ஜேகே ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவலின் முன்னுரையை இப்படி தொடங்குகிறார். ”காதல் என்பது மிகவும் அற்பமானது அது பிறப்பதற்கும் அழிவதற்கும் அற்பகாரணங்களே கூட போதும்” என்று. காதல் என்பது மானுடத்தின் உயர்பண்பு, தெய்வீகமானது என்ற புரிதல் நமக்குண்டு. காதலை சாதியை மதத்தை வளர்க்கவோ அழிக்கவோ முக்கியமான கருப்பொருளாக இன்றைய சமூகம் பயன்படுத்திக் கொள்வதையும் கண்டுகொண்டிருக்கிறோம். இந்நிலையில் “காதல் மிக அற்பமானது” என்ற வரி ஒரு அக அதிர்வை உருவாக்குகிறது. “அந்தக் காதல் வளர்வதற்கும் மேன்மையுறுவதற்கும் அதனுடன் தொடர்புடைய மனிதர்களின் பல்வேறு குணநலன்களே காரணமாக இருக்க முடியும்” என்று தொடர்கிறார். சரணெனபுகுந்துகொள்ளல், முழுவதுமாக அளித்துவிடுதல், முழுதும் ஆட்கொள்ள அனுமதித்தல், இரண்டற இணைந்திருத்தல், இறையிடம் தன்னை வழங்கிவிடுவதைப்போல என உணர்வுபூர்வமாக பலவகை ஆட்படுதல்களும் ஆக்ரமிப்புகளுமே காதல் என்பது பெரும்பான்மையோர் புரிதல்.
நம்முடைய சமூகத்தில் காதலின் இடமென்ன என்று தெரிந்துகொள்ளும் முன் முதலில் நம் இடம் என்ன என்று வகுத்துக்கொள்ளலாம். அன்னை தந்தையிடமிருந்து துவங்கி உறவு நட்பு ஆசிரியன் சமூகம் என விரியும் இவ்வுலகை அறிந்துகொள்வதிலிருந்து கொண்டும் கொடுத்தும் அறிதலை மேம்படுத்திக்கொள்வதும் பகிர்ந்து கொள்வதும் இங்கு பொருந்தியிருக்க அவசியமாகிறது. இவ்வுலகின் எந்த மூலையிலிருந்தும் பகிரப்படும் ஒரு செய்தியை இணையத்தில் வாசிக்கிறபோது அதன் அடுத்த முனை அதன் எண்ணத்தினால் என்னுடன் தொடர்பிலிருக்கிறது. அந்த எண்ணத்திற்கான எதிர்வினையாக என்னுள் ஒரு எண்ணம் எழுவதோ சிந்தனையோ அதன் விளைவான தேடலோ எனதிருப்பை அனைத்துடனும் முழுமையாக பிணைத்து வைத்திருக்கிறது. இப்பெரு உலகின் ஒரு துளியென என்னை சேர்த்துக்கொள்கிறபோது வரும் நிறைவும் பாதுகாப்புணர்வும் மிக அவசியமாகிறது.
மாறாக அறிவியல் வளர வளர உலகம் சிறுக்க ஆரம்பிக்கையில் அனைத்தும் விரல் நுனிக்கு அருகிருக்கையில் நான் மேலும் மேலும் தனியளாக மாறிக்கொண்டிருக்கிறேன். தன்னுடையதென கருதும் ஒவ்வொருவரின் தனி உணர்வுகளுக்கு மதிப்பளித்தே ஒருவர் மற்றவருடன் உறவாட இயலும். முழுதும் பிணைந்து கொள்ள இயலாத போது தான் தனியள் என்னும் பாதுகாப்பற்ற நிலையையும் அழுத்தமாக உணர்கிறேன். ஒட்டுமொத்த மனித இனமென்ற வட்டத்தில் பொருந்தியும் அதனுள் தானென தனித்து பிரிந்தும் சுழலும் தனித்தனி அலகுகள் மனிதர்கள் என்று கொள்ளலாம். இங்கு உணர்வு பூர்வமாக பொருந்தியும் அறிவு பூர்வமாக தனித்தும் வாழும் ஒரு நிலை என்றும் கொள்ளலாம். அவ்விதம் தானென்ற தனி அலகை அறிவுபூர்வமாக வகுத்துக்கொள்ளும் ஒருவர் கண்மூடித்தனமாக எந்த உறவோடும் தன்னை உணர்வு ரீதியாக பிணைத்துக்கொள்ள இயலாது என்பது என் புரிதல்
கல்யாணி தானென்ற தனி அலகின் எல்லையும் தன்மையும் அறிந்த ஒருத்தியாக இங்கு வெளிப்படுகிறாள். தன்னை தான் ரசித்து அதன் வெளிப்பாடென நாடகத்தை அறிந்து அத்துறையை தன் வாழ்க்கையென தேர்ந்தெடுக்கிறாள். நாடகத்தின் வழியாக அவள் இச்சமூகத்திற்கு எதையும் சொல்ல விழையவில்லை. தன் முன் அமர்ந்த அத்தனை பார்வையாளர் கண்களிலும் தன்னையே பார்த்துக்கொள்கிறாள்.
