மைந்தர்கள் வருவதற்காக உபப்பிலாவ்யத்தின் அரச மாளிகை முகப்பில் சாத்யகி அமைதியிழந்து காத்து நின்றான். உள்ளிருந்து விரைந்து வந்த சுரேசர் அவனைக் கடந்து செல்லும்போது ஓரவிழியால் பார்த்து நின்று “தாங்களா? இங்கு?” என்றார். “மைந்தர்களுக்காக காத்திருக்கிறேன்” என்று சாத்யகி சொன்னான். “நான் அவர்களை தங்களிடம் அழைத்துவரச் சொல்கிறேன். உள்ளே கூடத்தில் அமர்ந்திருக்கலாமே?” என்றார் சுரேசர். “இல்லை, அவர்களுக்கு அரசநெறிமுறைகள் பழக்கமில்லை ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்து அழைத்து வரவேண்டியிருக்கிறது” என்றான் சாத்யகி.
சுரேசர் புன்னகைத்து “இளைஞர்களுக்கு நாம் எண்ணுவதைவிட மிகுதியாகவே தெரியும். நாம் கற்பிப்பதைவிட குறைவாகவே கற்றுக்கொள்கிறார்கள்” என்றார். சாத்யகி அதை உளம் கொள்ளாமல் சாலையை நோக்கி “உடனே கிளம்பி வரும்படி சொல்லிவிட்டு வந்தேன். இவ்வளவு பொழுதாகிறது. எங்காவது கிளம்புவதென்றால் ஒவ்வொன்றாக சொல்லிச் சொல்லி பொழுது கடத்துவார்கள். ஒருவருக்கொருவர் சிறுபூசல்கள். மூத்தவன் சொல்லை இளையவர் மறுப்பது ஒரு விளையாட்டாகவே மாறிவிட்டிருக்கிறது” என்றான்.
“யாதவரே, நீங்கள் பெரும்பாலும் அவர்களுடன் இல்லை. இப்போதுதான் அவர்களை இத்தனை அணுக்கத்தில் அறிகிறீர்கள் என்று நினைக்கிறேன்” என்று சுரேசர் சொன்னார். சாத்யகி “ஆம், இளமையிலேயே துவாரகைக்கு சென்றுவிட்டேன். அரசப்பொறுப்பை தந்தைதான் நோக்கினார். நான் அடிக்கடி அங்கு செல்வதில்லை. ஒவ்வொரு முறை செல்லும்போதும் வளர்ந்து முற்றிலும் புதியதாக உருமாறிய மைந்தர்களைத்தான் பார்ப்பேன். இப்போது என்னுடன் வந்திருக்கும் இவர்களை இதற்குமுன் நான் அறிந்ததே இல்லையென்று தோன்றுகிறது” என்றான்.
சுரேசர் “முதிரா இளமையில் ஒவ்வொரு இளைஞனுக்கும் அவர்களுக்கான தனித்தன்மைகள் உண்டு. ஆனால் அவற்றை புரிந்துகொள்வதைவிட அனைத்து இளைஞர்களுக்குமான இயல்புகளை அவர்களிடம் கண்டு அதற்கேற்ப நடந்துகொள்வதே அவர்களை அணுகுவதற்கான எளிய வழி. ஏனென்றால் அவர்களின் தனித்தன்மை சார்ந்த சிக்கல்கள் இன்னமும் உருப்பெற்றிருக்காது. அந்த அகவைக்குரிய சிக்கல்களே மேலோங்கியிருக்கும்” என்றபின் சிரித்து “எப்படியாயினும் இதை உங்கள் உள்ளத்தின் ஆழம் உவகையுடன் எதிர்கொள்கிறதென்றே தெரிகிறது. மானுடர் சிறந்த மகிழ்ச்சிகளை நெருக்கடிகளாகவே அடைகிறார்கள்” என்றுகூறி தலைவணங்கி வெளியே சென்றார்.
