவப் படைகளுக்கும் ஒரு உளத்தூண்டுதலாக அமையும். அதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். அவ்வாறு முறைமை மீறி படைகொண்டு செல்வது யுதிஷ்டிரரின் இயல்பல்ல எனினும் அதற்கான எந்த வாய்ப்பையும் சகுனியும் கணிகரும் அளிக்கப்போவதில்லை.

எண்ண எண்ண எந்த வழியும் அவனுக்கு புலப்படவில்லை. இந்திரப்பிரஸ்தத்திற்கு காவல் நிற்கும் அஸ்தினபுரியின் படைவீரர்களுக்கு தன் முகம் அறிமுகமாகியிருக்காது என்பதொன்றே ஆறுதலளிப்பதாக இருந்தது. அப்படைகளில் யாதவர்கள் இருந்தார்கள் என்றால் அதுவும் பொய்க்கும். ஆனால் இந்திரப்பிரஸ்தத்திற்கு காவலாக யாதவப் படைகளை ஒருபோதும் அஸ்தினபுரியிலிருந்து அனுப்பமாட்டார்கள் என்று தோன்றியது. அவர்களின் மீது அத்தனை நம்பிக்கையை கணிகர் கொள்ள வாய்ப்பில்லை. இந்திரப்பிரஸ்தத்திற்கு வந்து நோக்கியபின், அதுவும் யாதவர்களின் நகரமே என்று அவர்கள் எண்ணக்கூடும். அதை உரிமைகொள்ளும் கனவு அவர்களில் எழலாம்.

அனைத்துக் கோணங்களிலும் எண்ணி எண்ணி சலித்த பின்னரும் ஒரு வழியும் தோன்றாமல் சாத்யகி எழுந்தான். புரவி நீரருந்திவிட்டு குறுங்காட்டுக்குள் மேய்ந்துகொண்டிருந்தது. அவன் எழுந்ததை உணர்ந்து திரும்பி நோக்கி என்ன என்று கேட்டது. வாயிலிருந்த புல்லை மென்றபடி மீண்டும் குனிந்து விலா சிலிர்க்க மேய்ந்தது. அவன் அதை அணுகி கடிவாளத்தைப்பற்றி ஏறி அமர்ந்த கணம் ஒன்று தோன்றியது, அவன் இந்திரப்பிரஸ்தத்திற்கு கிளம்பிச் செல்லவேண்டுமென்று ஆணையிட்டபோது இளைய யாதவர் அந்நகருக்குள் நுழைவதைக் குறித்தோ மாயையுடன் மீள்வதைக் குறித்தோ எதுவும் சொல்லவில்லை. அவர் அவ்வாறு சொல்லாததே அவர் அனைத்தையும் முன்னரே உணர்ந்து வகுத்திருந்தார் என்பதற்கு சான்று. எப்போதும் செயலனைத்தையும் அவருக்கு அளித்து ஆற்றுவதொன்றே தன் கடனெனக் கொள்வது அவன் இயல்பு. இதுவும் அவ்வாறே. செய்வதற்கொன்றே, தொடுக்கப்பட்ட அம்பு இலக்கு நோக்கிச் சென்று தைப்பதுபோல் இந்திரப்பிரஸ்தத்தை அணுகுவது.

அவன் இந்திரப்பிரஸ்தத்தின் முதற்காவல்மாடம் இருந்த குறுங்காட்டின் எல்லைக்குள் வந்தபோது காட்டுக்குள்ளிருந்து மெல்லிய சீழ்க்கையொலி கேட்டது. யாதவர்களுக்குரிய குழூஉக்குறி அது என்பதனால் அவன் புரவிக் கடிவாளத்தை இழுத்து நிறுத்தினான். புதர்களுக்குள்ளிருந்து அஸ்தினபுரியின் படைவீரர்களுக்குரிய ஆடை அணிந்த இரு வீரர்கள் தோன்றி அவனை அணுகினர். அவன் குழூஉக்குறிச் சொற்களால் அவர்கள் எவரென்று வினவினான். அதே சொற்களால் இளைய யாதவரால் அமர்த்தப்பட்ட ஒற்றர்கள் என்றனர்.  பெயர்களைச் சொல்லி அறிமுகம் அளிக்கவில்லை.