ரங்கா மானுடமென்னும் பெருவட்டத்தின் ஒரு பகுதியாகவே தன்னை அறிந்திருக்கிறான். அவன் ஒவ்வொருவரோடும் கொண்டுள்ள பிணைப்பு உணர்வுகளின் அடிப்படையிலெழும் அறிவினால். எனவே தான் ரோஜாக்களை விட கோதுமையே இன்றைய தேவை என்று அவனால் சொல்லமுடிகிறது. கதை எழுதுபவனாக பொது வாழ்க்கைக்கு அறிமுகமாகும் ரங்கா தன் தனிக்கனவிலிருந்து மேலும் மேலுமென பொதுவுலகுக்குள் தன்னை பிணைத்துக்கொள்கிறான்.
அண்ணாசாமியுடன் ஏற்படும் ஒரு முரணில் ரங்காவை அறிமுகம் செய்துகொள்ளும் கல்யாணி அவனது கதைகளைப் படித்திருப்பதாக சொல்கிறாள். தானே விலகி வந்துவிட்ட ஒரு நிலையினை அவனுக்கு அவள் நினைவுபடுத்துகிறாள். அதுவரையில் ஒரு நாடக நடிகை என்ற அளவில் கல்யாணியை அறிந்திருக்கும் ரங்கா இதன்பின் தனிக்கவனத்துடன் அவளை எண்ணிக்கொள்கிறான்.
அண்ணாசாமியுடனான ஊடலில் அவர்களது நாடகம் நிகழுமிடத்தில் எழும்பிரச்னையை அவன் எதிர்கொள்வதையும் தன் நண்பர்களை சமாதானம் செய்து நாடகம் தொடங்க அவன் உதவுவதையும் கல்யாணி அவதானிக்கிறாள். அவனது கதைகள் கட்டுரைகள் நாடக விமர்சனங்கள் வழியாக அவனை அறிந்திருக்கும் கல்யாணி அவனை நேரில் பார்க்கும்போது அவனைப்பற்றிய ஒரு கணிப்புக்கு வந்துவிடுகிறாள். என் வரையில் ஒரு ஆண் தனக்குப் ஏற்ற/பிடித்த பெண்ணைத் தேர்ந்தெடுக்க செய்யும் தேர்வுகள் எதையும் பெண் செய்வதில்லை. (அல்லது நான் செய்ததில்லை.) மிகச்சில தருணங்களில் ஒரு ஆணை ஏற்பதும் மறுப்பதும் பெண் அகத்தில் நிகழ்ந்துவிடுகிறது. தன் வாழ்க்கைத் துணையாக ஏற்பதும் மறுப்பதும் பின்னர் நிகழ்வது. அவன்மீது மையல் கொண்டவளாகவும் தன்மதிப்பினால் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாதவளாகவுமே அதன் பிறகான அவளது நடவடிக்கைகள் அமைகின்றன.
