[ 1 ]
தமிழிலக்கியத்தில் ஆண்களும் பெண்களும் விளையாடும் பலவகையான விளையாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு பாடல்வகைகள் உள்ளன. இங்கிருந்து காலத்தில் பின்னோக்கிச் சென்று பார்ப்போம் என்றால் நாட்டார் வழக்கில் இருந்து இவ்வாறு பாடல்முறைகள் இலக்கியத்திற்குள் வந்துகொண்டிருப்பதைக் காணலாம். இறுதியாக வந்த பாடல்வகை ஏசல் என்று தோன்றுகிறது. கண்ணி வடிவில் அமைந்தது . மாமியார் மருமகள், நாத்தனார்கள், சக்களத்திகள் ஒருவரை ஒருவர் ஏசிக்கொள்ளும் பாடல் வடிவம் கொண்டது . ஆனால் மிகமுக்கியமான ஞானப்பாடல்கள் இவ்வடிவில் அமைந்துள்ளன. ஏசல்கண்ணி இஸ்லாமிய சூஃபி இலக்கியத்தில் முக்கியமான இடம் பெறுவது. ஒருவர் பாடும் இரட்டைவரிக்கு இன்னொருவர் தொடுத்துக்கொண்டு மறுமொழி அளிப்பதனால் இது கண்ணி வடிவம் கொண்டிருக்கிறது. இதன் வட இந்திய வடிவம் லாவணி. லாவணிக் கலைஞர் ஒருவரின் வாழ்க்கையைப்பற்றிய தாராசங்கர் பானர்ஜியின் கவி என்னும் நாவல் அழகிய படைப்பு.
மேலும் பின்னால் சென்றால் சிந்து, கும்மி, அம்மானை என பாடல்வடிவங்கள் வருகின்றன. பிள்ளைத்தமிழில் உள்ள சிற்றில், சிறுபறை முதலிய பருவங்கள் பலவும் நாட்டார் மரபிலிருந்து செவ்விலக்கியம் ஆனவை. அவ்வாறு சென்றால் சிலப்பதிகாரத்தின் வரிப்பாடல், குரவைப்பாடல் ஆகியவற்றைச் சென்றடையலாம். சங்கப்பாடல்களில் கலிப்பா நேரடியான நாட்டார் தன்மையை வெளிக்காட்டுகிறது. இந்த வடிவங்கள் மக்களின் வாழ்க்கையிலிருந்து உருவானவை. பெரும்பாலும் ஏதேனும் தொழில்கள், அல்லது விளையாட்டுகளில் இருந்து. இவற்றுக்கு ஒரு தாளம் தேவையாகிறது. அந்தத்தாளம் பாடலின் அமைப்பை வடிவமைக்கிறது.
நாட்டார்பாடல்களின் வடிவை செவ்விலக்கியம் கைக்கொள்வதற்கு முதன்மையான நோக்கம் செவ்வியலின் பண்புநலன்கள் சிலவற்றை மக்களிடம் கொண்டுசெல்வதுதான். ஆய்ச்சியர் குரவையைப் பார்க்கையில் கிருஷ்ணபக்தி அக்காலக்கட்டத்திலேயே மக்களிடம் பெருமரபாக ஆகிவிட்டிருப்பதை உணரமுடிகிறது. சைவ வைணவ பக்தி இலக்கியங்கள் அவர்களின் அழகியலையும் தத்துவத்தையும் கலைகள், இசை ஆகியவற்றினூடாகவே மக்கள்மயமாக்கின. தமிழகத்தின் முதன்மையான மக்களியக்கம் பக்தியியக்கமே.
வரட்டு அரசியல் கோட்பாட்டாளர் நமக்குச் சொல்வதுபோல அது மேலிருந்துகீழே செலுத்தப்பட்டது அல்ல. வெறும் அதிகாரச் செயல்பாடோ பண்பாட்டு அடக்குமுறையோ அல்ல. அது இயல்வதுமல்ல. மக்கள் மூடர்கள் அல்ல. மக்களிடமிருந்தே தெய்வவடிவங்களும், வழிபாட்டுகளும், சடங்குகளும், அவற்றுடன் இணைந்த கலைகளும் இலக்கியங்களும் அம்மரபால் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவை கொண்டிருந்த மையத்தத்துவநோக்குக்கு ஏற்ப அவை மறு ஆக்கம் செய்யப்பட்டன. மீண்டும் அவை கீழிறங்கி மக்களிடையே சென்று சேர்ந்தன. அதைச்செய்தவர்களும் மக்களில் இருந்து எழுந்தவர்களே. கவிஞர்கள், ஞானிகள். இன்றும் அதேபோன்றுதான் கலை, அறிவியக்கம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அனைத்துக் கருத்துக்களும் இவ்வாறுதான் பரவுகின்றன.ஒரு தொடர்ச்சியான உரையாடல் இது. ஒரு பண்பாட்டின் மூச்சியக்கம். எது மேலிருந்து அளிக்கப்பட்டது எது கீழிருந்து கொடுக்கப்பட்டது என ஆயிரமாண்டுக்குப்பின் இன்று எவராலும் அறுதியிட்டுச் சொல்லிவிடமுடியாது.