“இந்திரப்பிரஸ்தத்திற்குள் எவ்வாறு நுழைவதென்று எண்ணிக்கொண்டிருந்தேன்” என்று சாத்யகி சொன்னான். “தாங்கள் உள்ளே சென்று மீள்வதற்குரிய அனைத்தும் இங்கு முன்னரே ஒருக்கப்பட்டுவிட்டன, சிற்றரசே” என்று யாதவன் சொன்னான்.  “இந்தக் காடு எங்கள் கூர்நோக்கில் உள்ளது. வருக!” என்று அழைத்துச்சென்றான். புரவியிலிருந்து இறங்கி புதர்களுக்குள் மிக மெல்ல ஊர்ந்து அவர்கள் சென்றனர். குறுங்காடு மேலும் மேலும் அடர்வு கொண்டது. அதன்மேல் காற்று ஓடிக்கொண்டிருந்தது.

அங்கிருந்த சிறிய ஆலயமொன்றை அடைந்ததும்  “இங்கிருந்து நகருக்குள் நுழைவதற்கான சுரங்கப்பாதை உள்ளது” என்று முதல் ஒற்றன் சொன்னான்.  “நெடுந்தொலைவாயிற்றே?” என்று சாத்யகி கேட்டான்.  “இல்லை, கிழக்காகச் சென்று நகருக்குள் நுழைந்து அரண்மனைக்கு வடக்கே உள்ள கொற்றவை ஆலயத்திற்குப் பின் திறக்கும். அங்கு உங்களைக்காத்து பூசகராகப் பணிபுரியும் நமது ஒற்றர் இருப்பார்” என்றான். சாத்யகி  “இவ்வாறு கிழக்காகச் சென்றால் வழியில் யமுனை குறுக்கே வரும்” என்றான்.  “யமுனைக்கு அடியில் இந்தப் பாதை செல்கிறது” என்றான் ஒற்றன்.

சாத்யகி திகைத்து உதடுகள் பிரிய நின்றான். “அஞ்சவேண்டாம், சிற்றரசே. நதிப்படுகைக்கு அடியில் முற்றிலும் கற்களாலான குகைப்பாதை உள்ளது. அதன் பொருத்துகள் அனைத்தும் செம்பு உருக்கி இணைக்கப்பட்டவை. உள்ளே ஒரு துளி ஈரத்தை நீங்கள் உணரமாட்டீர்கள்” என்று இரண்டாம் ஒற்றன் சொன்னான். அவர்களுடன் சிற்றாலயத்திற்குள் சாத்யகி நுழைந்தான். அங்கிருந்த சிற்பப்பொறியை விலக்கி தரையில் வேயப்பட்டிருந்த கற்பலகை மேலெழ வைத்தான் ஒற்றன். சிறிய கற்படிகள் இருளுக்குள் இறங்கிச் சென்றன.

“நீங்கள் நுழைந்ததுமே இதை மூடிவிடுவோம். உள்ளே மிதமான வெளிச்சமும் மூச்சுக்குரிய காற்றும் உண்டு” என்றான் ஒற்றன். இரண்டாம் ஒற்றன் குடிநீர் நிறைந்த தோல்பையையும், புகையிலாது ஊன்நெய்யில் எரியும் பீதர்நாட்டு கைவிளக்கையும் அளித்தான். சாத்யகி தலையசைத்து படிகளிலிறங்கி உள்ளே சென்றான். மேலே சுரங்க வழி மூடப்பட்டது. இருவர் உடல் தொடாமல் செல்லுமளவுக்கு அகலம் கொண்டிருந்தது அப்பாதை. சுவர்களின் மேல்வளைவும் தரையும் கருங்கற்களால் ஆனவை. கற்கள் ஒன்றுக்கொன்று இடைவெளி இல்லாமல் மிகச் சரியாக பொருத்தப்பட்டிருந்தன. சிறிய வளைகளினூடாக காற்று உள்ளே வந்தது. பீதர்நாட்டுக் கைவிளக்கில் வெண்ணிறப் பளிங்குக் குழாய்க்குள் சுடர் எரிந்தது. அப்பளிங்குக் குழாயே அசைவிலாச் சுடர் என ஒளிர்ந்தது.

செல்லுந்தோறும் அந்தப் பாதைக்கு மேலும் அணுக்கமானவனாக ஆனான். பின்னர் சுரங்கப்பாதை குளிர்கொள்ளத் தொடங்கியது. பின் உடம்பு சிலிர்த்து கைவிரல்கள் உறையும் குளிர் சூழ்ந்தது. இப்போது தலைக்குமேல் மரக்கலங்கள் மிதந்து செல்லும் பெருநதியொன்று ஓடிக்கொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டான். நாகங்களின் நிலத்தடிப் பாதை. மண்ணுக்கு அடியில் புகுந்ததுமே மேலிருக்கும் வாழ்க்கையும், அங்குள்ள பூசல்களும், நெறிகளும், அறங்களும் அனைத்தும் பிறிதொரு காலத்தைச் சார்ந்தவையாகத் தோன்றிடும் விந்தையை அவன் உணர்ந்தான். இங்கே சிலகாலம் வாழநேர்ந்தால் மீண்டும் மேலே செல்கையில் அங்கிருக்கும் எதனையும் புரிந்துகொள்ள முடியாமல் ஆகலாம்.

