பட்டாபி, ஜெகன்,ஓ.பி.குப்தா
அன்புள்ள ஜெயமோகன், வணக்கம்.
உங்கள் வலைத்தளத்தை வாசிப்பவன் என்றாலும் எதிர்வினைகளை பதிவிடுவதில்லை. தொடர்புடைய விஷயம் என்பதால் இதனை எழுதுகிறேன்.
ஒரு காலகட்டத்தின் முடிவு என்று தோழர் குப்தாவின் மறைவை கூறியிருக்கிறீர்கள். உண்மைதான். ஒர் மாபெரும் இயக்கத்தை வளர்த்தெடுத்த பெரும் மனிதர் அவர். தபால் தந்தி பேரியக்கத்தை ஒரு வழிநடத்தும் இயக்கமாக மாற்றிக் காட்டியவர். இப்போதுள்ள நிலையில் தாங்கள் ஒரு பொது மனிதனாக அவர் குறித்த விமர்சனம் சற்றே வருத்தம் தரக்கூடியதாக இருந்தாலும், குறிப்பிட்டக் காலத்தில் தலைமையை வேறொருவருக்கு குறிப்பாக ஜெகன் அவர்களிடம் அவர் கொடுத்திருந்தால் அந்த இயக்கம் சிறுத்திருக்காது என்ற கருத்து என்னைப் போன்றவர்களுக்கு உண்டு. அதே போன்று கேஜி போஸ் அணியினர் அவர் மீது வைத்த அந்த அபாண்டமான விமர்சனங்கள் தாக்குதல்களை சரியானப் பார்வையில் பதிவிட்டிருக்கிறீர்கள். அவர்கள் அதனை ஏற்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்.
இப்போது இந்தப் பதிவை எதற்கு எழுதினீர்கள் என்று என்னால் அனுமானிக்க இயலவில்லை. ஆனாலும், இந்தியாவில் அரசுத்துறையில், பொதுத்துறையில் ஊழியர்களின் நலன் காத்த பேரியக்கத்தின் தலைவர் ஒருவரைப் பற்றி, பொது வெளியில் பகிர்ந்து கொண்டது பெரிய விஷயம். தோழர் ஜெகன் அவர்கள் வழியில் பட்டாபி செயல்பட்டு ஓர் இணைப்புப் பாலமாக, பிளவுபட்டு நின்றிருந்த, தமிழ்நாட்டு இயக்கத்தை உடைந்துபோகாமல் பாது காத்தார் என்பது குறிப்பிட வேண்டியது.
இந்த இயக்கத்தின் வரலாறு பதிவு செய்யப்படவேண்டிய ஒன்றே.
அன்புடன்
அக்களூர் இரவி.
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்.
மிக்க நன்றி. நாம் எல்லாம் சேர்ந்து பணியாற்றிய NFTE மற்றும் அதன் பெரும் வழிகாட்டிகளாக இன்றளவும் நிற்கும் குப்தா, ஜெகன் குறித்து புகழ்வாய்ந்த தங்கள் இணைய தளத்தில் பதிவிட்டமை குறித்து மகிழ்ச்சி. மேலும் மேலும் ஆழக் கற்கும் போது நிதானமும் சேர்ந்தே பழக்கமாகிறது.
தங்களுடன் திருவாரூரில், பட்டுக்கோட்டையில் உரையாடிய, மயிலாடுதுறை, ஊட்டி, சென்னை, நாகர்கோவில் கூட்டங்களில் பங்கேற்ற நாட்கள் நினைவில் ஓடுகின்றன. தாங்கள் அனுப்பி படித்த சில முக்கிய God That Failed, சோவியத் உடைவு போன்ற புத்தகங்கள் நினைவிற்கு வருகின்றன. தொலைத்தொடர்பு நண்பர்கள் சிலர் தங்களைப் பற்றி சந்தித்ததை சொல்வார்கள். நினைவை புதுப்பித்துக்கொள்வேன். சென்னை வந்தால் நேரம் கிடைக்கும்போது தெரியப்படுத்துங்கள். பார்க்க வாய்ப்பாக இருக்கும். எனது வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கும் நன்றி.
