அன்புடன் ஜெயமோகன் அண்ணனுக்கு,
எனது இந்தப்பதிவு உங்கள் பார்வைக்கு, நீங்கள் விரும்பின் உங்கள் தளத்துக்கும்.
நன்றி
தெய்வீகன்
மெல்பேர்ன்
மேமாதங்கள்
ஆஸ்திரேலிய பெரு நகரங்களின் வீதிகளெங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளோடு தமிழர்களின் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்த காலம் அது. வார விடுமுறைகளில் மாத்திரம் வசதியான ஆர்ப்பாட்டங்களை நடத்திய சம்பிரதாயங்கள் எல்லாம் கடந்து, மக்கள் வார நாட்களிலும் வேலைகளுக்கு செல்லாமல் – விடுப்பெடுத்துக்கொண்டு – குடும்பத்தோடு வந்து வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் கரைந்து கிடந்த காலம். நாளைக்கு ஆர்ப்பாட்டம் என்று இன்று அறிவித்தால்கூட மெல்பேர்னின் மத்தியில் federation சதுக்கத்திலும் சிட்னியின் Martin சதுக்கத்திலும் ஆயிரக்கணக்கில் மக்கள் அலைபோல திரண்டு வந்து நின்ற காலம்.
ஒன்பதாண்டுகளுக்கு முன்னர் நாங்கள் ஓலமிட்ட பெருந்துயர் கணங்களை கொஞ்சம் திரும்பி பார்க்கிறேன்.
ஆர்ப்பாட்டங்களில் வந்து திரளுமாறு “இன்பத்தமிழ் ஒலி” பிரபாகரன் பெருங்குரலெடுத்து இரவு பகல் பாராது கூவியழைத்துக்கொண்டேயிருப்பார். சிட்னி – கன்பரா – மெல்பேர்ன் வீதிகளில் சாரி சாரியாக எம்மவரின் வாகனங்கள் ஏதோவொரு எதிர்பார்ப்போடு ஓடிக்கொண்டிருக்கும். எல்லா வாகனங்களின் பின் பெட்டிகளிலும் கலங்கிய கண்களோடு எழுதப்பட்ட சில பதாகைகள் கிடக்கும். எல்லா வாகனங்களின் இருக்கைகளிலும் கலங்கிய கண்களோடு சில உயிர் பிணங்கள் உறைந்து கிடக்கும்.
இரவிரவாக புறப்படும் வாகனங்கள் தலைநகர் கன்பராவுக்கு அதிகாலையில் சென்றடையும். அங்குள்ள கடைகளில் முகம் – கை – கால் அலம்பிவிட்டு நாடாளுமன்றுக்கு முன் சென்று பனி படர்ந்த புல்தரையில் அமர்ந்தால், கலகக்காரர்களை கண்டது போல காவல்துறையினர் வந்து சூழ்ந்துகொள்வர். அவர்களுக்கு விளக்கம் கொடுக்குமளவுக்கு எங்களுக்கு தெம்பு இருப்பதுமில்லை. எங்களிடம் விளக்கம் கேட்கவேண்டிய அளவுக்கு அவர்களுக்கு தேவையிருப்பதுமில்லை. மதியம்வரை அங்கு நின்று “போரை நிறுத்து” – என்போம். ஒரு பயல் நாடாளுமன்ற கட்டத்தைவிட்டு வெளியில் வரமாட்டான். லேபர் கட்சியின் ஜோன் மேர்பியும் அப்போதைய பசுமைக்கட்சியின் தலைவர் டேவிட் பிறவுணும் எப்போதாவது வந்து – தங்கள் வாக்குக்கு சேதாரமில்லாதவகையில் – மைக்கை பிடித்து “எங்களால் இயன்றதை செய்வோம்” – என்றுவிட்டு மீண்டும் உள்ளே ஓடிப்போய்விடுவர்.