பின்னிரவில் அவன் மேலேறும் படிகளை கண்டுகொண்டான். அதில் ஏறி மேலே சென்று கற்பலகையில் தன் கையிலிருந்த கல்லால் குழூஉக்குறியில் தட்டி ஓசையெழுப்பினான். மேலிருந்து பலகை விலகி அங்கு நின்றிருந்த உயரமற்ற தடித்த உடல்கொண்ட பூசகர் அவனிடம்  “மேலே வருக, யாதவ அரசே!” என்றார். அவன் மேலே வந்ததும் கொற்றவை பீடத்திற்கு பின்னால் இருந்த சிற்பப்பொறியை இழுத்து  அப்பலகையை மூடினார்.  “தங்களைக் காத்து மூன்று ஒற்றர்கள் இங்கு நின்றிருக்கிறார்கள். அவர்களுடன் சென்று தாங்கள் எண்ணிவந்தது இயற்றலாம். ஒவ்வொன்றும் முன்னரே இங்கு ஒருக்கப்பட்டுள்ளது” என்றார் பூசகர்.

சிறுவழி ஒன்றினூடக கொற்றவை ஆலயத்தின் பின்புறம் சாத்யகி வெளியே வந்தான். அவனுடன் வந்த பூசகர் அங்கு பூசகர் தோற்றத்தில் காத்து நின்றிருந்த மூவரை அழைத்து  “தங்கள் பணிக்காக இவர்கள்” என்று அறிமுகம் செய்தார். அவர்களும் தங்கள் பெயர் சொல்லி அறிமுகம் செய்துகொள்ளவில்லை. தலைவணங்கி  “தங்கள் பணிக்காக, அரசே” என்றனர். ஆலயமுகப்பில் ஏராளமான வீரர்கள் வழிபட்டுக்கொண்டிருந்தனர். பல்லக்குகளும் தேர்களும் ஆலயமுற்றத்தில் செறிந்திருந்தன. பின்பக்கம் அந்த இடம் மட்டும் பந்தங்கள் அணைந்து இருட்டாக இருந்தது. அப்பால் நின்றிருந்த புரவிகளை சாத்யகி கண்டான்.

ஒற்றர்கள் மிகவும் பயிற்சி பெற்றவர்களாக இருந்தார்கள். ஒரு சொல்லும் எடுக்காமலேயே அவர்கள்  உரிய அனைத்தையும் விரைந்து செய்தனர். அஸ்தினபுரியின் படைவீரர்களுக்குரிய ஆடையை அவர்கள் அளிக்க சாத்யகி பெற்று அணிந்துகொண்டான். செவிமறைக்கும் தலைப்பாகை அணிந்து, கழுத்தில் சால்வையை சுற்றிக்கொண்டதும் அவன் முகத்தின் சிறு பகுதியே வெளித்தெரிந்தது. ஓசையில்லாமல் குதிரைகளிலேறி இந்திரப்பிரஸ்தத்தின் சாலையை அடைந்தனர்.

இந்திரப்பிரஸ்தத்தின் மைய அரண்மனைக்குத் தெற்காக அமைந்திருந்த ஊடுவழி அது. ஆனால் அஸ்தினபுரியின் அரசப்பெருஞ்சாலை அளவுக்கே இருந்தது. ஒப்புநோக்க இந்திரப்பிரஸ்தத்தின் சாலைகள் துவாரகையின் சாலைகளைவிடப் பெரியவை என்று சாத்யகி எண்ணினான். சாலையின் இருபுறமும் வெண்மாளிகைகள் ஒன்றுடன் ஒன்று நிகர் செய்தபடி அணிவகுத்திருந்தன. விண்ணிலிருந்து நோக்கும் கந்தர்வர்களுக்கு வெண்தந்தத்தாலோ பளிங்காலோ செதுக்கி அடுக்கப்பட்ட சிறு செப்புகள் என்று அவை தோன்றும். அங்கிருந்த கல்லும் மரமும் சுதையும் அவ்வாறு மாளிகையாவதற்கென்றே மண்ணில் தோன்றியவை போலிருந்தன. பழுதற்றவை, ஆகவே ஒன்றுடன் ஒன்று முற்றாக இணைபவை.

