கால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு !

WRITER KATHYANA AMARASINGHA

 ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’ ஆய்வு நூல் பற்றிய ஒரு குறிப்பு

 – கத்யானா அமரசிங்ஹ

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

பருத்தித்துறையிலிருந்து யாழ்ப்பாண நகரத்துக்குச் சென்ற பயணத்தின் போது நாங்கள் கண்ட அந்தப் பழைய அரண்மையானது, ‘மந்திரி மனை’ என அழைக்கப்படுகிறது. தென்னிந்திய வீடுகளின் கட்டடக்கலையும், ஐரோப்பிய வீடுகளின் கட்டடக்கலையும் ஒருங்கே அமைந்திருந்த அந்த அரண்மனையை முதன்முதலாகக் கண்டபோது, இலங்கையின் தென்பகுதியில் காணக்கூடிய மழையும், வெயிலும், காலமும் பொலிவிழக்கச் செய்திருக்கும் பழங்கால, பாழடைந்த ‘வளவ்வ’ எனப்படும் பாரம்பரிய வீடுகளை அது நினைவுபடுத்திற்று. யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் அமைந்திருக்கும் அந்த அரண்மனையானது, போர்த்துக்கேயர்களின் வருகையோடு ஆரம்பித்த காலனித்துவ யுகத்தில் யாழ்ப்பாணத்தில் வசித்த மந்திரியொருவரின் இல்லமாக இருந்திருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. அவ்வாறே யாழ்ப்பாணத்தை போர்த்துக்கேயர்கள் கைப்பற்ற முன்பு இம் மந்திரி மனை அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் யாழ்ப்பாண மன்னரொருவரின் அரண்மனையும் இருந்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது.

முதன்முறையாக ‘மந்திரி மனை’யைக் கண்ட எனது உள்ளத்தில் யாழ்ப்பாண வரலாறு குறித்த பல தரப்பட்ட எண்ணங்கள் கேள்வியெழுப்பின. எனினும், பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கே இருந்திருக்கக் கூடிய தமிழ் மன்னரொருவரின் ராஜதானியைக் குறித்து கற்பனை செய்து பார்ப்பதைத் தவிர, அதைக் குறித்து மேலதிக விபரங்களைத் தேடிப் பெற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பில்லை என்பதனால் அந்தக் கற்பனைகளும் கூட தோன்றிய இடத்திலேயே மரித்து விடவும் வாய்ப்பிருந்தது. அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் கண்டி ராஜதானிகள் குறித்து நாங்கள் பலதரப்பட்ட வரலாறுகளைப் படித்திருந்த போதிலும், ஆயிரக்கணக்கான வருடங்கள் யாழ்ப்பாணத்தில் நிலவியிருந்த ராஜதானிகளின் அமைவிடங்கள் மற்றும் வரலாறு குறித்த விரிவான குறிப்பொன்றை எங்கிருந்து தேடிப் படிப்பேன் என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

எனினும் அதற்கு சில வாரங்களின் பின்னர், ‘நல்லூர் ராஜதானி நகர அமைப்பு’’ எனும் ஆய்வு நூலொன்று எனக்குக் கிட்டியதானது, கோடையில் துவண்டிருக்கும் ஒருவர் மீது அகாலத்தில் பெய்த மழை போன்றிருந்தது. மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கட்டடவியல்பட்டதாரியும், தமிழ் எழுத்தாளருமான நவரத்தினம் கிரிதரன் (வ.ந.கிரிதரன்) எழுதிய இந்த ஆய்வு நூலானது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த  யாழ்ப்பாண ராஜதானி நகர அமைப்பு  குறித்து எழுதப்பட்ட முதல் அறிவியல் ரீதியான ஆய்வு நூலாகக் கருதப்படுகிறது. தமிழ் மொழியில் எழுதப்பட்ட அந் நூலானது, இந்திய எழுத்தாளர்களில் ஒருவரான லதா ராமகிருஷ்ணனால் ஆங்கில மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நான் வாசித்தது ஆங்கில மொழிபெயர்ப்புப் பிரதியாகும்.