சுரேசர் வெளியே முற்றத்தில் உடை ஒளிர நின்று அவருக்காகக் காத்து நின்றிருந்த தேர்ப்பாகனிடம் தேரை கொண்டுவரும்படி சொன்னார். அவர் தேரிலேறிச் செல்வதை சாத்யகி நோக்கிக்கொண்டிருந்தான். மாலை வெயில் நீளத்தொடங்கியிருந்தது. அரண்மனையின் கூரைவிளிம்பு முற்றத்தில் நெடுந்தூரம் சென்று படிந்திருக்க அதிலிருந்து புறா நிழல்கள் எழுந்து அமைந்தன. சாத்யகி உள்ளே சென்று அமரலாமா என்று எண்ணினான். ஆனால் அவன் மைந்தர் ரிஷபவனத்தில் தேரில் வந்து அரண்மனைமுன் இறங்கிய ஒரு பழைய காட்சி நினைவு வந்தது. ஓசையிட்டுச் சிரித்தபடி உடைந்த குரல்களில் கூச்சலிட்டுக்கொண்டு தேரிலிருந்து நான்கு பக்கமும் சிதறி விழுவதுபோல் இறங்கி பாய்ந்து ஓடிவந்து திண்ணைகளிலும் தூண்களிலும் தொற்றி ஏறினர். ஒருவரையொருவர் முந்தி வலியவரை எளியவர் பாராமல் பிடித்துத்தள்ளி உள்ளே ஓடினர். அவ்வெண்ணம் எழுந்ததுமே அவன் உடல் விதிர்த்தது. அதை அங்கும் அவர்கள் நிகழ்த்திவிட்டதுபோல எண்ணி சினம்கொண்டு பற்களைக் கடித்து கைகளை இறுக்கிக்கொண்டான். பின்னர் மெல்ல தன்னை அடக்கி உடலை எளிதாக்கினான்.
தொலைவில் தேரின் ஒலி கேட்டதுமே ‘அவர்கள்தான்’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். கவலையுடன் நெற்றிமேல் கைவைத்து நோக்கினான். முதல்தேர் காவல் மாடத்தின் முன் தோன்றியது. அதிலிருந்த மைந்தர்கள் உரக்கப் பேசி கூச்சலிட்டுக்கொண்டுதான் இருந்தனர். சந்திரபானு திண்ணையில் நின்றிருந்த அவனைப் பார்த்ததுமே ஏதோ சொல்ல அனைவரும் அமைதியடைந்தனர். முதல்தேர் காவல் மாடத்தைக் கடந்ததுமே இரண்டாவது தேர் வந்தது. தேர் வந்து முற்றத்தில் வளைந்து நின்றபின் அனைவரும் இறங்காமல் அசையாத விழிகளுடன் அவனை நோக்கினர். இறங்கும்படி சாத்யகி கைகாட்டினான். அசங்கன் தேரின் சிறுகதவைத் திறந்து படிகளில் கால்வைத்திறங்கி பிறரிடம் இறங்கும்படி கைகாட்டினான். அவர்கள் ஒவ்வொருவராக இறங்கி ஒருவருக்குப் பின் ஒருவராக நின்றனர்.
இரண்டாவது தேரிலிருந்து சிரித்தபடியும் உரக்கப் பேசியபடியும் இறங்கிய மைந்தர்கள் முதல் தேரிலிருந்து இறங்கியவர்கள் அமைதியாக இருப்பதைக்கண்டு தாங்களும் அமைதியடைந்து பின்னால் வந்து நிரை வகுத்தனர். தேர்கள் விலகிச் சென்றதும் சாத்யகி “ஒன்று நினைவில் கொள்க! அதைச் சொல்லவே இங்கே காத்து நின்றேன். இளைய யாதவர் நம் குடிக்கு மூத்தவர். அவர் நமக்களித்த உரிமையை இவ்வரண்மனையில் இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் அளிப்பாரென்று எண்ணவேண்டாம். இங்கு நாம் அரசாலும் குடியாலும் அயலவர். பாண்டவ மன்னர் அஸ்வமேதமும் ராஜசூயமும் செய்து மும்முடி சூடிக்கொண்டவர் என்பதை மறக்க வேண்டியதில்லை” என்றபின் வருக என்று சொல்லி நடந்தான். அவர்கள் ஒருவர் பின் ஒருவர் மெல்லிய குரலில் பேசிக்கொண்டு வருவதை உணர்ந்தான்.
