கீதையைச் சுருக்குதல்

Khrishnas-chariot-ink-on-panel

http://www.charlesnewington.co.uk/bhagavad-gita/

அன்புள்ள ஜெ..

கீதை குறித்த சமீபத்திய விவாதங்களின் தொடர்ச்சியாக ஒரு கேள்வி..

பாபா படம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்த தன்னை மீட்டெடுத்த நூலாக கீதையை ரஜினி சொல்லி இருந்தார். புல்கேந்த சின்கா எழுதிய, உண்மையான கீதை, என்ற நூலைப்பபடித்ததாகவும் செயல் புரி என்ற கிருஷ்ணரின் ஆணை தன்னை ஊககப்படுத்தியதாகவும் சொல்லியிருந்தார்

நானும் படித்தேன்… உண்மையான கீதை எண்பது ஸ்லோகங்கள் மட்டுமே கொண்டது.. தற்போது நாம் படிப்பது இடைச்செருகல்கள் கலந்த கீதை என்பது அந்த புத்தகத்தின் செய்தி..

உண்மையான கீதை புழக்கத்தில் இருந்தபோது வளமாக இருந்த இந்தியா, கடவுளை நம்பு.. பலனை எதிர்பாராமல் உழை… கடவுள்தான் முதன்மை  என்பது போன்ற இடைச்செருகல்கள் கலந்த கீதை மக்களை ஊக்கமிழக்கச் செய்ததும் ஏழை நாடானது என்கிறார் நூலாசிரியர்.

சாங்கிய யோகம் கபிலர் பதஞ்சலி நம் மரபில் கடவுள் என்ற அம்சமே இல்லை.. ஆனால் கீதையில் என்னையே சரணடை என்பது போன்ற கருத்துகள் உள்ளன.. இவை எல்லாம் இடைச் செருகல் என வாதிடுகிறார்

அவர் புரிதலில் சில தவறுகள் இருப்பதும் சில தர்க்க ரீதியான தவறுகள் இருப்பதும் மேலோட்டமான வாசிப்பிலேயே தெரிகிறது.

நான் அறிய விரும்புவது உண்மையான கீதை என்ற கருத்து குறித்தும் இடைச்செருகல்கள் என்ற கருத்தாக்கம் குறித்தும் உங்கள் பார்வையை

என்றென்றும் அன்புடன்
பிச்சை

Red-Battlefield

http://www.charlesnewington.co.uk/bhagavad-gita/

அன்புள்ள பிச்சை

கீதை உட்பட நம்முடைய தத்துவ மூலநூல்களை உள்வாங்கிக் கொள்ளும் பொருட்டு இங்கே தொடர்ச்சியான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பலகோணங்களிலான திறப்புகள் நிகழ்ந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் அதனளவில் பயனுள்ளதே. இதில் கொள்ளவேண்டிய தெளிவு ஒன்று உண்டு, இந்நூலாசிரியர்கள் என்ன எண்ணினார்கள் என்று தேடிச்சென்று கண்டுபிடிக்கும் நோக்கில் உரைகள் அமையக்கூடாது. அமைய இயலாது. அந்நூல்களை இன்று எப்படி பொருள் கொள்வது, எப்படி உள்வாங்கிக் கொள்வது என்ற அளவிலேயே உரைகள் அமைய முடியும்.

கீதைக்கோ குறளுக்கோ எத்தனை உரைகள். எத்தனை விளக்கப் பேருரைகள். எத்தனை மறுதொகுப்புகள். வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் குறளின் முதல் மூன்று அதிகாரங்களும் இடைச்செருகல் என்கிறார். தே.ஆண்டியப்பன் திருக்குறளின் அதிகார வைப்புமுறை தவறு, பிற்காலத்தில்—அதாவது சோழர்காலத்தில் – அவ்வாறு அமைக்கப்பட்டது, அது வேறொரு வகையில் இருந்திருக்க வேண்டும் என்று சொல்லி முழுக்குறளையும் பிறிதொரு அமைப்புக்குள் கொண்டுவந்து உரை எழுதியிருந்தார் குறளில் புறனடையாக பாடல்கள் உள்ளன என அவற்றை நீக்கி வெவ்வேறு அறிஞர்கள் எழுதியிருக்கிறார்கள். இவற்றை பொதுவாக குறளைப் புரிந்து கொள்வதற்கான வழிமுறைகள் என்றுதான் பார்க்க வேண்டும்.