தோழர் குப்தாவின் முதல் 50 ஆண்டுகள் அனுபவத்தை வீரபாண்டியன் 1946-66 நினைவலைகள் என்ற பெயரிலும், 1966-99 காலத்தை selected Ideas of O P Gupta என்ற பெயரில் நானும் கொணர்ந்தோம்.
குடும்பத்தாருக்கு என் விசாரிப்புகள்.
அன்புடன்
பட்டாபி
***
அன்புள்ள ஜெ
தொழிற்சங்க இயக்கம் வீழ்ச்சியடைந்துகொண்டிருப்பதற்கு, அல்லது அதில் இடதுசாரிகளின் பிடி தளர்வதற்கு [இரண்டும் ஒன்றுதான்] முக்கியமான காரணம் சோவியத் ருஷ்யாவின் வீழ்ச்சி. இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம் கட்டுவது எளிய விஷயம் அல்ல. இங்கே தொழிலாளர்களுக்கு உரிமை உணர்ச்சி இல்லை. அவர்கள் ஃப்யூடல் மனநிலை கொண்டவர்கள்.. முதலாளியை தெய்வமாக நினைப்பவர்கள். நம்மால் என்ன முடியும் என்கிற விதி நம்பிக்கை உண்டு. அதோடு சாதிப்பூசல் தொழிலாளர்களின் மிகப்பெரிய பிரச்சினை.
இதையெல்லாம் கடந்து தொழிற்சங்கம் கட்டவேண்டுமென்றால் தொழிலாளியை ஒரு நவீன மனிதனாக ஆக்கவேண்டும். முதலாளித்துவ மனிதனாக கொண்டுவரவேண்டும். அதற்கு மிகக்கடுமையான பிரச்சாரம் தேவை. தொடர்ச்சியான வகுப்புகள். ஆனால் வகுப்புகளை விட போராட்டங்களே மேலும் கற்பிப்பவை. மெல்லமெல்லத்தான் இதெல்லாம் சாத்தியம். இதை செய்ய 60 ஆண்டுகள் ஆயின. இது இடதுசாரிகளால் சாத்தியமானது. இதைத்தான் இன்றைக்கு அத்தனை அரசியல்கட்சிகளும் அறுவடை செய்கின்றன.
இதைச்செய்ய தோழர்களுக்கு ஊக்கம் அளித்த இலட்சியம் மானுட விடுதலை. ஒரு கம்யூனிஸ உலகம் பற்றிய கற்பனை. இது இருந்ததனால்தான் கடுமையாக வேலைசெய்தார்கள். ஒரு நாளுக்கு ஏழு எட்டு மணிநேரம் தோழர்கள் சங்கவேலை செய்தது தொழிலாளிக்கு கூலி உயர்வுக்காக அல்ல. கம்யூனிசக்கொள்கைக்காகத்தான். அந்தக்கொள்கைமேல் நம்பிக்கை போயிற்று. அதன்பின் தொழிற்சங்கமே பொருளாதார லாபங்களுக்காக நடத்தும் பேரமாக மாறியது.
அதைத்தான் தொழிலாளியும் நம்புகிறான். ஒரே சமயம் நாலைந்து தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறான். இன்னது வேணும் இல்லாவிட்டால் அங்கே போய்விடுவேன் என மிரட்டுகிறான். இன்றைக்கு இருப்பது தொழிற்சங்கம் அல்ல. ஒரு பேரம்பேசும் குழு. அதில் இடதுசாரிகளைவிட தாதா க்குண்டர்கள் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இங்கேதான் வீழ்ச்சி ஆரம்பம்
தண்டபாணி