வெயில் உச்சியில் வந்து மண்டையை பிளக்கும்போது அங்கிருந்து புறப்பட்டு கன்பராவின் ஒவ்வொரு வீதியிலும் உயரப்பறக்கும் கொடிகளுக்கு கீழ் வீற்றிருக்கும் வெளிநாட்டு தூதரகங்களுக்கும் செல்வோம். அவற்றின் முன்றலில் நின்று ஒப்பாரி வைப்போம். அநேகமாக ஒரு தூதரகமும் கதவைக்கூட திறந்து பார்த்ததில்லை. அமெரிக்காவும் இந்தியாவும் தனது ஐந்தாம் – ஆறாம் நிலை அதிகாரிகளை வெளியில் அனுப்பி எங்களின் மனுக்களை பெற்றுக்கொள்ளும். அவர்களிடம் மனுக்களை ஒப்படைக்கும் படத்தை பாய்ந்து பாய்ந்து எடுத்து புதினத்துக்கும் தமிழ் நெற்றுக்கும் அனுப்பிக்கொள்வோம். கொன்று குவிக்கப்பட்ட மக்களின் சிதிலங்களை சுமந்த செய்திகளுக்கு கீழ் சுடச்சுட எமது ஆர்ப்பாட்ட படங்களை போட்டு அந்த இணையத்தளங்கள் தங்களாலான தேசிய கடமைகளை செய்துகொள்ள –
நாங்கள் மீண்டும் அதே வீதிகளால் குழறியபடி நாடாளுமன்றுக்கு முன்பாக வந்து சேருவோம். விட்ட இடத்தில் கார் நிற்கிறதா – வரும்போது அடித்த speed டிக்கெட்டுக்கு மேலதிகமாக parking டிக்கெட்டையும் வைத்துவிட்டார்களா என்று பார்த்துவிட்டு – சிட்னி தோழர்களுக்கு கையசைத்துவிட்டு மெல்பேர்ன் திரும்புவோம்.
வயது முதிந்தவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட பத்து – பதினைந்து பேருந்துகளும் வந்தவர்களை தூக்கிக்கொண்டு மீண்டும் சிட்னியை நோக்கி திரும்பும்.
இழவு வீட்டுக்கு போய் திரும்பியவர்களைப்போல அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வந்திருந்து யோசிப்போம். “நாட்டிலிருந்து செய்தி வந்திருக்கிறது” – என்று அடிக்கடி கூட்டங்களுக்கு அழைக்கும்போது பாய்ந்தடித்துக்கொண்டு ஒரு பெருங்கூட்டமே வரும். கதிரை நுனியிலிருந்து எல்லோரும் கதைப்பவரை பார்த்துக்கொண்டிருப்பர். தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை செய்யுமாறு அங்கு தகவல் சொல்லப்படும். அந்தக்கூட்டத்திலும் பார்க்க பெரிய கூட்டமொன்று கார் பார்க்கில் நடைபெறும். பிறகு, ஆளையாள் பார்த்துவிட்டு எல்லோரும் வீடு திரும்புவர்.
“லண்டன் – கனடாவெல்லாம் லட்சக்கணக்கில் மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றபோது அந்தளவுக்கு நாங்களும் திரண்டால் ஒருவேளை அரசாங்கம் செவி சாய்க்கலாம், ஏதாவது செய்யலாம்” – என்று இங்குள்ள மக்களும் எப்படி எப்படியெல்லாமோ தலைகீழாக நின்று பார்த்தனர்.
“உயர்த்த குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தால் வெள்ளைக்காரனுக்கு பிடிக்காது, சத்தம் போடாமல் அவன்ர மனச்சாட்சியை தட்டி எழுப்புற மாதிரி ஏதாவது செய்யுங்கோ” – என்று ஒரு புத்திசாலி சொன்னபோது நான்கு பேர் போய் உண்ணாவிரதமிருந்தோம்.
“இப்பிடி செய்து அவங்களை வெருட்டக்கூடாது. வெளிநாட்டில உண்ணாவிரமிருக்கிறது suicide attempt தெரியுமே” – என்று இன்னொருத்தர் வந்து ஆலோசனை சொல்லி, மெழுகுவர்த்தி ஊர்வலத்துக்கு அவரே sponsor செய்தார். அதையும் செய்து பார்த்தோம்.
மெல்பேர்ன் நகரத்தை சுற்றிப்பார்ப்பதற்கு வாடகைக்கு விடப்படும் குதிரை வண்டிகளில் ஏறி ஒரு கூட்டம் கொடியோடு சென்று ஆர்ப்பாட்டம் செய்தது. “சிவப்பு கலரை காட்டினால் குதிரை வெருளும். அதை உள்ளுக்குள்ள வச்சுக்கொண்டு பாதாகையளை தூக்கிப்பிடியுங்கோ” – என்று கூறப்பட்ட ஆலோசனைகளின் பேரில் குதிரையைக்கூட கோப்படுத்தாத ஆர்ப்பாட்டங்களும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
இப்படியாக, 2009 ஆம் ஆண்டு தை மாதம் முதல் இவ்வாறு உக்கிரமாக மேற்கொள்ளப்பட்ட சாதரண ஆர்ப்பாட்டம், சவப்பெட்டி ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் – ஊர்வலங்கள் அனைத்தும் ஏப்ரல் மாத கடைசியை எட்டும்போது கொஞ்சம் கொஞ்சமாக உதிரத்தொடங்கின. புதினம் இணையத்தளத்தை தொடர்ச்சியாக பார்ப்பதாக வெளியிலும் defence.lk இணையத்தளத்தை கள்ளமாகவும் பார்த்துக்கொண்டிருந்த பலர் defence.lkசெய்திகளை பகிரங்கமாகவே பேசத்தொடங்கினார்கள். மே மாதம் ஆரம்பித்தபோது – தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டதால் பட்ட வெயிலுக்கு அப்பால் மேலதிகமாக ஏதோ ஒன்று எல்லோரது முகத்திலும் – கருமையை பூசத்தொடங்கியது.
