உபப்பிலாவ்யத்தின் தென்கிழக்கில் மையச்சாலையிலிருந்து சற்று விலகி அமைந்திருந்த இளைய யாதவரின் சிறிய மரமாளிகையின் முற்றத்தைச் சென்றடைந்து புரவியிலிருந்து இறங்கி கடிவாளத்தை ஏவலனிடம் அளித்துவிட்டு முகப்பை நோக்கி சாத்யகி நடந்து சென்றான். முதன்மைக்கூடத்தில் ஏவலர்களுக்கு ஆணைகளிட்டுக்கொண்டிருந்த இளைய யாதவரின் அணுக்கனான நேமிதரன் அசைவை உணர்ந்து திரும்பி சாத்யகியை பார்த்ததும் படிகளில் இறங்கி விரைந்து அணுகி “வருக, மூத்தவரே. அரசர் சற்று முன்னர்தான் நைமிஷாரண்யத்திலிருந்து திரும்பி வந்தார். ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்” என்றான்.
எதிர்வெயிலுக்கு முகம் சுளித்தபடி “இப்போது அவரை சந்திக்கமுடியுமா?” என்று சாத்யகி கேட்டான். “வந்து அரைநாழிகை கூட ஆகவில்லை. ஓய்வெடுத்த பின் நீராடி அணிபுனைந்து அறை வந்தமர நான்கைந்து நாழிகை பொழுதாகுமென்று எண்ணுகின்றேன்” என்று நேமிதரன் சொன்னான். சாத்யகி “என் மைந்தர்களை அரசருக்கு அறிமுகம் செய்யலாம் என்று எண்ணினேன்” என்றான். நேமிதரன் முகம்மலர்ந்து “வந்திருக்கிறார்களா? எப்போது?” என்றான். “இன்று காலைதான் அவர்களுடன் நகருக்குள் நுழைந்தேன்” என்றான் சாத்யகி.
நேமிதரன் “ஆம், நீங்கள் ரிஷபவனத்திற்குச் சென்றிருப்பதாக சொன்னார்கள்” என்றான். சாத்யகி “போர் தொடங்கவிருக்கிறது. தந்தையிடம் வாழ்த்து பெற்று வரலாம் என்று எண்ணினேன். அத்துடன் திரும்பிச்செல்லும்வரை அங்கு நிகழவேண்டிய அனைத்தையும் ஒழுங்குசெய்து உரிய ஆணைகளையும் பிறப்பித்துவிட்டு வரவேண்டியிருந்தது” என்றான். நேமிதரன் “ஆம், போருக்கும் துறவுக்கும் எச்சமின்றி செல்லவேண்டும் என்பார்கள்” என்றான். சாத்யகி உதடுகள் வளைய சற்றே புன்னகை செய்து “எப்படியிருந்தாலும் இது போர். என்ன நிகழுமென்று தெய்வங்கள்கூட இப்போது சொல்லிவிட முடியாது” என்றான்.
இருவர் விழிகளும் ஒருகணம் தொட்டுக்கொண்டு விலகின. போர் குறித்த அனைத்து உரையாடல்களும் வந்து தொட்டுச்செல்லும் கூர்முனை அது. நேமிதரன் “மைந்தர்கள் எத்தனை பேரை அழைத்து வந்தீர்கள்?” என்று கேட்டான். “பத்து பேரையுமே” என்று சாத்யகி சொன்னான். நேமிதரனின் புருவங்கள் சுருங்கின. உடனே முகத்தை இயல்பாக்கி “ஆம், பதின்மருமே இளைய யாதவரை சந்திப்பது நன்று. அரசரை அவர்களும் இதுவரை சந்தித்ததில்லையல்லவா? மூத்தோர் வாழ்த்து அவர்களை நிறைவாழ்வு கொள்ளச்செய்யும்” என்றான்.
சாத்யகி முகம் மலர்ந்து “அசங்கன் பிறந்தபோது கைக்குழந்தையாக அவனை கொண்டுசென்று துவாரகையில் அரசரிடம் காட்டி வந்தேன். அவருடைய அளிபெருகும் அழகிய கைகள் அவன் தலையில் பதிந்திருக்கின்றன. என் மைந்தனை அவர் இரு கைகளாலும் வாங்கி நெஞ்சோடணைத்து மென்தலையில் முத்தமிட்ட காட்சியை இப்போது நிகழ்ந்ததென காணமுடிகிறது. பிற மைந்தரை அவர் பார்த்ததில்லை” என்றான். “இளையவனுக்கு எத்தனை அகவை?” என்று நேமிதரன் கேட்டான். “இந்த சைத்ர பஞ்சமியில் பன்னிரண்டு” என்றான் சாத்யகி.