இளைய யாதவருடனான சந்திப்பில் மதிய உணவை அருந்தியபோது நிகழ்த்திய ஆடலை எண்ணிக்கொண்டான். அவன் அவர்களுக்கு கற்பித்திருந்த அனைத்து நெறிமுறைகளும் இல்லாமலாயிற்று. உணவருந்த அமர்ந்தபோது இளைய யாதவர் யாதவர்களின் குடியூட்டுகளின் வழக்கப்படி ஊன்துண்டு ஒன்றை எடுத்து அசங்கனின் மீது எறிந்தார். அவன் சிரித்தபடி எழ கூவி நகைத்தபடி சினி ஒரு ஊன் துண்டை எடுத்து இளைய யாதவர் மேல் எறிந்தான். அவர் துள்ளி எழுந்து அதை ஒழிந்து இன்னொரு துண்டை எடுத்து அவன் மேல் எறிந்தார். சாந்தனும் சபரனும் கூவிச்சிரித்தபடி இருக்கையிலிருந்து பாய்ந்து எழுந்தனர். அசங்கன் ஓர் ஊன் துண்டை எடுத்து இளைய யாதவர் மேல் எறிய அது உத்ஃபுதன் மேல் பட்டது. அதன்பின் அங்கிருந்த அனைத்து ஒழுங்குகளும் இல்லாமலாயின. மாறி மாறி உணவால் அடித்துக்கொண்டார்கள். தின்று குடித்து கூச்சலிட்டு ஒருவரை ஒருவர் நகையாடி உண்டு முடிப்பதற்கு நெடுநேரமாயிற்று.
சாத்யகி ஒரு வாய்கூட உண்ணாமல் பதைப்புடன் அவர்களை நோக்கிக்கொண்டிருந்தான். உடம்பு முழுக்க அன்னமும் ஊனும் எண்ணையும் வழிய அவர்கள் நீராடச் சென்றபோது அங்கு நிகழ்ந்ததை கனவென்று எண்ணியவன்போல மலைத்து சுவர்சாய்ந்து நின்றிருந்தான். இளைய யாதவர் இரு மைந்தர்களுடன் உரக்க கூச்சலிட்டு பேசியபடி அவனை கடந்து சென்றார். அவர்கள் ஒருவரையொருவர் உந்தி உரையாடியபடி உணவறையிலிருந்து வெளியே செல்ல நேமிதரன் அவனருகே வந்து சிரித்தபடி “பிறிதெவ்வாறு அவர் இருப்பாரென்று எண்ணினீர், மூத்தவரே?” என்றான்.
“ஆம், அவர் எப்போதும் அப்படித்தான் இருந்தார். நான் எப்போதும் இவ்வாறுதான் உணர்ந்தேன்” என்றான் சாத்யகி. நேமிதரன் “அவர் என்றும் தந்தையென்றும் தோழனென்றும் திகழ்பவர். ஒருபோதும் மாறாத சிறுவன் ஒருவன் அவருள் குடிகொள்கிறான். அதை உங்கள் மைந்தர் அறிந்துவிட்டார்கள். இனி ஒருபோதும் அரசநெறியோ அவைமுறைமைகளோ அவர்களை கட்டுப்படுத்தாது. அவர் அவர்களில் ஒருவர், களித்தோழர்” என்றான். சாத்யகி பெருமூச்சுடன் “ஆம்” என்றான். நேமிதரன் “நாம் அவரை தலைவராக மட்டுமே கொள்ளும் ஊழ்பெற்றவர்கள்” என்றான்.
இளைய யாதவரின் அரண்மனையிலிருந்து திரும்பி வரும்போது தேரில் கூச்சலிட்டு நகைத்தபடி உச்ச குரலில் அவர்கள் அவரைப்பற்றி பேசிக்கொண்டனர். அவருடைய களியாட்டுகள், அவர் சொன்ன வேடிக்கைகள். பின்னால் புரவியில் சென்றபடி அவர்கள் எவரைப்பற்றி அப்படி பேசிக்கொள்கிறார்கள் என்று வியந்தான். துவாரகையை அமைத்த பேரரசனை, சாந்தீபனியின் முதலாசிரியனை, பாரதவர்ஷம் அஞ்சும் பெரும்படைத்தலைவனை அவர்கள் அறிந்திருக்கவே இல்லை. உண்ணும்போது ஆட்டு ஊனிலிருந்து கால் எலும்பை எடுத்து வாயில் வைத்து ஊதி சங்கொலி எழுப்பிய ஒருவனைத்தான் இளைய யாதவரென்று எண்ணியிருக்கிறார்கள். அவர்களுக்கு அவர் எவ்வகையிலும் வியப்பளிப்பவராக இல்லை. விளையாட்டுச்சிறுவனாகவே அவர்கள் அவரை அறிந்திருக்கிறார்கள். அன்னையர் அவ்வாறே அவரைப்பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஒருவேளை அதுவே மெய்யான இளைய யாதவராக இருக்கலாம். பிற அனைத்தும் உள மயக்குகளாக இருக்கலாம்.