அன்றையதினம், மெல்பேர்னில் மிகச்சொற்பமானவர்களுடன் அந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆனால், எல்லோரின் கைகளிலும் அந்த கொடி மாத்திரம் திமிரோடு பறந்துகொண்டிருந்தது. அப்போதுதான் டி.பி.எஸ்.ஜெயராஜ் அந்த செய்தியை போட்டுடைத்திருந்தார். உதடுகள் துடிதுடிக்க எனக்கு நெருக்கமானவர்களிடம் அதை போய் சொன்னபோது – “எனக்கு கிட்ட நிற்காத, அங்கால போ” என்றான் ஒரு நண்பன். நான் தூரத்தில் போய் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்துவிட்டு தனியாகவே வீடு வந்துவிட்டேன்.
அதற்குப்பிறகு குழப்பத்தின் குழப்பமாக ஒவ்வொரு நாட்களும் கழிந்தது.
பின்னர் அது மாதங்களாக கடந்தது.
இன்று பல வருடங்களும் கடந்துவிட்டன.
இன்று மெல்பேர்ன் நகருக்கு ஒரு அலுவலுக்காக சென்றிருந்தேன்.
அந்த குதிரை வண்டியில் ஒரு வயதான மூதாட்டி பாலஸ்தீன கொடியை பற்றிப்பிடித்துக்கொண்டிருக்க, அதே குதிரை சளைக்காமல் அந்த பெருவீதியில் ஓடிக்கொண்டிருந்தது.
தெய்வீகன்
அன்புள்ள தெய்வீகன்
அந்த ஏப்ரல் வரை நான் ஆஸ்திரேலியாவில்தான் இருந்தேன். அங்கே நிகழ்வனவற்றின் சாட்சியாக. வரலாறு நிகழ்வதற்கும் பின்னர் அது எழுதப்படுவதற்கும் இடையேயான பிரமிக்கவைக்கும் வேறுபாட்டை அப்போதுதான் உணர்ந்தேன். கொந்தளிப்புகள், அவற்றின் நடுவிலும் ஓடும் கணக்குகள் அனைத்தையும் நோக்கினேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் பொதுவான உணர்ச்சிகளால், பொதுவான கருத்துக்களால், கும்பலால் சில தரப்புகள் உருவாக்கப்படுகின்றன, சிந்திப்பவன், உண்மை நாடுபவன் தன் சமரசமற்ற ஆய்வுநோக்குடன் அவற்றுக்கு வெளியேதான் நின்றிருக்கவேண்டும் என உணர்ந்தேன்
அதன்பின் அடுத்த மேமாதங்கள் எல்லாமே எனக்கு ஈழப்போரில் நிகழ்ந்த என் தனிப்பட்ட இழப்புகளுடன் சேர்ந்து துயர்மிக்கவையாகவே இருந்துள்ளன. அதை எழுதியும் வந்துள்ளேன். ஆனால் அது ஒவ்வொரு ஆண்டும் பொருளற்ற அரசியல் கோஷங்களாக ஆகிக்கொண்டிருப்பதையே காண்கிறேன். மிகையுணர்ச்சிகளும் பொய்களுமாக மேமாதம் இன்று கடந்துசெல்கிறது
கடவுள் என்ற சொல்லின் புனிதத்தை ஒருவாறாக இந்நூற்றாண்டில் கடந்துவிட்டோம். உண்மையில் அதன்பின்னரே இன்னும் தெளிவாக அக்கருத்தை அறிய ஆரம்பித்திருக்கிறோம். மக்கள் என்னும் சொல்லையும் அவ்வாறாக புனிதத்தன்மையற்றதாக ஆக்கிக்கொண்டோமென்றால் மட்டுமே வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும். மக்கள் ஏன் கொந்தளிப்படைகிறார்கள். ஏன் அமைதியாக இருக்கிறார்கள், எவற்றுக்காக கூடுகிறார்கள், எதன்பொருட்டு சிதறுகிறார்கள்? எந்த உணர்ச்சிகர நடிப்புக்கும் இளகும் கூட்டமென்று ஒரு கணமும் அசையாப்பாறை என மறுகணமும் ஏன் தோற்றமளிக்கிறார்கள்? ஏன் மறந்துவிடுகிறார்கள்? ஏன் வசதியான பொய்களைச் சமைத்துக்கொள்கிறார்கள்? கடவுள் அளவுக்கே அறிய அரிதானதுதான்.