கல்யாணி தன் பெயரை குறிப்பிடாமல் ரங்காவுக்கு கடிதம் எழுதுகிறாள். அதே உள்ளுணர்வினால் அதை அறிந்து பேட்டியெடுக்க என்று சொல்லி ரங்கா அவளை காண வருகிறான். அந்தப்பேட்டியின்போதே ஒருவரையொருவர் இன்னும் தீவிரமாக அறிந்துகொள்கிறார்கள். இவ்விருவருமே இரு வேறுபட்ட பண்பாட்டு பின்புலங்கள் கொண்டவர்கள். தாசி குலத்தில் பிறந்து நேர்மையாக வாழ்ந்த தாயின் மகள், அலுவலக வேலையை விட்டு விருப்பமான நாடகத்தை தன் தளமாக ஏற்கிறாள். அதனால் விளையக்கூடிய பொருளாதார வளர்ச்சிக்கோ அல்லது புகழுக்கோ தன்னை இழக்காதவளாக வாழ்கிறாள்.
ஆதிகேசவலு நாயக்கர் தெருவில் பலவிதமான கட்சிகளும் கொள்கைகளும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டாலும் ஒன்றிணைந்து வாழ்வது போலவே நம்முடைய கலாச்சாரமும் ஒன்றுக்கொன்று முரண் கொண்ட பழைய சித்தாந்தங்களும் பெருமையும் கலையும் அது சார்ந்த குறைபாடுகளும் சேர்ந்தே கொண்டது. அதன் மையத்திலிருந்து பழம்பெருமைகளின் தொகுப்பிலிருந்து இன்றைய நிகழ்காலத்திற்குள் பயணம் செய்பவன் ரங்கா. இந்தக் கலாச்சாரத்தின் நிகழ்வை தான் எழுந்துவந்த பழையக் கலாசாரத்திற்கு அப்படியே கடத்திவிடுதல் ரங்காவுக்கு சாத்தியமில்லை.
கல்யாணி மீதிருந்த ஈர்ப்பினாலும் அணுகியறிந்த மதிப்பினாலும் அவளைத் தன் நிரந்தரமான துணையாகக் கருதி ரங்கா திருமணம் செய்துகொள்கிறான். அவனது விருப்பத்திற்கேற்ப அவனது செலவில் இருவரும் வேறு வீட்டிற்கு குடியேறுகிறார்கள். கல்யாணி தன் ரோஜாக்களுடன் அங்கு குடியேறுகிறாள். இருவரும் அவரவர்களுடைய பணியைச் செய்தும் தங்கள் காதல் வாழ்க்கையில் இயைந்தும் வாழ்கிறார்கள். சிலநாட்களில் ரங்கா கல்யாணியின் ரோஜா வளர்ப்பு ஒரு ஆடம்பர பொருட் செலவு கொண்டதென்று சொல்லத்தொடங்குகிறான். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொதுப்பார்வையின் வழி அலகிடும் ரங்கா கல்யாணியின் ரோஜாக்கள் தேவையற்றவையென்றும் உணவுக்கான தானியமே மிக இன்றியமையாத ஒன்றென்றும் கல்யாணியுடன் வாதிடுகிறான்.
ஒரு மிகப்பெரிய எந்திரத்தின் தனி உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்கான பணியை செவ்வனே செய்தால் மட்டுமே அந்த இயந்திரம் செவ்வனே இயங்க முடியும். அனைத்து உறுப்புகளும் ஒரே பணியை செய்யுமெனில் அல்லது ஒரே அளவாக இருக்குமெனில் எதுவும் நிகழாத குழப்பமே எஞ்சும். சமூகத்தின் சிறு அலகுகளான பத்திரிக்கையாளனும் நடிகையும் விவசாயியும் கொல்லனும் அவரவர் பணியை அவரவர்க்குரிய வகையில் சிறப்பாக ஆற்ற முயலும்போதே சமூகமெனும் ஒரு முழு எந்திரம் திறம்பட இயங்கும். அழகின் தேடலும் அதற்கான ரசனையும் தனிமனத்தேவை போலவே சமுதாயத்தேவையும் கூட என கல்யாணி எண்ணுகிறாள். மேலும் மேலும் வாதிடுவதினால் துலங்கும் அடிப்படை அலகுகளின் வேறுபாடுகளை இருவருமே உணர்கின்றனர்.