இடைநாழியினூடாக அரண்மனையின் சிற்றவை நோக்கி நடந்தபோது சாத்யகி மேலும் பேச விழைந்தான். இளைஞனாக துவாரகையின் அவையில் புகுந்தபோது தான் அடைந்த பதற்றத்தை, பிழைகளினூடாக கற்றுத் தேறியவற்றை, ஒரு சிறு பிழை ஒன்று நூறென பெருகி சூழும் விந்தையை, ஒவ்வொரு உள்ளமும் கணம்தோறும் திரும்பி புதிதென காட்டும் மாயத்தை, கற்று கற்று அத்தனை ஆண்டுகள் கடந்தபின்னும் கல்லாதவன்போல் ஒவ்வொரு தருணத்திலும் நின்று திகைக்க நேர்வதை. ஆனால் அருமணிகளை கூழாங்கற்களென காலால் மிதித்து விளையாடும் விழியற்ற குழந்தைகள் போலிருந்தனர் அவன் மைந்தர்.
அவர்களிலொருவன் பிறிதொருவனிடம் எதையோ சொல்ல அவன் சிரிப்பை அடக்கியபடி வாயை மடித்தான். சந்திரபானு செல்லும் வழியிலிருந்த அணித்தூணை கை முறுக்கி தட்டிப்பார்த்தான். சினி எதிரே வந்த ஏவலனை நோக்கி வாயைக்குவித்து காட்டி அவன் திகைத்தபோது விழிகளைத் திருப்பி சிரிப்பை அடக்கி முன்னால் வந்தான். சாந்தன் தனக்குத்தானே ஏதோ சொல்லியபடி வாள் சுழற்றுபவனைப்போல கைவீசிக்கொண்டே நடந்தான். மிகச் சிறிய விழியசைவினூடாகவே சாத்யகி பத்து மைந்தரின் முகங்களை, அவற்றினூடாக அவர்களின் உள்ளங்களை கண்டான். எவ்வாறு இத்தனை தெளிவாக இவர்களை புரிந்துகொள்ளமுடிகிறது என்று வியந்தான். ஏனெனில் இவர்கள் ஒவ்வொருவரின் உள்ளிருந்தும் நானே இத்தருணத்தை நடித்துக்கொண்டிருக்கிறேன். இவர்கள் எண்ணுவதும் ஆற்றுவதும் நான் எண்ணியவை, எண்ணி ஆற்றாது ஒழிந்தவை, எண்ணக்கூடுபவை.
அவ்வெண்ணம் எழுந்ததுமே அவன் சினம்கொண்டு முகம் இறுக “மீண்டும் சொல்கிறேன், இது அரசவை. விளையாட்டுக்கூடமல்ல. இங்கு நீங்கள் சந்திக்கப்போகும் ஒவ்வொருவரும் பாரதவர்ஷத்தின் பேரரசருக்கு நிகரானவர்கள். பேரரசி திரௌபதி மூன்று முதன்மை தெய்வங்களும் அடிபணிய அமர்ந்திருக்கும் முழுமுதல் கொற்றவை. அதை மறக்க வேண்டாம்” என்றான். சிற்றமைச்சர் சம்புகர் வாயிலைத் திறந்து விரைந்த காலடிகளுடன் வெளியே வந்தார். சாத்யகியைக் கண்டதும் “மைந்தர்களா?” என்றபின் சிரித்து “குஞ்சுகளுடன் வாத்து அலைமேல் நீந்துவதுபோல் வருகிறீர்கள், யாதவரே” என்றார்.
சாத்யகி சற்றே உதடுகள் வளைய புன்னகைத்து “பேரவை கூடுவதற்குள் அரசருக்கும் அரசிக்கும் மைந்தரை அறிமுகம் செய்துவைக்கலாம் என்று எண்ணுகின்றேன்” என்றான். “ஆம், அது நன்று. ஆனால் பொழுது மிகுதியில்லை. பேரவையில் அரசர்கள் அனைவரும் அமர்ந்துவிட்டார்கள் என்று செய்தி வந்துள்ளது” என்று சம்புகர் சொன்னார். சாத்யகி “ஆம், அரசவீதியை நிறைத்தபடி ஒவ்வொருவராக வந்துகொண்டிருப்பதை பார்த்தேன்” என்றான். “அமைச்சர்கள் அனைவருமே அங்கிருக்கிறார்கள். இங்கு இளைய யாதவர் அரசருடனும் இளையவருடனும் பேசிக்கொண்டிருக்கிறார்” என்று சம்புகர் சொன்னார். “சந்திப்பதில் பிழையில்லையல்லவா?” என்று சாத்யகி கேட்டான். சம்புகர் “இது என்ன கேள்வி? நீங்கள் இளைய யாதவரின் மாற்றுருவாகவே இங்கு கருதப்படுபவர். இந்திரப்பிரஸ்தத்தின் பெரும்படைத்தலைவராக நின்று போர்முகம் கொள்ளப்போகிறவர்” என்றார்.
