கேள்வி; சமகாலம் குறித்து ஓர் இலக்கியவாதி கவனம் தரத் தேவையில்லை’ என்று ஒருபுறம் குறிப்பிட்டுக்கொண்டே அவ்வப்போது சமகால நிகழ்வுகள் குறித்து கருத்து சொல்வது, அதுகுறித்து சர்ச்சைகள் எழும்போது, ‘நான் வரலாற்றாய்வாளன் அல்ல; இது எழுத்தாளனின் தரப்புதான்’ என்று பதில் சொல்வது… இந்த முரணை எப்படிப் புரிந்துகொள்வது?
தடம்
உங்கள் கேள்வியிலேயே ஒருபகுதிதான் கேள்வி, இன்னொரு பகுதி அதற்கான விடை. ஓர் எழுத்தாளன் அனைத்து சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கும் எதிர்வினை ஆற்றக்கூடாது. அது அவனை சமகால விவாதங்களுக்குள் இழுத்துவிட்டுவிடும். அதற்கு முடிவே இல்லை. அதன் விளைவாக அவன் தன் தனிப்பட்ட உணவுர்சார்ந்த, அறிவார்ந்த, ஆன்மிகமான கேள்விகளை இழந்துவிடுவான். இது என் தரப்பு, நான் கடைப்பிடிப்பது.
ஆனால் முழுமையாக எதிர்வினையாற்றாமல் இருக்கவும் முடியாது. ஏனென்றால் அது ஒதுங்கிவிடுதல். அது காலப்போக்கில் சமகாலம் மீது அக்கறையற்றவனாக எழுத்தாளனை ஆக்கிவிடும். அப்படியென்றால் எதற்கு எதிர்வினையாற்றலாம்? எழுத்தாளனாக நின்று அவன் கருத்துச்சொல்ல இடமிருக்குமென்றால் மட்டும் பேசலாம். இதுவே நான் சொல்வது.
நாம் குடிமகனாக, குடும்பத்தலைவனாக நம்மை வைத்துக்கொண்டு ஏராளமான கருத்துக்களை கொண்டிருப்போம். அவற்றை ஓர் அன்றாட அரட்டையில் சொல்வோம். எழுத்தாளனும் சாமானியன்தான். ஆனால் அவன் அவ்வாறு குடிமகனாகவும் குடும்பத்தலைவனாகவும் உணர்பவை அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தால் எழுத்தாளன் என்ற இடம் இல்லாமலாகும். எழுத்தாளனாகவே அவன் கருத்துச் சொல்லவேண்டும்.
கருத்து சொல்பவர் எந்த அடையாளத்தை முன்வைக்கிறார் என்பது முக்கியமனாது. துறைசார் நிபுணர், அரசியல் ஆய்வாளர், அரசியல் செயல்பாட்டாளர், சமூகப்பணியாளர் என பலநிலைகளில் நின்று கருத்துக்களைச் சொல்கிறார்கள். எழுத்தாளன் எழுத்தாளனாக நின்று மட்டுமே கருத்து சொல்லவேண்டும்—மேலே சொன்னவற்றில் பல தகுதிகள் இருந்தாலும்கூட
ஏனென்றால் எழுத்தாளனுக்கு மேலே சொன்ன எவருக்கும் இல்லாத இரு தகுதிகள் உள்ளன. உள்ளுணர்வே எழுத்தாளனின் ஆயுதம். அதோடு அவன் தன்னைச்சூழ்ந்திருப்பவர்கள் நடுவே அவர்களில் ஒருவனாக வாழ்பவன், அவர்களைக் கூர்ந்து கவனிப்பவன். இந்த இரண்டு தகுதியால்தான் அவன் கருத்துக்கள் முக்கியத்துவம் அடைகின்றன. தமிழ்ச்சூழலில் எழுத்தாளர்களை வாசிப்பவர்கள் மிகக்குறைவு. ஆகவே பலருக்கும் எழுத்தாளனும் ஒரு குரல்மட்டுமே. ஆனால் பிற பண்பாடுகளில் அப்படி அல்ல. அங்கே எழுத்தாளனின் குரல் தனியான ஒரு தரப்பாகவே கருதப்படும்
ஆகவே எழுத்தாளன் தன் மனதுக்குப் பட்டதைச் சொல்லவேண்டும். எந்த கட்சி, கொள்கை, மதம் , இனம் சார்ந்தும் தன்னை அறுதியாக அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடாது.
இதெல்லாம் தமிழ்ச்சூழலில் நூறாண்டுகளாக புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி ,ஜெயகாந்தன் வரை பலரால் சொல்லப்பட்டவைதான். இன்று சமூக ஊடகங்கள் வந்தபின் பலரும் எழுத்தாளனை சமூக ஊடகங்களில் அன்றாடம் கருத்துத் தெரிவிக்கிறவர்களில் ஒருவராக நினைக்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் அவன் கருத்துச்சொல்லவேண்டும் என கேட்கிறார்கள். கருத்துச் சொன்னால் “இதைச்சொல்ல நீ யார் ?”என்று கொதிக்கிறார்கள். அவர்களுக்காகவே இதை மீண்டும் மீண்டும் சொல்லவேண்டியிருக்கிறது
ஜெ