நேமிதரனின் விழிகள் ஒருகணம் அலைபாய்ந்தன. பின்னர் “யாதவர்களில் சற்று பிந்தியே குண்டலம் அணிவிக்கும் வழக்கம் உள்ளது” என்றான். பெருமிதத்துடன் “பத்து பேருக்குமே படைக்கலம் அளித்து குண்டலம் அணிவித்தாகிவிட்டது” என்று சாத்யகி சொன்னான். நேமிதரன் “அது வழக்கமில்லை… ஆனால் யாதவர்களில் எல்லாவற்றுக்குமே ஏதேனும் ஒரு மரபு இருக்கும்” என்றான். சாத்யகி “இதற்கு மரபே இல்லை. தந்தை என்னை எதிர்த்தார். ஆனால் என்னிடம் நேரடியாக பேச அவர் துணியவில்லை. நான் அவரை சொல்லெதிர்த்து நிற்பேன் என அவருக்குத் தெரியும்” என்றான். “உண்மையில் பன்னிரு நாட்களுக்கு முன்னர்தான் இளையவன் சினிக்கு குண்டலச்சடங்கு நடைபெற்றது.”
சாத்யகி அருகிலிருந்த மரத்தாலான முக்காலியில் அமர்ந்தான். காவலன் வந்து அவனது குறடுகளைக் கழற்றி அப்பால் வைத்தான். இடையிலிருந்த பெரிய கச்சையைக் கழற்றி அவனிடம் அளித்துவிட்டு கூடத்திலேயே போடப்பட்டிருந்த தாழ்வான மஞ்சத்தில் அமர்ந்து கால்களை நீட்டியபடி “இரவெல்லாம் புரவியில் வந்தேன். இன்று பகல் முழுக்க பல பணிகள் உள்ளன. ஆனால் மைந்தரை அரசரிடம் காட்டி வாழ்த்துபெற்ற பின்னர் அவற்றுக்குச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்” என்றான். கைகளைத் தூக்கி உடலை நீட்டி “இன்று மாலை அரசப்பேரவை கூடுகிறது. கருநிலவின் கொற்றவைப் பூசனைக்குப் பின் படைநகர்வு இருக்குமென்றார்கள். இப்போது தவறவிட்டால் மீண்டும் அரசரை ஓய்வாக சந்திக்க வாய்ப்பில்லாமலே போய்விடும்” என்றான்.
தயங்கிக்கொண்டிருந்த நேமிதரன் உளம்கூட்டி அவன் எண்ணியதை நேரடியாகவே கேட்டான். “பதின்மரில் எவரை உங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பவிருக்கிறீர்கள், மூத்தவரே?” சாத்யகி அவன் விழிகளை நேர்நோக்கி “பதின்மரும் போரில் கலந்து கொள்ளட்டும் என்று எண்ணினேன். அதன்பொருட்டுதான் அவர்களை அழைத்து வந்தேன்” என்றான். பதறிநோக்கி விழிவிலக்கி “அனைவருமா?” என்று நேமிதரன் கேட்டான். “ஆம், என் இறுதித் துளி குருதியும் அரசருக்குரியது.” நேமிதரன் “ஆனால் உங்கள் மண்ணுக்கும் மூதாதையருக்கும் கடன்பட்டிருக்கிறீர்கள்” என்றான். “இல்லை, நான் பிற எவருக்கும் எவ்வகையிலும் கடன்படவில்லை” என்று சாத்யகி சொன்னான். தன் மேலாடையை விலக்கி “நோக்குக, இவை தொழும்பர் குறிகள்! தொழும்பருக்கு புவியில் தங்கள் தலைவனன்றி உறவென்றே எவருமில்லை” என்றான்.
நேமிதரன் தரையிலிருந்து விழியகற்றாமல் அசையாது நின்றான். சாத்யகி “நான் தொழும்பன் என்றால் என் மைந்தரும் அவ்வாறே. அவர்களுக்கும் நானோ என் தலைவனோ அளிக்காமல் தனிவாழ்வென ஏதுமில்லை. என் மைந்தர் முறைப்படி படைக்கலம் பயின்றவர்கள், போர்நெறிகள் அறிந்தவர்கள். என் அரசரின்பொருட்டு களம் நின்று பொருதுவதே தங்கள் பிறப்பின் நோக்கம் என்று அறிந்தவர்கள்” என்றான். நேமிதரன் “நன்று சூழ்க!” என்று சொல்லி தலைவணங்கி “நான் தேர்களை அனுப்பிவிட்டு வருகிறேன்” என்று வெளியே சென்றான். சாத்யகி தான் சொன்ன அச்சொற்களை மீண்டும் தனக்கே சொல்லிக்கொண்டவனாக கைகளை கட்டிக்கொண்டு கண்களைமூடி அமர்ந்தான்.