சாத்யகி உளக்கிளர்ச்சியுடன் “முடிவெடுக்கப்பட்டதா? படைத்தலைமை எனக்கு அளிக்கப்படுமா?” என்றான். “அதில் சிறுகுழப்பம் நீடிக்கிறது. யாதவர்கள் இங்கே படைத்தலைமை கொள்வது இளைய யாதவர் அளித்த சொல்லுக்கு மாறாக ஆகும் என்று துருபதர் எண்ணுகிறார். ஆனால் உங்களைப்போன்ற பெருந்திறல்கொண்ட படைத்தலைவர் ஒருவரின் பங்கை மறுப்பதும் நன்றல்ல என கருதுகிறார்” என்றார். “நான் யாதவன் அல்ல. அரசனும் அல்ல. நான் தொழும்பன், என் தலைவன் பொருட்டு போரிடவேண்டியவன். குடிநெறியோ அரசநெறியோ எனக்கு பொருட்டு அல்ல” என்று சாத்யகி சொன்னான்.
“அது நீங்கள் கூறுவது. பிற்பாடு ஒரு சொல்லுக்கு வாய்ப்பளிக்கலாகாது” என்ற சம்புகர் “சற்று பொறுங்கள். உங்கள் வருகையை நான் அறிவிக்கிறேன்” என்றார். சாத்யகி “நானும் என் மைந்தரும் படையிலிருப்போம். களம்பொருதுவோம். இது என் தலைவனின் போர்” என்றான். சம்புகர் விழிகனிந்து “இதையே நானும் துருபதருக்கு உரைத்தேன். தாங்கள் வெறும் படைத்தலைவர் மட்டுமல்ல, இளைய யாதவரின் உள்ளத்தின் ஒரு பகுதியே உங்களுக்குள் இருக்கிறது. நீங்கள் வில்லுடன் எழுந்தால் இளைய யாதவரின் ஒரு கை படைக்கலமேந்தி எழுவது போன்றது அது. பார்ப்போம், இன்று அவையில் அரசர் முதன்மைப் படைத்தலைவர்களையும் துணைசெல்பவர்களையும் முறைப்படி அறிவிப்பார். இறுதி முடிவை அவர்தான் எடுக்க வேண்டும்” என்றார்.
சாத்யகி “அங்கு அனைவரும் அமர்ந்துவிட்டார்கள் என்றால் நான் சென்றுவிட்டு இரவில் மைந்தருடன் சென்று அரசரை பார்க்கிறேன்” என்றான். “பொறுங்கள். பொழுதிருக்குமென்றால் இப்போதே பார்த்துவிடலாம்” என்றபின் சம்புகர் உள்ளே சென்றார். சாத்யகி மூச்சை இழுத்துவிட்டு உடலை எளிதாக்கிக்கொண்டான். அசங்கன் “தாங்கள் படைத்தலைமை கொண்டாகவேண்டும், தந்தையே” என்றான். சாத்யகி சினத்துடன் குரல் தாழ்த்தி “நான் ஆணையிடப்படுவதை இயற்றுபவன். முடிவெடுக்க வேண்டியவர் இந்திரப்பிரஸ்தத்தின் அரசரே” என்றான்.
சம்புகர் கதவைத் திறந்து உள்ளே செல்லும்படி தலைவணங்கினார். சாத்யகி திரும்பி “வருக!” என்றபின் உள்ளே நுழைய மைந்தர்கள் ஓசையற்ற நிரையாக தொடர்ந்தனர். நீள்சதுர சிற்றறைக்குள் இளைய யாதவரும் யுதிஷ்டிரரும் மட்டும் பீடங்களில் அமர்ந்திருந்தனர். நகுலனும் சகதேவனும் அர்ஜுனனும் சுவர் சாய்ந்து நின்றிருக்க பீமன் சாளரத்தருகே கையூன்றி நின்று வெளியே பார்த்துக்கொண்டிருந்தான். ஏனென்றறியாமல் சாத்யகி அங்கநாட்டரசன் கர்ணனை நினைவுகூர்ந்தான். பீமன் அவர்கள் நுழைவதைக் கேட்டு திரும்பிப்பார்த்து புன்னகைத்தான்.