இதற்கிடையில் பட்டு-தாமு காதலில் பட்டுவின் திடமும் தெளிவும் காணும் ரங்கா அவள் தியாக உள்ளத்தை மெச்சுகிறான். பட்டு எளிய கிராமத்து பெண். தன்னுடைய வாழ்க்கை என்பது தன்னோடிணைந்த ஆண் மட்டுமே எனும் பயிற்சியுள்ள எளிய உளம் கொண்டவள். அவ்வெளிய உள்ளம் வாழ்க்கை அவ்விதமல்லவென்றும் தன் நேர்பாதியென எண்ணும் ஆணுக்கு தனி மனம் இருக்க முடியுமென அறிந்துகொள்ளும் நாள் வருமென்றும், அப்போது தன் தனித்தன்மையென ஒன்றுமில்லாமல் போவதை ஒரு இழப்பாகவே அந்த எளிய மனம் கருதுமென்பதையும், தன்னுடைய ஆண், ’தானெ’னும் தனித்த அகம் கொண்டிருப்பதே தனக்குச் செய்யும் துரோகமெனக் கருதுமென்பதையும் கல்யாணி தெளிவாகவே உணர்ந்திருக்கிறாள். எனவேதான் உணர்வு பூர்வமாக பட்டு தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டும்போது அதைப் பொருட்படுத்தாமல் இருக்கிறாள். மற்றவர்களுக்கு அது பட்டு தாமுவின் மீது கொண்ட காதலால் என்று தோன்றும்போது அது அவ்வாறு நீடித்திருக்காது என்ற தெளிவு கல்யாணிக்கே இருக்கிறது.
இந்த தெளிவே ரங்காவை உலுக்குகிறது. தன்னை ஆக்ரமிக்காத கல்யாணியை தான் முழுவதும் கைக்கொள்ள முடியாத கல்யாணியின் தனித்தன்மையை அறிந்த பின் அவளை ”நீ யாரையாவது காதலிச்சிருக்கியா?” என்று கேட்கிறான். நீ எப்போதேனும் எவரையேனும் முழுதாக ஏற்றுக்கொண்டிருக்கிறாயா அல்லது ஆட்பட்டிருக்கிறாயா என்பதன் இன்னொரு வடிவமே அது. சார்பற்ற அன்பே நிரந்தரமென்ற அறிதலுள்ள கல்யாணி திகைக்கிறாள். கல்யாணி முதன்மையாக, வாழ்க்கையை நேசிக்கிறாள். தன்னை முதல் ஊடகமாக வைத்து இவ்வுலகத்தை அறியும் அவளுக்கு அதை இன்னும் ஆழமாக அறியும் தளமே நாடகம், ரோஜா, ரங்கா அனைவரும். இவர்களில் எவரில்லையெனினும் அவள் வாழ்க்கையை நேசித்தல் குறைவுபட போவதில்லை. ஏனெனில் அவள் தான் கொண்ட நேசத்தில் தெளிவுடையவள். அவ்வண்ணமே தெளிவுடையவனென ரங்காவை எண்ணியிருக்கிறாள். இந்தக்கேள்வி கேட்கப்பட்ட பின்னரே கல்யாணி ரங்காவை முழுவதும் வேறு ஒருவனென உணர்கிறாள். தர்க்கங்களினாலும் அன்பினாலும் அவர்கள் திருமணம் நீடித்தாலும் உள்ளூர இருவருமே விலகியிருப்பதை அறிந்துமிருக்கிறார்கள்.
அன்பினால் நம் விருப்பத்துக்குரியவர்கள் மேல் அனைத்து மேன்மைகளையும் நற்பண்புகளையும் ஏற்றி வைத்துவிடுவது மானுட இயல்பு. ரங்காவின் நேரடிக்கேள்வியில் அவளை அவன் அறிந்ததேயில்லையென உணர்ந்துகொள்கிறாள். தன் அன்பை சொல்லிக்கொள்ளவோ நிரூபிக்கவோ அவள் முயற்சிகள் எதையும் செய்யவில்லை. அது ஒருவகையில் நம் பாதையில் நம்முடன் நடந்து கொண்டிருந்த ஒருவர் திடீரென நிஜத்தில் இல்லையென்றும் அது ஒரு மாயத்தோற்றமென்றும் உணரும் ஒரு அதிர்ச்சி. அது அளிக்கும் கையறுநிலையே துயர்மிக்கது. அதற்கென கோரப்படும் விளக்கங்களுக்கு விரிவுரை தருவது அந்நிலையில் இயலாத ஒன்று. அதை அறியும் கணத்திலுமே கூட அவள் நிலை பிறழவில்லை. தன் நேசத்துக்குரியவன் அவன் என்ற இடத்திலிருந்து இம்மியும் விலக்கவில்லை. தான் வருந்தினால் அதைக்கண்டு அவன் வருந்த நேருமென்று தன்னை மறைத்துக்கொள்கிறாள். மேலும் மேலும் அவன் தன்னிலையில் இயல்பாக உணரும் தருணத்தையே அவனுக்கு அளிக்கிறாள்.