நோக்க நோக்க அம்மாளிகைகளின் அமைப்பிலிருந்த ஒத்திசைவு வியப்பூட்டியது.  மேலும் நோக்குகையில் ஒவ்வொரு மாளிகையும் கொண்டிருந்த தனித்தன்மை மேலெழுந்தது. சாத்யகி செயல் அனைத்தையும் மறந்து சிறுவன்போல விழிமட்டுமாக மாறி சென்றுகொண்டிருந்தான். ஆனால் அனைத்து மாளிகைகளும் ஒருவகை இருளில் மூழ்கியிருப்பவைபோல் தோன்றின. முற்றங்களில் பந்தங்களும், பிறைகளிலும் பாவைகளிலும் அகல்களும் எரிந்தபோதிலும்கூட மேலாடையை இழுத்து முகத்தின் மேலிட்டு தலைகுனிந்து துயருடன் அமர்ந்திருக்கும் பெண்களின் நிரைபோலிருந்தன அவை.

அவற்றில் ஏராளமான மாளிகைகள் முன்னரே கைவிடப்பட்டவை என்றும் அவற்றில் அப்போது அஸ்தினபுரியின் படைவீரர்கள் குடியிருப்பதும் தெரிந்தது. தெருவெங்கும் நெரிந்துகொண்டிருந்த மக்கள் அனைவருமே அஸ்தினபுரியின் படைவீரர்கள் என்று அதன் பின்னரே புரிந்துகொண்டான். வீரர்களுக்குரிய உடையில் படைக்கலங்களுடன் நிரைகளாகவும் கலைந்த சிறுகுழுக்களாகவும் சென்றுகொண்டிருந்தவர்கள், இயல்புடை அணிந்து மது அருந்தி உரத்த குரலில் பேசியபடியும் கைவீசி பாடியபடியும் சென்று கொண்டிருந்தவர்கள் அனைவருமே படைவீரர்கள்தான். அங்கு குடிகளே அப்போது இல்லையோ என்ற ஐயம் எழுந்தது.

அவ்வளவு பெரிய படையை அந்நகருக்குள் கொண்டுவந்து நிறைப்பதனூடாக ஒருவகையில் எவரையும் எவரும் அடையாளம் காண முடியாதபடி ஆக்கிவிட்டிருக்கிறார்கள் என்று அவன் எண்ணிக்கொண்டான். ஒருவர்கூட அவர்களை ஏறெடுத்து நோக்கவோ அடையாளம் காண முயலவோ இல்லை. மூன்று முறை சாலைகளைக் கடந்து வளைந்து மேலேறிச் சென்றனர். நகரத்தின் உச்சியில் அமைந்த இந்திரனின் பேராலயத்தில் விளக்குகள் எரிந்தன. விண்ணிலிருந்து கந்தர்வர்களின் ஊர்தியொன்று இறங்கி முகிலில் நின்றிருப்பதுபோல் தோன்றியது. மண்ணுடன் எத்தொடர்பும் இல்லாததுபோல. நகரம் தன் அனைத்து மாளிகைகளாலும் எழுந்து அதைப் பற்ற முயல்வதுபோல.

அத்தனை மாபெரும் நகரத்தை உருவாக்கினால் பின்னர் அதை காப்பதே எஞ்சிய நாளெல்லாம் அவ்வரசன் செய்வதாக இருக்கும் என்று சாத்யகி எண்ணிக்கொண்டான். இந்திரப்பிரஸ்தம் அதன் பேருருவாலேயே மானுடருக்குரியதல்லாததாக ஆகிவிட்டிருக்கிறது. அந்நகரில் எவரும் நிலைத்து வாழப்போவதில்லை. அவ்வெண்ணம் எழுந்ததுமே அவன் அகம் முழுமையாக எழுந்து ஆம் ஆம் என்றது. ஏன்? அதை விளக்க முடியாது. ஆனால் தன் தகுதிக்கு மீறி மானுடர் உருவாக்கிய எதுவும் நிலைத்ததில்லை. அப்படியென்றால் துவாரகை? அவன் நீள்மூச்சுடன் அந்த எண்ணத்தை அகற்றினான்.