SANGILI MANNAN

எனக்கு முதன்முதலாக கிரிதரன் அறிமுகமாவது ஒரு கவிஞராகவும், சிறுகதை மற்றும் நாவல்எழுத்தாளராகவும்தான். அதற்கும் மேலதிகமாக உலகம் முழுவதும் தமிழ் வாசகர்களிடையே பிரபலமான வலைத்தளமாகவுள்ள ‘பதிவுகள்’ இணைய இதழாசிரியர் அவர். ஆயிரக்கணக்கான வருடங்களாக யாழ்ப்பாணத்தில் திகழ்ந்த ராஜதானிகளின் வரலாறுகள் குறித்தும், அதன் இறுதி ராஜதானியாகக் கருதப்படும் நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு  குறித்தும் மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை, பல வருடங்கள் பாடுபட்டு ஆய்வுகள் செய்து அவர் எழுதியிருக்கும் இச் சிறந்த ஆய்வு நூலிலிருந்து அறிந்து கொண்டேன்.

“சிறு பராயத்திலிருந்து தென்னிந்திய வரலாற்று நாவல்களை வாசிக்க நேர்ந்தபோதும், அனுராதபுரம் போன்ற இதிகாசப் பழமை வாய்ந்த ராஜதானிகள் குறித்த விபரங்களை அறியக் கிடைத்த போதும், அக் காலத்தில் இலங்கையின் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்த ராஜதானிகள் எவ்வாறிருந்திருக்கும் என எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பேன். அத்தோடு, நான் பாடசாலைக்குச் செல்லும் காலத்தில், இற்றைக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலிருந்த நல்லூர் ராஜதானியைக் குறித்து தமிழ் எழுத்தாளர் ஒருவர் எழுதிய நந்திக்கடல் எனும் நாவலை வாசித்ததுவும் நினைவிருக்கிறது.”

எனினும் தொல்லியல் ஆய்வுத் துறை  மூலம், இலங்கையிலிருந்த சிங்கள ராஜதானிகள் குறித்து விரிவான ஆய்வுகள் செய்யப்பட்டிருப்பதோடு வடக்கின் தமிழ் ராஜதானிகள் குறித்த போதிய ஆய்வுகள் செய்யப்படவில்லை என்பது அவருக்கு வளரும்பருவத்தில் தெளிவாகிறது. அது மாத்திரமல்லாது, அக் காலகட்டத்தில் வடக்கிலிருந்த தொல்லியல் பெறுமதி வாய்ந்த ஸ்தலங்கள் சரியான முறையில் பாதுகாக்கப்பட்டிருக்கவுமில்லை.

“அது மாத்திரமல்ல. இலங்கை தமிழ் மக்கள் வரலாறு குறித்து முறையான ஆய்வு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதுவும் எனக்குத் தெளிவானது. சிங்கள மக்களுக்கு வரலாற்று நூலாக மகாவம்சம் எனும் தொகுப்பாவது இருக்கிறது. தமிழ் மக்கள் தமது பழங்காலப் பெருமைகளை அதிகம் கதைத்தபோதிலும் கூட, அவர்களுக்கென இருக்கும் ஒரே வரலாற்றுக் கிரந்தம் ‘யாழ்ப்பாண வைபவ மாலை’ என்பது புரிந்தது. எனினும் அதுவும் எழுதப்பட்டிருந்தது இற்றைக்கு இருநூறு, முன்னூறு வருடங்களுக்கு முன்னர்தான். அடுத்தது, அனுராதபுரம், பொலன்னறுவை போன்ற ஆயிரக்கணக்கான வருடங்கள் பழமை வாய்ந்த ராஜதானிகள் குறித்து பல ஆய்வுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், இற்றைக்கு ஐநூறு வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்திலிருந்த நல்லூர் ராஜதானி நகர அமைப்பு  எவ்வாறிருந்தது என்பது எமக்குத் தெரியவில்லையே எனவும் எனக்குத் தோன்றியது.”

WRITER V.N.GIRITHARAN

யாழ்ப்பாணத்தில் பிறந்து, அங்கு பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த நவரத்னம் கிரிதரன், பட்டப்படிப்புக்காகஎண்பதுகளின் ஆரம்பத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டடக் கலைத் துறையில் பிரவேசிக்கிறார். மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் கட்டடக் கலை பிரிவானது அவரது நல்லூர் ராஜதானி கனவை பெரு விருட்சமாக செழித்து வளர்ந்திட உரமிட்டது.

