ஜெ அவர்களுக்கு
வணக்கம்.
நலம் தானே.
குழந்தைகளின் விடுப்பு என்பதால் வாசிப்பும் சற்றே விடுபட்டுவிட்டது.
சென்ற வாரம் தற்செயலாய் புத்தகக்கடையில், அட்டை ஈர்த்தது என்று அம்மா வந்தாள் வாங்கினேன். கேள்விப்பட்டதுண்டு. வாசிக்க வேண்டிய புத்தக வரிசையில் இருந்தது.
ஒரே மூச்சில் படித்து முடித்தேன். முன்னுரையில் சுகுமாரன் அவர்கள் குறிப்பிட்டது ஆச்சரியமாய் இருந்தது., இக்கதையை எழுதியதால், தி.ஜ அவர்கள் ஊர் விலக்கம் செய்யப்பட்டார் என்பது.
இருவேறு உணர்வுகள் எழுந்தன. ஒரு கதையை எழுதியதாலா ஊர் விலக்கம் என்று தர்க்க சிந்தனை கூறினாலும், இன்றைய பரப்புரைகளின் காலத்தில், இக்கதை இப்பொழுது வம்பளப்பவர்கள் கையில் மாட்டியிருந்தால், தி.ஜ தமிழ்நாட்டை விட்டே வெளியேற வேண்டியிருந்திருக்கும். எல்லாக் காலகட்டங்களிலும், பெண் உணர்வு அடக்கப்பட்டு, இறுக்க மூடி போட்டு வைக்க வேண்டியது என்ற சிந்தனை எல்லாச் சமூகத்திலும் நிலவி வந்துள்ளது.
இன்று உங்கள் பக்கத்தில் அம்மா வந்தாள் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. ஏனெனில், அந்நாவலைப் படித்து விட்டு, அதைப்பற்றி பேசக்கூட ஆள் இல்லாமல் தவித்திருந்தேன்.
தன் மனைவியைப் பற்றி சிந்திக்கையில், “அலங்காரம் என்ற பெயரைப் பற்றி இளிவரலாக சுட்டுவது” என்ற தண்டபாணியின் பாத்திரம் எனக்கு மிகவும் வித்தியாசமான பாத்திரமாக தோன்றியது. ஜாதகம் பார்ப்பது, வேலைக்கு செல்வது, வேதபாடம் எடுப்பது, மனைவியின் பாலியல் நடவடிக்கையை சலனமின்றி வேடிக்கை பார்ப்பது, ஆனாலும் அவள் மேல் தீராத அன்புடன் இருப்பது என்று சற்றும் சராசரி என்ற சட்டகத்திற்குள் பொருந்தாத பாத்திரமாக அமைந்தது.
இந்துவின் பாத்திரம் அனுதாபத்திற்கு உரியது. அவளுடைய வார்த்தைகளின் வழி அம்மாவைப்பற்றி அப்பு அறிவது, தி.ஜ வின் தனிச்சிறப்பு.
நன்றி ஜெயமோகன்.
உங்களால் இப்பகிர்வு சாத்தியமாயிற்று.
பவித்ரா
***
அன்புள்ள ஜெ,
அம்மாவந்தாள் நாவலை நான் சிலநாட்களுக்கு முன்னர்தான் வாசித்தேன். சுவாரசியமான நாவல் என்று மட்டும்தான் சொல்லலாம். பெரிய அளவில் ஈர்க்கவில்லை. சொல்லப்போனால் காலாவதியான எழுத்து என்றுதான் தோன்றியது. ஏன்? அதை இப்படியெல்லாம் சொல்லிப்பார்க்கிறேன்
அதைக் கொண்டாடுபவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் அய்யர்கள். அவர்களுக்கு அந்தச்சூழல் மேல் ஒரு nostalgia இருக்கிறது. அவர்கள் விட்டுவந்த ஒரு பழைய வாழ்க்கை அது. அந்த அம்சம்தான் அந்நாவலை அவர்கள் அப்படி கொண்டாட வைக்கிறது. எனக்கு அது ஒரு சூழல் மட்டும்தான். அப்படிப்பார்த்தால் அந்தச்சூழல் நன்றாகச் சொல்லப்படவில்லை. அதைப்பற்றி ஏற்கனவே தெரியாதவர்களுக்கு அந்த வாழ்க்கை, அந்தச்சூழல் பொன்றவை பிடிகிடைக்காது. சித்திரமாக விரியாது
அந்த மையப்பிரச்சினை ஒரு breach of contemporary morality என்று மட்டும்தான் சொல்லலாம். ஆனால் இதேபோல கருக்களைக்கொண்ட ஐரோப்பிய நாவல்களில் அது ஆழமான மனக்கொந்தளிப்பாக வெளிப்படும். அந்த ஒழுக்கப்பிரச்சினை பெரிய விஷயம் இல்லை. அதனால் உருவாகும் மனக்கொந்தளிப்புதான் அதை இலக்கியமாக்கும். அந்த அம்சம் இந்த நாவலில் இல்லை. Page turner போல கதைதான் ஓடிச்செல்கிறது. அலங்காரம் இந்து அப்பு எவருக்குமே பெரிய அளவிலான மன அலைக்கழிப்பு இல்லை. அதோடு ஜானகிராமனுக்கு அதைச்சொல்லத்தெரியவில்லை. அவரால் உரையாடலாகத்தான் எழுத முடிகிறது. அன்றாட உரையாடலை சரளமாக எழுதுகிறார். ஆனால் உலக இலக்கிய வாசிப்பு கொண்டவர்களுக்குத்தெரியும் அன்றாட உரையாடலில் பெரிதாக ஆழமாக எதையும் சொல்லமுடியாது
அதில் காமம் பற்றிய பல nuances உள்ளன. ஆனால் அதெல்லாமே mundane nuances மட்டும்தான். ஆழமான spiritual or psychological விஷயங்கள் இல்லை. கொஞ்சம் கவனித்தாலே அதெல்லாம் பிடிகிடைக்கும். பிடிகிடைத்ததுமே நாவல் நின்றுவிடுகிறது. நம் மனசில் வளர்வதில்லை. ஆகவே ஒரு நடுத்தரமான நாவல் என்று மட்டும்தான் நாவலைச் சொல்லமுடியும். அந்தக்காலத்தில் துணிச்சலாக எழுதினார் என்பது சரி. ஆனால் அந்தக்காலத்தில் இதெல்லாம் நடந்தது என்று சொன்னால் எழுதுவதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது? இன்றைக்கு அது பேசும் இந்த aberration விஷயம் பழையதாகவே தெரிகிறது
சுந்தர்
***