”ஆக்ரமிப்புக்கு ஆட்படவில்லையெனில் அந்த அன்பை திரும்பப் பெற்றுக்கொள்வார்கள் நாகரீகமானவர்கள்” என்று ஜேகே முன்னுரையில் குறிப்பிடுகிறார். கல்யாணியைப் பொறுத்தவரை அவள் நேசிக்கும் ரங்காவை அவன் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறாள். கல்யாணி அவனை ஆக்ரமித்திருந்தாலோ அல்லது ஆக்ரமிக்க அனுமதித்திருந்தாலோதான் அவள் அவனை காதலிப்பதாக அவன் ஏற்றுக்கொண்டிருப்பான். ஆதிகேசவலு தெரு வாழ்க்கை அப்படித்தான் அவனுக்குக் கற்பித்திருந்தது. அதில் அவன் மனம் அன்றைக்கு சமாதானமடைந்திருக்கக்கூடும். ஆனால் கல்யாணி அச்செயல் பொய்யென்றும் இழிந்ததென்றும் கூசி விலகுகிறாள். அவ்வகையான ஆட்படுதல்களுக்கு முடிவே இல்லையென்றும் ஒருவரை ஒருவர் மேலும் மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கும் தொடக்கமாகவே இது இருக்கமுடியுமென்னும் தெளிவும் அவளுக்கு இருக்கிறது. எனவே தான் ஆதிகேசவலு நாயக்கர் தெருவுக்கு அவன் அழைக்கும்போது இருவருக்கும் நன்மை பயக்காத ஒன்றென அவன் கோரிக்கையை மறுக்கிறாள்.
அந்த நாளில் தான் ரங்கா ஆதிகேசவலு நாயக்கர் தெருவுக்கு திரும்புகிறான். தன்னுடைய தேடலுக்கு ஒரு ஆறுதலாகவே தன் பக்கம் நியாயமிருப்பதாக தனக்கே நிரூபித்துக்கொள்ளவே ஆதிகேசவலு நாய்க்கர் தெருவுக்கு அவன் ஆழ்மனம் அவனை செலுத்துகிறது. அவர்களுக்கு எவ்வகையிலும் விளக்கிவிட முடியாத வாழ்க்கைக்கான ஒரு பதிலை அங்கிருந்து எதிர்பார்க்கிறான். ஒருவகையில் இன்றைய நவீன யுகம் நமக்குள் உருவாக்கும் சிந்தனைகளை நம் பழமைக்குள் பொருத்திப்பார்க்கும் ஒரு பொருந்தாத முயற்சி.
மனைவியின் தங்கையான சுமதியை மணந்து கல்யாணியோடும் உறவைத் தொடரும்படி சின்னாய்னா சொல்கிறார். சுமதியை மணக்கும் எண்ணம் நேர்மையற்றது என்று உணர்ந்த ரங்கா அதை மறுத்து வீடு திரும்புகிறான். தனது முதல் திருமண வாழ்வு அன்போடும் பற்றுதலோடும் இருந்தது. அவன் மனைவி இறந்ததற்காக வருந்தியுமிருக்கிறான். அவன் குழந்தையை நேசிக்கவும் செய்கிறான். ஆனால் மீண்டும் அதே போன்ற திருமண வாழ்க்கைக்கு தன்னை ஆட்படுத்திக்கொள்ள இயலாது என்றும் உணர்ந்திருக்கிறான். பெருங்குளத்தை பார்த்துவிட்ட மீனுக்கு குட்டை போதாமலாவதைப்போல.