“எமது விரிவுரைகளின் போது ஒரு தடவை பேராசிரியர் நிமல் த சில்வா (Nimal De Silva) அவர்கள், அனுராதபுர ராஜதானி குறித்தும், அங்கு ராஜதானி நகர அமைப்பு  எவ்வாறிருந்தது என்பது குறித்து பேராசிரியர் ரோலண்ட் சில்வா நடத்திய ஆய்வு குறித்தும் விவரித்தார். அனுராதபுர நகரமானது ஸ்தூப வளையங்கள்  இரண்டு மற்றும் நகரத்தின் மத்தியிலிருந்த வியாபார மத்திய நிலையத்தோடு திட்டமிடப்பட்ட ஒன்றெனவும் கூறக் கேட்டபோதுதான் எனக்கு அந்த எண்ணம் திடீரென உதித்தது. அக் கணத்தில் பேரானந்தத்தை உணர்ந்தேன். நல்லூர் இராசதானியைக் குறித்து நான் சிந்திக்கத் தலைப்பட்டது அப்போதிலிருந்துதான்”

அப்போது அவர்களுக்கு பட்டப்படிப்புக்கான ஆய்வுக்காக வரலாற்றோடு சம்பந்தப்பட்ட கட்டடக் கலை தொடர்பான தலைப்பொன்றின் கீழ்  ஆராய்ச்சிக் கட்டுரையொன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

“அக் காலத்தில் என்னுடனிருந்த சிரேஷ்ட மாணவரான தனபாலசிங்கம், எனக்கு முன்பே அதைக் குறித்து எழுதத் திட்டமிட்டிருந்ததாகக் கேள்விப்பட்டேன். எனினும் போதியளவு தகவல்களும், சாட்சிகளும் இல்லாத காரணத்தால் அவர் அந்த எண்ணத்தைக் கை விட்டதாகவும் அறிந்து கொள்ளக் கிடைத்தது. எனினும் இதைக் குறித்துத் தேடிப் பார்க்க அவர் எனக்கு ஊக்கமளித்தார்” என கிரிதரன் கூறுகிறார்.

அவர் கூறும் விதத்தில், அந்த ஆய்வை போதியளவு தொல்லியல் சான்றுகள் இல்லாமலேயே செய்ய நேர்ந்திருக்கிறது. போர்த்துக்கேயர்களின் ஆக்கிரமிப்பின் பின்னர் கடந்த ஐநூறு வருடங்களுக்குள் யாழ்ப்பாண ராஜதானியின் நகர அமைப்பானது முற்றுமுழுதாக மாறியிருக்கிறது. எனினும் அண்மைக்கால ஆய்வாளர்களால் யாழ்ப்பாண வரலாறு குறித்து எழுதப்பட்டிருக்கும் தொகுப்புக்கள் அவருக்கு பெருமளவு உதவி புரிந்திருக்கின்றன. அவற்றுள் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ள வரலாற்று ஆய்வு நூல்கள் பலவற்றையும் வாசித்து பரிசீலித்துப் பார்த்ததில் அவருக்கு முதலியார் ராசநாயகம் எழுதிய ‘The Ancient Jaffna’ எனும் தொகுப்பை தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்ள முடியுமாக இருந்திருக்கிறது.

கிரிதரனின் ஆய்வு நூலை வாசித்துக் கொண்டிருக்கும்போது நானும் கூட அவர் எனக்கு அனுப்பி வைத்திருந்த அந்தத் தொகுப்பின் பி.டி.எஃப் பிரதியை வாசிக்கத் தொடங்கினேன். அந்தத் தொகுப்பிலும், ஏனைய வரலாற்று நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நல்லூர் ராஜதானி உருவாகும் வரைக்கும், யாழ்ப்பாணக் குடா நாட்டில் நிலவி வந்திருக்கும் ராஜதானிகள் குறித்த வரலாற்றை இவ்வாறு விவரிக்க முடியும்.MANDHIRI MANAI 2

