ஜெ,
முழுக்க இலக்கியம் பக்கம் திரும்பி தினமும் நீங்கள் எழுதும் இலக்கியம் மட்டுமேயான கட்டுரைகள் உருவாக்கும் மனநிலை மிக அரியது, பலதளங்களைத் தொட்டு நீங்கள் எழுதினாலும் முதன்மையாக நீங்கள் இலக்கிய ஆசிரியன், நாங்கள் முதன்மையாக இலக்கிய வாசகர்கள்.
கிண்டில் அருளால் 20 நாட்கள் உரிய மனநிலையும் வாய்க்க புனைவு வாசிப்பை மீண்டும் துவக்க முடிந்தது.
கொமோரா
லஷ்மி சரவணக்குமாரின் பெரிய நாவல், தேவிபாரதியின் நிழலின் தனிமைக்கு பின்பு தமிழில் வந்த சிறந்த நாவல் என்று நிச்சயமாக சொல்லலாம். உள்ளார்ந்த உண்மையால் நாவல் நிற்கிறது.
“தனக்குள் இருக்கும் தந்தையை கொல்தல்” என நாவலின் மையத்தை சொல்லலாம், கடைசியாக தானும் தந்தையாக மாறுவதை அறியும் கணம்.
புதிதாக எழுதவந்த எழுத்தாளர்களில் நாவல் எழுதுமளவு தகுதியுடையவர் நிச்சயமாக இவரே. தவறவிடக்கூடாத நாவல்.
பேட்டை
தமிழ்பிரபாவால் வடசென்னையின் வாழ்க்கையை ஆவணப்படுத்த எழுதப்பட்ட நாவல் .ரஞ்சித் படங்களில் பார்த்தவற்றின் குறைபட்ட வடிவம். சிறுகதைகளை எழுதிப்பார்த்து தனக்கே நம்பிக்கை வந்தபின் நாவல் பக்கம் வந்திருக்கலாம். கூவமோ பெந்தகொஸ்தேவோ, மனப்பிரமையோ எல்லாமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது, கடத்தப்படவில்லை.
வழக்கமாக உயிர்மையே எந்த தரப்படுத்துதலும் இன்றி நாவல்களை பிரசுரிக்கும், இப்போது காலச்சுவடு .
பூனாச்சி
திரும்பிவந்த பெருமாள் முருகன் நேரடியாக விருதுக்காக எழுதியதுபோன்றே தோற்றமளிக்கும் – இன்னொரு விலங்குப் பண்ணை – வழக்கம்போன்றே செய்யப்பட்ட நாவல், கூளமாதாரி எனும் பெமுவின் ஆகக்கூடிய நல்ல நாவலில் நீர்த்த வடிவம். மாயாயதார்த்தம் என்று நினைத்து எழுதியிருக்கலாம் பாவம்.
சரவணன் சந்திரன் 4 நாவல்கள்
தமிழில் பொதுஜனத்தை படிக்கவைக்கும் ஆற்றல் கொண்ட நாவல்களை எழுதும் மொழி உள்ளவர், மீடியா அனுபவத்தால் விதவிதமான வாழ்க்கைகளை அறியும் வாய்ப்பு அமைந்துள்ளவர். ஆகவே வாசிக்கவும் ஈடுபடவும் வைக்கிறார். தான் எழுதப்போவது வெகுஜன எழுத்துதான் என முடிவு செய்வார் என்றால் நிச்சயமாக முக்கியமான எழுத்தாளராக நீடிப்பார். உயிர்மை இதுதான் செவ்வியல், சிற்றிதழ் இலக்கியம் என்றெல்லாம் அவரிடம் சொல்லாமலிருக்க வேண்டும் :)
காச்சர் கோச்சர்
விவேக் ஷான்பேக் ஒரு கன்னட அசோகமித்திரன்., சின்னதாக எழுதுகிறார் என்பதே சிக்கல். வேங்கைச்சவாரி போன்றே அவரின் மிகச்சிறந்த குறைத்துசொல்லல்கலை கொண்ட படைப்பு. நாவலாக பிரமாதம் .
திருடன் மணியன்பிள்ளை
இரண்டுமுறை தொடர்ந்து படிக்கவைத்த திருடன் மணியன்பிள்ளை இன்னொரு பிரமாதமான நூல். நாவலைத் தாண்டிய சுயசரிதை .
அரங்கா