பாரீசுக்குப்போவின் சாரங்கனும் இத்தகைய ஒரு சூழலில் குமுறுவது நிகழ்கிறது. பழைய கலாச்சாரத்திலிருந்து புதிய மதிப்பீடுகள் எழுந்து வருகையில் அதை நிலைநிறுத்த இயலாமல் குழம்புவதும் கைவிடுவதும் அது சார்ந்த தலைமுறையில் பலருக்கு நிகழ்வதே. உங்கள் “கன்னியாகுமரி”-யின் விஞ்ஞானி விமலாவை இன்றைய தலைமுறை கூட ஏற்றுக்கொள்ளாது. நடிகை பிரவீணாவை சில நிபந்தனைகளுடன் ஏற்றுக்கொள்ளக்கூடும். எனில் ரங்காவின் சுற்றம் கல்யாணியை அவளது “தான்” என்ற நிலையையோ அறிவையோ மேட்டிமைத்தனத்தையோ புரிந்துகொள்ள/ஏற்றுக்கொள்ள இன்னும் சில பத்துவருடங்களுக்கு வாய்ப்பில்லை.
கல்யாணியிடமே மீண்டும் மீண்டும் காதல் என்பது என்னவென்று விவாதிக்கிறான். தியாகத்துக்கு பொருளேதுமில்லையா என்று கேட்கிறான். எனில் சுமதியின் தியாகம் பெரிதல்லவா ஏன் அவளை மணக்கவில்லை என்று கல்யாணி கேட்கிறாள். ஒருவருக்காக மற்றவர் தன்னை அழித்துக்கொண்டபின் எஞ்சுவது என்னவாக இருக்கமுடியும்? இரக்கமும் பரிதாபமும் மனித குணங்களே. அவை காதல் என்ற பெயர் பெற்றுவிடமுடியாது. இவையனைத்தும் இணைந்து தன்னை முழுதும் அழித்துக்கொண்டு வழங்கப்படுவதுதான் காதல் எனில் அந்த உயர்ந்த காதல் அது இருக்குமிடத்திலேயே இருக்கட்டுமென்கிறாள் கல்யாணி. இதன் முடிவில் விவாகரத்து செய்துகொள்ளலாம் என்ற ரங்காவின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறாள். விவாகரத்து கோரும் இருவரிடமும் நண்பன் கேட்கும் கேள்வி நீங்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கவில்லையென எப்படி முடிவு செய்தீர்கள் என்று. உணர்ச்சி மேலீட்டால் அம்முடிவை எடுத்த ரங்காவுக்கு அப்போதும் அதற்கான விளக்கத்தை அளிக்க இயலவில்லை.
அன்றிரவு கல்யாணியிடம் பேசும் ரங்கா அவளது சுயத்தை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதது தன் குறையே என்றும் அவ்வாறு ஏற்க இயலாமல் பொருந்தி வாழக்கூடிய அவ்வாழ்க்கை இருவருக்கும் துன்பத்தையே தருமென்றும் சொல்லி அவளிடமிருந்து விடைபெற்றுக்கொள்கிறான். பெருமதிப்பும் பேரன்பும் கொண்டதனாலேயே விலக்கப்படும் காதலை ஜே கே காட்டுகிறார். அவளிடமிருந்து விலகியபின்னரே அவளை அதிகம் நேசிக்கிறான். அவளுக்கு எதிராக அவனது சுற்றம் சொல்லும் எச்சொல்லுக்கும் பொருந்தாத மேன்மையுடையவள் என்று அவளைக் கருதுகிறான்.
தான் முதலில் கொண்டிருந்த தனிமையான வாழ்க்கையும் கணவனென ரங்காவை அடைந்த பிறகு காண நேரும் தனிமையின் இடரையும் அனுபவித்த பிறகும் அதைப்பற்றிய துயரங்கள் எதையும் ரங்காவிடம் பகிர்ந்துகொள்ளாமல் ரங்காவை அவள் அவன் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறாள். அவனை தன்னுடன் பிணைத்துக்கொள்ளும் எந்த முயற்சியையும் அவள் மேற்கொள்ளவில்லை. எவ்வகையிலேனும் ஒரு கட்டாயப்படுத்தல் ரங்காவுக்கு துன்பத்தை தருமென்றும் தனக்கே அது இழிவானதென்றும் அத்தகைய முயற்சிகளை கல்யாணி செய்யவில்லை. இது ரங்காவுக்கு கல்யாணி தன்னை பொருட்படுத்தவில்லை என்னும் பொருளையே அளிக்கிறது.