அதனூடாக இங்கே நாட்டார்பண்பாடு விரிந்து செவ்வியலாகியது. செவ்வியல் நாட்டார்த்தன்மை கொண்டு நெகிழ்ந்தது. இன்று நாம் காணும் தமிழ்ப்பண்பாட்டுக்கூறுகள் அனைத்தும் அவ்வாறு உருவாகி வந்தவையே. பக்தியியக்கம் ஒரு மாபெரும் சமையற்களம். நம் இசை, நம் சிற்பக்கலை, நம் உணவு, நம் ஆலயங்கள், நம் சடங்குகள், நம் திருவிழாக்கள், நம் கொண்டாட்டங்கள் அனைத்தும் அப்போதுதான் ஆக்கப்பட்டன- மரபிலும் வரவிலும் இருந்த பொருட்களைக்கொண்டு..நம் தெய்வங்களே அதில்தான் முகம் கொண்டன. நம் வேர்கள் அதில்தான் இன்றும் பரவியிருக்கின்றன. நம் பக்திமரபை செவ்வியலும் நாட்டார்மரபும் இணையளவு பரவி பின்னி உருவான ஒரு பண்பாட்டுப்பரப்பு என்று சொல்லிவிடமுடியும்.
சாழல் ஏதோ ஒரு வடிவில் இன்றும் இருக்கும் ஒரு விளையாட்டு. இன்று அது திருமணச் சடங்குகளில் ஒன்று. அந்தணர்கள் நலுங்கு என அதைச் சொல்கிறார்கள். வேறுபல சாதிகளில் மல்லிகைப்பந்தை ஒருவர் மேல் ஒருவர் எறிந்து அதை விளையாடுகிறார்கள். திருமணச்சடங்காக ஆவதற்கு முன்பு இது இளவேனிற்கால விளையாட்டாக இருந்திருக்கலாம். சங்ககாலம் வரைச் சென்றுபார்த்தால் இங்கே இந்திரவிழா பெருங்கொண்டாட்டமாக இருந்திருக்கிறது. அது இளமைத்திருவிழா.கட்டிலாத காதலின் நாள். காமம் தூயது என்றும் நிலத்தை வளம்கொள்ளச் செய்வது, மைந்தரைப் பெருக்குவது என்றும் நம்பிய ஒரு காலகட்டத்தின் களியாட்டு அது
பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதிவரை நீடித்த பக்தி காலகட்டத்தில்கூட அந்த உளநிலை இருந்திருக்கிறது. பக்தி இயக்கப் பாடல்களில் காமம் கொண்டாடப்பட்டிருக்கிறது. உண்மையில் சங்க இலக்கியத்தின் களியாட்டுக்கூறுகள் இடைக்கால சமண, பௌத்த காலகட்டத்தின் ஒழுக்கநெறிகளின் இறுக்கங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டன. மாணிக்கவாசகரிடமும் காரைக்காலம்மையிடமும் நம்மாழ்வாரிடமும் ஆண்டாளிடமும் நாம் அதைக் காண்கிறோம். பிறகு வந்த காலகட்டத்தில்தான் மேலும் மேலும் நாம் இறுகத்தொடங்கினோம். அதற்கான பண்பாட்டு, வரலாற்றுக் காரணிகள் வேறு
திருச்சாழல் மாணிக்கவாசகரின் திருவாசகத்திலுள்ள ஒரு பாடல்வகை. தில்லையில் அருளிச்செய்தது. மகளிர் இரு தரப்பாக பிரிந்து மாறிமாறி பாடிக்கொள்வது. ஒருவர் கேலி செய்ய இன்னொருவர் மறுமொழி சொல்வது. ஒருவர் சொல்ல இன்னொருவர் மறுப்பது. ஆனால் உண்மையில் இருவர் பேசுவதும் ஒன்றே. ஒரு நுட்பமான விளையாட்டு. பெண்களுக்கே உரிய மறுத்துஏற்கும் மாயம்.
ஒருத்தி சொல்கிறாள்
கோயில்சு டுகாடு கொல்புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் காணேடீ!