சாத்யகி யுதிஷ்டிரரை அணுகி தலைவணங்கி “இந்திரப்பிரஸ்தத்தின் அரசருக்கு வணக்கம். இவர்கள் என் மைந்தர். தங்கள் படைப்பணிக்கென அழைத்து வந்தேன்” என்றான். யுதிஷ்டிரரின் முகம் சோர்வுகொண்டிருந்தது. இடக்கண் தொய்ந்து சற்று கீழிறங்கி நிழல்வளையம் சூடியிருந்தது. உதடுகளின் இருபுறமும் ஆழ்ந்த மடிப்புகள் விழுந்திருந்தன. புன்னகையற்ற முகத்துடன் மைந்தரைப் பார்த்து “பதின்மர்! ஆம், தங்களுக்கு பத்து மைந்தர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றார். இளைய யாதவர் “யாதவர்களுக்கு மைந்தர்கள் பொதுவாகவே சற்று மிகுதி” என்றார். யுதிஷ்டிரர் புன்னகைக்காமல் “இன்றுதான் வந்தார்களா?” என்றார். சாத்யகி “ஆம்” என்றான்.
அங்கே எண்ணப்பட்டதை பீமன் உரக்க கேட்டான். “பத்து மைந்தரையுமே போருக்கென அழைத்து வந்துவிட்டீர்களா?” என்றான். சாத்யகி “நான் என் தலைவருக்காக என்னை அளித்தவன். என் மைந்தர் என்னிலிருந்து வேறல்ல” என்றான். யுதிஷ்டிரர் முகத்தில் மெல்லிய கசப்புடன் “உமது மைந்தர்கள் போருக்கு எழுந்தாகவேண்டும் என்பதில்லை. இங்கு ஏராளமான படைகள் ஏற்கெனவே திரண்டுவிட்டன” என்றார். சகதேவனை நோக்கியபின் மைந்தரைப் பார்த்து “மிக இளையோர்! இவர்கள் வந்து என்ன ஆகப்போகிறது?” என்றார். சகதேவன் “அவ்வாறல்ல அரசே, நமது படைகளில் அணிநிரந்திருக்கும் அனைவரும் எவருக்கோ மைந்தர்கள். அவர்களை படைக்கலமெடுத்து வரும்படி ஆணையிட நமக்கு அறத்தகுதி வேண்டுமென்றால் நமது மைந்தர் படைக்கலம் எடுத்து போர்முகம் நின்றாக வேண்டும்” என்றான்.
“இந்த அணிச்சொற்களையும் அரசமுறைமைகளையும் கேட்டு சலித்துவிட்டேன். எப்போது எழுந்து பார்த்தாலும் இளமை மாறா முகங்களுடன் சிரித்துப்பேசிக்கொண்டு போர்க்கலங்கள் ஏந்திச்செல்லும் மைந்தர்களையே பார்க்கிறேன்” என்ற யுதிஷ்டிரர் “இவர்களிடம் போருக்கு வரும்படி என் நாவால் ஒருபோதும் ஆணையிடமாட்டேன்” என்றார். “உங்கள் மைந்தர்களிடம் நீங்கள் ஆணையிட்டீர்கள், அரசே” என்று சகதேவன் சொன்னான். “ஆம், என் மைந்தரிடம் சொன்னேன். படைமுகம் நின்று உயிர் வைத்து ஆடுவது அவர்களின் பொறுப்பு. அம்முடிவை நான் எடுக்க முடியும். ஏனெனில் அவர்கள் என் மைந்தர்கள்.”
