அன்புள்ள ஜெ
நான் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கு வந்திருந்தேன். அதற்கு முன்னர் உங்கள் அறைக்கும் வந்திருந்தேன். நான் எதுவுமே பேசவில்லை. சும்மா வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தேன். காரணம், நான் அதிகமாக நூல்களை வாசித்தவனல்ல. சமீபகாலம்வரை நான் பாலகுமாரன் நூல்களைத்தான் வாசித்துக்கொண்டிருந்தேன். நான் வாசித்த முக்கியமான நூல் நாஞ்சில்நாடன் எழுதிய எட்டுத்திக்கும் மதயானை. என்னை மிகவும் கவர்ந்த நாவல் அது. உங்களுடைய ஏழாமுலகம் கன்னியாகுமாரி ஆகிய நாவல்களை வாசித்திருக்கிறேன்
அன்றையதினம் இலக்கிய ஜாம்பவான்கள் எல்லாரும் சேர்ந்து அமர்ந்து சிரிப்பும் உற்சாகமுமான மனநிலையிலே பேசிக்கொண்டிருந்ததை கேட்டு என் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. நாஞ்சில்நாடனை சந்தித்து அவரிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். உற்சாகமான சிரிப்புடன் அவர் பேசியது நன்றாக இருந்தது.
ஆ.மாதவனுக்கு நீங்கள் விருதளித்தபோது நான் சந்தோஷப்பட்டேன். நீங்களும் உங்கள் நண்பர்களும்தான் விழாவுக்கே முக்கியமானவர்கள் என்று புரிந்துகொண்டேன். பணமும் உங்களுடையது. ஆனால் அதை உங்களை பிரபலப்படுத்திக்கொள்ள பயன்படுத்தாமல் மூத்த எழுத்தாளரை கௌரவிக்க நீங்கள் பயன்படுத்திக்கொண்டதை ஒரு சிறந்த முன்னுதாரணமாகவே நினைக்கிறேன்.
நான் மாதவனிடம் அவருடைய புஸ்தகத்திலே கையெழுத்து போட்டு வாங்கினேன். மாதவனை அருகே பார்த்தபோது நெகிழ்ச்சியாக இருந்தது. அவரது புஸ்தகங்கள் எதையுமே வாங்கியதில்லை. வாசித்ததும் இல்லை. ஆனால் அவரது முகத்திலே மிகுந்த மனநிறைவும் நெகிழ்ச்சியும் இருந்தது. என்ன செய்கிறீர்கள் தம்பி என்று அன்பாக கேட்டார்.
மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது சார். நன்றி
செல்வராஜ்
அன்புள்ள செல்வராஜ்
விழா முடிந்து ஊருக்குச் சென்றபின்னரும் மாதவன் என்னை அழைத்து பேசினார். நேற்றும் முன்தினமும் எல்லாம். அவருக்கு விழா முடிந்ததை எண்ணிய சிறிய ஏக்கம் இருக்கலாம்
நேற்று பேசும்போது ‘ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. என் பையன் இருந்தாக்கூட இப்டி நின்னு நடத்தி கௌரவிச்சிருக்கமாட்டனேன்னு நினைச்சுக்கிட்டேன். என்ன சொல்ல. எனக்கு வார்த்தைகளே இல்லை’ என்றார். அந்தக்குரல் என்னை பேச்சிழக்கச் செய்துவிட்டது
ஒருவகையில் இந்தவகையான செயல்கள் நம் கடமைகள். நம் தந்தைக்கும் தாய்க்கும் செய்யும் கடமைகள் போல
ஜெ
விஷ்ணுபுரம் விருது பற்றிய சுசீலாவின் பதிவுகள்
http://www.masusila.com/2010/12/1.html
http://www.masusila.com/2010/12/2.html