இதற்கான காரணங்கள் பல. மூலநூல்கள் நெடுங்காலம் முன்பு உருவானவை. இன்றைய வாழ்க்கைச் சூழலில் நின்றுகொண்டு அக்காலத்தைய உணர்வையும் சிந்தனையையும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அவை முன்வைக்கும் கருத்துக்களை இக்காலத்தில் வைத்துப் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது. நேற்றைய பொருள்கோடல்களை தவிர்த்து புதிய பொருட்கோடல்களை உருவாக்க வேண்டியிருக்கிறது. அவற்றிலிருந்து சிந்தனையின் புதிய வழிகளை தொடர வேண்டியிருக்கிறது.

கீதையின் ஏதேனும் சில பகுதிகள் இடைச்செருகல்கள் என அனேகமாக எல்லா தரப்பினருமே எண்ணுகிறார்கள். வைதிகர்களுக்குச் சங்கடம் உருவாக்குமளவுக்கு வேதத்தை மறுக்கும் வரிகள் அதிலுள்ளன. அவற்றுக்கு பலவகையில் புரண்டும் நெளிந்தும் மாற்று விளக்கம் அளித்தே அவர்களால் கீதையை ஏற்கமுடியும். கீதை வேதத்தின் வேள்விச் செயல்தளத்தை மறுக்கும் வேதாந்த நூல் என்பதே இதற்குக் காரணம். நெடுங்காலம் அது முதன்மையாக வேதாந்த மரபுக்கு உரிய நூலாகத்தான் இருந்தது.

கீதையை இன்று வாசிக்கும்போது அது அனைத்து ஞானவழிகளுக்கும் இடையே ஒர் ஒத்திசைவை உருவாக்க முயலும் நூல் என்றுதான் நான் எண்ணுகிறேன். அனைத்துக்கும் இடமளித்து அனைத்துக்கும் மேல் அது தூய வேதாந்த மெய்மையை, அதன் மானுட வாழ்க்கை வெளிப்பாடான அவதூத நிலையை முன்வைக்கிறது. இந்தியாவின் ஆறுமதங்களையும் ஒருங்கிணைத்து மையச்சரடாக ஆனது வேதாந்தமே. ஆகவே கீதைக்கு வேதாந்தம் சார்ந்த விளக்கம் அன்றி வேறெந்த விளக்கத்திலும் பலவகை மழுப்பல்களும் மறைப்புகளும் இருக்கும்.

புல்கேந்த சின்காவின் நூலை நான் இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ஆனால் இதைப்போல கீதையை வெவ்வேறு வகைகளில் சுருக்கியும் வெட்டியும் ஏற்றுக்கொள்வது இந்து மரபுக்கு புதிதல்ல. பல வைணவப் பிரிவுகளில் விஸ்வரூப தரிசனத்துடன் கீதை முடிந்துவிட்டது என்ற நோக்கு உண்டு.

இடைச்செருகல் உண்டா என்றால் இருக்க வாய்ப்பில்லை என்பதே என் எண்ணம். கீதை இன்றைய வடிவில் ஒரு நூலாக ஆனபின் அதில் மாற்றங்கள் நிகழ்வது எளிதல்ல. இது எல்லா மூலநூல்களுக்கும் பொருந்தும். ஏனென்றால் அவை வெவ்வேறு குருமரபுகளால் பயிலப்படுபவை. ஒருவர் மாற்றினால் இன்னொருவரிடம் முதல் வடிவம் இருக்கும். மிக எளிதில் ஒப்பாய்வில் மூலத்தை உருவாக்கி விடமுடியும்.