சாத்யகி தலைவணங்கி “இவர்கள் பொருட்டு அதே முடிவை நான் எடுக்கிறேன், அரசே” என்றான். யுதிஷ்டிரர் தலையை இல்லை என்பதுபோல் அசைத்தார். பீமன் எரிச்சலுடன் உடலை அசைத்து “போர்முரசு கொட்டும் வரை இப்படி ஒவ்வொரு கணத்திலும் தயங்கியும் கசந்தும் ஐயம்கொண்டும்தான் செல்லப்போகிறோமா?” என்று எவரிடமென்றில்லாமல் கேட்டான். யுதிஷ்டிரர் சீற்றத்துடன் தலைதூக்கி “ஆம், நான் ஐயம் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு கணமும் என் ஐயங்கள் வளர்கின்றன. மடியிலிருந்து மைந்தரை இறக்கி போர்முகப்பில் கொண்டுசென்று நிறுத்திக்கொண்டே இருக்கிறேன். வேறெதையும் என்னால் எண்ண முடியவில்லை. இப்பழியை நூறு தலைமுறையாயினும் என் மீதிருந்து நீக்க இயலாது. என் கொடிவழிகள் இதற்கு பழிநிகர் செய்யவேண்டியிருக்கும்” என்றார்.
“நாம் இதை பேசவேண்டியதில்லை” என்று சகதேவன் சொன்னான். “ஏனெனில் இனி திரும்பிச்செல்ல இயலாது. நம்மால் இயன்ற அனைத்தையும் செய்துவிட்டோம். இந்தப் போர் நாம் தொடங்கியதல்ல. நாம் முன்னெடுப்பதுமல்ல. நம்மால் எவ்வகையிலும் தவிர்க்கக்கூடியதுமல்ல.” பீமன் “தவிர்க்க முடியும், அரசே. அத்தனை ஐயமும் துயரமும் இருந்தால் ஆணையிடுங்கள், போரை நிறுத்திவிடுவோம்” என்றான். யுதிஷ்டிரர் துயரம் நிறைந்த விழிகளைத் தூக்கி பீமனைப் பார்த்து “அது இயலாதென்று நீ அறிவாய்” என்றார். “ஏன்? அதை சொல்லுங்கள்” என்றான் பீமன்.
“ஏனெனில் நான் என்னை இளைய யாதவனுக்கு அளித்திருக்கிறேன். இது உண்மையில் அவனுடைய போரென்பதை இங்கிருக்கும் அனைவரும் அறிவோம்” என்று யுதிஷ்டிரர் சொன்னார். “பிறகென்ன? இப்போர் அவர் நிகழ்த்துவது. அவர் சொற்களின் பொருட்டு நாம் படைக்கலமேந்துகிறோம். அவரால் நாம் வெல்வோம். அவர் சொற்களை வேர்நிறுத்தி மண் நீங்குவோம். பிறிதொன்றும் எண்ண வேண்டியதில்லை” என்றான் பீமன். யுதிஷ்டிரர் “ஆனால், இவ்விளையோர்…” என்றபின் “இல்லை” என்றார்.
இளைய யாதவர் மெல்லிய குரலில் “அரசே, குருதி கோருவது நான். எக்குருதியும் எனக்கு நிகரே” என்றார். சாத்யகி உள எழுச்சியுடன் “அதை அளிப்பதே எங்கள் மீட்பும் முழுமையுமாகும். தங்களால் ஆணையிடப்பட்டமையால் நாங்கள் இதை ஆற்றவில்லை. இதன்பொருட்டே பிறந்திருக்கிறோம்” என்றான். இளைய யாதவர் “அரசரை வணங்கி வாழ்த்து பெறுக!” என்று அசங்கனிடம் சொன்னார். அசங்கன் முன்னால் நகர்ந்து தன் இடையிலிருந்த உடைவாளை உருவி யுதிஷ்டிரரின் காலை நோக்கி தாழ்த்தி தலைவணங்கினான். யுதிஷ்டிரர் செம்மைபடர்ந்த தளர்ந்த விழிகளும் தொய்ந்த தோள்களுமாக அவனை சில கணங்கள் பார்த்துவிட்டு வலக்கையை தூக்கி “வெல்க!” என்று வாழ்த்தினார்.
பின்னர் இளையோர் அனைவரும் தங்கள் வாட்களை உருவி யுதிஷ்டிரர் காலடியில் தாழ்த்தினர். சினியைப் பார்த்து யுதிஷ்டிரர் “இவனுக்கு என்ன அகவை?” என்றார். “பன்னிரண்டு. படைக்கலம் தொட்டு குண்டலம் அணிந்துவிட்டான்” என்று சாத்யகி சொன்னான். வலி தெரிந்த விழிகளுடன் அவனை சில கணங்கள் பார்த்துவிட்டு யுதிஷ்டிரர் முகத்தை திருப்பிக்கொண்டார். சாத்யகி “என் தலைவர் பொருட்டு பதின்மடங்கு பெருகியுள்ளேன் என பெருமிதம் கொள்கிறேன், அரசே” என்றான். கைகளை வீசி அச்சொற்களை யுதிஷ்டிரர் தவிர்த்தார்.