ரங்கா அவளில் தேடுவது அவனுடைய பிம்பத்தை. தான் அவளுக்கு எவ்வகையில் பொருள் படுகிறோம் என்பதை. அதை அவனால் ஊகிக்க முடியவில்லை. கல்யாணி தன்னியல்பிலேயே அன்புடையவளாக நேர்மையானவளாக இருக்கிறாள். அதுவே வாழ்க்கைக்கு போதுமானதென்கிறாள். அவளை அவன் நேசித்த போது தன்னைப்பற்றிய தாழ்வுணர்ச்சி கொள்கிறான். ஒரு பிடிவாதத்தில் வென்று அதன் மூலம் தன்னை வைராக்கியமுடையவனென்றும் சாதாரண ஆண் போல மயக்கங்கள் அற்றவன் என்றும் தன்னையே தான் சமாதானம் செய்து கொள்ளவும் அவளுக்கு நிகரான ஆண் என்று தனக்கே சொல்லிக்கொள்ளவும் வெற்று வீம்பைக் கைக்கொள்கிறான். நோய்வாய்ப்பட்ட கல்யாணி தன்னுடைய நோயே அவன் விரும்பும் விவாகரத்தை பெற்றுத்தரும் வாய்ப்பென்று கருதி அவனை அழைக்கிறாள். மாறாக அவள் நோயுற்றதை அறிந்து உண்மையிலேயே அவளுக்காக மனம் வருந்தி இறங்கி வருகிறான். அவளை அருகிருந்து பார்த்துக்கொள்கிறான். கல்யாணி தன்முடிவுகளை தளர்த்தி அவனைத்தன் வாழ்வில் இணைந்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறாள். ஒருகூட்டுமனத்திலிருந்து தனித்தியங்கும் ஒரு தனிமனம் தன் முயற்சியில் வெற்றிபெறவில்லை என்றே கதையை முடித்திருக்கிறார் ஜேகே.
ஆட்படாத ஆக்ரமிக்காத அன்பை நம்முடைய சமூகம் ஏற்காது அல்லது தூற்றும் அல்லது மொத்தமாய் முறிக்கும். தன்னுடைய லட்சியப்படைப்பு தோல்வியுறக்கூடாதென்பதற்காக கல்யாணியை காலுடைத்துவிட்டதாக சொல்கிறார் ஜேகே. அன்றைய தலைமுறையில் கல்யாணியை சிறிதேனும் ஏற்றுக்கொள்ளச் செய்ய இந்த முறிவு தேவைப்பட்டிருக்கலாம். காலுடைந்த இணை, காலுள்ள மற்ற இணையின் தயவில் வாழவேண்டிய ஒன்று. காலுள்ள உயிர் காலற்ற உயிரைவிட மேன்மையானதுதானே! பெண் ஏதோ ஒரு விஷயத்தில் ஆணின் தயவில் இருந்தால்தான் ஆண் வர்க்கமும் ஆண் ஏதோ ஒரு விஷயத்தில் நாயாய்க் குழைந்து பலவீனம் கொண்டிருந்தால் தான் பெண் வர்க்கமும் திருப்தியுறும் என்று முன்னுரையை முடிக்கிறார் ஜேகே.
இன்றைய தலைமுறைக்கு உள்ள மிகப்பெரிய சிக்கல் தன்னை இப்பெருஞ்சமூகத்தில் எங்கு எவ்விதம் பொருத்திக்கொள்வது என்பது தன்னுடைய தனிப்பட்ட தேடல்களுக்கும் விழைவுகளுக்கும் என்ன இடம் என்பது. மேலும் இன்றைக்கு தம்பதியருக்குள் வரும் மிகப்பெரும் ஊடலே தன் தனித்துவத்தை இழக்க வேண்டியிருப்பது. அப்படி இழக்க விரும்பவில்லையெனில் காதலை இழக்கவேண்டியிருப்பது. இந்நாவலை மணமாகும் தம்பதியருக்கு திருமண பரிசாக அளிக்கலாம். காதலர் தினத்தை கொண்டாட விரும்பும் இளைய தலைமுறைக்கும் இந்திரவிழாவை எண்ணி ஏங்கும் பழைய தலைமுறைக்கும் இதில் விவாதிக்க, அறிந்துகொள்ள சற்றேனும் பொருள் உள்ளது.
கங்கா ஈஸ்வர்