மறுபக்கம் மரப்படியில் குறடுகள் இறங்கி வரும் ஓசை கேட்டது. சாத்யகி திரும்பிப்பார்த்து இளைய யாதவரைக் கண்டு பதறி எழுந்து தலைவணங்கி “அரசரை வணங்குகிறேன்” என்றான். இளைய யாதவர் “நீர் எப்போது வந்தீர்?” என்றார். “சற்றுமுன்னர்” என்றான் சாத்யகி. “நேமிதரன் எங்கே?” என்றார் இளைய யாதவர். “சற்றுமுன் வெளியே சென்றார். நான் அழைத்துவருகிறேன்” என்று சாத்யகி திரும்பினான். “பொறும், அவன் வரட்டும்” என்றபடி இளைய யாதவர் இறங்கி வந்தார். “சத்யகர் எப்படி இருக்கிறார்? நலமாக இருக்கிறாரா?” என்றார்.
“நலமாக இருக்கிறார், முதுமைக்குரிய முறையில்” என்று சாத்யகி சொன்னான். இளைய யாதவர் “இன்றுதான் நைமிஷாரண்யத்திலிருந்து திரும்பிவந்தேன். இன்று மாலை அனைத்தரசர்களின் பேரவையை இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் கூட்டியிருக்கிறார். படைநகர்வுக்கான நாள் இன்று அறிவிக்கப்படும். படைத்தலைவர்களுக்கும் ஓலை அளிக்கப்படும் என்று எண்ணுகிறேன்” என்றார். சாத்யகி மெல்லிய உளக்கிளர்ச்சியுடன் “ஆம், ஒவ்வொரு கணமாக இத்தருணத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறோம். உள்ளத்தில் போர் தொடங்கி நெடுநாட்களாகின்றன என்றாலும் தொடங்கிவிட்டது என்ற சொல் நாம் தெய்வங்களுக்கு உரைப்பது” என்றான்.
இளைய யாதவர் “அவர்களும் இன்று மாலை பேரவை கூட்டுகிறார்கள் என்று செய்தி வந்தது” என்றார். சாத்யகி “அரசே, நான் என் மைந்தர்களை உபப்பிலாவ்யத்திற்கு அழைத்து வந்துள்ளேன்” என்றான். இளைய யாதவர் முகத்தில் எந்த மாறுதலுமில்லாமல் “அனைவரையுமா?” என்றார். சாத்யகி “ஆம், அனைவரையும். பதின்மரும் தங்கள் படைப்பணிக்காக வந்துள்ளனர். மூத்தவனை மட்டுமே தாங்கள் சிறு குழந்தையாக பார்த்திருக்கிறீர்கள். அனைவரும் தங்கள் தாள்பணிந்து வாழ்த்துபெறும் தருணத்திற்காக முற்பிறப்பில் தவம் செய்திருக்கிறார்கள்” என்றான்.
“மூத்தவன் பெயர் அசங்கன் அல்லவா? உம்மைப்போன்றே நெடிய உருவத்துடன் வளர்வான் என்று அன்று எண்ணியதை நினைவுகூர்கிறேன்” என்று இளைய யாதவர் சொன்னார். சாத்யகி முகம் மலர்ந்து “ஆம், என் அளவே உயரமிருக்கிறான். பதினாறு அகவைதான் ஆகிறது. ஆனால் குறுவாள்போல மீசையை கூர்மைப்படுத்திவிட்டிருக்கிறான்” என்றான். இளைய யாதவர் சிரித்து “நன்று, மீசையை நீவி நீவித்தான் அவர்கள் தங்களை ஆணென உணர்கிறார்கள்” என்றார். “தாங்கள் ஓய்வெடுப்பதாக நேமிதரன் சொன்னார். பொழுது இருக்குமாயின் என் மைந்தரை வரச்சொல்வேன்” என்று சாத்யகி சொன்னான்.
“தேரில் ஓய்வெடுத்தபடிதான் வந்தேன். ஒற்றர்கள் அனைவரையும் சந்திக்க வேண்டியுள்ளது. மறுபடியும் ஓய்வெடுக்கும் எண்ணமில்லை. அவர்களை வரச்சொல்க!” என்றபின் இளைய யாதவர் “நான் மாடத்தில் இருக்கிறேன். நேமிதரனை என்னை வந்து பார்க்கச்சொல்லும்” என்று சொன்னபின் படியேறி மேலே சென்றார். சாத்யகி உடலில் குடியேறிய துள்ளலுடன் முற்றத்தில் இறங்கி ஏவலனை நோக்கி “யாரங்கே? விரைந்து செல்லும் புரவியுடன் உடனே வருக!” என்றான். சூதன் ஒருவன் ஓடிவந்து நிற்க “எனது அரண்மனைக்கு செல். அரசரை சந்திக்கும்பொருட்டு மைந்தர்கள் கிளம்பி வரும்படி நான் ஆணையிட்டேன் என்று சொல்” என்றான்.