கதவைத் திறந்து உள்ளே வந்த ஏவலன் தலைவணங்கி “பாஞ்சாலத்து அரசி வருகை தருகிறார்” என்றான். “இங்கா?” என்றார் யுதிஷ்டிரர். “ஆம் அவையில் நுழைவதற்குமுன் இங்கு வந்துவிட்டுச் செல்லவேண்டுமென்று சொன்னார்” என்று ஏவலன் சொன்னான். “வரச்சொல்க!” என்று யுதிஷ்டிரர் கையசைத்தார். ஏவலன் வெளியே செல்ல யுதிஷ்டிரர் சாத்யகியை நோக்கி தலையசைத்தார். சாத்யகி அசங்கனை நோக்க அவன் விழிகளால் ஆம் என்றபின் தன் இளையவரிடம் கைகாட்டினான். அவர்கள் பின்புறம் காட்டாமல் அறையை விட்டு வெளியே சென்றனர். சாத்யகியும் உடன் செல்ல பீமன் “தாங்கள் இருக்கலாம், யாதவரே” என்றான். சாத்யகி தலைதாழ்த்தியபின் சுவர் சாய்ந்து நின்றான்.
யுதிஷ்டிரர் “இளமைந்தர். அந்த முகங்கள் இன்றிரவு என்னை துயில்களைந்து தவிக்கச் செய்யும்” என்றார். பீமன் அதை பொருட்படுத்தாமல் “இன்று அவையில் நாம் படைத்தலைமைகளை அறிவிக்கவேண்டும். சௌனகர் துருபதரை சந்திக்கச் சென்றிருக்கிறார். முழுமையான பெயர்நிரை இன்னும்கூட ஒருங்கவில்லை” என்றான். யுதிஷ்டிரர் “அதில் என்ன அத்தனை இடர்?” என்றார். நகுலன் புன்னகைத்தபடி “படைத்தலைமைக்கு பெயரமைக்கும்போது முதலில் இருந்து மெல்ல மெல்ல ஏறிச்செல்லும் தகுதிப்படியே அமைப்பர். ஆகவே முதலில் படைத்தலைமைக்கு பெயர் வருவது இழுக்கு. ஆனால் முதல் சிலநாட்களிலேயே போர் முடிந்துவிடுமென்றால் அதை தலைமைதாங்கியவர்கள் பெரும்புகழ் கொள்வர். ஆகவே முதலிலும் இன்றி பின்னரும் இன்றி இடம்பெற்றாகவேண்டும் என முந்துகிறார்கள்” என்றான்.
பீமன் நகைத்து “அவர்கள் நடுவே அதன்பொருட்டு போர் நிகழட்டும்… முடிவுசெய்வது எளிது” என்றான். யுதிஷ்டிரர் அமைதியின்மையுடன் அசைந்தார். அவர்கள் திரௌபதியை பற்றித்தான் எண்ணுகிறார்கள் என்றும் அதை மறைக்கவே பிறிதொன்றை பேசுகிறார்கள் என்றும் சாத்யகி எண்ணினான். “அவர்கள் தரப்பில் முதலில் படைமுகம் கொள்பவர் எவர் என்று அறியாமல் இந்நிரையை அமைப்பதில் பொருளே இல்லை. இது வெறுமனே நாம் படைமுகம்கொள்கிறோம் என்னும் அறிவிப்பே. அவர்களின் சூழ்கை தெரிந்ததும் அனைத்தையும் மாற்றிவிடுவோம்” என்றான் அர்ஜுனன். சகதேவன் “ஆம் படைத்தலைமையை இப்போது முடிவுசெய்யவேண்டியதில்லை. எப்படைகள் எவருக்குப் பொறுப்பு என்று மட்டும் இப்போது முடிவெடுப்போம்” என்றான்.
அவர்கள் மீண்டும் அமைதியானார்கள். திரௌபதியைப் பற்றித்தான் அவர்கள் அவன் அங்கே வருவதற்கு முன்பு பேசிக்கொண்டிருந்தார்கள் என்று சாத்யகி உணர்ந்தான். கைகளை மார்பில் கட்டிக்கொண்டான். திரௌபதியின் காலடியோசையை அவன் உள்ளத்தால் கேட்டான்.