இருமருங்கும் நான்கடுக்குப் பெருமாளிகைகள் நிரை அமைந்த அகன்ற வீதியொன்றை அவர்கள் அடைந்தனர். அஸ்தினபுரியின் படைத்தலைவர்கள் அங்கே குடியிருந்தனர் எனத் தெரிந்தது. அமுதகலசக் கொடியும் அங்கு குடியிருப்போரின் குலமுத்திரை கொண்ட கொடியும் இணையாக பறந்தன. மாளிகை முகப்புகளில் தேர்களும் பல்லக்குகளும் புரவிகளும் காத்து நின்றிருந்தன. சாலை நிறைத்து ஒரு படைப்பிரிவு பந்தவெளிச்சத்தில் சீராக ஒளிவிட்ட கவசங்களும் வாள்முனைகளும் வேல்முனைகளுமாக கடந்து சென்றது. பிறிதொரு சாலையிலிருந்து இருளொழுகுவதுபோல் இருபது யானைகள் இரும்புச் சங்கிலிகளின்றி அணிகளேதுமின்றி தெருவுக்குள் நுழைந்து ததும்பி அசைந்து கடந்து அப்பால் சென்றன.

முன்னால் சென்ற ஒற்றன்  “இங்கிருந்து நேராகச் சென்றால் அரசமுதன்மைத் தோழியின் மாளிகை” என்றான்.  “அவர்கள் யமுனைக்கரையில் தனி மாளிகையில் குடியிருப்பதாக அல்லவா சொன்னார்கள்?” என்றான் சாத்யகி. “ஆம், அங்குதான் இருந்தார்கள். ஆனால் யமுனைக்கரை முழுக்க இப்போது கடுமையான காவல் போடப்பட்டுள்ளது. அங்குள்ள அரசமாளிகைகள் அனைத்திலும் அஸ்தினபுரியின் படைத்தலைவர்கள் தங்கியிருக்கிறார்கள். ஆகவே சில நாட்களுக்கு முன் அரசியின் பெருந்தோழி இந்த மாளிகைக்கு கொண்டுவரப்பட்டார். இங்கு பிற சேடியருடன் அவரும் தங்கியிருக்கிறார்” என்றான்.

“அங்கு செல்ல காவல் ஏதுமில்லையா?” என்று சாத்யகி கேட்டான். ஒற்றன் “பெரிதாக தடை இல்லை. முதல் சில நாட்களுக்குப் பின் படைத்தலைவர்கள் இப்பகுதியை மறந்துவிட்டார்கள். அரசப்பெருந்தோழி எவரென்றும் அவரது இடமென்னவென்றும் இவர்கள் எவருக்கும் தெரியாது. அவர்கள் பித்தெடுத்து நிலைமறந்த முதுமகள் என்று எண்ணுகிறார்கள்” என்றான். “அவர்கள் ஒவ்வொரு கருநிலவிலும் கோட்டைக்கு வெளியே கொற்றவைக்கு பூசனை செய்வதுண்டு என்று அறிந்தேன்” என்றான் சாத்யகி.  “ஆம், ஆனால் இப்போது இக்கோட்டைக்குள் எவரும் நுழைவதும் வெளியேறுவதும் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அக்கொற்றவை ஆலயத்திலிருந்து சிறுசிலையொன்று கொண்டுவந்து இங்கு அரண்மனைக்குள்ளேயே நிறுவப்பட்டுள்ளது. பெருந்தோழி அச்சிலைக்கே குருதிபலி கொடுத்து வணங்குகிறார்கள்” என்றான் ஒற்றன்.

மாயையின் அரண்மனை முகப்பை அடைந்ததும் அவனை அழைத்து வந்த ஒற்றர்கள் முன்னால் சென்று அங்கு காவலுக்கு நின்றிருந்தவர்களிடம் தலைவணங்கி ஏதோ சொன்னார்கள். காவலர்களிடம் அவர்கள் கணையாழி ஒன்றை காட்ட காவலர் தலைவன் தலைவணங்கினான். அருகே வந்து சாத்யகியை வணங்கி  “இங்கு எங்களுக்கு தங்கள் வரவைக் குறித்து ஆணை எதுவும் வரவில்லை, ஒற்றர்தலைவரே” என்றான். சாத்யகி ஒற்றனை நோக்க அவன் “இது சற்று முன் வந்த ஆணை. பெருந்தோழி இங்கிருந்து அகற்றப்படவேண்டும்” என்றபின் “அதன்பொருட்டே அஸ்தினபுரியிலிருந்து வந்திருக்கிறார்” என்றான். சாத்யகி தன்னிடமிருந்த கணையாழியை காட்ட காவலர்தலைவன் தலைவணங்கி  “அவ்வாறே” என்றான்.

முந்தைய கட்டுரைகாஞ்சி முதல் ஊட்டிவரை
அடுத்த கட்டுரைஆகாயத்தில் ஒரு பறவை — போரும் அமைதியும் குறித்து…