மாளிகைக்குப் பின்புறமிருந்து விரைந்து வந்த நேமிதரன் “கிளம்புகிறீர்களா, மூத்தவரே?” என்றான். “அரசர் ஓய்வெடுக்கவில்லை. மாடத்து அறையில் இருக்கிறார். உம்மை சென்று சந்திக்கச் சொன்னார்” என்றான் சாத்யகி. நேமிதரன் வியப்புடன் தலையசைத்துவிட்டு விரைந்து மாளிகைக்குள் நுழைந்து மரப்படிகளில் ஓசையெழ ஏறி மேலே சென்றான். சாத்யகி மீண்டும் பெருங்கூடத்துக்குள் சென்று பீடத்தில் அமர்ந்தான். சிலகணங்களில் நேமிதரன் கீழே இறங்கிவந்து சாத்யகியை நோக்கி தலைவணங்கியபடியே கூடத்தைக் கடந்து வெளியே சென்றான். ஏழு ஒற்றர்களுடன் மீண்டும் படியேறி மேலே சென்றான்.
சாத்யகி பொறுமையிழந்து முற்றத்தை நோக்கிக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் தேர் வரும் ஓசை கேட்டது பொறுமையின்மையுடன் எழுந்து சென்று வாசலில் நின்று சாலையை பார்த்தான். தொலைவிலேயே அது அவன் மைந்தர்கள் வரும் தேர் என்று தெரிந்தது. அவனுடைய குடியின் மூன்றிலை கொடி அதில் பறந்தது. முதல் தேர் வந்து முற்றத்தில் வளைந்து நிற்க ஏவலன் கதவைத் திறந்து மரப்படிகளை வைப்பதற்குள் இளையவனாகிய சினி பாய்ந்து வெளியே இறங்கினான். சாத்யகியை பார்த்தபின் உள்ளே நோக்கி “மூத்தவரே, தந்தை நமக்காக காத்திருக்கிறார்” என்று கூவினான். அசங்கன் இறங்கியதும் பிறரும் இறங்கினர். சினி “இது இளைய யாதவரின் மாளிகையா? சிறிதாக உள்ளதே?” என்றான். அசங்கன் “வாயை மூடு” என மெல்லிய குரலில் சொல்லிவிட்டு இளையோரிடம் தனக்குப் பின்னால் வரும்படி கைகாட்டினான்.
அவர்கள் சாத்யகியை அணுகி தலைவணங்கினார்கள். சாத்யகி “அரசர் நம்மை சந்திக்க ஒப்புக்கொண்டுவிட்டார். அனைவரிடமும் அவர் முன் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று பிறிதொருமுறை சொல்லியிருப்பாய் என்று எண்ணுகிறேன்” என்றான். “ஆம்” என்று அசங்கன் சொன்னான். இரண்டாவது தேர் வந்து முதல் தேருக்குப் பின்னால் நின்றது. அதிலிருந்து உத்ஃபுதனும் சந்திரபானுவும் சபரனும் சாந்தனும் முக்தனும் இறங்கி வந்தார்கள். அசங்கனுக்குப் பின்னால் இளையோர் நிற்பதைக் கண்டு தாங்களும் வந்து நிரை வகுத்தனர்.
ஒருகணத்தில் வெவ்வேறு அகவைகளில் தானே அங்கு முகம் கொண்டு நிற்பதாக சாத்யகிக்கு தோன்றியது. மறுகணமே தானும் அவர்களுடன் நின்றால் தன் தந்தையின் பதினொரு தோற்றங்கள் என்று எண்ணமெழுந்தது. அவ்வெண்ணத்தை அகற்றி கடுமையான முகத்துடன் “மூத்தவன் உங்களிடம் சொல்லியிருப்பான்” என்று அவர்களிடம் சொன்னான். “இதுவரை நீங்கள் உங்கள் ரிஷபவனத்திற்கு வெளியே சென்றதில்லை. முதுதந்தையையும் மூத்தோரையும் ஆசிரியர்களையும் அன்றி பெரியவர்களை சந்தித்ததில்லை. ஆகவே முறைமைகளை கல்வியாகவே அறிந்திருக்கிறீர்கள். அவை உடற்பழக்கமாக ஆகும்போதே நம்மில் எப்போதும் வெளிப்படுகின்றன” என்றான்.
அவர்கள் தலையசைத்தனர். சாத்யகி அவர்களை மாறி மாறி கூர்ந்து நோக்கியபடி “மீண்டும் சொல்கிறேன், துவாரகையின் அரசர் யாதவ குலங்கள் அனைத்திற்கும் முதன்மைப் பெருந்தலைவர். அத்துடன் பாரதவர்ஷத்தின் பேரரசர்களில் ஒருவர். பாரதவர்ஷமெங்கும் முடிசூடி நாடாளும் அரசர்கள் ஏவலருக்கு நிகராக பணிந்து நிற்கும் பேரவை கொண்டவர். அவர் துவாரகையின் அரண்மனையிலிருந்தாலும் காட்டுக் குடிலிலிருந்தாலும் பேரரசர்தான். அவர் முன் அவரது குடிகள், அவருக்கு ஏவல் செய்யும் நம்மைப்போன்ற அடியார் நடந்து கொள்ளும் முறை ஒன்று உண்டு” என்றான்.
அவர்கள் விழிகள் மாறுபட தலையசைத்தனர். சாலன் விழிகளில் மட்டும் சிறு புன்னகை எஞ்சியுள்ளதா என்று சாத்யகிக்கு தோன்றியது. அது அவனை சீண்டியது. “நீங்கள் இளையோர். அனைத்து மரபுகளும் பொருளற்ற வேடிக்கைகளே என்று தோன்றும் அகவை கொண்டவர். அறிக! நாம் வாழும் இந்த உலகமே பலவகையான நெறிகளாலும் மரபுகளாலும் சடங்குகளாலும் பழக்கங்களாலும் ஆனது. நம்மைச் சூழ்ந்திருக்கும் விலங்குகளுக்கும் நமக்குமான வேறுபாடு இதுவே. தந்தையென்றும் தனயரென்றும் அரசரென்றும் குடிகள் என்றும் வீரரென்றும் மக்களென்றும் மானுடரைப் பிரிப்பது மரபே” என்றான்.
“எந்த மரபும் எளிதாக உருவாகி வருவதல்ல. ஒவ்வொரு மரபுக்காகவும் மானுட குலம் குருதி சிந்தியிருக்கும். ஆகவே மரபுகளுக்கு முழுமையாக உளம் அளியுங்கள். மரபுகளால்தான் நீங்கள் அரசகுடியினர். உங்களுக்கு பெயரென்றும் ஊரென்றும் அமைவது மரபே. மறுசொல் இலாது உளமளித்தால் மட்டுமே மரபுகள் மெய்யாகவே கடைபிடிக்கப்படுகின்றன என்று உணருங்கள். மெய்யாகவே கடைபிடிக்கப்படும் மரபுகளே மானுடரை வகுத்தும் தொகுத்தும் ஒற்றைப்பெருக்கென ஆக்குகின்றன. ஒற்றை விசையென ஆன குடிகளும் படைகளுமே வெல்கின்றன” என அவன் தொடர்ந்தான்.
“மூத்தவன் சொல்லியிருப்பான். எனினும் மீண்டுமொருமுறை நினைவூட்டுகிறேன். எந்நிலையிலும் அரசரின் விழிகளை நோக்கி பேசலாகாது. எப்போதும் அவர் முன் நம் தலை படிந்திருக்கவேண்டும். அவர் கால்தொட்டு சென்னி சூடுகையிலும் அவரிடமிருந்து இரண்டு அடி தள்ளியே நின்றிருக்க வேண்டும். அவர் நம்மை தொடலாம், நாம் அவரை தொட உரிமையில்லை. அவருக்கு நம் பின்புறம் தெரியலாகாது. பணிவுக்குரிய சொற்களை இணைக்காமல் எந்த மறுமொழியும் சொல்லலாகாது. நாமே அவரிடம் எந்த வினாவும் எழுப்பக்கூடாது. ஆணைகள் எதற்கும் தலைவணங்கி ஏற்புச் சொல் மட்டுமே உரைக்கப்படவேண்டும். அவர் சொற்களில் ஐயம் இருந்தால் அவர் முன்னிருந்து விலகிய பின்னர் பிறரிடமே அதை உசாவ வேண்டும்.”
“அவர் நம் குடிக்கு மூத்தவர். ஆனால் மூத்தவருக்குரிய குருதிநெறிகள் எதுவும் அவரிடம் நாம் கொள்ளவேண்டியதில்லை. ஏனெனில் அவர் நம் பேரரசர்” என்றான் சாத்யகி. அசங்கன் “தேரிலேறுவதற்கு முன்னரே நான் இவற்றை இவர்களிடம் உரைத்தேன், தந்தையே” என்றான். சாத்யகி “மிகுதியாக உரைக்கப்படுகையில் இதை சற்றேனும் மீறிப்பார்த்தால் என்ன என்று தோன்றுவது இளையவர்கள் கொள்ளும் தொல்வழக்கம். உன் இளையவர்கள் மீது உன் சொல் எவ்வாறு நின்றிருக்கிறதென்று பார்க்கிறேன்” என்றான். “எண்ணிக்கொள்க, நான் பிழைபொறுப்பவன்! ஆனால் என் தலைவரிடம் பிழை இயற்றுபவர் எவரும் எனக்கு எதிரியே.”