அதற்கு மறுதரப்பின் மறுமொழி.. அது தலைவியின் கூற்று.
தாயுமிலி தந்தையிலி தான்தனியன் ஆயிடினும்
காயில்உ லகனைத்தும் கற்பொடிகாண் சாழலோ.
சுடுகாட்டில் கோயில். ஆடையோ கொல்லும்புலியின் தோல். தாயும் இல்லை தந்தையும் இல்லை. தன்னந்தனியன். அவனா உன் காதலன்? அந்த நையாண்டிக்கு தலைவி சொல்கிறாள். தாயும் தந்தையும் இல்லை, தன்னந்தனியன் ஆனால் என்ன அவன் சினம்கொண்டால் உலகமெல்லாம் கற்பொடியாகிவிடும். அதன்பின் சாழலோ என்று உரைத்து மலர்ச்செண்டை வீசுகிறாள்.
ஏற்புக்கும் மறுப்புக்கும் நடுவே ஒடும் அந்த மலர்ச்செண்டுதான் அத்தருணத்தின் கவிதை
[ 2 ]
கண்டராதித்தனின் திருச்சாழல் தமிழ் புதுக்கவிதையில் ஓர் அருநிகழ்வு. நாட்டார் மரபிலிருந்து செவ்வியலுக்குச் சென்ற கவிதைவடிவம் அங்கிருந்து புதுக்கவிதைக்கு இறங்கி வருகிறது. தொன்மையான இந்த உரையாடலில் மூன்றாம்தரப்பு ஒன்று வந்து கலந்துகொள்கிறது. முற்றிலும் புதியது. மேலைப்பண்பாட்டின் தாக்கத்தால் உருவானது. பெரும்பாலும் மேற்குநோக்கித் தவம் செய்வது. அதன் மொழிநடை ஆங்கில மொழியாக்கத்தால் உருவானது. அதன் உளநிலைகள், தத்துவங்கள், வாழ்க்கைநோக்கே கூட ஐரோப்பியக் கொடைதான். தன் மெய்ப்பையைக் கழற்றிவிட்டு அது சாழலாடலின் ஒருமுனையில் அமர்ந்து மலர்ப்பந்தை பிடித்துக்கொண்டுவிட்டது. சாழலோ சொல்லி வீசுகிறது. மாணிக்கவாசகர் மீது.
ஆனால் இது புதுநிகழ்வும் அல்ல. இதனுடன் ஒப்பிடத்தக்க சில படைப்புக்கள் தமிழில் உள்ளன. முதன்மையாகச் சொல்லப்படவேண்டியது பிரமிளின் தெற்குவாசல் என்னும் கவிதை. காலபைரவனின் பெருந்தோற்றத்தை புதுக்கவிதைக்குள் கொண்டுவந்து நிறுத்தும் அப்படைப்பு தமிழின் உச்சகட்ட இலக்கியநிகழ்வுகளில் ஒன்று [நான் அதைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். உள்ளுணர்வின் தடத்தில் என்னும் கவிதைத் திறனாய்வு நூலில் உள்ள பிரமிள் குறித்த கட்டுரையில்] பிரமிளின் எழுவிசைக்கு மறுபக்கம் மென்விசையாக காதலின் தவிப்பைச் சொல்லிச் சாழலாடுகிறது இக்கவிதை.
இக்கவிதையை ஒரு விரிந்த பின்புலத்தில் நிறுத்தவே முயல்கிறேன். கவிதையை பிரித்து விளக்கவோ அதன் அடுக்குகளைக் குலைக்கவோ முயலக்கூடாது என என்னை கட்டுப்படுத்திக்கொள்கிறேன். வாசகனுக்காக விடப்பட்டுள்ள முதன்மையான இடைவெளிகளில் தான் தனியனாகவே நுழைய விரும்புகிறேன். நான்கு பகுதிகளாக தோழிகூற்றும் தலைவிமறுமொழியும் என அமைந்துள்ளது. [அல்லது அவளேதான் தோழியென்றும் அப்பக்கம் இருக்கிறாள்] ‘அய்யோ எனக்குப் பிடிக்கவேயில்லை’ என்ற சொல்லுக்கு ‘அவ்ளவு பிடிச்சிருக்கு’ என்று பொருள்கொள்ளும் ஒரு மறுமுனை. ’வேண்டாமே’ என்றா ‘இன்னும் இன்னும்’ என்று தெரிந்தவள்.கண்ணி என்பதே ஒன்றுடன் ஒன்று தொடுத்துக்கொள்ளுதல். செல்லமுரண்போல தொடுக்க வாகான கொக்கி ஏது?
சாழலின் மலர்ப்பந்து அன்றைய இளவேனிற் சோலைகளை தாண்டி இன்றைய அலுவலகச் சூழலுக்கு வந்துவிட்டிருக்கிறது.இவ்வாடலில் தொன்மையான மொழி வந்து இன்றைய சூழலில் அமர்வதன் பொருந்தாமையை மெல்லிய புன்னகையால் கடக்கமுடிந்திருப்பதனால்தான் இது கவிதை. சந்தமற்ற புதுக்கவிதை வடிவிற்குள் அறியாது ஓசைநயம் ஒன்றை கொண்டுவந்திருப்பதனால் மேலும் இனிதாகிறது.
நூற்றாண்டுகள் கடந்துவிட்டன. காணும் அனைத்தும் மாறிவிட்டிருக்கிறது. காதலைவிடவும் தூய்மையான காமம் மட்டும் தவறுசரிகளின், பழிநலன்களின், நன்றுதீதுகளின் அனைத்து எல்லைகளையும் கடந்து மலர்ப்பந்தாடிக்கொண்டிருக்கிறது.
திருச்சாழல்
1
தவிர நீ யாரிடமும் சொல்லாதே
பணியிடத்தில் உள்ளவன்தான்
என் வெளிர்நீல முன்றானையால் நெற்றியைத்
துடைப்பதுபோல் அவனைக் காண்பேன்
அதுவல்ல என்துயரம் நாளை ஞாயிறென்றால்
இன்றேயென் முன்றானை நூறுமுறை
நெற்றிக்குப் போவதுதான் என்னேடி?
தென்னவன் திரும்பியிருப்பானோ பிள்ளைகள்
வந்ததோ உண்டதோவென ஆயிரம் கவலைகள்
உள்ளதுதான்
வாரத்தில் ஞாயிறென்றால் ஒன்றே தான காண்
சாழலோ!
2.
விண்முட்டும் கோபுரத்தில் இடை நிறுத்தி
தொடைகட்டும் சிற்பம் உண்டென்பான்
களிப்பூட்டும் கதைகள் பல காண்போர்
அறியாமல் சொல்லி முடிப்பான்
நாளது முடிய நேரம் நெருங்கும்
நாளை ஞாயிறல்ல நானும் விடுப்பல்ல
என்பதோர் எண்ணம் வந்து
மகிழ்வது ஏனடியோ?
அண்ணன்வர எட்டாகும் பிள்ளையொன்றுமில்லை
வீடுபோய்ச் சேர்ந்தாலும் ஊணும் உறக்கமும்தான்
சொற்பமாய்ச் சொன்னாலும் வீடு போல்
அற்பமாயில்லாமல் போனது நம் புண்ணியம்தான்
நாள்தோறும் ஞாயிறென்றால் நம்பாடும்
நாய்பாடும் போலாகும் காண் சாழலோ!
3.
பின்னலை முன்போட்டால் அழகென்பான்
மறுத்தும் இடையில் சேலையைச்
சொருகினால்
கடுமையான வேலையொன்றைத்
தந்திடுவான்
பொந்தனைப்போல் கள்ளமனம்கொண்ட
அவன்
கணவனல்ல
காலைமுதல் மாலைவரை களைத்தே
போவேன்
நாளையொரு நாள் விடுப்பெனக்
கேட்டாலும்
மனம் இங்கேயும் உள்ளதுபோல் அங்கேயும்
உள்ளதுபோல் இருப்பது ஏனடியோ?
விந்தைமனம் உனக்கும் எனக்கும்
பிணியென்று கிடந்தாலும் பணியிடம்
போவதை மறவோம்தான் ஆனால்
நாளை ஞாயிறென்றும் அறியாமல்
விடுப்புக்கோரி விண்ணப்பித்தால்
நகைப்பிற்கும் நாம் ஆளாவோம் காண்
சாழலோ!
4.
திங்களொரு நாள் செவ்வாயொரு நாளும் போயிற்று
புதன் வந்ததும் பொறுமையில்லை எனக்கு
அவன் நலமோ அவன் மனை நலமோவென
நெஞ்சம் பதைத்துப் போவதுதான் என்னேடி?
பொல்லாத புதுநோய் வந்ததைப் போல் வருந்தாதே
அலுவலிலும் அவனேதான் வீட்டினிலும்
அவனேதானென பெண்ணொருத்திப் படும்
பெருந்துயர்ப் போலல்ல உன் துயரம்
என்றெண்ணிச் சந்தோஷம் காண் சாழலோ.!
குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018
கண்டராதித்தன் கவிதைகள்
பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு