கண்டராதித்தன் கவிதைகள்

kandaar-960x480குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது பெறுமதியான கவிதைகளுக்கும் செயல்பாடுகளுக்கும்தான் சென்றுசேர்கிறது என்பதில் மிக்க மகிழ்ச்சி.

இம்மின்னஞ்சலுடன் அவருடைய மூன்று தொகுப்புகளில் இருந்தும் சில கவிதைகளை
தேர்ந்தெடுத்து இணைத்திருக்கிறேன்.

வி.என்.சூர்யா

11096576_928038433914743_5439670631416638822_n

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018

பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு

நித்யா நிறைந்த அறை

 

இந்த அறையை நித்யா

வியாபித்தது போல

துயரம் வியாபிக்கிறது

சமயத்தில் துயரம்

வியாபித்திருந்தது போலவே

நித்யாவும் வந்து வியாபிப்பாள்

அல்லது

நித்யா வந்து நிறைந்த

துயரம் வியாபிக்கும்

அறையொன்றில் மட்டுமே

தங்கிவிடுகின்றேன் நான்

 

*

 

ஸ்டிக்கர் பொட்டு

வாழை நார் உதிர்ந்த முல்லை

சீயக்காய் மஞ்சள் வாசனை வளையல் துண்டுகள்

கேர்ஃபிரி கோஹினூர் காண்டம்களுடன்

உதிரம் கசிந்த உள்ளாடையுடனும்

முகம் வெளிறி சிரமத்துடன்

நடந்து போகின்றாள்

எப்போதும்

நித்யா இழந்ததுபோலவே வருவாள்

இழந்ததுபோலவே சென்றுவிடுவாள்

இந்த அறை நித்யாவிடமும்

நித்யா இந்த அறையினிடத்தும்

ஒழுங்கு செய்வதை மட்டும்

தவிர்க்க முடிவதில்லை என்னால்

*

 

எப்போதும் நித்யாவை

விரயம் செய்வதாக

தன்மீதான குற்றத்தை

பதிவு செய்து கொள்கிறது

கடைசியாக இந்த அறை

 

 

 

வெளிச்சங்கள்

 

குச்சிமிட்டாய் சுவைக்காக

அழுதுகொண்டிருக்கிறது குழந்தை

கழுநீர்ப்பானைக்குள் தலைவிட்டுக்

குடிக்கிறது தெருநாய்

மணியோசைக்கு முன்னும் பின்னும்

இருந்துகொண்டிருக்கிறது மரணம்

சாரையும் கருவிழையானும்

இழைய எழுகிறது மகுடியோசை

கல்லறைக்குள்ளிருந்தபடியே வேடிக்கை

பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

திரிபுவனச் சக்கரவர்த்திகள்

 

 

 

 

மூன்று நாள்

 

துக்கமாகவும்

கண்ணீருடனும்

கடந்துவிட்ட நேற்றை

ஒரு நரி கவ்விப் போனதைப் பார்த்ததும்

பார்க்காதது போலிருந்துவிட்டேன்

*

 

கொண்டைத் தலையுடன்

கண்களை

உருட்டியுருட்டி

நமக்கெல்லாம்

உயரேயொரு

கிளையிமர்ந்து

பசியாற்றும் பட்சியின்

அலகிலிருந்து உதிர்ந்தது

இந்த நாள்

*

நேற்றையும்

இன்றையும்

கடப்பதுபோல

நாளையைக் கடந்தும்

பறந்துகொண்டிருந்தது

ஒரு பறவை

 

 

 

இனி

 

இனி

துயில் பிரிய

விடியல் வரும்

பிறகு காலை வரும்

சோர்வுடன்

மதியம் வரும்

அதன்பின்

அழகிய அந்தி வரும்

எடுத்துக்கொள்

அது உனக்குத் தான்

*

இன்று காலையிலிருந்தே

இருட்டியபடியிருக்கிறது

வானம்

இன்று காலையிலிருந்தே

நல்ல மழை

இன்று காலையிலிருந்தே

வெளியில் போகவில்லை

பறவைகள்

இன்று காலையிலிருந்தே

இப்படியிருக்க

எந்த வழியாய்ச் சென்றதிந்த

அந்திச் சிறுபொழுது

*

நானும் அந்தியும்

இவ்வளவு ப்ரியம் கொள்ள

ஒரேயொரு காரணம்தான்

அதுவும்

அந்திக்கு மட்டும் தான் தெரியும்

 