மேலிருந்து நேமிதரன் படிகளில் இறங்கிவந்து “தங்களை அரசர் அழைக்கிறார், மூத்தவரே” என்றான். சாத்யகி “மைந்தரை நான் அழைத்துவரலாமா?” என்றான். “தேர் வந்த ஒலியை கேட்டுத்தான் தங்களை மேலே வரச்சொன்னார்” என்று நேமிதரன் சொன்னான். சாத்யகி “வருக!” என்றபடி படிகளில் ஏறி அவனைத் தொடர்ந்து சென்றான். அவன் மைந்தர் ஓசையற்ற காலடிகளுடன் அவனுக்குப் பின்னால் சென்றனர். சித்ரனும் சித்ராங்கதனும் ஏதோ பேசிக்கொள்வதாகத் தோன்ற சாத்யகி சினத்துடன் திரும்பிப்பார்த்தான். அவர்கள் முகங்களில் சொல்லின் ஒளி இருந்தது. ஆனால் உதடுகள் அசைவற்றிருந்தன. அவன் கூர்ந்து நோக்கிவிட்டு திரும்பிக்கொண்டான்.
சாத்யகி மைந்தர்களுடன் இளைய யாதவரின் அறை வாயிலில் நின்றான். நேமிதரன் “நான் அறிவித்து வருகிறேன், மூத்தவரே” என்றபின் கதவைத் திறந்து உள்ளே சென்றான். சாத்யகி தன் மைந்தர்களிடம் “நிரைவகுத்து நில்லுங்கள். மூத்தவர் முதலில். இளையோர் பின்னர். ஆடைகள் நெகிழ்ந்திருக்கலாகாது. குழல் கற்றைகள் முகத்திலோ தோளிலோ சரிந்திருக்கலாகாது. தலைவணங்குகையில் ஆடையும் குழலும் கலையக்கூடாது” என்றான். அவர்கள் ஒருவர் பின் ஒருவராக உடலை இறுக்கி நின்று கைகளை கூப்பிக்கொண்டனர். சாத்யகி தன் ஆடையை சீர்படுத்தி பிசிறிய குழலை கொண்டைக்குள் செருகிக்கொண்டான்.
கதவு ஓசையுடன் திறந்து இளைய யாதவர் வெளியே வந்தார். அதை எதிர்பாராத சாத்யகி திகைத்து ஓசையின்றி வாயை அசைத்தான். இளைய யாதவர் அவனை நோக்காமல் முன்னால் சென்று பதின்மரில் இளையவனாகிய சினியை அணுகி அவன் தோளில் கைவைத்து தன் உடல் நோக்கி இழுத்து அணைத்துக்கொண்டார். “இவன்தான் இளையவன் இல்லையா? இவன் பெயரென்ன? சினிதானே? உமது மூதாதையின் பெயர் அல்லவா?” என்றபின் அசங்கனிடம் “உன்னை இளமைந்தனாக பார்த்திருக்கிறேன்” என்றார். சாத்யகி “உங்கள் கைபடும் பேறு இவர்களுக்கு உள்ளது” என்றான்.
இளைய யாதவர் சாத்யகியிடம் “அனைவரும் ஒரே முகம் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் மண் நிகழ உமக்கு வாய்ப்பு அமைந்திருக்கிறது, யாதவரே” என்றார். சாத்யகி தலைவணங்கி “எல்லாம் தங்கள் அருள்” என்றான். ஆனால் அவன் குரல் மேலெழவில்லை. அவனுடைய இடது கால் துடித்துக்கொண்டிருந்தது. பிற மைந்தர்கள் அந்த எதிர்பாரா நிகழ்வால் குழம்பி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இளைய யாதவர் சந்திரபானுவின் குடுமியைப்பற்றி இழுத்து ஆட்டுக்கல் குழவிபோல அவன் தலையை சுழற்றி “இவன் என்ன வில்பயில்கிறானா?” என்றார். அசங்கன் “அனைவரும் வில்லவர்கள்தான், அரசே” என்றான்.
இளைய யாதவர் “நாளை காலை பயிற்சிக்களத்திற்கு வருக! அங்கு மெய்யாகவே உங்களுக்கு எவ்வளவு பயிற்சியிருக்கிறதென்று பார்க்கிறேன்” என்றார். சாத்யகி “எங்கள் நகரில் பெரிய ஆசிரியர்கள் எவரும் இல்லை. ஷத்ரியர்கள் ரிஷபவனத்தில் வந்து தங்கி பயிற்றுவிப்பதில்லை. யாதவர்கள் தங்களுக்குத் தெரிந்தவரை கற்றுக்கொடுத்துதான் அங்கு வில்லவர்கள் உருவாகிறார்கள். தாங்கள் அறியாதது அல்ல” என்றான். இளைய யாதவர் நகைத்து “ஆம், வளைதடிகள்போல யாதவர்கள் அம்பு விடுகிறார்கள், சென்ற அம்பு திரும்பி அவர்களிடமே வந்துவிடுகிறது என்றொரு சூதன் பாடக்கேட்டேன்” என்றபின் “உள்ளே வருக!” என்று மைந்தர்களிடம் சொல்லி கதவைத்திறந்து உள்ளே சென்றார்.
நேமிதரன் தலைவணங்கி வெளியே செல்ல இளைய யாதவர் இரு மைந்தர்களின் தோளில் கைவைத்து தள்ளியபடி நடந்துசென்று மஞ்சத்தில் அமர்ந்தார். சந்திரபானுவை கைபற்றி இழுத்து தன்னருகே அமரவைத்தார். சினியை தன் மடியில் அமர்த்தி அவன் தோள்களை வருடியபடி “இவன் தோள்கள் இன்னும் திரளவில்லை. பயிற்சி குறைவென்று எண்ணுகிறேன்” என்றார். “ஆம், மூவருக்கு வில்லைவிட நூல் பயில்வதில்தான் ஆர்வமிகுதி. அன்றாடப் பயிற்சிகளுக்குப் பின்னர் நூல் பயில ஓடிவிடுகிறார்கள்” என்று சாத்யகி சொன்னான். “அதுவும் நன்று. ஓரிருவர் நூல்களைக் கற்பது யாதவர்களுக்கு பொதுவாக நன்மை பயக்கும்” என்று இளைய யாதவர் உரக்க நகைத்து “செய்வனவற்றின்மேல் ஐயம்கொள்ள கல்வி மிக இன்றியமையாதது” என்றார். சாத்யகி மெலிதாக புன்னகைத்தான்.
இளைய யாதவர் அமர்க என்று பீடங்களைக் காட்ட அசங்கன் தந்தையை பார்த்தான். “நீங்கள் என் சிறுமைந்தர். இது அரசவை அல்ல, உங்கள் மூதாதையின் மடி. விரும்பியவண்ணம் அமரவும் விளையாடவும் உங்களுக்கு உரிமையுள்ள இடம்” என்று இளைய யாதவர் சொன்னார். சபரன் அமர்ந்துகொண்டு “அன்னை அப்படித்தான் சொன்னார்” என்றான். இளைய யாதவர் “தந்தை வேறுவகையில் சொல்லியிருப்பார் இல்லையா?” என்றார். அசங்கன் புன்னகைத்தான். சாந்தன் “அன்னை சொன்னார்கள் நாங்கள் உங்களை எங்கள் களித்தோழராகக் கருதலாம் என்று” என்றான். முக்தன் “ஆனால் பெண்களிடம் ஆடுவதில் உங்களை முன்னேற்பாகக் கொள்ளவேண்டாம் என்று முதுசேடி சொன்னாள்” என்றான்.
இளைய யாதவர் சிரிக்க சாத்யகி தவிப்புடன் மைந்தர்களை மாறி மாறி நோக்கினான். அவர்கள் அவனை முழுமையாக மறந்துவிட்டவர்கள் போலிருந்தனர். “நீர் துவாரகைக்கு வந்தபிறகு அவ்வப்போதுதான் ஊர் திரும்பியிருக்கிறீர். நான்கு துணைவியரில் பத்து மைந்தர் என்பது வியப்பளிக்கிறது” என்றார் இளைய யாதவர். மைந்தர்கள் உரக்க சிரித்தனர். சாத்யகி சிரிப்பதுபோல் உதட்டை வளைத்தபின் அசங்கனை கடிந்து நோக்கினான். ஆனால் அவன் சாத்யகியின் விழிகளை சந்திக்கவில்லை.
“சத்யகர் என்ன சொல்கிறார்? யாதவப்படைக்கூட்டில் இணைய உளம்கொண்டிருக்கிறாரா?” என்று சாத்யகியிடம் இளைய யாதவர் கேட்டார். சாத்யகி “தாங்கள் அறிவீர்கள் அரசே, அவர் வழக்கமான யாதவ மூத்தவர் மட்டுமே” என்றான். “ஆகவே ரிஷபவனத்தின் விருஷ்ணிகுலத்தவர் கௌரவர்களுடன் சேர்ந்துள்ளனர் அல்லவா?” என்றார் இளைய யாதவர். “ஆம், ஆகவேதான் என் மைந்தரை நான் இங்கே அழைத்துவந்தேன். என் சொல் முழுதாளும் படை இன்று இப்பதின்மரே” என்றான் சாத்யகி.
இளைய யாதவர் “நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?” என மைந்தரிடம் கேட்டார். அசங்கன் “முதுதந்தை என்னிடம் சொன்னார் யாதவர் என்பதே நமது அடையாளம், யாதவர்கள் கௌரவர்களிடமிருந்தால் நாமும் அங்குதான் செல்ல வேண்டும் என்று. நான் அவரிடம் யாதவர் என்பது என் அடையாளம் அல்ல, யுயுதானரின் மைந்தர் என்பது மட்டுமே என் அடையாளம். பிற எல்லாம் அவர் அளிப்பதே என்றேன்” என்றான்.
“உமது அன்னை என்ன சொன்னார்கள்?” என்று இளைய யாதவர் சாத்யகியிடம் கேட்டார். “காசிநாட்டு அரசி சுதமதியை நான் மிக இளமையில் சந்தித்திருக்கிறேன்.” சாத்யகி “அன்னை நான் எண்ணுவதை சொல்லாமலே புரிந்துகொள்பவர். நான் நம்புவதை முற்றும் ஏற்பவர்” என்றான். அசங்கன் “யாதவர் என எவருமில்லை. ஆண்களென்றும் இப்புவியில் எவருமில்லை. ஒருவரின் ஆடிநிழல்களே அனைவரும் என்று மூதன்னை சொன்னார்” என்று சொன்னான். சந்திரபானு “அப்போது அன்னையரும் சேடியரும் உடனிருந்தனர். அவர்களும் சிரித்துக்கொண்டே ஆம் ஆம் என்று கூச்சலிட்டனர்” என்றான். அவர்கள் அனைவரும் ஒரேகுரலில் பேசத்தொடங்க சாத்யகி “அமைதி!” என கடிந்தான். அவர்கள் ஒன்றாக அமைதியாயினர்.
இளைய யாதவர் அசங்கனிடம் “இந்தப் போர் எதன்பொருட்டென்று உங்களுக்கு தெரியுமா?” என்று கேட்டார். அசங்கன் “இது குடிப்போர். முறைப்படி இந்திரப்பிரஸ்தத்திற்கும் அஸ்தினபுரிக்கும் உரியவர் யுதிஷ்டிரர். அவ்வுரிமை மறுக்கப்படுவதனால் படைகொண்டெழுகிறார். அவருக்கு உறுதுணையாக தாங்கள் இருக்கிறீர்கள். தங்கள் ஏவலரென நாங்கள் வந்திருக்கிறோம்” என்றான். இளைய யாதவர் “அல்ல, இப்போர் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் தத்துவத்திற்கும் ஒவ்வொன்றையும் பிரித்து நிறுத்தும் சடங்குகளுக்குமான முரண். இதில் ஒருங்கிணைக்கும் தத்துவம் நின்றாகவேண்டும். ஒருங்கிணைவினூடாகவே இனி பாரதவர்ஷம் முன்னகர முடியும்” என்றார்.
தங்களிடம் பெரிய செய்தியொன்று பேசப்படுகையில் இளையவர் கொள்ளும் கூர்மை அவர்களின் முகங்களில் தோன்றியது. இளைய யாதவர் சொன்னார் “நம் மக்கள் இங்கு நலம்கொண்டு வாழவேண்டுமெனில் பிறிதொரு வழியில்லை. எவரும் எனக்காக படைக்கலம் எடுக்கவேண்டியதில்லை. இன்னமும் இங்கு பிறந்து வராத உங்கள் மைந்தர்களுக்காக, அவர்களின் நூறு தலைமுறையினருக்காக படைக்கலமெடுங்கள்.” அசங்கன் உணர்வெழுச்சியுடன் “ஆணை” என்று தலைவணங்கினான். இளைய யாதவர் உடனே முகம் மாறி நகைத்து சாத்யகியை நோக்கி “மரபுகளையும் முறைமைச் சொற்களையும் நன்கு பயின்றிருக்கிறார்கள் உம் மைந்தர்” என்றார்.
சாத்யகி பெருமிதமாகப் புன்னகைத்து “ஆம், மரபுகளையும் நெறிகளையும் அறிந்தவரே தன்னை எங்கு எவ்வாறு பொறுத்திக்கொள்ளவேண்டுமென்று தெரிந்தவர். தனது இடமென்ன, பணியென்ன என்று தெளிந்தவர். நான் இவர்களுக்கு முதன்மையாக சொல்லிக்கொடுத்திருப்பதே முறைமைகளைத்தான்” என்றான். இளைய யாதவர் மைந்தரிடம் “இன்று நாம் இணைந்து உணவுண்போம். நான் புலால் உண்டு நெடுநாட்களாகிறது. இன்றுதான் நகர்நுழைந்திருக்கிறேன். உச்சிப்பொழுதுக்கு நல்லூண் வேண்டுமென்று அடுமனையாளிடம் சொன்னேன்” என்றார். சினி உரக்க “நாங்களும் ஊரிலிருந்து கிளம்பியபின் ஊன் உண்ணவில்லை” என்றான். “இன்று உண்போம்” என்று சொல்லி அவன் தோளைத் தட்டி இளைய யாதவர் நகைத்தார். சினியை பற்றித்தூக்கி தன் தோள்மேல் ஏற்றிக்கொண்டு “செல்வோம்” என்றார். ஊஊ என கூவியபடி அவர் ஓட மேலிருந்து சினி கூச்சலிட்டு நகைத்தான். மைந்தர்கள் கலைந்து கூச்சலிட்டபடியும் சிரித்து ஆர்த்தபடியும் அவரைத் தொடர்ந்து ஓடினர்.