கைப்பை – மேலும் கடிதங்கள்

sun

 

ஆடம்பர கைப்பைகளின் வாழ்க்கை

அன்புள்ள திரு.ஜெயமோகன் அண்ணாவுக்கு,

 

உங்கள் கட்டுரைக்குப் பின் “ரத்னா பாயின் ஆங்கிலத்தை” மீள் வாசித்தேன்.   முற்றிலும் மற்றொரு கோணத்தில் என் கருதுகோள்கள் மாறிப்போயின.

 

மீரா பாய் பற்றிய ஒரு முக்கிய சித்திரத்தை சுரா ஏற்படுத்தி இருப்பதை இப்போதுதான் உணர்கிறேன். தெருவில் அவருடைய மகளுடன் நடக்கும் பாவனையிலும், மக்களின் காதற் கடிதங்களை மறைவில் படித்துப் புளங்காகிதம் அடைவதிலும் சுரா அவர்கள் ஏற்படுத்தும் சித்திரம், ரத்னா பாயை பெரும்பாசாங்குக்காரி என்றளவில்  புரிந்து வைத்திருந்த பாத்திரத்தில் இருந்து அவளை முற்றிலும் வேறு படிநிலையில் வைத்துவிட்டது.

 

ரத்னா பாயின் இளம் மனதில் மீரா பாய் ஏற்றி வைக்கும் கர்வ பாரம் மிக அதிகம். கர்வத்தின் விதை முளைத்து, பாசாங்கு தன்  கிளைகளைப் பரப்பும்போது, செல்வத்தின் பசிய இலைகள் தன்னிடம் இல்லாதிருப்பதை மறைக்க அவ்விருட்சம், வாழ்தலுக்காக தான் சேர்த்திருந்த தண்ணீரைத் தன் அணுக்கர்களுக்கு தெளித்து அவர்களை ஏமாற்றுவதாய் நினைத்து, தன் உருக்குலைதலின் வேதனையைத்  தற்பெருமை எனும் பொய் பாவனையில் மறைத்துக்கொள்ள முயல்கிறது.

 

தன் தாயிடம் மிகத் தாமதமாக அவள் கூறும் ” எனது திருமணத்தை ஒரு சமூகப் பிரக்ஞையாக்கிவிட்டாய். இது நீ எனக்கு இழைத்த மாபெரும் தீங்கு” அந்த இடத்தில், பெரும் கையறு நிலையை அவள் அடைகிறாள். மனம் சமநிலையிழந்து தவிக்கும் அவ்விடத்தில் கானல் நீரின் கரையை அவள் அடைகிறாள். ஜான்சனுடனான திருமணம். லுங்கி கட்டிய டாக்டர் என்றாலும், குழந்தைகளிடம் அவன் காட்டிய அப்பரிவுக்காக மட்டுமே அவனை அவள் மணம் செய்திருக்கக்கூடும். அவள் அடிமனத்தில் எழுந்த தூயதொரு ஆசையை மறைக்காமல் அவள் வெளிப்படுத்திய தருணம் அது மட்டுமே.

 

ரத்னா பாய், தன் குழந்தைகளிடமிருந்து விலகி இருப்பதை நான் இப்படியும் புரிந்துகொள்கிறேன். தன் தாய் செய்த தவறை அவள் தன் குழந்தைகளுக்குச் செய்ய விரும்பவில்லை. கர்வத்தின் சுமையை அவர்களின் மனதில் ஏற்ற விரும்பவில்லை. மில்டனும் ரோஸியும் மேரியும் தன் பாசாங்குத்தனத்தில் சிக்கிக்கொள்வதை அவள் விரும்பவில்லை. அவர்களிடமிருந்து அவளே தனிமைப் பட்டுக்கொள்கிறாள்.

 

என் மீள்வாசிப்பு ரத்னா பாயின் மேல் பரிதாபத்தை இப்போது ஏற்படுத்துகிறது. முதல் வாசிப்பின் கோபம் இப்போது இல்லை. ஒவ்வொரு கட்டத்திலும் பாசாங்கின் பொற்சிலுவையை அவள் நிமிர்ந்து நின்றே ஏற்கிறாள்.

 

ஆழ்மனதின் வலிகள் அலைக்கழித்தாலும், அவள் சுமப்பது தங்கச்சிலுவை என்றே ஆசுவாசம் அடைகிறாள்.

 

சூப்பர் சிங்கர் அம்மாக்கள், ஐஐடி நீட் தந்தைகள், ஸ்டேட் பர்ஸ்ட் பெற்றோர்கள் என குழந்தைகளைக்  குதிரைகளாக வளர்க்கும் பெற்றோர்கள் பெரும்பாலும் இல்லாத 1976ம் வருடமே இக்கதையை எழுதிய சுரா அவர்கள் உண்மையில்  தீர்க்கதரிசி.

 

அன்புடன்

சங்கர் கிருஷ்ணன்

 

அன்புள்ள ஜெ

 

ரத்னாபாயின் ஆங்கிலம் கதையை நான் இப்போதுதான் வாசித்தேன். பலவகையான வாசிப்புகளுக்கு இடம் அளிக்கும் அரிய கதை. ஏறத்தாழ இதே ஓன்ற ஒரு கதையை சு வேணுகோபால் எழுதியிருப்பார். இந்த அளவுக்கு நாசூக்காக இல்லை என்றாலும் அது பொட்டில் அறைவதுபோல வலுவான கதை. அதிலும் எப்படி வெறும்பாவலாக்களாக நம் ஆன்கள் முற்போக்குப்பெண்ணைஅணுகுகிறார்காள் என்பதை காட்டியிருப்பார்

 

செந்தில்

 

முந்தைய கட்டுரைஆகாயத்தில் ஒரு பறவை — போரும் அமைதியும் குறித்து…
அடுத்த கட்டுரைகண்டராதித்தன் கவிதைகள் :கடிதங்கள்