அதோடு மூலநூல்கள் மாறிவிடக்கூடாது என்பதற்காகவே அவற்றை முறையாக ஓதுவதற்கான மரபுகள் உருவாக்கப்பட்டிருக்கும். அவற்றின் வரிகள் எண்ணிடப்பட்டிருக்கும். ஏடு எழுதுவதன் பாடபேதங்கள் அல்லாமல் கீதை பெரிய வேறுபாடுகள் இல்லாமல்தான் கிடைத்துள்ளது.

உபநிடதங்கள், பிரம்மசூத்திரம் யோகவாசிஷ்டம் என நீளும் வேதாந்த நூல்களில் இறுதியாக வந்த பெருநூல் கீதை. முந்தைய நூல்களில் உள்ள அதே வேதாந்த மெய்மையே இதிலும் ஏறத்தாழ அதே வடிவில் கூறப்படுகிறது. கீதையில் மேலதிகமாக உள்ளது பக்தி மரபையும் பிற வழிபாட்டுமுறைகளையும் கூட வேதாந்த நோக்கில் நின்று ஏற்றுக்கொள்ளும் ஒரு ஒருங்கிணைவு நோக்கு மட்டுமே. அதுவே கீதையின் கொடை.

அந்த ஒருங்கிணைவு என்பது இந்துமெய்ஞான மரபின் அடிப்படை இயல்பு. ஆனால் கீதையில்தான் அது தத்துவார்த்தமாக உச்சமும் கூர்மையும் கொள்கிறது. கீதைக்குப் பின்னரே இந்து மெய்ஞானம் அனைத்தையும் உள்ளடக்கும் தன்மை கொண்டது. ஒருமைப்பாட்டை தன் வழியாக கொண்டு இந்தியாவின் பல்லாயிரம் தொல்குடிகளின் வழிபாடுகளையும் நம்பிக்கைகளையும் ஒருங்கிணைத்தது. இந்தியப் பெருநிலத்தில் நிகழ்ந்துவந்த குடிப்போர்களை நிறுத்தி இதை ஒற்றைச் சமூகமாகத் தொகுத்தது. அதன் விளைவாக உருவானதே இந்தியா என்னும் இந்த மாபெரும் பண்பாட்டு அமைப்பு.

இந்து மதத்தின் மையத்தரிசனமான வேதாந்தம் செயலின்மையைச் சொல்கிறதா? வெறும் சரணாகதிதான் அதன் சாரமா? விரிவாக முன்னரே விளக்கியிருக்கிறேன். செயலின்மையைச் சொல்கிறதா இந்துமதம்?

சரி, மேற்படி சின்கா சொன்னதையே வரலாற்றில் வைத்துப் பார்ப்போம். பெரும்பாலான ஆய்வாளர்கள் கீதையின் காலம் கிமு ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டு என்கிறார்கள். கீதை மகாபாரதத்தின் இடைச்செருகலான பிற்கால நூல் என வாதிட்டு அதன் காலகட்டத்தை முடிந்தவரை முன்னால் கொண்டுவருபவர் டி.டி.கோசாம்பி. அவர்கூட கீதை கிபி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்கிறார். இந்தியா செல்வத்தில், கல்வியில் ஓங்கி உலகம் வியக்க நின்றிருந்த காலகட்டம் அது. இந்தியாவின் சரிவு ஆரம்பமாவது மேலும் அறுநூறாண்டுகள் கடந்து. கிபி ஆயிரம் வரை கூர்ஜரப்பிரதிகார அரசர்கள் ஆண்ட பொற்காலம். முகமது கஜினியின் படையெடுப்பிலிருந்துதான் வறுமையும் பண்பாட்டுச் சிதைவும் ஆரம்பமாகிறது. இதை அறிய வரலாற்றை புரட்டிப் பார்த்தாலே போதும்.

கீதை இந்தியாவின் பண்பாட்டு ஒருங்கிணைவின் வழிகாட்டுநூல். தனிநபரைப் பொறுத்த வரை தான் என அவன் எண்ணும்போது எழும் அனைத்து தத்தளிப்புகளுக்கும் விடையென எழும் நூல்.

ஜெ

செயலின்மையைச் சொல்கிறதா இந்துமதம்?

முந்தைய கட்டுரைஎழுத்தும் எழுதுபவனும்
அடுத்த கட்டுரைபெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு