அச்சுபிழை, கடிதங்கள்

அன்புள்ள எழுத்தாளருக்கு,
தங்களது பதிவு கண்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியுமடைந்தேன்.. ஏனெனில் தங்களது நோக்கிலேயே நானும் சிந்தித்திருக்கிறேன் என்ற ஆச்சரியம். அதேபோல், எனது கடிதத்திற்கு தங்களது பதிவில் முக்கியத்துவம் கொடுத்தமைக்கு மகிழ்ச்சி.
தங்களைப் பற்றி ஈழத்தில் உருவாக்கப்பட்டுள்ள தப்பபிப்பிராயம் நீங்கவேண்டுமென்பதற்காக நான் ஏற்கனவே குறிப்பிட்ட “செங்கதிர்” சிற்றிதழில் தங்களது கடிதத்தைப் பிரசுரிக்கத் தீர்மானித்து, ஏற்கனவே அதன் ஆசிரியருக்கு ஒரு குறிப்புடன் அனுப்பி வைத்துவிட்டேன்.இது நடந்து இரண்டாவது நாள் தங்கள் பதிவு! தங்களது பதிவு கண்டதுமே ஆசிரியருக்கு தொலைபேசியில் அழைத்துச் சொன்னேன். அவருக்கும் ஆச்சரியம். இது எப்படிச் சாத்தியம் என்றார்.. எனக்கும் சொல்லத் தெரியவில்லை.
“அச்சுப் பிழை’ கட்டுரை வாசித்துச் சிரித்து மகிழ்ந்தேன். இங்கே சிற்றேடுகளல்ல,. தேசிய நாளிதழ்கள்கூட பிழைகளுடன்தான் வெளிவருகின்றன. அவை அச்சுப் பிழைகளா அல்லது தமிழ் தெரியாதோரின் தத்துப் பித்துத்தனமா தெரியவில்லை. புதிதாய் வந்துள்ள FM ரேடியோக்கள் செய்யும் அட்டூழியங்கள் தாங்க முடியவில்லை. இந்த FM ரேடியோக்கள் செய்யும் கூத்துகள் நல்லதொரு நகைச்சுவைக்கட்டுரைக்கு (பல கட்டுரைகளுக்கு) வழிவகுக்கும். முடிந்தால் இதையும் பாருங்கள்
நன்றி
எஸ்.எழில்வேந்தன்
அன்புள்ள எழில்வேந்தன்
தமிழில் அச்சுப்பிழை என்பது ஒரு பெரிய சமூக இயக்கம். ஒன்று தமிழ் கல்வியின் குறைவு. இன்னொன்று தமிழ் மொழியிலேயே அப்படி பல சிக்கல்கள் உள்ளன. இடைவெளி விடுவது ஒற்றுப்புள்ளி வைப்பது இதில் எல்லாம் ஆளுக்கொரு நிலைபாடு உண்டு. நம்முடைய உரைநடைக்கு உண்மையில் இலக்கணமே இல்லை. பத்தொன்பதாம் நூற்றண்டில் ஆறுமுக நாவலரும் வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியாரும் பாட நூல்களை எழுதியபோது செய்யுள் இலக்கணத்தை ஒட்டி உருவாக்கிய இலக்கணமே உரைநடைக்கும் புழங்கிவருகிறது. அதன் பின்னர் மொழிபெயர்ப்பு மூலமும் படைப்பிலக்கியம் மூலமும் தமிழ் தானாகவே வளர்ந்து அவ்ருகிறது. அதை இலக்கணம் பின் தொடர முடிவதில்லை. ஆகவே பிழைதிருத்துவதென்பது இங்கே பெரிய வேலை. நவீன இலக்கிய நூல்களை இன்னொரு நவீன இலக்கியவாதி மட்டுமே பிழை திருத்த வேண்டும். பிறர் — குறிப்பாக தமிழாசிரியர்கள் — திருத்தினால் ஒரே பிழையைத்தான் கண்டுபிடிப்பார்கள். அந்த ஒட்டுமொத்த நூலுமே ஒரு பெரிய பிழை என்று!
முன்பு ஒரு நம்பூதிரி தலை மொட்டை அடிக்கும்போது செலவைக் குறைக்க ஒரு வ்ழி கண்டுபிடித்தாராம். ஒரு கீறலுக்கு காலணா குறைப்பது என்று சவரக்காரரிடம் பேசி உறுதிசெய்தார். கீறல்கள் ஒன்றுக்குமேல் ஒன்றாக விழ விழ நம்பூதிரிக்கு ஆனந்தம். ஒரு கட்டத்தில் நம்பூதிரிக்கு பணம் திருப்பிக்க்கிடைக்கும் என்ற நிலை. கடையில் ஒரு பெரிய கீறல். வலியுடன் நம்பூதிரி கூவினார், என்னடா செய்கிறாய்? சவரக்காரர் சொன்னார் ”தம்புரானே, எல்லா கீறலையும் ஒன்றாகச்சேர்த்து ஒரே கீறலாக ஆக்குகிறேன்
இதைத்தான் நம் பண்டிதர்கள் செய்கிறார்கள். நவீன இலக்கியத்தையே நிராகரிக்கிறார்கள். அவர்கள் இலக்கணம் உருவாக்கினால் பிழைதிருத்துபவர்களும் உருவாவார்கள்.
ஜெ
அச்சுப்பிழை கட்டுரையின் தனித்தன்மை என்னவென்றால் நாம் வாசித்து மகிழ்ந்த பல நல்ல அச்சுப்பிழைகளை நாம் நினைவுகூர்ந்து சிரிக்க முடிகிறது என்பதுதான். ஆங்கிலத்தில் அச்சுப்பிழைகள் மூலம் உருவாகும் குளறுபடிகளுக்கு அளவே கிடையாது. என்னுடைய பெயரில் எப்போதுமே புள்ளி விட்டுப்போய்விடும். சிரங்கெல்லாம் எனக்குக் கிடையாது என்று நான் சொல்வதுண்டு. பிழைகளை திருத்துவதற்கு ஒரு நல்ல உதாரணம் முன்பு தினத்தந்தி இதழில் பாலு முனி என்ற நடிகரைப்பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. பால் முனியேதான்! முனி என்று வந்ததனால் பாலு என்றாக்கிவிட்டார். பாலு முனியப்பன் என்று மாற்றாதது நம் அதிருஷ்டம்
சி.ரங்கநாதன்’கோவை
முந்தைய கட்டுரை‘இயல்’ விருதின் மரணம்
அடுத்த கட்டுரைஇயல் விருது சில விவாதங்கள்