 

 

 

இந்த வாளைப் பரிசாகக் கொள்

 

கைப்பிடியில்

இரத்தினக் கற்கள்

பதிக்கப்பட்ட இந்த வாளை

உனக்குப் பரிசளிக்கிறேன்.

நீ மாவீரன் என்பதற்காகவோ

கோழையின் பாதுகாப்புக்கெனவோ

உன்னிடம் கொடுக்கவில்லை.

இதன் கூர்மையைப் பரிசோதிக்க

உனக்கொரு எதிரியையும்

பரிசளிப்பதற்கில்லை.

இந்த வாளை உயர்ந்த ரகப்

பொருட்களை சேகரிப்பவனிடம்

விற்றுவிடலாம் என்றோ

வீட்டின் நுழைவாயிலை

அலங்கரிக்கப் பயனாகும்

என்றோ நினைக்கக் கூடாது.

இதன் அழகைப் பரிசோதிக்க

வெற்று வெளியிலும் கூட

சுழற்றக் கூடாது.

சொல்லப்போனால்

இதை நீ சுழற்றவே கூடாது.

அல்லது யாரும் அறியாததொரு

சந்தர்ப்பத்தில் வாளை

வைத்துவிட்டுத் திரும்பிவிட எத்தனிக்கக் கூடாது.

இவ்வளவு நிபந்தனைகளின் கீழ்

இந்த வாளை ஏற்க விரும்பாமல்

போகலாம் தடையில்லை.

பிறகொருமுறை வாள் என்ற

பொருளை நீ பார்த்தாலோ

கேட்டாலோ

இந்த வாள் உன் நினைவுக்கு

வரக்கூடாது

வந்தால் நேர்மையுடன்

உனது சிரசை எனக்களித்துவிட

வேண்டும்

சம்மதமா.

 

 

 

 

அந்த அன்பு என்னுடையதல்ல

 

 

வெள்ளை நிறத்தில்

நெஞ்சோடு

நான் சேமித்த

இந்த

அன்பையெல்லாம்

யாரோ யாருக்காகவோ

பறித்துக் கொண்டே

இருக்கிறார்கள்

*

தும்பையை

மாலையாகத் தொடுப்பது

நன்றல்ல எனவே

அதன் வெண்மையை

பரிசளிப்பதாகச் சொன்னான்

அந்த அன்பைத்தான்

பழகிய தோள்கள் அனைத்திற்கும்

சூட்டிக் கொண்டிருக்கிறேன்

*

வருவோர் போவோரெல்லாம்

வைத்துவிட்டுச் சென்றதுதான்

தாராளமாக

எடுத்துக் கொள்ளுங்கள்

நிறைய இருக்கிறது

 

 

வாரச்சந்தைக்கு காய்கறி

 

 

வாரச்சந்தைக்கு காய்கறி

வாங்க வந்த பெண்ணிற்கு

நான்கைந்து பிள்ளைகள்

நாலும் நாலுதிசையை

வாங்கித்தர கைகாட்டின

அவள் கைக்குழந்தைக்கு

பொரியுருண்டை வாங்கித்தந்தாள்

பொடிசுகள் பின்னேவர

பொரியுருண்டை கீழே விழுந்து

பாதாளத்தில் உருண்டது

ஏமாந்த குடும்பம் எட்டிப் பார்க்க

பாதாள பைரவி மேலெழுந்து

குழந்தையின் கன்னத்தைக்கிள்ளி

நல்லசுவை நல்லசுவை என

நன்றி சொன்னது

 

 

முந்தைய கட்டுரைமெலட்டூர் ஆர்வமும் ஐயமும்
அடுத்த கட்டுரைஅ.முத்துலிங்கம் நேர்காணல்