கிறிஸ்துவ வருடம் பதினைந்தாம் நூற்றாண்டளவில் இலங்கையின் வடக்குப் பிரதேசத்தில் நாக மன்னர்களின் ராஜதானியொன்று இருந்திருக்கிறது என்பதை அனுமானிக்க முடிவதோடு அதன் தலைநகரம் இப்போது யாழ்ப்பாணத்தில் ‘கந்தரோடை’ எனத் தமிழிலும் ‘கதுருகொட’ என சிங்களத்திலும் அழைக்கப்படும் பிரதேசத்தில் அமைந்திருந்ததை அனுமானிக்க முடிகிறது. இந்த நாக ராஜதானியானது, கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரைக்கும் யாழ்ப்பாணத்தில் நிலவி வந்திருக்கிறது. இற்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கும், யாழ்ப்பாண குடா நாட்டுக்கும் இடையே நிகழ்ந்த பாரியளவிலான தொடர்பாடல்களின் காரணமாகஇலங்கை அடையாளத்துடன் கூடிய தமிழ் குடியிருப்புக்கள் வடக்கில் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவின் சோழ மன்னரொருவர், நாக இளவரசியொருவரை சுயம்வரம் செய்திருக்கிறார்.சோழ மற்றும் நாக வம்சத்தின் இத் திருமணத்தினால் அத் தொடர்பாடல் மேலும் பலம் பெற்றிருக்கக் கூடும் என எண்ணிப் பார்க்க முடிவதோடு அப்போது இலங்கையில் வாழ்ந்து வந்த நாக, யட்ச, காலிங்க போன்ற இனங்களுடன் அத் தமிழ்மக்கள் ஒன்றாகக் கலந்து இலங்கைக்கே உரித்தான தமிழ் குயிருப்புக்கள் யாழ்ப்பாணத்தில் உருவாகியிருப்பதையும் எண்ணிப் பார்க்க முடிகிறது. (அது, இந்தியாவிலிருந்து வந்த விஜயன் உள்ளடங்கிய குழுவின் பரம்பரையிலிருந்து உருவானதாகக் கூறப்படும் சிங்கள இனத்தவர்கள் இந் நாட்டின் பூர்வீக இனங்களான யட்ச, நாக இனங்களோடு ஒன்றாகக் கலந்ததை ஒத்திருக்கிறது.)

அதன்பிறகு உருவாகிறது வெற்றிடமொன்று. அதாவது கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு நூற்றாண்டு வரைக்கும் யாழ்ப்பாண ராஜதானி குறித்த போதியளவு விபரங்கள் கிடைக்கப் பெறாத தெளிவற்ற கால கட்டம்.(நாக மன்னர்களின் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு தமிழ் மன்னர்களின் ஆட்சிக் காலம் தோன்றுவது அக் காலகட்டத்திலாக  இருக்கக் கூடும்.) அந்தக் காலத்திலோ அல்லது அதன் பிறகோ யாழ்ப்பாண ராஜதானியானது பருத்தித் துறையை அண்டிய சிங்கை நகரில் தோன்றியிருக்கக் கூடும் என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது. யாழ்ப்பாண ராஜதானி வரலாற்றில் ‘நல்லூர் காலம்’ தோன்றுவது அதன்பிறகுதான். அது, கி.பி.  1250 களில் சோழ இளவரசர்களில் ஒருவரான சேகராஜசேகரன் இலங்கைக்கு வருகை தந்து சேகராஜசேகர சக்கரவர்த்தி என யாழ்ப்பாணத்தில் முடிசூடப்பட்டதும் நிகழ்ந்திருக்கிறது. அவர் மூலமாக யாழ்ப்பாணத்தில் ஆரிய சக்கரவர்த்தி ராஜ வம்சம் தோன்றத்தொடங்குவதோடு சக்கரவர்த்திதனது ராஜதானியாக நல்லூரைக் களமமைத்துக் கொள்கிறார்.

நல்லூர் ராஜதானியின் அடுத்த முக்கியமான அத்தியாயம் உருவாவது கி.பி. 1450 களில் தெற்கிலிருந்து வந்த சபுமல் இளவரசன் யாழ்ப்பாணத்தை ஆண்டு கொண்டிருந்த சக்கரவர்த்தி வழித் தோன்றலான மன்னர் கனக்சிங்காரியனை தோற்கடித்து, ஸ்ரீ சங்கபோதி புனனேகபாகு எனும் பெயரில் அங்கு மன்னராக முடிசூடிய போது நிகழ்ந்திருக்கிறது. அவர் நல்லூர் கந்தஸ்வாமி கோயிலை முற்றுமுழுதாக புணர்நிர்மாணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இலங்கையின் தென்பகுதியிலிருந்து கிளம்பி, தமிழ் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்ட சபுமல் இளவரசன் குறித்து எழுதப்பட்டிருக்கும் ‘கோகில சந்தேஷய’ எனப்படும் சிங்கள சங்கக் கவிதை இலக்கியத்தின் கவிதைகள்  பலவற்றிலும் அக் காலத்தில் இருந்த நல்லூர் ராஜதானியின் பெருமை பாடப்பட்டிருப்பதாக கிரிதரன் தனது ஆய்வு நூலில் எழுதியிருக்கிறார். அது வரையில், பல தடவைகள் கேள்விப்பட்டிருக்கும்,‘கோகில சந்தேஷய’ எனப்படும் சிங்கள சங்கக் கவிதை இலக்கியத்தை நான் முதன்முதலாக தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் கவனமாக வாசிக்கத் தொடங்கியது,அக் கவிதைகளை வாசிப்பதன் மூலம் நான் வாசித்துக் கொண்டிருந்த நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பின் மீது   மிகுந்த நேச உணர்வை உள்ளத்தில் தோற்றுவித்துக் கொள்ளத்தான்.

தங்கத் தோரணங்களும் மணிகளும் தொங்கும்

அலங்கரித்த விசாலமான அரண்மணை வீற்றிருக்கும்

ஆங்காங்கே பூத்துச் செழித்திருக்கும் மலர்த் தோப்புக்களுடன்

வைஷ்ணவ எனும் கடவுள் குடியிருக்கும் யாழ் நகரை (நல்லூர் ராஜதானியை) பாருங்கள் 

இவ்வாறு உரைக்கப்பட்டிருக்கும் விதமாக அந்தக் காலத்தில் திகழ்ந்த அழகிய நல்லூர் ராஜதானியானது பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்களின் படையெடுப்பின் காரணத்தால் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டிருக்கிறது. மந்திரி மனையையும், இன்னும் சில இடிபாடுகளையும் தவிர வேறு எதுவும் அங்கு எஞ்சியிருக்கவில்லை. நல்லூர் ராஜதானியைக் குறித்த சான்றுகள் பலவும் அழிந்துபோயிருந்த அவ்வாறானதோர் இக்கட்டான நிலைமையில்தான் கிரிதரன் தனது ஆராய்ச்சியை நடத்தியிருக்கிறார். எனினும் அவர் தனது முயற்சியைக் கைவிடத் தயாராகவிருக்கவில்லை.

பௌத்த மற்றும் இந்து கட்டடக் கலை மற்றும் நகர அமைப்புக்கள் குறித்து எழுதப்பட்ட புத்தகங்கள், மற்றும் போர்த்துக்கேயர்களால் எழுதப்பட்ட குறிப்புக்களை ஆய்வு செய்ததன் மூலம் அவருக்கு யாழ்ப்பாண தமிழ் ராஜதானிகளின் அமைவுகள் குறித்த விடயங்களை பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது. நில அளவையாளர் காரியாலயத்திலிருந்து பெற்றுக்கொண்ட வரைபடங்களினூடாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களினதும் பாதைகளினதும் பெயர்களைக் கண்டறிந்து அதனூடாக கடந்த காலத்தில் ஓரோர் இடங்களினதும் அமைவிடங்கள் குறித்த தெளிவையும் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது.

போர்த்துக்கேயர்களால் பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கும் Early Christanity of Ceylon தொகுப்பில் நல்லூர் ராஜதானியில் அமைக்கப்பட்டிருந்த வியாபார மத்திய நிலையம் ஒன்றைக் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் செயற்பாடுகளை மன்னர் தனது மாளிகையிலிருந்தே கண்காணிக்கக் கூடிய விதமாக அது அமைக்கப்பட்டிருந்தது என அத் தொகுப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் நல்லூர் ராஜதானியின் பாதுகாப்புக்காக நகரத்தைச் சூழவும் சிறிய காவலரண்கள் மூன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும், அக் காவலரண்களைத் தொடர்புபடுத்தி ஒவ்வொன்றினூடாகச் செல்லும் பிரதான பாதைகளிரண்டும் அமைந்திருந்ததாகவும் அத் தொகுப்பில் எழுதப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கிறது.

அதற்கும் மேலதிகமாக, இன்றும் கூட யாழ்ப்பாணத்தில் சிதைவுகளாகக் காணப்படக் கூடிய யமுனை ஏரி அல்லது யமுனாரி எனப்படும் ஏரியானது  நல்லூர் ராஜதானி குறித்த ஆராய்ச்சியின் போது கிரிதரனுக்கு பெரிதளவில் பயனளித்திருக்கிறது. ராஜவம்சத்தினர் தமது குளியல் தேவைகளுக்காகவோ அல்லது நல்லூர் கந்தஸ்வாமி கோயில் பூஜைகளுக்குப் பயன்படுத்திய குஏரியாகவோ இந்தப் பொய்கை பாவிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதை எண்ணிப் பார்க்க முடிகிறது.

இந்த அனைத்து விடயங்களோடும் பண்டைய இந்து வாஸ்து ரீதியான கட்டடக் கலை பொருந்துவதால் கிரிதரனுக்கு தனது நல்லூர் ராஜதானி நகர அமைப்பை கட்டமைக்க முடிந்திருக்கிறது. அது சதுர வடிவான நகரமாகத் திகழ்ந்திருக்குமெனத் தீர்மானிக்கும் அவர் அதில் வட மேற்குத் திசையில் அரச மாளிகை, யமுனை ஏரி, வியாபார மத்தியநிலையம் மற்றும் கந்தஸ்வாமி கோயில் இருந்திருக்கலாமென தீர்மானிக்கிறார். வட கிழக்குத் திசையில் பணியாளர்களது குடியிருப்பும், வேலைத்தளங்களும்,, தென்கிழக்குத் திசையில் படையினரதும், வியாபாரிகளினதும் குடியிருப்பும், தென் மேற்குத் திசையில் புலவர்களினதும், மந்திரிகளினதும், ராஜ குலத்தவர்களினதும் காணிகளாகவும், நகரத்தைச் சூழவும் நான்கு கோயில் இருக்கத் தக்கதாகவும் அவர் அந்த நகர நகர அமைப்பை நிர்மாணித்திருக்கிறார். அந்தத் திட்டமிடலுக்கேற்ப நான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கும் மந்திரி மனையானது அமையப் பெறுவது தென் மேற்குத் திசையிலாகும்.

“மந்திரி மனை அமைந்திருக்கும் காணிக்கு பண்டைய காலத்திலிருந்து குறிப்பிடப்படும் பெயர் சங்கிலித் தோப்பு என்பதாகும் என நில அளவையாளர் காரியாலயத்தின்வரைபடத்தைப் பரிசோதித்துப்பார்த்தபோது எனக்குப் புலப்பட்டது. அதற்கு முன்பு அதனை யாரும் கண்டுபிடித்திருக்கவில்லை. சங்கிலித் தோப்பு என்பது ராஜாவுக்கு உரிய தோப்பு (சோலை) என்பதாகும். ஆகவே அதைச் சுற்றிவர அரச மாளிகையும், ஏனைய உயரதிகாரிகளின் கட்டடங்களும் இருந்திருக்கக் கூடுமென தீர்மானிக்க முடிகிறது” என கிரிதரன் விவரிக்கிறார்.

அவர் இந்த ஆய்வுத் தொகுப்பை மீளவும் எழுதி ஒரு நூலாக வெளியிடுவது, பல்கலைக்கழகப் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து, நாட்டை விட்டு வெளியேறியிருக்கும் காலப்பகுதியில்தான். அந்த நூல் 1996 ஆம் ஆண்டு இந்தியாவிலிருக்கும் சினேகா பதிப்பகத்தினூடாக வெளிவந்திருக்கிறது.

“இன்னும் கூட எனது ஆராய்ச்சி முடிவடையவில்லை. நான் இடைக்கிடையே அதற்குரிய பாகங்களைச் சேகரித்து வருகிறேன். அந்தக் காலத்தில் போதியளவு தொல்லியல் சான்றுகளேதுமற்றுத்தான் நான் இந்த ஆய்வை எழுத வேண்டியிருந்தது. இது இலகுவான விடயமல்ல. மிகவும் பாடுபட வேண்டியதொன்று. உண்மையில் இதனூடாகப் பயணித்து இதைக் குறித்து மேலதிக ஆய்வுகளைச் செய்ய விரும்புவோருக்கு ஒரு அடிப்படை அத்திவாரமாக எனது ஆய்வு நூலை அறிமுகப்படுத்த விரும்புகிறேன்” என நவரத்தினம் கிரிதரன் குறிப்பிடுகிறார்.

அவரது இந்த ஆய்வு நூலுக்கு ஆய்வாளர்களதும், வாசகர்களதும் உச்ச வரவேற்பு கிடைத்துள்ளதோடு, நல்லூர் மற்றும் யாழ்ப்பாண ராஜதானிகள் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளிலும், இணையத்தளங்களில் அதைக் குறித்து எழுதப்படும் கட்டுரைகளிலும் அவரது ஆய்வை அடித்தளமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பதை இன்றும் கூடக் காண முடிகிறது.

“இலங்கை வரலாற்றைக் குறித்து ஆராய்ச்சிகள் செய்யப்படும்போது அது ஒருதலைப்பட்சமாக அமையக் கூடாது என நான் ஆழமாக நம்புகிறேன். இலங்கையில் தெற்கு, மேற்கிலிருப்பதைப் போலவே வடக்கிலும் கிழக்கிலுமிருக்கும் தொல்லியல் சான்றுகள் குறித்த ஆய்வுகளை ஒருதலைப்பட்சமாக நிகழ்த்தக் கூடாது என்பதே எனது கருத்து. இந்த அனைத்துப் பிரதேசங்களும் இலங்கை எனும் நாட்டுக்கே உரித்தாகிறது. அனைத்துப் பிரதேசங்களினதும் வரலாறுகள் ஒன்றிணைந்துதான் ஒரு நாட்டின் வரலாறு உருவாகிறது. அவ்வாறு நோக்கும்போது நாங்கள் எமது வரலாறு குறித்து செய்திருக்கும் ஆய்வுகள் போதாது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும் என எனக்குத் தோன்றுகிறது. இந்த நாட்டின் வரலாறானது நாம் நினைத்துப் பார்ப்பதை விடவும் மிகவும் புகழ் வாய்ந்தது.”

கிரிதரனின் அந்தக் கூற்றோடு என்னாலும் இணைய முடிகிறது. நான் ஒரு கணம் நல்லூர் ராஜதானியை மனதால் உருவகித்துப் பார்க்க முயன்றேன். அதில் மனிதர்களின் குரல்களால் எழுந்து நிற்கும் தெருக்கள், உயர்ந்த மதில் சுவர்கள், வியாபார மத்திய நிலையம், இடையறாது மணியோசை எழுப்பும் கோயில்கள், கம்பீரமாக எழுந்து நிற்கும் அரசவை, மாளிகைகள் மற்றும் காவலரண்கள் எனது கற்பனையில் எழுகின்றன.

நான் கிரிதரனுக்கு திரும்பவும் நன்றி தெரிவிக்கிறேன். மரித்துக் கொண்டிருந்த எனது பண்டைய யாழ்ப்பாண நினைவுகளுக்கு அவரால்தான்  உயிர் கிடைத்திருக்கிறது.நான் அவரது நல்லூர் ராஜதானியின் நகர அமைப்பு எனும் கால யந்திரத்தினூடாக கடந்த காலத்துக்குச் சென்று நல்லூர் ராஜதானியைக் கண்டு கொண்டிருக்கிறேன்.

– கத்யானா அமரசிங்ஹ

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

முந்தைய கட்டுரைம.இலெ.தங்கப்பா நாஞ்சில்நாடனுக்கு…
அடுத்த கட்டுரைசாழற்மலர்ச்செண்டு